court

img

வேதாந்தா நிறுவனத்திற்கு ஒத்துழைக்கும் அரசு ஏன் பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்க முன்வரவில்லை? உயர்நீதிமன்றம் கேள்வி.....

மதுரை:
தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனமான வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையில் மத்திய அரசு ஆக்சிஜன்  தயாரிக்க முழு ஒத்துழைப்பு வழங்கக் கூடிய சூழலில் திருச்சிராப்பள்ளியில் உள்ள பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்க மத்திய அரசு  முன் வராதது ஏன் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் மத்திய அரசுக்கு கேள்வியெழுப்பியுள்ளனர்.

 மதுரையைச் சேர்ந்த விரோனிகா மேரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,  “திருச்சிராப்பள்ளி  பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்கக் கூடிய பிளாண்ட் செயல்பட்டு வந்தது. 2003-ஆம் ஆண்டு முதல் ஆக்சிஜன் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. இதேபோல் செங்கல்பட்டு பகுதியில் மத்திய அரசுக்குச் சொந்தமான எச்எல்எல் பயோடெக் நிறுவனம் 2012 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு பல வகையான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
எனவே, திருச்சிராப்பள்ளியில் உள்ள பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணியை மேற்கொள்ளவும், செங்கல்பட்டு பகுதியில் செயல்பட்டுவரும் எச்எல்எல் பயோடெக் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பை மேற்கொள்ளவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் புகழேந்தி அமர்வு முன்பு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதிகள், திருச்சிராப்பள்ளி பெல் நிறுவனத்தில் உள்ள  கலன்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியுமா? திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற உறுப்பினர் சிவா, பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்கக் கோரி எழுதிய கடிதத்தின் மீது மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா தனியார் ஸ்டெர்லைட் ஆலையில் மத்திய அரசு ஆக்சிஜன்  தயாரிக்க முழு ஒத்துழைப்பு வழங்க கூடிய சூழலில், திருச்சிராப்பள்ளியில் உள்ள பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்க மத்திய அரசு  முன் வராதது ஏன்? மத்திய அரசுக்கு சொந்தமாக எத்தனை தடுப்பு ஊசிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன அதன் தற்போதைய நிலை என்ன? கோவாக்சின்  மருந்தை ஐசிஎம்ஆர் உதவியுடன் தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும்போது மத்திய அரசு தடுப்பூசி தயாரிப்பு என்ன நிலையில் உள்ளது? மத்திய அரசு தடுப்பூசி தயாரிப்பதற்கு கடந்த ஐந்தாண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை எவ்வளவு?

மத்திய அரசு தடுப்பூசிகள் தயாரிப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு பெரும் தொகை ஒதுக்கீடு செய்யக் கூடிய சூழலில் அரசே தடுப்பூசிகள் தயாரிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து மத்திய அரசு மே 19 ஆம் தேதி விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தனர்.

;