cinema

img

சத்யன் மாஸ்டரின் வாழ்க்கை சினிமாவாகிறது...

மலையாளத்தின் பழம்பெரும் நடிகர் சத்யன். தனது யதார்த்தமான, தனித்துவமான நடிப்பில் இந்திய சினிமாவுக்கே ஒரு முன்னோடிக் கலைஞனாகத் திகழ்ந்த சத்யனின் வாழ்க்கை திரைப்படமாக இருக்கிறது. மிகச்சிறந்த நடிகரான அவர் மீது திரைத்துறையினர் கொண்டிருந்த அன்பின் மிகுதியால் அவரை சத்யன் மாஸ்டர் என்றே அழைத்தனர். 

செறுவிளாகத்து வீட்டில் மானுவல் சத்யநேசன் என்னும் இயற்பெயர் கொண்ட சத்யனின் 50 ஆவது நினைவுநாள் இந்த 2021 ஜூன் 15 அன்று கேரளத்தில் அனுசரிக்கப்பட்டது. 1952 ல் வெளியான ஆத்மசக்தி படம்தான் திரைக்கு வந்த அவரது முதல் படம். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் ஆஃபீசராகப் பணிபுரிந்தார் சத்யன். போர் முடிந்தபோது திருவாங்கூர் காவல்துறையில் ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு நடிப்பில் ஆர்வமேற்பட்டு அமெச்சூர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து மலையாள சினிமா உலகில் நுழைந்த சத்யன் இரண்டு தலைமுறைகளாகத் தனக்கென ஒரு தனி இடத்தை நடிப்பில் தக்கவைத்துக்கொண்டார். 

தமிழிலும் ஆளுக்கொரு வீடு, பேசும் தெய்வம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த சத்யன், கேரள அரசு வழங்கிய சிறந்த நடிகருக்கான விருதினை முதன்முதலில் பெறும் கலைஞனாகப் பெருமை பெற்றார். மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக, தமிழில் எம்.ஜி.ஆர். - சிவாஜி போல தனது சமகாலப் போட்டியாளரான பிரேம் நசீருடன் ஒரு இருதுருவக் கள யதார்த்த நிலையை உருவாக்கியிருந்தார் சத்யன். அவரது வாழ்க்கையைத் திரைப்படமாக உருவாக்க கடந்த 2019 ஆம் ஆண்டே முயற்சித்தபோதிலும் கொரோனா பெருந்தொற்றுச் சூழலில் அது தள்ளிப்போனது. அவர் ராணுவத்தில் பணியாற்றிய லடாக், காவல்துறையில் பணியாற்றிய திருவனந்தபுரம் மற்றும் ஆலப்புழா ஆகிய பகுதிகளில் வெளிப்புறப் படப்பிடிப்புகளுக்கும் ஊரடங்கின் காரணமாக தடையேற்பட்டதைத் தொடர்ந்து, நிலைமை சீரடைந்ததும் அந்த முயற்சியை மீண்டும் தொடருவது என்று சத்யனின் 50 வது நினைவுநாளில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பிரபல நடிகர் ஜெயசூர்யா மகத்தான கலைஞர் சத்யனாக நடிக்க இருக்கிறார். விஜய் பாபுவின் ஃபிரைடே ஃபிலிம் ஹெளஸ் நிறுவனம் தயாரிக்கப்போகும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ரத்தீஷ் ரகுநந்தன் இயக்குகிறார். பி.டி.அனில்குமார் மற்றும் கே.ஜி.சந்தோஷ் இருவரும் இணைந்து திரைக்கதையை எழுதுகிறார்கள். ஏழு ஆண்டுகள் கடும் ஆய்வின் விளைச்சல்தான் உருவாக இருக்கும் இந்தப் படத்தின் திரைக்கதை என்கிறார் மகிழ்ச்சியுடன் கே.ஜி. சந்தோஷ்.

;