விழுப்புரம், நவ.11- விழுப்புரம் மாவட்டம், மயிலம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வரும் கமல்ஹாசன், மக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஏழை மக்களை மிரட்டி லஞ்சம் வாங்குகிறார். கிராமங்களில் மோதலை உருவாக்குகிறார். மார்க்சிஸ்ட் கட்சியின் கொடிக்கம்பத்தை அகற்றினார். ஆட்டோ நிறுத்தத்தில் ஏற்றப்பட்டிருந்த சிஐடியு சங்க கொடியை கிழித்தெறிந்தார். அவரது நடவடிக்கை மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மயிலம் டீ கடையில் பணியாற்றி வந்த மாற்றுத்திறனாளி முருகன், லாட்டரி சீட்டு விற்பதாக பொய் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார். இதை விசாரித்த நீதிபதி அவரை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டு காவல்துறை யினரை கடுமையாக சாடினார். வேறு வழி யின்றி மயிலம் காவல்துறை முருகனை விடுதலை செய்தது. ஆனால், அவரிட மிருந்து இருபதாயிரம் ரூபாய் மற்றும் அலைபேசியையும் பறித்துக் கொண்டார். இதுகுறித்து துணை காவல் கண்காணிப்பாளரிடம் சிபிஎம் தலைவர்கள் புகார் தெரிவித்தனர். பணத்தையும் , செல்போனையும் பெற்றுத் தருவதாக கூறினார். சோழிய சொற்களம் கிராமத்தில் விவ சாய தொழிலாளர்கள் கலைஞர் கனவு திட்டத்தில் வீடு கட்டுகின்றனர். இதற்கு தேவையான மண்ணை ஏரியில் இருந்து எடுத்துக் கொள்வதற்கு வட்டாட்சியரிடம் அனுமதி பெற்றும் சம்பந்தப்பட்ட விவசாய தொழிலாளிகளை கைது செய்து மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்துள்ளார். பெரமண்டூர் கிராமத்தில் சாராயம் காய்ச்சி விற்கிறார்கள். கிராமம் சீரழிகிறது நடவடிக்கை எடுங்கள் என்று மயிலம் காவல் ஆய்வாளர் இடத்தில் விவசாயி ஒருவர் புகார் அளித்தார். சாராய விற்பனை தடுக்க வேண்டிய காவல்துறை ஆய்வாளர், சாராய வியாபாரி மூலம் மோதலை உருவாக்கினார். சிபிஎம் அகில இந்திய செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மறைவுக்கு அஞ்சலி தெரிவித்து மயிலத்தில் வைக்கப்பட்ட தட்டி மற்றும் கொடி கம்பத்தையும் அகற்றி னார். இதுகுறித்து தகவல் அறிந்து காவல் ஆய்வாளரை சந்தித்த கட்சியின் செய லாளரை மிரட்டியுள்ளார். எனவே பொது மக்கள் மற்றும் விவ சாயிகளை மிரட்டி லஞ்சம் பெறும் மயிலம் காவல் நிலைய ஆய்வாளர் கமல்ஹாசன் கண்டித்தும் அவரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திங்களன்று (நவ.11) கூட்டேரிப்பட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் டி.கெஜ மூர்த்தி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.ராதாகிருஷ்ணன், ஜி.ராஜேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.