அறந்தாங்கி, அக்.17 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா 15 ஆவது மாநாடு இளங்கோ மஹாலில் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் கே.தங்கராஜ் கொடியேற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் தென்றல் கருப்பையா வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர் துவக்கவுரையாற்றினார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் பேசினார். 13 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. ஒன்றியத்தின் புதிய செயலாளராக நாராயணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டார். 9 பேர் கொண்ட புதிய நகரக் குழு தேர்வு செய்யப்பட்டது. அதில், நகரச் செயலாளராக அலாதீன் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய ஒன்றியக் குழுவினர் மற்றும் நகரக் குழுவினரை அறிமுகப்படுத்தி மாவட்டச் செயலாளர் எஸ். கவிவர்மன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மதியழகன் ஆகியோர் பேசினர். அறந்தாங்கி அரசு தலைமை மாவட்ட மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும். சுப்பிரமணியபுரம் அரசு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தி மேலும் புதிய மருத்துவர்கள், செவிலியர்கள், உபகரணங்கள் வசதியை ஏற்படுத்த வேண்டும். பட்டுக்கோட்டை சாலை ஜீவா நகர் பகுதிக்கு சாலை, தெருவிளக்கு, குடிநீர் வசதிகளை செய்து தர வேண்டும். அறந்தாங்கி நகரில் பாதாளச் சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.