court

img

கொரோனா நோயாளிகள் யாருக்கும் சிகிச்சையளிக்க மறுக்கக் கூடாது..... மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு....

புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா 2 ஆவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், எந்த நோயாளிக்கும் மருத்துவமனையில் இடமில்லை என்று சிகிச்சையளிக்க மறுக்கக் கூடாது. அடையாள அட்டை இல்லைஎன்று கூறி அத்தியாவசிய மருந்துகளையும் மறுக்கக் கூடாது என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கைகள், ரெம்டெசிவிர் மருந்து ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு குறித்து 6 உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், எல்.நாகேஸ்வரராவ், எஸ்.ரவீந்திர பாட் அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் அமர்வு பல்வேறுஉத்தரவுகளை மத்திய அரசுக்கும், 
மாநில அரசுகளுக்கும் பிறப்பித்துள் ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

“கொரோனா பரவல் 2 ஆவது அலையின் இந்த இக்கட்டான நேரத்தில் மக்கள் தங்களின் பாதிப்புகளையும், உதவி கோரியும் சமூக ஊடகங்களில் தெரிவிக்கும் கருத்துகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் முடக்கக் கூடாது. சமூக வலைதளங்கள் மூலம் உதவி கோரும் தனிநபர்களுக்கு எதிராக எந்தக் கடுமையான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் அது நீதிமன்ற அவமதிப்பாக எடுக்கப்படும்.இந்த உத்தரவை நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், நீதிபதிகளுக்கும் நீதிமன்றப் பதிவாளர் அனுப்ப வேண்டும். உச்ச நீதிமன்றஇணையதளத்திலும் இதை பதிவேற்றம் செய்ய வேண்டும்.கொரோனாவில் பாதிக்கப்பட்ட எந்த நோயாளிக்கும் மருத்துவமனையில் இடமில்லை என்றும், அத்தியாவசிய மருந்து கோரும்போது அடையாள அட்டை ஏதுமில்லை என்று மறுப்பதும் கூடாது.

மாநில அரசுகளுடன் கூட்டாக இணைந்து மத்திய அரசு விரைவில் அவசர நேரத்துக்குப் பயன்படும் வகையில் ஆக்சிஜன் இருப்பை உருவாக்க வேண்டும். அடுத்த 4 நாட்களுக்குள் இந்த ஆக்சிஜன் இருப்புக் கட்டமைப்பை மத்திய அரசு உருவாக்க வேண்டும். மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்ட அளவு போக, இந்த ஆக்சிஜன் இருப்பின் அளவை நாள்தோறும் பராமரிக்க வேண்டும்.நாட்டில் ஆக்சிஜன் சப்ளை எவ்வாறு இருக்கிறது, தடுப்பூசியின் விலை, உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்து வாங்கக்கூடிய விலையில் விற்கப்படுகிறதா என்பதை மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மேலும் இந்த வழக்கை மே 10-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

;