court

img

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட அதிகாரியை  ஓய்வுபெறும் நாளில் பணி இடைநீக்கம் செய்து  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

 பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிலிருந்து தப்பிக்க முயன்ற அதிகாரியை அவர் ஓய்வு பெறும் நாளில் சென்னை உயர் நீதிமன்றம் பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இது பாண்டிச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

புதுச்சேரி கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநராக இருந்தவர்  பத்மநாபன். இவர் அத்துறையின் இயக்குநர் பொறுப்பையும் கவனித்து வந்தார். கடந்த 2018ம் ஆண்டு, பத்மநாபன் அவருக்குக் கீழ் பணிபுரியும் பெண்களை பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.  அதே போல் அங்கு பணிபுரிந்த மருத்துவர் ஒருவருக்கும் பல்வேறு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றிருக்கிறார். அதற்கு அவர் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் அவரின் 5 மாதத்தை நிறுத்தி வைத்துள்ளார். அப்போது எனக்குச் சம்மதித்தால் ஆடம்பர வாழ்க்கை வாழலாம் என ஆசை வார்த்தை கூறியிருக்கிறார். அப்போதும் சம்மதிக்காமல் எதிர்த்திருக்கிறார். இந்நிலையில் அவரை அங்கிருந்து  வேறு ஊருக்கு மாற்றம் செய்து பத்மநாபன் உத்தரவிட்டிருக்கிறார். பலரும் எதிர்க்கத் தயங்கிய நிலையில் , அந்த மருத்துவர் தைரியமாக  பத்மநாபன் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த துறை அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்ட மருத்துவர் அம்மாநிலத்தின் அப்போதைய ஆளுநர் கிரண்பேடியிடம் மனு அளித்தார். 

அதைப் பெற்றுக் கொண்ட ஆளுநர் , புகாரை மாவட்ட  அளவிலான  உள்ளூர் விசாரணைக்குழு விசாரிக்க உத்தரவிடுகிறார்.  அதன் படி உள்ளூர் விசாரணைக்குழு விசாரணை நடத்தியது. அதில் 27 பெண்கள் ஆஜராகி பத்மநாபன் செய்த அட்டூழியங்களைத் தெரிவித்து சாட்சியளித்தனர். ஆனால் சாட்சியளித்த பெண்களே பாதிக்கும் மேற்பட்டோர் பத்மநாபனால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்களாக இருந்தனர். இதையடுத்து அனைவரையும் பாதிக்கப்பட்டவர்களாக தனித்தனி வழக்காக மாற்ற வேண்டிய சூழல் எழுந்தது. த   இதற்கிடையில் பத்மநாபன், பெண் மருத்துவருடன் பேசிய ஆபாச உரையாடல்  சமூக வலைத்தளங்களில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில்  பத்மநாபன் உயர் நீதிமன்றம் சென்று மாவட்ட அளவிலான உள்ளூர் அளவிலான விசாரணைக்குத் தடை பெற்றார். அதன் பின்னர் வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என வழக்குத் தொடுத்தார். அப்போது பாதிக்கப்பட்ட மருத்துவர் சார்பாக வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யூ ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி இதனை ஏற்க முடியாது. 3 மாதத்திற்குள் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில் இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.  

இந்நிலையில் பத்மநாபன், அரசு நிறுவனமான 'பாண்கேர்' துறைக்குச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கிடையில் தன்மீது அளிக்கப்பட்ட பாலியல் புகார் தொடர்பான விசாரணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் விசாரணையை ரத்து செய்ய மறுத்ததோடு, இவ்வழக்கில் 3 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. 

ஆனால் பத்மநாபன் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பதை முடக்கினார். இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று ( செப்டம்பர் 30 அன்று ) பத்மநாபன் தனது பணியிலிருந்து ஓய்வு பெறவிருந்தார். இதையறிந்த பெண் மருத்துவர் தனக்கு நியாயம் வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யூ மூலம் ரிட் மனுவைத் தாக்கல் செய்தார். அதில் நீதிமன்றம் உத்தரவிட்டு இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் இன்றுடன் ( செப்டம்பர் 30 ) ஓய்வு பெறுகிறார். எனவே எனக்கு நியாயம் வழங்க வேண்டும் அவசர வழக்காக எனது மனுவினை விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். 

இதனை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்னிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி பாலியல் புகாருக்கு உள்ளான பத்மநாபனை பணியிடைநீக்கம் செய்யப் பாண்டிச்சேரி தலைமைச் செயலாளர் மற்றும் துறை செயலாளருக்கு உத்தரவிட்டார். மேலும் அந்த உத்தரவில் இது போன்ற பணியிடங்களில் நடைபெறும் பாலில் துன்புறுத்தல்களை சகித்துக்கொள்ள முடியாது என்று பாண்டிச்சேரி அரசிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.  மேலும் விசாரணை  முடிவடையும் வரை அரசு எந்த ஓய்வூதிய சலுகைகளையும் வழங்கக் கூடாது என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

முன்னதாக வழக்கில் பாதிக்கப்பட்ட மருத்துவருக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் ஆர்.வைகை, ஸ்டாலின் அபிமன்யூ ஆகியோர் ஆஜராகினர்.

;