articles

img

அழைத்து வரப்படவில்லை... இழுத்து வரப்பட்டேன்....

இது அன்றைய “மனோகரா” திரைப்பட வசனம்மட்டுமல்ல. இந்திய நாட்டின் ன்றைய பொதுத் துறை நிறுவனங்களின் குமுறலும் ஆகும்.கோவிட் அலைக் கழிப்பில் மக்கள் திண்டாடி நிற்கிற நிலையில் அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மீதானதாக்குதலை தீவிரமாக்கி இருக்கிறது. அதில் அரசின்“சுடு வரம்பிற்குள்” ஒரு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனம் தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது. அழைத்துவரப்படுவதில்லை. இழுத்து வருகிறார்கள். 

பெயர் சொல்ல மாட்டேன்
நான்கு அரசுப் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்று தனியார் மயமாகும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்தார். ஆனால் எந்த அரசு பொதுஇன்சூரன்ஸ் நிறுவனம் என்பதை சஸ்பென்ஸ் ஆகவைத்தார். இப்போது “நிதி ஆயோக்” தனது பரிந்துரையாக “யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி” தான்அந்த நிறுவனம் என அரசிடம் சொல்லி விட்டதாக வணிக இதழ்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் நிதியமைச்சர் பெயரை சொல்ல மறுக்கிறார். ஒரு நிறுவனம்தனியார் மயமாகிறது எனில் அச் செய்தி அதன் வாடிக்கையாளர்களுக்கு, ஊழியர்களுக்கு, மக்களுக்கு சொல்லப்பட வேண்டாமா? அவர்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை காது கொடுத்தாவது கேட்க வேண்டாமா? இந்த குறைந்த பட்ச ஜனநாயகம் கூட அரசுக்கு இல்லை. காரணம், இதை அறிவித்தால் மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழலாம் என்பதே. ஆகவே யாருக்கு விருந்தோ அவர்களுக்கு சமிக்ஞை தரப்பட்டு விட்டது.ஊரே பேசும் போது “பரம ரகசியம் போல” அரசு மட்டும் அதிகாரப் பூர்வமாக  அறிவிக்கவில்லை. 

பொன் விழா பரிசா?
2021 அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் வரலாற்றில் முக்கியமான ஆண்டு. ஆம், 1971 மே 13  அன்றுதான் 107 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தேசிய மயமாக்கப்பட்டு நான்கு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களும் பிறந்தன. வரலாற்று சிறப்பு மிக்க அம் முடிவின் பொன் விழா நிறைவு ஆண்டு ஆகும் இது. மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டிய நேரத்தை, ஒன்றிய அரசின் முடிவு அதிர்ச்சியான தருணமாக மாற்றியுள்ளது. 1971 இல் எடுக்கப்பட்ட முடிவு ஒரு நாள் ஒரு இரவில்எடுக்கப்பட்ட முடிவு அல்ல. விடுதலை பெற்ற நாளில் இருந்து வந்த கோரிக்கை. தொழிற் சங்கங்கள், தேச பக்தர்களின் தொடர்ந்த முயற்சிகள்... இதனால்தான் அம் முடிவு கை கூடியது. 1956 இல் ஆயுள்இன்சூரன்ஸ் தேசிய மயம் குறித்த விவாதத்திலேயே அன்றைய நிதியமைச்சர் சிந்தாமணி தேஷ்முக் தனியார் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை விடுத்தார். முறைகேடுகள் செய்யாதீர்கள்... மக்கள் நம்பிக்கையை காப்பாற்றுங்கள் என்று. 1956 இல் 196 தனியார் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இருந்தன. ஆனால் 1971 இல் தேசிய மயமாகும் போது 107 நிறுவனங்களே இருந்தன என்றால் அதுவே தனியார்கள் எந்த அளவிற்கு தேஷ்முக்கின் எச்சரிக்கையை மதித்தார்கள் என்பதற்கு சாட்சியம். இடைப்பட்ட காலத்திலேயே 89 நிறுவனங்கள் காணாமல் போயின. நாய் வாலைக் கூட நிமிர்த்த முடியும்,ஆனால் தனியாரின் லாப வெறியை கைவிடச் செய்ய முடியாது என்பதற்கான வரலாற்று நிரூபணம். 

ஆனால் 1971 - 2021 க்கு இடையிலான 50 ஆண்டுகளில் எவ்வளவு வளர்ச்சி! அன்று 107 நிறுவனங்களுக்கும் சேர்த்து நாடு முழுக்க இருந்த அலுவலகங்கள் 784 மட்டுமே. ஆனால் இன்று 7546 அலுவலகங்கள். அரசு 1971 இல் போட்ட முதலீடு 19.5 கோடி. இன்றுஅரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அரசு பத்திரங்கள் உள்ளிட்டு செய்துள்ள முதலீடுகள் 1,36,291 கோடிகள். இத்தகைய பிரம்மாண்டமான வளர்ச்சி அரசு நிறுவனங்களால் சாத்தியமாகியுள்ளது என்பதைதவிர அவற்றின் வெற்றிக்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும். உடமையாளர் என்ற முறையில் அரசு இதைக் கொண்டாட வேண்டும். ஆனால் பொன் விழாப் பரிசாகதனியார்மய முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் நண்பா ! 
அரசுப் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மக்களின்நண்பராக செயலாற்றி வந்துள்ளன. 1999 களில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வருகிற வரை இலவச இன்சூரன்ஸ் திட்டங்கள் கூட இருந்தன. குடிசைஎரிந்து போனால் ரூ. 5000 ஐ இலவச காப்பீடாக வழங்கிவந்தன. 1990 களில் ரூ. 5000 எனில் இன்றைய மதிப்புரூ.40000 ஆக இருக்காதா? ஆனால் தனியார் வருகையால் நிறுத்தப்பட்டது. அதே போல பாம்பு கடி, மரம் ஏறும் போது விழுதல் போன்ற விபத்துக்களுக்கு பிரீமியம்எதுவுமே இல்லாமல் உதவித் தொகையாக ரூ.2000தரப்பட்டது. அதுவும் தனியார் வருகையால் நின்று போனது. 1999 க்கு 27 தனியார் நிறுவனங்கள் போட்டிக்கு வந்த பின்னரும் அரசின் நலத் திட்டங்கள் என்றால் உடனேஏற்றுக் கொண்டு செயலாக்குவது யார்? பிரதமரின் சுரக்ச பீமா யோஜனா என்கிற விபத்து காப்பீடு திட்டம்ஆண்டு பிரீமியம் ரூ.12 க்கு விபத்து மரணம் நிகழ்ந்தால்ரூ.2 லட்சம் தருகிறது. இதற்கான பாலிசிகளில் 90% ஐஏற்றுக் கொண்டிருப்பது அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களே. காரணம் என்ன? நலத் திட்டங்களில் ஏழைகளின் முகங்கள்தான் தெரியும். கத்தை கத்தையாய் விரியும் பணங்கள் தெரியாது. ஆகவே தனியார்நிறுவனங்களுக்கு ஆர்வம் இல்லை. 

இந்த பட்டியலை பாருங்கள். பொது இன்சூரன்ஸ் நிறுவன அலுவலகங்களின் அமைவிடங்கள் இவை.தனியார் இன்சூரன்ஸ் அலுவலகங்கள் மொத்தம் 3762. இதில் முதல் தட்டு நகரங்களில் இருப்பவை 3427. இரண்டாம் தட்டு நகரங்களில் இருப்பவை 221. இந்த இரண்டு தட்டு நகரங்களிலும் இருக்கிற அலுவலகங்கள்தான் 97 சதவீதம். அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் அமைவிடம் கணக்கை பாருங்கள். மொத்த அலுவலகங்கள் 7546. அதில் முதல் தட்டு நகரங்களில் இருப்பவை 4283. இரண்டாம் தட்டு நகரங்களில் இருப்பவை 874. இந்த இரண்டு தட்டு நகரங்களிலும் இருக்கிற அலுவலகங்கள் 68 சதவீதம்தான்.மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் தட்டு நகரங்களில் உள்ள தனியார் பொது இன்சூரன்ஸ் அலுவலகங்கள் மொத்தமே 46. அதில் ஆறாம் தட்டு ஊர்களில்ஒன்று கூட கிடையாது. ஆனால் அரசு பொது இன்சூரன்ஸ் அலுவலகங்கள் இந்த நகரங்களில் 2389ஆகும். ஆறாவது தட்டு ஊர்கள் அதாவது 5000 க்கும் குறைவான மக்கள் வாழும் இடங்களில் 107 அரசு பொது இன்சூரன்ஸ் அலுவலகங்கள் உள்ளன.இது 2020 ஆம் ஆண்டிற்கான ஐ. ஆர். டி. ஏ அறிக்கை வழங்கும் விவரம். மக்களா லாபமா என்றால்யார் யார் பக்கம் நிற்பார்கள் என்பதை தெளிவு செய்யும்தகவல் இது. 

சமூக நீதிக்கு சவக் குழி
இவ்வளவு காலம் அரசாங்கம் என்ன விளக்கம் கொடுத்தது? நாங்கள் பங்கு விற்பனைதானே செய்கிறோம், 51 சதவீத பங்குகள் அரசின் கைவசம் இருக்கிறவரை அரசு நிறுவனம்தான், ஏன் அச்சப்படுகிறீர்கள்?  என்றார்கள். 2015 இல் இதே ஆட்சியாளர்கள் பொதுஇன்சூரன்ஸ் வணிக தேசிய மய சட்டத்தை பங்கு விற்பனைக்காக திருத்திய போது 51 சதவீத பங்குகள் அரசிடம் இருக்குமென்றுதான் திருத்தினார்கள். ஆனால் அப்போதே தொழிற் சங்க இயக்கங்கள் எச்சரித்தன. பங்கு விற்பனை தனியார் மயத்தின் முதற்படிதான் என்று... ஆனால்  ஆறு ஆண்டுகளுக்குள்ளாகவே இத்தனை படி தாண்டுவார்கள் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மீண்டும் அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தனியார் மயத்திற்குவழி வகுக்க திட்டமிட்டுள்ளார்கள். அரசு நிறுவனம் என்றால் மக்கள் மீது அக்கறை, சமூகப் பொறுப்பு, நலத்திட்டங்களில் முனைப்பு எல்லாம் இருக்கும். இவை அத்தனையையும் ஒரு சேர கை கழுவப் போகிறார்கள். இதன் இன்னொரு பலி இட ஒதுக்கீடு. அரசு நிறுவனம் என்ற அந்தஸ்தை இழந்து விட்டால் எப்படி ஓ. பி.சி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான இட ஒதுக்கீடுபணி நியமனங்களில், பதவி உயர்வுகளில் நீடிக்கும்?1921 கம்யூனல் ஜி. ஓ வில் துவங்கி தமிழகத்தில் நீண்டநெடிய வரலாறு கொண்ட சமூக நீதிக்கான ஆபத்தைஇது கொண்டு வருகிறது.  சென்னையை தலைமையகமாக கொண்ட ஒரு அரசு நிறுவனத்தை தனியார் மயமாக்குவதன் மூலம் இதைத் துவங்கப் போகிறார்கள் என்பதே பெரும் சவால். 

தமிழக நலனும் காவு
நான்கு அரசு நிறுவனங்களுமே பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் யுனைடெட் இந்தியா முதல் குறிஎன்றால் அதனால் அதிகம் பாதிக்கப்படப் போவது தமிழகம் என்பதும் உண்மை. யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியின் தலைமையகம் சென்னையில் உள்ளது. இதன் காரணமாக இதன் அலுவலகங்கள், செயல்பாடுகள் அதிகம் தென்னகத்தை சுற்றிஅமைந்திருக்கிறது. மேலும் தமிழக முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தை ஏற்று நடத்தி வருகிறது. ஆகவே இதன் தனியார் மயம் என்ற செய்தி உண்மையென்றால், இதுவரை மறுக்கப்படாததால் உண்மையாகவே இருக்கக் கூடும் என்பதால், தமிழகம்அதன் விளைவுகளை முதலில் சந்திக்க நேரிடும். அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை பலப்படுத்த வேண்டும் என்பதே கோவிட் பெருந் தொற்றுதந்திருக்கும் பாடம். உலக நாடுகள் பல அரசின் தலையீடு அதிகம் தேவைப்படுகிற காலம் என வெளிப்படையாக பேசுகின்றன. ஆனால் ஒன்றிய அரசோ பெருந் தொற்று காலத்தைப் பயன்படுத்தியே தவறானதிசை வழியில் பயணிக்க முயற்சிக்கிறது. 

மாற்று என்ன?
மருத்துவம், மருத்துவக் காப்பீடு ஆகியனவெல்லாம் அரசின் கடிவாளத்திற்கு கட்டுப்பட்டவையாக இருக்க வேண்டும்.  ஆகவே நான்கு அரசு நிறுவனங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு வலுவான ஒருஅரசு நிறுவனமாக உருவாக்கப்பட வேண்டும். நியூ இந்தியா தவிர மற்ற மூன்று அரசு பொது இன்சூரன்ஸ்நிறுவனங்களையும் இணைப்போம் என்று 2018 பட்ஜெட்டில் இதே அரசுதான் அறிவித்தது. ஆனால் இப்போது பின் வாங்கியுள்ளது. ஆகவே 2018 பட்ஜெட்அறிவிப்பில் இருந்து பின் வாங்கலாம் என்றால் 2021 பட்ஜெட் அறிவிப்பில் இருந்து  ஏன் பின் வாங்கக் கூடாது? ஆகவே அரசு பொது நிறுவனங்களை இணைப்பதுஎன்ற திட்டத்தை அமலாக்க வேண்டும். தனியார் மயமுடிவைக் கைவிட வேண்டும். யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் பற்றிய நிதி ஆயோக்கின் பரிந்துரை உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதைநிராகரிக்க வேண்டும். எந்தவொரு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மீதும் தனியார் மயத்தைதிணிக்கக் கூடாது. உலகை உலுக்கும் கோவிட் மரண ஒலங்கள் நம்காதுகளில் உரக்கச் சொல்கிற செய்தியும் இதுவே.

கட்டுரையாளர் : ஜி.ஆனந்த், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்துடன் இணைக்கப்பட்ட தென் மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்

;