articles

img

விடுதலைப் போராட்ட பெருமிதத்தோடு சுதந்திர திருநாளை கொண்டாடுவோம்....

“இந்திய சுதந்திரப் போராட்டத்தில் எங்களுடைய பங்கு குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம்.விடுதலைப் போராட்டத்தில் நாங்கள் ஆற்றிய பணிக்காக பெருமிதம் கொள்கிறோம்.வேறுஎந்தக் கட்சியும் செய்யாத அளவுக்குமகத்தான தியாகங்களை சுதந்திரப்போராட்டத்தின்போது செய்துள்ளோம்”

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரும் விடுதலைப்போராட்ட வீரருமான தோழர் பி.ராமமூர்த்தியின் வார்த்தைகள் இவை.இந்தியத் திருநாடு விடுதலை பெற்று, முக்கால் நூற்றாண்டு ஆகியுள்ள நிலையில்75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம்.  வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தில் முகிழ்த்த   பெருமைக்குரியது இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம். விடுதலைப்போரில் மகத்தான தியாகங்களை செய்தவர்கள் விடுதலை விளைச்சலில் கணிசமான பங்குக்குசொந்தக்காரர்கள் என்கிற பெருமிதத்தோடுகம்யூனிஸ்ட் இயக்கம் விடுதலை திருநாளின் பவளவிழாவை கொண்டாடுகிறது.இந்தஆண்டு முழுவதும் பவளவிழா கொண்டாட்டத்தை நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு முடிவு செய்துள்ளது.

முழு விடுதலை முழக்கம்
பூரண சுதந்திரம் என்கிற முழக்கத்தை முதன்முதலில் எழுப்பியவர்கள் கம்யூனிஸ்டுகளே என்பதை இந்திய வரலாறு உரத்துஉரைக்கிறது. விடுதலை பெற்ற இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்படுவதே நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் என முழங்கியவர்கள் கம்யூனிஸ்டுகள்.  1917 ஆம்ஆண்டு ரஷ்ய மண்ணில் மாமேதை லெனின் தமையில் பாட்டாளி வர்க்கப்புரட்சி மூலம் உலகிற்கு ஒரு புதுமையாய் சோசலிச அரசு அமைந்ததும் தோழர் லெனின் காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போராடும் அனைத்து நாடுகளுக்கும் சோவியத் அரசு நேசக்கரம் நீட்டும் என பிரகடனம் செய்ததும் பல்வேறு நாடுகளில் புரட்சிக்குவித்திட்டது போன்று இந்திய விடுதலைப்போராட்டத்திலும் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.விவசாயிகள்,தொழிலாளர்கள் என அனைத்துப்பகுதி மக்களும் நாட்டின் விடுதலைக்காக வர்க்கரீதியாக அணிதிரண்டு போராடுவதற்கு சோவியத் புரட்சி வழிவகுத்தது. பல்வேறு இடங்களில் விவசாயிகளின் எழுச்சி,தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், மாணவர்,இளைஞர்களின் பேரெழுச்சி என சுதந்திரப்போராட்டம் புதிய திசைவழியில் நடைபோட கம்யூனிஸ்டுகள் வழிவகுத்தனர்.

விடுதலை வேட்கையுடன்...
பகத்சிங் உள்ளிட்ட தோழர்கள் சுதந்திரலட்சியத்துடன் சோசலிசப் பாதைக்காகவும் போராடத்துவங்கியது கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தாக்கத்தினாலே ஆகும். அன்றைய நாளில் விடுதலைப் போராட்டத்தில் மாணவராக பங்கேற்ற தோழர் சங்கரய்யா சுதந்திரதின பவளவிழாவின் போது நூற்றாண்டுகண்ட நாயகராக நமக்கு வழிகாட்டிக்கொண்டிருப்பது பெருமைக்குரியதாகும். விடுதலைப்போராட்டத்திற்கு ஒரு முற்போக்கான உள்ளடக்கத்தை கொடுத்ததில் கம்யூனிஸ்டுகளுக்கு பெரும் பங்கு உண்டு என்பதை நிராகரித்துவிட முடியாது. தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்களும் விவசாயிகளின் எழுச்சியும் பழங்குடி மக்களின் போராட்டமும் அந்நியர்களை கதிகலங்கச் செய்தது என்பது வரலாறு. இந்திய நாட்டின் விடுதலைக்காக கம்யூனிஸ்ட்டுகள் எதிர்கொண்ட சிறை வாழ்க்கை, தலைமறைவு வாழ்க்கை ஆகியவை வரலாற்றில் புறக்கணிக்க முடியாததாகும். 

குறிப்பாக, விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக  பெஷாவர் சதி வழக்கு, கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு உள்ளிட்ட எண்ணற்ற வழக்குகளை சுமத்திஆயிரக்கணக்கான கம்யூனிஸ்ட் தலைவர்களை சிறையில் அடைத்தது பிரிட்டிஷ் அரசு. சிறை தண்டனை பெறாத தலைவர்களே இல்லை எனும் வகையில் விடுதலைவேட்கையோடு சிறைவாசத்தை ஏற்றவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.விடுதலைக்கு பிறகும் தெலுங்கானா, புன்னப்புரா வயலார், தேபாகா, வோர்லிபழங்குடி மக்கள் போராட்டம், கீழ்தஞ்சையில் வெண்மணி என பல்வேறு போர்க்களங்களையும், மக்களின் உரிமைகளுக்காக கம்யூனிஸ்ட்டுகள் எதிர்கொண்டனர். விடுதலை பெறும் தருவாயில் நடைபெற்ற பம்பாய் கப்பற்படை வீரர்களின் எழுச்சிக்கு கம்யூனிஸ்ட்டுகள் அளித்த ஆதரவு வரலாற்றில் மிகவும் முக்கியமானது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதல் மாநாட்டில் பங்கேற்ற அனைத்து பிரதிநிதிகளும் சராசரியாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைபோராட்டத்தில் பங்கேற்று சிறை தண்டனையை ஏற்றவர்களே என்பது மிக முக்கியமானது. 

விடுதலைப் போரில் பங்கேற்காதவர்கள் கைகளில்
நாடு விடுதலை பெற்ற பிறகு பெற்ற சுதந்திரத்தின் பலன் அனைத்துப்பகுதி மக்களுக்கும்கிடைக்கச் செய்வதற்கான போராட்டத்தை கம்யூனிஸ்டுகள் அயர்வின்றி நடத்தி வருகிறார்கள்.விடுதலைப்போராட்டத்தில் பங்கேற்காமல் மக்கள் ஒற்றுமையை சிதைப்பதில் கவனம் செலுத்தியவர்களின் கைகளில் இன்றைக்கு ஒன்றிய ஆட்சியின் அதிகாரம் சிக்கியுள்ளது.காலனியாதிக்கத்திலிருந்து விடுதலைஎன்பது மட்டுமின்றி, ஜனநாயகம், மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமை போன்றஉள்ளார்ந்த அம்சங்களை உள்ளடக்கியிருந்தது இந்திய விடுதலைப்போராட்டம். ஆனால் இந்த விழுமியங்கள் அனைத்தையும் சிதைத்து வருகிறது ஒன்றிய பாஜக கூட்டணி அரசு.இந்திய அரசமைப்புச்சட்டத்தை உருவாக்க அரசியல் நிர்ணய சபையில் நீண்டநெடிய விவாதங்கள், தர்க்கங்கள் நடைபெற்றுள்ளன. இதன்விளைவாக உருவாக்கப்பட்ட அரசமைப்புச்சட்டத்தின் அடித்தளத்தை தகர்க்கும் வேலையில் ஆர்எஸ்எஸ் பரிவாரம் ஈடுபட்டு வருகிறது.

ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிப்பது
பெகாசஸ் உளவு மென்பொருளைக் கொண்டு சொந்த நாட்டு மக்களையே உளவுபார்க்கும் கீழ்த்தரமான வேலையில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது.இதை எதிர்த்துஎதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினால் நாடாளுமன்றத்தையே முடக்கிதாங்கள் விரும்பும் கார்ப்பரேட் ஆதரவுசட்டங்களை விவாதமின்றி நிறைவேற்றுகிறது.இது ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிப்பது ஆகும்.இந்திய மக்களை அச்சுறுத்த,அடிமைப்படுத்த அன்றைக்கு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த ஆள்தூக்கிச்சட்டங்களை இப்போதும் கையில் வைத்துக்கொண்டு மனித உரிமைப்போராளிகளை சமூக ஆர்வலர்களை கைது செய்து, சிறையில்அடைக்கிறது மோடி-அமித்ஷா வகையறா. பிரிட்டிஷ் காலத்து கொடுங்கோல் சட்டங்கள் இப்போதும் தேவையா?என வேதனையுடன் உச்சநீதிமன்றமே கேள்வி எழுப்புகிறது.

குடியுரிமை சட்டத்தை திருத்தி சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குடியுரிமையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. கோடானுகோடி இந்திய விவசாயிகளிடமிருந்து நிலத்தை பறித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கைமாற்றிவிட கொண்டுவரப்பட்ட வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்துஇந்திய விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் சுதந்திரப்போராட்டத்தின் தொடர்ச்சியே ஆகும்.தொழிலாளர் நலச்சட்டங்களை சிதைத்துமுதலாளிகளுக்கு சாதகமாக மாற்றுகிறது ஒன்றிய அரசு. சுதந்திர இந்தியாவின் சுயசார்பை நிலைநிறுத்த பொருளாதார தூண்களாக உருவாக்கப்பட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியார் முதலாளிகளின் பெரும்பசிக்கு இரையாக்கப்படுகிறது. ரயில்வே, காப்பீட்டுத்துறை, ராணுவ தளவாடத்துறை என எதையும் விட்டுவைக்க ஒன்றியஆட்சியாளர்கள் தயாராக இல்லை.

மக்களைப் பிளவுபடுத்தி அதிகாரத்தை தக்க வைக்க...
அரசியல் சட்டத்திலிருந்தே மதச்சார்பின்மை என்ற வார்த்தையை அகற்றிவிட முன்பு பாஜக அரசு முயன்றது.இப்போது அதை சொல்லாமல் செய்து வருகின்றனர். நாடு விடுதலைப் பெற்ற போது நடைபெற்ற கலவரங்களில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். அந்த பிளவுவாத அரசியலின் பின்னணியில் இருந்த இந்துத்துவா கூட்டம் இப்போதும் தங்கள் வேலைகளை அதிகார பலத்துடன் செய்து வருகின்றனர். மக்களை பிளவுபடுத்துவதன் மூலம் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற அந்நிய ஆட்சியாளரின் அணுகுமுறையை இப்போதும் தொடர்கிறார்கள்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது என்பது அந்த மக்களின்விருப்பத்தின் அடிப்படையில் நிகழ்ந்த ஒன்றாகும். அந்த மாநிலத்தையே தங்கள் மதவெறி நோக்கில் சிதைத்து சின்னாபின்னமாக்கி உள்ளனர். பன்முகப்பண்பாட்டை சிதைத்து,ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என எதேச்சதிகார பாதையை திணிக்கின்றனர். அறிவிக்கப்படாத அவசரநிலைக்காலம் போல ஜனநாயகம் நசுக்கப்படும் நிலையில்தான் இந்தியாவின் பவளவிழா சுதந்திரத்தைகொண்டாட வேண்டிய நிலையில் உள்ளோம்.

மக்களின் போராட்டமே இந்திய விடுதலையை சத்திய சாத்தியமாக்கியது. அதே போராட்டப்பாதையில் அனைத்துப்பகுதி மக்களும் அணிதிரள்வதன் மூலம் சுதந்திரப்போராட்ட லட்சிய இலக்குகளை அடையமுடியும். எல்லோருக்குமான, ஏற்றத்தாழ்வில்லாத இந்தியாவை உருவாக்க இந்நாளில்சபதமேற்போம்.

கட்டுரையாளர் : கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)

;