court

img

இந்தியப் பெண்களிடம் மன்னிப்பு கேளுங்கள்... ஒரு கணம் கூட நீங்கள் பதவியில் நீடிக்கக் கூடாது... பாலியல் வன்கொடுமைகளை சமரசப்படுத்தி, சட்டப்பூர்வமாக்க முயற்சிக்கிறீர்களா?

புதுதில்லி:
பள்ளிச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்படவரிடமே ‘அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளமுடியுமா’ என்று கேட்டதற்காக இந்திய தலைமைநீதிபதி எஸ்.ஏ.பாப்டே தன்னுடைய பதவியிலிருந்து விலக வேண்டும் என நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உரிமை ஆர்வலர்கள், முற்போக்கு குழுக்கள், அக்கறையுள்ள குடிமக்கள் அடங்கிய குழு வெளிப்படையான பகிரங்கக் கடிதம் ஒன்றை தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ளது. 

அந்த பகிரங்கக் கடிதத்தில் ஆனி ராஜா, மரியம் தாவ்லே, கவிதா கிருஷ்ணன், கம்லா பாசின், மீரா சங்கமித்ரா, அருந்ததி துரு போன்றபிரபலமான பெண்கள் உரிமை ஆர்வலர்களும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் சங்கம், இந்திய பெண்கள் தேசிய கூட்டமைப்பு, சஹேலி, பாலியல் வன்முறை மற்றும் அரசு அடக்குமுறைக்கு எதிரான பெண்கள், திட்ஸ் (THITS), பெண்கள் அடக்குமுறைக்கு எதிரான மன்றம், பெபாக் கலெக்டிவ், பாரதிய முஸ்லீம் மஹிளா அந்தோலன், தலித் விமென்ஸ் ஃபைட், பசோ (BASO), பெண்கள் மற்றும் திருநங்கைகள் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைக் குழு போன்ற பெண்ணுரிமை அமைப்புகளும், அட்மிரல் எல்.ராம்தாஸ், அருணா ராய், நிகில் டே, ஆனந்த் சஹாய், தேவகி ஜெயின், ஜான் தயாள், லக்ஷ்மி மூர்த்தி, அபூர்வானந்த், ஃபரா நக்வி, ஆயிஷா கித்வாய், அஞ்சா கோவாக்ஸ் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபல குடிமக்களும்  கையொப்பமிட்டிருக்கின்றனர். 
அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:- 

மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்களே,இந்தியப் பெண்கள் இயக்கங்கள், முற்போக்கு இயக்கங்களின் பிரதிநிதிகளாகிய நாங்கள் அக்கறை கொண்டுள்ள குடிமக்களுடன் இணைந்து, மோஹித் சுபாஷ் சவான் (எதிர்) மகாராஷ்டிரா மாநில அரசு மற்றும் ஒருவர் வழக்கு தொடர்பாக 2021 மார்ச் 1 அன்று நடந்தவிசாரணையின் போது, நீங்கள் கூறியதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள கருத்துக்களைக் கண்டு திகைத்து நிற்கின்றோம். மிகவும் மனம் புண்பட்டிருக்கிறோம்.பள்ளிக்குச் செல்லும் சிறுமியைத் தொடர்ந்து பின்சென்றது, அவளைக் கட்டி வைத்து, கேலி செய்து, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து, பெட்ரோல் ஊற்றி எரித்து விடுவேன் என்று அச்சுறுத்தியது, அவளுடைய சகோதரனைக் கொலை செய்து விடுவதாக மிரட்டியதுபோன்ற செயல்களைச் செய்த ஒருவர் தன்னைக்கைது செய்வதிலிருந்து பாதுகாப்பு வேண்டும் என்று கோரி தாக்கல் செய்த மனுவை நீங்கள்விசாரித்தீர்கள். பள்ளிக்குச் செல்லும் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி தற்கொலைக்கு முயன்ற போதுதான் அந்த பாலியல் பலாத்காரம் வெளிச்சத்துக்கு வந்தது. ‘சிறுமியை வலுக்கட்டாயமாகப் பாலியல் பலாத்காரம் செய்வதால்’ 

ஏற்படும் விளைவுகளைப் பற்றி அவர் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும் என்று கூறி, பாதிக்கப்பட்டவரைத் திருமணம் செய்து கொள்ளத் தயாரா என்று நீங்கள் அந்த நபரிடமே கேட்டிருக்கிறீர்கள். பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு - உயிர் பிழைத்திருப்பவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்என்று பரிந்துரைப்பதன் மூலம், இந்திய தலைமை நீதிபதியாகிய நீங்கள் தற்கொலைக்கு முயன்ற அந்தப் பெண்ணைத் துன்புறுத்தியவரின் கைகளிலேயே ஒப்படைத்து, வாழ்நாள்முழுவதும் அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதை உறுதி செய்ய முயன்றிருக்கிறீர்கள்!   இந்திய அரசியலமைப்பை விளக்குகின்ற அதிகாரமும் கடமையும் கொண்டு நீதி வழங்குகின்ற உயர்ந்த இடத்தில் இருக்கின்ற இந்திய தலைமை நீதிபதியிடம் கூட ‘மயக்குதல்’, ‘பாலியல் வன்முறை’, ‘திருமணம்’ ஆகியவற்றின் பொருளை விளக்க வேண்டிய சுமையை பெண்களே சுமக்க வேண்டியிருப்பது குறித்த கோபம் எங்களுக்குள் எழுகின்றது.  

‘மயக்குதல்’ என்பது இருவரின் சம்மதத்துடன் நிகழும் ஒரு செயலாகும். பாலியல் பலாத்காரம் என்பது ஒருவரின் சம்மதத்தை மீறி அவருடைய உடல் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல் என்பதால் அது வன்முறைச் செயல் என்பதுதவிர வேறாக இருக்க முடியாது. இந்த இரண்டையும் எந்தவொரு சூழ்நிலையிலும் ஒன்றாக இணைக்க முடியாது. மேலும் பாதிக்கப்பட்டவர் வயதில் சிறியவராக இருக்கும்போது, ​​அவ்வாறான ஒப்புதல் இல்லாதது நிரூபிக்கத் தேவையற்றசட்டப்பூர்வமான அனுமானமாகவே இருக்கிறது.மற்றொரு வழக்கு தொடர்பாகவும் (வினய் பிரதாப் சிங் - எதிர் - உத்தரப்பிரதேச மாநில அரசு) ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. ‘‘ஆண், பெண் என்று இருவர் ஒன்றாக வாழும்போது, கணவர் மிருகத்தனம் நிறைந்த மனிதராக இருக்கலாம் என்றாலும், சட்டப்பூர்வமாகத் திருமணமாகியிருக்கின்ற ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உடலுறவை பாலியல் பலாத்காரம் என்று உங்களால் அழைக்க முடியுமா’’ என்று நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். உங்களுடைய அந்தக் கருத்து கணவனால் இழைக்கப் படுகின்ற பாலியல், உடல், மனரீதியான வன்முறைகளை நியாயப்படுத்துவது மட்டுமல்லாமல், எந்தவொரு சட்டப்பூர்வமான உதவியும் இல்லாமல் பல ஆண்டுகளாக திருமணங்களுக்குள் இந்திய பெண்கள் எதிர்கொண்டு வருகின்ற சித்ரவதைகளை இயல்பானதாக்கி காட்டுகிறது. 

சிறுமியை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய மோஹித் சுபாஷ் சவானுக்கு ஜாமீன் வழங்கிய அமர்வு நீதிமன்ற உத்தரவு ‘மிகவும் கொடூரமானது’ என்று கூறிய மும்பை உயர்நீதிமன்றம், அதுமட்டுமல்லாமல் ‘‘இதுபோன்ற மிகமுக்கியமான விஷயங்களில் கற்றறிந்த நீதிபதியின் இதுபோன்ற அணுகுமுறை, அவர் முற்றிலும் சுரணையற்றவராக இருப்பதையே தெளிவாகக் காட்டுகிறது’’ என்று குறிப்பிட்டுக் காட்டியுள்ளது. உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்த அந்த விமர்சனம் உங்களுடைய கருத்துக்களுக்கு எதிராகவும் மிக அதிக அளவில் பொருந்திப் போவதாகவே இருக்கின்றது. 

மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கைத் தீர்த்து வைக்கின்ற வகையில் இணக்கமான தீர்வாக நீங்கள் வைத்திருக்கும் அந்த திருமண முன்மொழிவு, கீழமை நீதிமன்றநீதிபதி இழைத்த கொடூரத்தை விட மிகவும் மோசமாக சுரணையற்று இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கான நீதியைப் பெறுவதற்கான உரிமையை அது மிக மோசமாகப் பாதிக்கின்றது.பாலியல் பலாத்காரத்திற்கான சமரசத் தீர்வுகளை முன்வைக்கின்ற உங்களைப் போன்ற அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆணாதிக்க மனப்பான்மையை இந்தியப் பெண்கள் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றனர். தப்பிப் பிழைத்தவர் அல்லது அவரது உறவினர் எவ்வாறுதற்கொலை செய்து கொண்டனர் அல்லது பலாத்காரம் செய்தவருடனான தீர்வை எதிர்த்ததற்காக அவர்கள் எவ்வாறு கொலை செய்யப்பட்டனர் என்கின்ற வகையிலே இந்த சமரசம் என்பதற்கான நடைமுறை விளக்கம் பல தீர்ப்புகளால் வீடுகளுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. உங்களுக்கு முன்பு இந்தப் பதவியில் இருந்தவர் தனக்கு எதிராகத் தொடரப்பட்ட பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக,தானே அந்த வழக்கில் அமர்ந்து, புகார்தாரர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உச்சநீதிமன்ற அமர்வில்  இருந்து தவறான, அவதூறானதாக்குதல்களை நடத்தியதற்கு நாங்கள் சாட்சிகளாக இருந்திருக்கின்றோம். பாலியல் பலாத்காரகுற்றம் சுமத்தப்பட்ட ஒரு குற்றவாளியை, ‘‘ஒருபெண் மிக மெதுவாக- ‘இல்லை’ -என்று சொல்வதற்கு ‘ஆமாம்’ என்ற அர்த்தமே இருக்கின்றது’’ என்று வியாக்கியானம் செய்து விடுவித்ததற்கு எதிராகத் தொடரப்பட்ட மேல்முறையீடு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் பெண் விவசாயிகள் ஏன் ‘அமர்த்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்று நீங்கள் ஏற்கனவே கேட்டிருக்கிறீர்கள்; அந்தப் பெண்களை ‘வீட்டிற்கு திருப்பி அனுப்பும்படியும்’ நீங்கள் கேட்டுக் கொண்டீர்கள். ஆண்களுக்கு இருக்கின்ற சுயாட்சி மற்றும் ஆளுமை பெண்களுக்கு இல்லை என்பதையே அது குறிப்பதாக இருந்தது. இப்போது ‘‘ஆண்,பெண் என்று இருவர் ஒன்றாக வாழும் போது, கணவர் மிருகத்தனம் நிறைந்த மனிதராக இருக்கலாம் என்றாலும், சட்டப்பூர்வமாகத் திருமணமாகி இருக்கின்ற ஆணுக்கும் மனைவிக்கும் இடையிலான உடலுறவை பாலியல் பலாத்காரம் என்று உங்களால் அழைக்க முடியுமா’’ என்று நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். போதும், இதற்கு மேல் தாங்க முடியாது. 

நீதிமன்றத்தை அவதூறு செய்வதாக, அதன் அதிகாரத்தை சீர்குலைப்பதாகவே உங்களுடைய வார்த்தைகள் இருக்கின்றன. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்ற பதவியின் உயர்ந்த பீடத்திலிருந்து நீங்கள், ‘‘நீதி என்பதுஇந்தியாவில் பெண்களுக்கான அரசியலமைபு உரிமை அல்ல’’ என்ற செய்தியை மற்ற நீதிமன்றங்கள், நீதிபதிகள், காவல்துறை மற்றும் பிறசட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு அனுப்பி வைப்பதாகவே உங்களுடைய வார்த்தைகள் இருக்கின்றன. உங்களுடைய வார்த்தைகள் சிறுமிகளை, பெண்களை மேலும் மௌனமாக்கிடவே வழிவகுத்துக் கொடுக்கும். அவர்களுடைய மௌனத்தை உடைக்க பல ஆண்டு காலம் ஆகும். உங்களுடைய வார்த்தைகள், திருமணம் என்பதுபாலியல் பலாத்காரத்திற்கான உரிமம் என்றசெய்தியையே பாலியல் பலாத்கார கயவர்களுக்கு அனுப்பி வைக்கிறது; அத்தகைய உரிமத்தைப் பெறுவதன் மூலம், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்கள் தங்களுடைய செயலை நியாயப்படுத்தவும் சட்டப்பூர்வமாக்கவும் முடியும்.

2021 மார்ச் 1 அன்று நீங்கள் நீதிமன்றத்தில் கூறிய வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, இந்த தேசத்தின் பெண்களிடம் மன்னிப்பு கேட்கவும் வேண்டும்.ஒரு கணம் தாமதமின்றி இந்திய தலைமை நீதிபதி என்ற பதவியில் இருந்து நீங்கள் விலகிடுவதே நேர்மையான செயலாக இருக்கும்.

தொகுப்பு: பேரா. தா.சந்திரகுரு

;