cinema

img

இயக்குநர் ராஜூமுருகனின் சகோதரர் கொரோனாவுக்கு பலி....

சென்னை:
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் ராஜூமுருகனின் சகோதரரும் நடிகரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான குரு ராஜேந்திரன் கொரோனா தொற்றால் மரணமடைந்தார். அவருக்கு வயது 44.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் உள்ளது. கொரோனா தொற்றுக்கு சினிமா பிரபலங்களும் தப்பவில்லை. கடந்த 2 மாதங்களாக தமிழ் சினிமாவில் 10க்கும் மேற்பட்ட பிரபலங்கள் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர்.இந்நிலையில் பிரபல இயக்குநரான ராஜூ முருகனின் சகோதரரும் நடிகருமான குரு ராஜேந்திரன் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளார். குக்கூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இயக்குநர் ராஜூ முருகன். தொடர்ந்து ஜோக்கர் மற்றும் ஜிப்ஸி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மேலும் தோழா, மெஹந்தி சர்க்கஸ், வர்மா ஆகிய படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார் ராஜூ முருகன். இவரது சகோதரர் குரு ராஜேந்திரன்.

தமிழகம் முழுவதும் பயணித்து தொண்டு செய்யும் மக்களை வெளிக் கொண்டு வந்தவர் இந்த குரு ராஜேந்திரன். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணியாற்றிய குரு ராஜேந்திரன் கடைசியாக நியூஸ் 18 தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இவர் கற்றது தமிழ், மற்றும் ஜோக்கர் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட குரு ராஜேந்திரன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த குரு ராஜேந்திரன் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இரங்கல்
அவரது மறைவு ஊடகத்தினர் மத்தியிலும் சினிமா நட்சத்திரங்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

;