court

img

எஸ்எம்எஸ் மூலம் பிரச்சாரம் தனிமனித உரிமை மீறல்... பாஜகவுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்....

புதுச்சேரி
புதுச்சேரியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களுக்கு மட்டும் எஸ்.எம்.எஸ்.கள் வந்துள்ளதால், புதுச்சேரி வாக்காளர்களின் விவரங்கள் எப்படி கசிந்தனஎன்பது குறித்து விசாரித்து விளக்கமளிக்க ஆதார் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுவையில் பாஜக சார்பில் ஆதார் ஆணையத்திலி ருந்து வாக்காளர்களின் மொபைல் எண்களைப் பெற்று, தொகுதி வாரியாக வாட்ஸ் ஆப் குரூப்கள் ஆரம்பித்து, அதன் வழியாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருவது குறித்துசிறப்பு புலனாய்வு விசாரணை குழுவை அமைத்து விசாரிக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க புதுவை பிரதேசத் தலைவர் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், நான்காவது முறையாக ஏப்ரல் 1 வியாழனன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, புதுச்சேரி பாஜக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆதார் விவரங்கள் திருடப்படவில்லை எனவும் ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டியும் வாதிட்டார். பாஜகவினர் வீடு வீடாகச் சென்றுமொபைல் எண்களை சேகரித்ததாகவும் தெரிவித்தார்.மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.வைகை, இந்தப் பிரச்சனை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அரசாங்கத்தை நம்பித்தான் ஆதாருடன் சுய விவரங்களை கொடுக்கிறோம்; நாங்கள் பாதுகாப்பாகத்தான் வைத்திருப்போம், யாருக்கும் கொடுக்கமாட்டோம் என்று உறுதி கொடுத்தார்கள்; ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு எப்படி மொத்தமாக மைபைல் எண்கள் கிடைத்தது? இந்த விவகாரம் குடிமக்களை ஏமாற்றும் நடவடிக்கையாக இருக்கிறது என்றும் கூறினார். இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய பிறகும்,ஆணையத்தின் அனுமதி பெறாமல் எஸ்.எம்.எஸ். மூலம்பிரச்சாரம் செய்வது தொடர்ந்து கொண்டிருந்ததை சுட்டிக்காட்டினார்.

மேலும், வீடு வீடாகச் சென்று மொபைல் எண்களை சேகரித்ததாக பாஜக தரப்பில் கூறுவதில் நம்பகத்தன்மை கிடையாது; ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களுக்கு மட்டும் இந்த எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பப்பட்டுள்ளது என்றும் எடுத்துரைத்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய பிறகும் மார்ச் 29 வரை எஸ்.எம்.எஸ். மூலம் பிரச்சாரம் செய்த பாஜகவின் நடவடிக்கை தீவிரமான தனிமனித உரிமை மீறல் எனத் தெரிவித்தனர்.
செயலாளர்களிடம் வாங்கினோம் என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இது அதிமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையாகும். எனவே, பாஜகவின் கருத்தை ஏற்கமுடியாது என்றும் நீதிபதிகள் கூறினர்.தொடர்ந்து வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஆர்.வைகை,பாஜக தேர்தல் நன்னடத்தை விதிகளையும் தனிநபர் தகவல்களின் தனியுரிமையையும் மீறியிருப்பது மிகவும் தீவிரமான பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. எனவே, தேர்தல் சுதந்திரமாக நடக்கும் என்பதை மக்கள் நம்பவேண்டும் என்பதால், கடந்த மக்களவை தேர்தலின்போது உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத், மாயாவதி போன்றவர்கள் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டது. அதைப்போன்றாவது தேர்தலுக்கு முன்பு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

 ‘‘நீதிமன்றத்தால் வழியைத்தான் காட்ட முடியும், தேர்தல் ஆணையம் எப்போது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நீதிமன்றம் சொல்ல முடியாது. பாஜக மீதுள்ள குற்றச்சாட்டுகள் வலுவாக உள்ளன. பாஜக ஊழியர்கள் தான் தகவலை மக்களிடமிருந்து பெற்றனர் என்பதை ஏற்க முடியவில்லை. ஆதார் ஆணையம், தேர்தல் ஆணையம், சைபர் கிரைம், காவல்துறை தொடர் விசாரணை நடத்தவேண்டும். இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியிருக்கிறது. எனவே, அதன்மீது உரிய உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பிப்பதாக கூறியிருப்பதை இந்த நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. அதுவரைக்கும் பொறுத்திருப்போம்’’ என்றும், குடிமக்களின் தனி உரிமையை மீறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களுக்கு மட்டும் எஸ்.எம்.எஸ்.கள் வந்துள்ளதால்,வாக்காளர்களின் விவரங்கள் எப்படி கசிந்தன என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஆதார் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். கட்சியினர் வீடு வீடாகச் சென்று விவரங் களை சேகரித்ததாக கூறிய பா.ஜ.க-வின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஆதார் ஆணையம், தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

;