court

img

கிராம சபைக் கூட்டங்களை நடத்த அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு வாபஸ்....

சென்னை:
கிராம சபைக் கூட்டங்களை நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கை திமுக முதன் மைச் செயலாளர் கே.என்.நேரு திரும்பப் பெற்றுள்ளார்.

தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்படி, கிராம சபைக் கூட்டத்தை ஆண்டுக்கு நான்கு முறை ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் நடத்தப்பட வேண்டும். ஆனால், கொரோனா ஊரடங்கு விதிகளால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி மற்றும் அக்டோபர் 2ஆம் தேதி நடத்த வேண்டிய கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.இதை எதிர்த்தும், கிராம சபைக் கூட்டங்களை நடத்த உத்தரவிடக் கோரியும் திமுக தரப்பில் முதன் மைச் செயலாளர், அமைச்சர் கே.என்.நேருவும், மக்கள் நீதி மய்யம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் ஏ.ஜி.மவுரியாவும் பொது நல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தபோது, அப்போதைய தமிழக அரசுத் தரப்பில், கொரோனா பரவல் முழுமையாகக் கட்டுக்குள் வராததால் கிராம சபைக் கூட்டங்களை நடத்துவது சரியாக இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்குகள் செவ்வாயன்று (ஜூன் 15) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, திமுக முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே.என். நேரு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கை மேற்கொண்டு நடத்த விரும்பவில்லை எனவும், திரும்பப் பெறுவதாகவும் தெரிவித்தார்.இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கே.என்.நேரு தரப்பில் தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.அதேசமயம் மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் மவுரியா தொடர்ந்த வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்குத் தள்ளி வைத்துள்ளனர்.

;