articles

img

தமிழக ஜவுளித்துறையை பாதுகாக்க தமிழ்நாடு பருத்திக் கழகம் துவக்க வேண்டும்.....

திருப்பூரில் 7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும், வாழ்வாதாரமும் வழங்கும், 27 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி தொழிலும், 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நடைபெறும் உள்நாட்டு சந்தைக்கான பின்னலாடை உற்பத்தி தொழிலும் 2020 செப்டம்பர் மாதத்தில் இருந்து கடந்த ஆறு மாதமாகத் தொடர்ந்து உயர்ந்து வரும் நூல் விலையேற்றம் காரணமாக நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளன. நூல் விலையைக்கட்டுப்படுத்தக் கோரி பின்னலாடை ஏற்றுமதி தொழில் துறையினரும், உள்நாட்டு சந்தைக்கான பனியன் உற்பத்தியாளர்களும் கடந்த ஒரு மாதமாக பல்வேறு அறிக்கைகளின் மூலமாக மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.2020 செப்டம்பர் மாதத்தில் இருந்து கடந்த ஆறு மாத காலமாக தொடர்ந்து உயர்ந்து வரும் பஞ்சு விலையும், நூல் விலையும் மாதவாரியாக கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன:

வருடம்                            மாதம்                    பஞ்சு விலை                 நூல் விலை                                      நூல் விலை    
                                        ரூ/கண்டி                                                  30’S கோம்ப்டு (ரூ/கிலோ)                   40’S கோம்ப்டு  (ரூ/கிலோ)

 2020                               ஆகஸ்ட்                        34,900.00                           205.00                                                        227.00

 2020                             செப்டம்பர்                      36,200.00                           215.00                                                        237.00

 2020                             அக்டோபர்                      37,200.00                          215.00                                                        237.00

 2020                                 நவம்பர்                       40,100.00                         222.00                                                         244.00

 2020                                 டிசம்பர்                       41,000.00                          232.00                                                         254.00

 2021                                ஜனவரி                        42,600.00                         244.00                                                         269.00

 2021                               பிப்ரவரி                        43,200.00                         254.00                                                         279.00

 2021                                   மார்ச்                         45.300.00                        264.00                                                          289.00

நூல் விலையேற்றத்துக்கான காரணங்களை பரிசீலிக்கும்போது முதல் காரணமாக பஞ்சு விலை ஏற்றம் அமைகிறது. 2020 ஆகஸ்ட் மாதத்தில் ஒரு கண்டி (355.6கிலோ) ரூ.34,900 ஆக இருந்த பஞ்சு விலை, ஒவ்வொரு மாதமும் உயர்ந்து தற்போது ஒரு கண்டி பஞ்சு விலை ரூ.45,300 ஆக உயர்ந்துள்ளது.ஒவ்வொரு வருடத்திலும் அக்டோபர் மாதம் பருத்தி வரத்து துவங்கி மார்ச் மாதம் வரை நீடிக்கும். குறிப்பாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் பெருவாரியாக பருத்தி அறுவடை செய்யப்பட்டு சந்தைக்கு கொண்டு வரப்படும். 

விளைச்சல் இருந்தும்...
இந்த வருடம் பருத்தி விளைச்சல் போதுமானதாகவே உள்ளது. 2019 - 2020  ஆம் ஆண்டில் 126 லட்சம் ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்பட்டது. 2020-21 ஆம் ஆண்டில் உயர்ந்து 130 லட்சம் ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்பட்டு உள்ளது. எனவே இந்த ஆண்டு 2020-21 ஆம் ஆண்டில்பருத்தி விளைச்சல் 3 சதவிகிதம் கூடும் எனவும், இந்தாண்டுகோவிட் - 19 காரணமாக பருத்தி விளைச்சல் பாதிப்பின்றி போதுமானதாகவே இருக்கும் எனவும் ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் இரானியால் மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் பருத்தி விளைந்து சந்தைக்கு கொண்டு வரப்பட்ட 2020 அக்டோபர் முதல் 2021 மார்ச் வரை ஏற்பட்டுள்ள விலையேற்றம் அதீதமாக உள்ளது.

பருத்திக் கழகத்தின் கடமை என்ன?
பஞ்சு விலையைக் கட்டுப்படுத்துவது அரசு நிறுவனமான இந்திய பருத்திக் கழகத்துக்கு (cotton Corporation of India) சாத்தியமானதும், அதன் கடமையும் ஆகும்.இந்திய பருத்திக் கழகத்தின் குறிக்கோள், விவசாயிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கச்செய்வதும், பஞ்சை பயன்படுத்தி நூல் தயாரிக்கும் நூற்பாலைகளுக்கு வருடம் முழுவதும் சீரான விலையில் பஞ்சை விநியோகம் செய்வதுமே ஆகும். எனவே விவசாயத்துக்கு அடுத்தபடியாக வேலை வாய்ப்புள்ள ஜவுளித் தொழிலைக் காப்பாற்ற, ஜவுளித் தொழிலுக்கு மூலப் பொருளான பஞ்சை நூற்பாலைகளுக்குச் சீரான விலையில் குறுகிய கால ஏற்ற, இறக்கமின்றி கொடுத்து, பஞ்சு விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தலையிட்டு இந்தியபருத்திக் கழகத்துக்கு வழிகாட்ட வேண்டும். 

நூல் விலையேற்றத்துக்கான அடுத்த காரணமாக ஏற்றுமதியாகும் நூலுக்குக் கிடைக்கும் அதிக விலை உள்ளது. வழக்கமாக ஏற்றுமதியாகும் நூலுக்கு உள்நாட்டில் விற்கும் நூலின் விலையை விட கிலோவுக்கு சுமார் ரூ.5 வரை குறைவாகக் கிடைக்கும். இருந்தும் நூல்ஏற்றுமதி செய்யப்படுவதன் காரணம், நூல் டெலிவரி செய்யப்படும் போதே பணம் வந்துவிடுவது தான். உள்நாட்டில் விற்பனையாகும் நூலுக்கான பணம் உடனடியாகவும் கிடைக்கலாம் அல்லது 30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையும் பணம் வந்து சேர தாமதமும் ஆகும். ஆனால் தற்போது ஏற்றுமதியாகும் நூலுக்கு உள்நாட்டில் விற்பனை விலையை விடக் கூடுதலாகவும் கிடைக்கிறது. மேலும் நூல் ஏற்றுமதிக்கான தேவையான ஆர்டர்களும் கூடியுள்ளதால் நூல் உற்பத்தியாளர்கள் நூல் ஏற்றுமதி செய்கிறார்கள். பின்னலாடை ஏற்றுமதியாளர்களும், உள்நாட்டு பனியன் தயாரிப்பாளர்களும் முன்பணம் கொடுத்து நூலை வாங்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

உபரி நூலை மட்டுமே ஏற்றுமதி செய்க!
எனவே மத்திய அரசு மற்றும் ஜவுளித் துறை அமைச்சகம் உடனடியாக கவனம் செலுத்தி, உள்நாட்டு உற்பத்திக்குத் தேவையான நூலை, அதாவது பின்னலாடை ஏற்றுமதிக்கான தயாரிப்புக்கும், உள்நாட்டு சந்தைக்கு தேவைப்படும் பனியன் மற்றும் விசைத்தறி, கைத்தறி துணி உற்பத்திக்கும் முக்கியத்துவம் கொடுத்து தேவைப்படும் நூலை ஒதுக்கி கொடுத்து விட்டு, உபரி நூலை மட்டும் ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும்.துணிக்கு மூலப்பொருளான நூலை ஏற்றுமதி செய்வதை விட, மதிப்புக் கூட்டப்பட்ட ஆடை தயாரித்து ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டுக்கு அந்நியச் செலாவணி அதிகம் கிடைக்கும், வேலை வாய்ப்பும் பெருகும்.நூல் விலையேற்றத்தின் காரணமாக இதேபோல் விசைத்தறி தொழிலும், கைத்தறி தொழிலும் பாதிக்கப்படு
கின்றன. தமிழ்நாட்டில் 10.19 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதத்தில் 5 லட்சத்து 63 ஆயிரம்விசைத்தறிகள் இயங்குகின்றன. பள்ளி மாணவர்களுக்கான சீருடைகளும், விலையில்லா புடவை, வேட்டிகளும் உற்பத்தி செய்யும் 212 பவர்லூம் கூட்டுறவு நெசவாளர் சொசைட்டிகளும் செயல்படுகின்றன.அதேபோல் 3 லட்சத்து 19 ஆயிரம் நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் ஒரு லட்சத்து 89 ஆயிரம்கைத்தறிகள் செயல்படுகின்றன. பெரும்பாலான நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் இணைந்துள்ளனர்.

நிரந்தரத் தீர்வு என்ன?
நூல் விலையேற்றம் அல்லது நூல் தட்டுப்பாடு ஆகிய பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வாக தமிழகத்தில் ஜவுளித் துறையின் பனியன், பவர்லூம், கைத்தறி தொழில்கள் மற்றும் நூல் மில்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் விளைபொருள் பருத்திக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கவும், “தமிழ்நாடு பருத்திக் கழகம்” என்னும் அரசு நிறுவனம் ஒன்றை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.இந்தியாவில் உள்ள நூற்பாலைகளில் நிறுவப்பட்டுள்ள 5 கோடி 30 லட்சம் ஸ்பிண்டில்களில் 2 கோடி 41 லட்சம் ஸ்பிண்டில்கள் தமிழ்நாட்டில் செயல்படுகின்றன. இதில் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்தியாவின் பருத்தி மற்றும் பருத்தி அல்லாத நூல் உற்பத்தி 5659.58 மில்லியன் கிலோ ஆகும். அதில்2003.20 மில்லியன் கிலோ நூல் தமிழகத்தில் உற்பத்தி ஆகின்றன. பருத்தி நூல் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் முதன்மை வகிப்பது தமிழ்நாடு ஆகும். நாட்டில் உற்பத்தியாகும் நூலில் 35.0 சதவிகிதம் தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகின்றன. இந்தியாவின் மொத்த பருத்தி விளைச்சல் இந்த ஆண்டும் சென்ற ஆண்டும் சுமார் 360 லட்சம் பேல்களாகும். (ஒரு பேல் = 170 கிலோ). இந்திய நூற்பாலைகளின் ஆண்டுத் தேவை 270 லட்சம் பேல்களாகும். தமிழகத்தில் 40 சதவிகிதம் பருத்தி தேவை என வைத்துக் கொண்டால்  108 லட்சம் பேல்கள் ஆண்டுக்குத் தேவைப்படும். இதன் மதிப்பு தோராயமாக சுமார் 20 ஆயிரம் கோடி ஆகும். ஆனால் தமிழகத்தில் பருத்தி விளைச்சல் 6 லட்சம் பேல்கள் ஆகும்.தமிழக ஜவுளித் துறையை பாதுகாக்கவும், லட்சக்கணக்கான குடும்பங்களின் வேலைவாய்ப்பையும், வாழ்வாதாரங்களையும் பாதுகாக்கவும் “தமிழ்நாடு பருத்திக் கழகம்”துவக்க, தமிழக அரசு முன்வர வேண்டும். 

கட்டுரையாளர் :‘விழிப்பு’ எம்.நடராஜன், திருப்பூர் நூற்பாலை தொழில் துறை ஆலோசகர்

;