cinema

img

வனராஜா கார்சன்... கானகத்தைத் திரையில் பதிவு செய்த முதல் தமிழ்ப் படம்...

நமது துவக்க கால சினிமாக்கள் புராணக் கதைகளைக் காட்டிக்கொண்டிருந்தன என்பது மட்டுமல்ல, வெளிப்புறப் படப்பிடிப்புகளிலும் அதிக நாட்டமில்லாமலிருந்தன. தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சியின்மையும் அதற்குக் காரணமாக இருந்தது. அதனால் அரங்க அமைப்புகளை நம்பியே உள்ளரங்கப் படப்பிடிப்பே பெரும்பாலும் நடந்து வந்தது. அப்படியான நிலையில் காடுகளில் நடக்கும் கதையாடல்கள், கானகத்தில் விலங்குகள் வாழுகிற சூழலில் படப்பிடிப்பு என்பவையெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்க இயலாதவையாகவே துவக்ககாலமென்பது இருந்தது. அந்த நிலையை இந்தியாவில் வடக்கே இந்தி சினிமாதான் முதலில் கடந்துவந்தது.

கிங் ஆஃப் ஃபாரஸ்ட் (1926) எனும் பேசாப் படம்தான் இந்தவகையில் முதல் இந்திய சினிமா. ஜங்கிள் குயின் (1936), ஜங்கிள் கிங் (1939), ஜங்கிள் பிரின்சஸ் (1942) போன்ற துவக்க கால இந்திப் படங்கள் காடுகளில் விலங்குகளும் மனிதர்களுமான கதையாடல்கள் சொன்ன சில படங்கள். அந்நாளில் சண்டைக் காட்சிகளில் பெயர் வாங்கிய கலைஞர்களான ஜான் கேவா, ஃபியர்லெ நாடியா போன்றவர்கள் பங்கேற்ற இந்தப் படங்கள் அப்போது வசூலிலும் நல்ல சாதனைகள் படைத்தன.

அந்தச் சூழலில்தான் தமிழில் 
‘‘வனராஜா கார்சன்’’ - எனும் பேசும்படம் 1938 ல் வெளிவந்தது. தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்தியாவிலேயே காட்டில் எடுக்கப்பட்ட முதல் படம் இந்த வனராஜா கார்சன்தான். மலையாளத்தில் வெளிவந்த வனமாலா (1951) இன்னொரு தென்னிந்திய வனவாழ்வியல் சினிமா. டார்ஜான் எனும் வனமனிதனின் கதையாடல்கள் உலகம் முழுதும் பிரபலம். விலங்குகளுக்கும் மனிதனுக்குமான வாழ்க்கைப் போராட்டத்தை, கானகத்தில் சக மனிதர்களுக்குள்ளேயும் நடக்கும் முரண் மோதல்களை ரசிகர்கள் ஒருவித ஆர்வ மேலீட்டுடன் காணக் குவிந்தார்கள். அதனாலேயே இன்றுவரையிலும்கூட இந்தவகைப் படங்கள் தொடர்ந்து வரவேற்பைப் பெறவே செய்கின்றன.ஜே.பி.எச். வாடியா கதைக்கு எ.ஆர்.கிருஷ்ணசுவாமி ஐயங்கார் திரைக்கதை எழுத, வனராஜா கார்சன் படத்தை ஹோமி வாடியாவும் நாரி கதியாலியும் இணைந்து இயக்கினார்கள். யானை அனந்தராம ஐயர், வைத்தியநாத ஐயர் ஆகியோர் இசையமைத்தனர். வாடியா மூவிடோன் நிறுவனம் மெட்ராயுனைட்டட் ஆர்ட்டிஸ்ட் கார்ப்பரேஷனு
டன் இணைந்து தயாரித்த இந்தப் படத்தில் முக்கியப் பாத்திரங்களில் ஜான் கேவாசும் கே.ஆர்.செல்லமும் நடித்தார்கள். படத்தின் நாயகி லீலாவாகப் பெண் வேடமேற்று செல்லம் நடித்தார். தமிழில் முதல் டார்ஜான் பாணிக் கதையான இந்த வனராஜா கார்சன் இதற்குமுன் சினிமாக்காரர்கள் அனுபவப்படாத கானகப் பகுதியில் படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்ட தென்னிந்தியாவின் முதல் படமாக வரலாறு படைத்தது.

வனராஜா கார்சன் படத்தின் கதை இப்படியாக இருந்தது. அமிர்தரசம் என்னும் மரணத்தை வெல்லும் மருந்து ஒன்றின் ரகசியத்தைத் தேடி வனராஜபுரம் காட்டிற்கு வருகிறான் குலசேகரன். வரும்போது தன் மனைவியையும் சிறுவனான தன் மகன் கார்சனையும் அழைத்துவருகிறான். பலநாட்கள் அலைந்து அமிர்தரசத்தின் ரகசியக் குறிப்பை அறிந்து அதனை ஒரு சிறு தாளில் எழுதி, மகன் கார்சனின் கழுத்தில் தாயத்தாகத் தொங்கவிடுகிறான். இந்த நிலையில் சிங்கம் ஒன்றினால் குலசேகரனும் அவனது மனைவியும் கொல்லப்படுகிறார்கள். சிறுவன் கார்சனை வனவாசிகள் காப்பாற்றி வளர்க்கிறார்கள். அவனுக்கு விலங்குகளோடு நல்ல நட்பு ஏற்படுகிறது. தன் மொழி மறந்த கார்சனுக்கு விலங்குகளின் மொழி புரிகிறது. கார்சனைத் தேடிக்கொண்டு அவனது தாத்தா - குலசேகரனின் அப்பா வீரசிங்கம் தனது வளர்ப்புப் பேத்தி லீலாவுடன் காட்டிற்கு வருகிறார். சபாபதி என்னும் வில்லனும் அமிர்தரசத்தின் ரகசியத்தைத் தேடி காட்டிற்கு வருகிறான். வனவாசிகளின் உதவியோடு வில்லனின் சதிகளை முறியடித்து, தாத்தாவைக் காப்பாற்றி, லீலாவுடன் காதல் கொண்டு, அவளது உதவியோடு மீண்டும் தாய்மொழியறிவைப் பெற்று ஊர் திரும்பி எல்லோரும் சுகமாக வாழ்வதுதான் வனராஜா கார்சன் படத்தின் கதை.
வனத்தில் எடுக்கப்பட்ட முதல் தென்னிந்திய சினிமா என்ற பெயரோடு பெண் வேடமிட்டு நடித்த நடிகர் கே.ஆர்.செல்லம் நடித்ததும் ரசிகர்களால் பேசப்பட்டது. அதன் தாக்கத்தால் வனராஜா கார்சன் வெளியான அடுத்த ஆண்டே இந்தியில் ‘‘ஜங்கிள் கிங்’’ - என்ற பெயரில் அது மறு ஆக்கம் பெற்றது.

;