districts

100 நாள் வேலை திட்டத்தில் முழுமையாக வேலை மாற்றுத்திறனாளிகளுக்கு பாராட்டும்-நன்றியும்

விழுப்புரம்,அக்.28- விழுப்புரம் மாவட்டம்,  கோலியனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்னமாதேவி கிராமம். இந்த கிராமத்தில் நடைபெறும்  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 100 நாட்கள் முழுமையாக வேலை வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைத்தனர். இதை முழுமையாக ஏற்றுக் கொண்ட ஊராட்சி மன்ற நிர்வாகம் அரசு அதிகாரிகளும் நடப்பு ஆண்டிற்கான 100 நாள் வேலையை முழுமையாக வழங்கினர். இதற்காக பாராட்டு விழா, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.  நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெயச்சந்திரன், கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற அதிகாரி மற்றும் உள்ளாட்சி அமைப்பு தலைவர்கள், 2024 ஆம் ஆண்டில் 100 நாள் வேலையை சிறப்பாக செய்து முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு பாராட்டு தெரிவித்து பேசினர்.  இதைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு அனைத்து சங்கத்தைச் சார்ந்த மாநில துணைத் தலைவர் வி.ராதாகிருஷ்ணன்,  சங்கத்தின் கோரிக்கைகளை ஏற்று 2024 ஆண்டில் 100 நாள் வேலை வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும் அதிகாரிகளுக்கும் உள்ளாட்சி அமைப்பு தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.  நிகழ்ச்சியில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.முருகன், மாவட்டப் பொருளாளர் ஜெயக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் முத்துவேல் உட்பட 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பெற்று 100 நாட்களை முடித்த 50 மாற்றுத்திறனாளிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.