court

img

பாலியல் சீண்டல் வழக்கில் அதிர்ச்சி தீர்ப்பு.... மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு....

புதுதில்லி:
ஆடைக்கு மேலே ஒரு குழந்தையின் உடலை தொடுவது பாலியல் வன்கொடுமை ஆகாது என்று மும்பை உயர்நீதிமன்றம் வழங்கிய அதிர்ச்சி தீர்ப்பிற்கு  எதிராக மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில்  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. 

12 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஒருவரின் வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் அமர்வு கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அதிர்ச்சிகரமாக  தீர்ப்பை வழங்கியது.
அதில், ‘பாலியல் ரீதியாக துன்புறுத்த நினைக்கும் ஒருவர், எதிர்பாலினத்தவரை ஆடை இல்லாத நிலையில், தோலுடன் தோல் தொட்டு தொடர்பு கொண்டால் மட்டுமே அதுபாலியல் வன்முறை என்று கருதப்படும். அதேநேரத்தில், பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்துடன் ஒருவரை அவர் அணிந்த ஆடைக்கு மேல் தொட்டு தொந்தரவு கொடுத்தால் அது பாலியல் வன்முறையாகாது. அது பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழும்வராது என்று தீர்ப்பில் தெரிவிக்கப் பட்டது.  இந்த தீர்ப்பை மாதர் அமைப்புகளும் பெண்களும் விமர்சித்து எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்னிலையில் செவ்வாயன்று ஒரு முறையீட்டை கோரிக்கையாக வைத்தார். அதில், ‘ஆடைக்கு மேலே ஒரு பெண்ணின் உடலை தொடுவது பாலியல் வன்கொடுமை ஆகாது என மும்பை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்பது அதிர்ச்சியான ஒன்றாகும். அதனை ஏற்க முடியாது. அதனால் இந்த விவகாரத்தில்உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விரைந்து விசாரித்து ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இதுகுறித்த மேல்முறையீடும் நீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

;