court

img

மனைவியை விவாகரத்து செய்தாலும் கணவரே குழந்தைகளை பராமரிக்க வேண்டும்....

புதுதில்லி:
மனைவியை விவாகரத்து செய்தாலும் கணவரே குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விவாகரத்து வழக்கு ஒன்றில்  மனைவியை விவாகரத்து செய்த கணவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகள் பராமரிப்புக்காக ரூ.4 கோடி வழங்க வேண்டும் என்று குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது. கணவர் அந்த பணத்தைக்கொடுக்காததால் மனைவி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள்சந்திரசூட், எம்.ஆர்.ஷா அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, கணவர் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், “குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த அத்தனை உத்தரவுகளையும் எனது கட்சிக்காரர் நிறைவேற்றியுள்ளார்.

ஆனால் கொரோனா பரவல் காரணமாக வியாபாரம் மிகவும் மந்தமடைந்துள்ளது.  ஆகவே அவரால் ரூ.4கோடிதர முடியவில்லை” என்று கூறினார். பின்னர் நீதிபதிகள் கூறுகையில், “கணவனால் மனைவியை விவாகரத்து செய்ய முடியுமே தவிர குழந்தைகளை விவாகரத்து செய்ய முடியாது.  அவர்களைப் பெற்றவர் என்னும் முறையில் தந்தைக்குக் குழந்தைகளை பராமரிக்கும் கடமை உண்டு.  இதற்கு எவ்வித மாற்றுக் கருத்தும்கிடையாது.  நிதி நெருக்கடியால் ரூ.4 கோடிஅளிக்க முடியவில்லை என்பதை ஏற்க முடியாது. ஆனால் தவணை முறையில் அந்த ரூபாயை வழங்கலாம்.  வரும் செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் ரூ.1 கோடி மற்றும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் மீதமுள்ள ரூ.3 கோடியை மனைவிக்கு வழங்க வேண்டும் என கணவருக்கு உத்தரவிடப்படுகிறது” என்று தீர்ப்பளித்தனர்.

;