court

img

69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கு.... வேறு வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு.....

புதுதில்லி:
தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிராகதொடரப்பட்ட வழக்கை வேறு வழக்குகளுடன் சேர்த்து விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

கல்வி நிலையங்கள் உள்பட69 சதவீத இட ஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்கும் முறைக்கு எதிராகபல்வேறு மாநிலங்களில் இருந்துபல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக் கின்றன. இந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில்  விசாரணைக்கு வந்த போது மகாராஷ்டிரா வழக்கையும் தமிழகத்தில் இருந்து தொடர்ப்பட்டிருக்கின்ற 69 சதவீத இட ஒதுக்கீட்டு வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. மகாராஷ்டிரா இட ஒதுக்கீடு வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வே 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கையும் விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்நிலையில் தமிழகத்தில் கல்வி நிலையங்கள் உள்பட 69 சதவீத இட ஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்கும் முறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது. அதில்,வேறு வழக்குகளுடன் சேர்த்து தமிழகம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் நடவடிக்கையை எடுக்கக் கூடாது என்று  உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், இந்தியாவிலேயே 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவது தமிழகத்தில் மட்டும்தான். சாதிவாரியான கணக்கெடுப்பு என்பது தமிழகத்தில் மட்டுமே உள்ளது. அதன்அடிப்படையில் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அரசியல் சாசன பாதுகாப்பு முறைப்படி தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதற்கான தனி ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது, 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் மகாராஷ்டிரா இடஒதுக்கீட்டிற்கு இதுபோன்ற ஒப்புதல் வழங்கப்படவில்லை. எனவேமகாராஷ்டிரா இடஒதுக்கீட்டிற்கும் தமிழக 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதனால் மகாராஷ்டிரா இட ஒதுக்கீடு வழக்கோடு தமிழகத்தின் 69 சதவீத இட ஒதுக்கீடு வழக்கை இணைத்து விசாரிக்கக்கூடாது. மகாராஷ்டிரா இடஒதுக்கீட்டிற்கும் தமிழக அரசின் இடஒதுக்கீட்டிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை, ஆகையால் ஒன்றாக விசாரிப்பதற்கான முகாந்திரம் இல்லை. தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு முறைக்கு எதிரான வழக்குகளை வேறு எந்தவழக்குடனும் சேர்த்து விசாரிக்கக் கூடாது என்று மனுவில் தெரிவித்துள்ளது. 

;