court

img

கொரோனாவால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு உதவ முக்கிய திட்டம்.... உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதி....

புதுதில்லி:
கொரோனா தொற்றால் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பங்களுக்கும் உதவிடும் வகையில் ஒருசில முக்கிய திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளது என்று உச்சநீதிமன்றத் தில் ஒன்றிய அரசு உறுதியளித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையால் பாதிப்பு அதிகரித்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,’ நாடுமுழுவதும் கொரோனா நோய் தொற்று பாதிப்பால் இறந்த ஒவ்வொருவருக்கும் இழப்பீட்டு தொகையாக ரூ.4லட்சத்தை ஒன்றிய அரசின் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்12வது பிரிவின்படி வழங்க வேண்டும். இதுகுறித்து ஒன்றிய, மாநில அரசுகளுக்கும் உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த  வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுதாரின் கோரிக்கை குறித்து பதிலளிக்கவேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.இதையடுத்து மேற்கண்ட விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்யப்பட்டது அதில், ‘ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் ஏற்கனவே கொரோனா பெருந்தொற்றை சமாளிக்க ஏராளமான நிதியை செலவு செய்து வருவதால் கொரோனாவால் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் இழப்பீட்டு தொகையாக தேசிய பேரிடர் நிதியில் இருந்து ரூ.4 லட்சம் என்பதைவழங்க முடியாது,’என்று கைவிரித்துவிட்டது.

இந்நிலையில் இந்த  வழக்கானது உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, ‘கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுஉயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் உதவி செய்யும் விதமாக ஒருசில முக்கிய திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளது.அதுகுறித்த பரிசீலனை முடிந்தவுடன் அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.   இந்த விவகாரத்தில் முக்கிய திட்டங்கள் உருவாக்கப்பட இருக்கிறது என்ற ஒன்றிய அரசின் உறுதியை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது என தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

;