articles

img

காஷ்மீர் பிரச்சனையும் - அதன் வரலாற்றுப் பின்னணியும் - சூர்யா சேவியர்

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு மாநிலமே சிறை வைக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீர் மக்களுக்கு இந்திய ஒன்றியம் அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மாறாக அடக்குமுறையும் தொடர்கிறது. தற்போது அம்மாநில தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது ஒன்றிய அரசு. என்ன நடக்கப் போகிறது என்பதை, என்ன நடந்தது என்பதிலிருந்தே அறிய முடியும்.

தேசிய தன்மையின் அடிப்படையில் இந்தியா பிரிக்கப்படவில்லை. மாறாக மதத்தை தேசியத்தன்மைக்கு சமமாகக்கருதி இந்தியா,பாகிஸ்தான் என்ற இரண்டு நாடுகள் உருவாக்கப் பட்டன. ஏகாதிபத்தியமும்,இந்தியப்பெருமுதலாளிகளும் ஏற்படுத்திக் கொண்ட இந்த சமரச ஒப்பந்தத்தில் மத அடிப்படையிலான பிரிவினை என்பது கடுமையான விலையாக அளிக்கப்பட்டது.

இந்து-முஸ்லிம் ஆகிய இரண்டு மதப்பிரிவினரும், இந்தியா வின் ஒவ்வொரு செயற்கையான எல்லைகள் மூலமே இந்த பிரிவினை நிறைவேற்றப்பட்டது. இந்தியாவை விட்டுச் செல்லும்போது வெள்ளையர்கள் வைத்து சென்ற நெருப்பு, இன்றளவும் கொழுந்துவிட்டு எரிகிறது.

மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்படாத அந்தஸ்து காஷ்மீருக்கு மட்டும் ஏன் வழங்கப்பட்டது என்று பிஜேபி கேட்கிறது. அங்கு நிலவும் பதட்ட மான சூழலுக்கு சிறப்பு அந்தஸ்தும், அதை வழங்கும் 370வது பிரிவும் தான் காரணம் என்றும்,அதை நீக்கிவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்றும் குருட்டுத்தனமாக வாதிடுகிறது.

 

காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்த வரலாற்றுப் பின்னணியை அறியாதவர்கள் பிஜேபியின் வாதம் சரிதானே என்று கூட எண்ணக்கூடும். தங்கள் வாழ்வுரிமை பறிபோகும் என்ற பதட்டமே காஷ்மீர் மக்களை அலைக்கழிக்கிறது என்பதைப் பார்க்க மறுப்பவர்களால் காஷ்மீர் பிரச்சனையை புரிய இயலாது. நாட்டுப் பிரிவினைக்காக மவுண்ட்பேட்டன் திட்டத்தில் சமஸ்தானங்கள் இணைப்புபற்றி கூறப்பட்ட ஆலோசனையிலிருந்து இதை அணுகவேண்டும்.

இந்தியா விடுதலை பெற்றபோது 601 சமஸ்தானங்கள் இருந்தன.இதில் 552 சமஸ்தானகள் இந்தியாவோடும்,49 சமஸ்தானங்கள் பாகிஸ்தானோடும் இணைந்தன. மற்ற 3 சமஸ்தானங்கள் இணைய மறுத்தன.

  • 1.ஜுனாகட் சமஸ்தானம்
  • 2.ஹைதராபாத் சமஸ்தானம்
  • 3.காஷ்மீர் சமஸ்தானம்

ஜுனாகட் சமஸ்தானத்தின் நவாப், தனது சமஸ்தானத்தை பாகிஸ்தானோடு சேர்ப்பதாக அறிவித்தார். இந்துக்கள் அதிகம் இருந்த இங்கு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. 1948 பிப்ரவரி 7ல் இந்திய அரசாங்கம் படைகளை அனுப்பி, மக்களிடம் நேர்முக வாக்கெடுப்பு நடத்தி, இதனை இந்தியாவுடன் இணைத்தது.  ஹைதராபாத் சமஸ்தானம் ( இன்றைய தெலுங்கானா பகுதி ) மிகப்பெரியது. இங்கு மன்னராக இருந்த நிஜாம் இந்தியாவுடன் இணைவதை விரும்பமுற்றும் ரஜாக்கர்கள் என்ற பெயரில் வைத்திருந்த தன்னுடைய இராணுவத்தை வைத்து, முஸ்லிம் அல்லாதோரையும், தெலுங்கானா விவசாயிகள் போராட்டத்தையும் ஒடுக்க முனைந்தார்.

இந்திய ராணுவம் 1948 செப்டம்பர் 13 ஹைதராபாத் சமஸ்தானத்தில் நுழைந்து,நிஜாமின் இராணுவத்தையும், கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் நடைபெற்ற தெலுங்கானா விவசாயிகள் போராட்டத்தையும் ஒடுக்கியது. 1949 - ஜனவரியில் இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத்தில் மன்னர் நிஜாம் கையெழுத்திட்டார்.

ஜுனாகட், ஹைதராபாத் சமஸ்தானங்கள் பெரும்பான்மையாக இந்துமக்கள் வசிப்பவையாக இருந்தது. ஆனால் மன்னர்கள் முஸ்லிம், காஷ்மீர் சமஸ்தானத்தில் 90% முஸ்லிம் மக்கள்.  ஆனால் மன்னன் இந்து டோக்ராவம்சத்தை சேர்ந்த ஹரிசிங். ஹரிசிங்கின் மூதாதையர்களுக்கு காஷ்மீர் அரசுரிமை வந்ததே வேடிக்கையானது, கேவலமானது.

அன்று காஷ்மீர் பஞ்சாப் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக சீக்கியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. டோக்ராவம்சத்தை சேர்ந்த குலாப்சிங், சீக்கியமன்னர் ரஞ்சித்சிங் என்பவரின் ராணுவத்தில் அவரது சதி வேலை களுக்கு துணை நின்று விசுவாசமாக பணியாற்றியமைக்காக காஷ்மீர் பகுதியை இனாமாகப்பெற்றார். இதன் மூலமமுற்றும் வளர்த்துக்கொண்டு, சீக்கியரையே தோற்கடிக்க பிரிட்டிஷாருக்கு துணைபோனார்.

பஞ்சாப் சமஸ்தானத்தை கைப்பற்றிய பிரிட்டிஷ்காரர்கள், இழப்பீட்டுத்தொகையாக 75 லட்சம் சீக்கியர்கள் கொடுக்க வேண்டும் எனவும், இல்லையேல் காஷ்மீரை பிரிட்டிஷாருக்கு விட்டுத்தரவேண்டுமெனவும் நிபந்தனை விதித்தது. 75 லட்சம் தர பஞ்சாப் சமஸ்தானம் ஒப்புக்கொண்டாலும், அதனால் தொகையைக் கொடுக்க முடியவில்லை. குலாப்சிங் தொகையை தர முன்வந்ததால் காஷ்மீர் அரசுரிமை குலாப்சிங் வசம் சென்றது. குலாப்சிங் மகன்தான் ஹரிசிங். காஷ்மீர் குலாப்சிங் வசம் வந்ததற்குப் பெயர்தான் அமிர்தசரஸ் ஒப்பந்தம். 1846ல் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.

ஒரு விற்பனைப் பத்திரத்தின் மூலம் அரசுரிமையைப் பெற்ற மன்னர் ஹர்சிங், காஷ்மீர் இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ சேர விரும்பாமல் தனியே சுதந்திர நாடாக இருக்க விரும்பினார். 1947 ஜூலை மாதத்தில் மவுண்பேட்டன்- ஹரிசிங் சந்திப்பு நடந்தது. மவுண்ட்பேட்டன் காஷ்மீர் பாகிஸ்தானோடு சேர வற்புறுத்தினார்.

ஹரிசிங் அதற்கு சம்மதிக்கவில்லை. மறுபக்கம் ஹரிசிங்கின் ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக இருந்தது. மன்னரின் கொடுங்கோலாட்சிக்கும், வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக மக்கள் போராடினர்.

முஸ்லிம்கள் இரண்டாம்தரக் குடிகளாகவும், நிலமானியங்கள் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்பட்டும், சொத்துக்களை வாங்கவோ, விற்கவோ முடியாமலும், மரங்கள் வெட்டக்கூட முடியாமலும் துன்புறுத்தப்பட்டனர். 1924- முதல் மக்கள்போராட்டம் தீவிரமடைந்தது.

மக்கள் போராட்டத்தில் 1931ல் முஸ்லிம் மாநாடு என்ற இயக்கம் துவங்கி, 1939ல் தேசிய மாநாட்டுக் கட்சியாக உருவெடுத்தது. தேசிய மாநாட்டுக்கட்சி மன்னருக்கு எதிராகவும், வெள்ளையருக்கு எதிராகவும் போராட்டத்தை தீவிரமாக நடத்தியது. தேசிய மாநாட்டுக்கட்சி மன்னருக்கு எதிராக போராடியவுடன், மன்னருக்கு ஆதரவாக பிரஜா பரிஷத் அமைப்பு செயல்பட்டது.

ஆர்.எஸ்.எஸ் பிரஜாபரிஷத் என்ற பெயரில்தான் 1931 ல் காஷ்மீரில் செயல்பட்டது. காஷ்மீர் இந்தியாவுடன் இணையக்கூடாது என ஆர்.எஸ்.எஸ்.தலைவர்கள் அன்று கடுமையாக வலியுறுத்தினர். வெள்ளையர்கள் காஷ்மீர் பகுதியை இந்தியாவுடன் இணைக்க வேண்டுமென இங்கும், பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டுமென அங்கும் பேசி, இருவருக்கும் ஆயுதப்போரை மூட்டிவிட்டார்கள்.

வெள்ளையர்களால் தூண்டிவிடப்பட்ட பட்டாணிய இனக்குழுப்படை 1947 அக்டோபர் 22 வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திலிருந்து காஷ்மீருக்குள் நுழைந்தது. மன்னர்  ஆட்சியிலிருந்து மக்களை விடுவிக்க என்ற கோஷத்துடன் நுழைந்தவர்கள் முஜபர்பாத், டோமல், ஊரி, பாரமுல்லா ஆகிய நகரங்களைப் பிடித்தனர்.  அக்டோபர் 26 பட்டாணியர்கள் படை காஸ்மீர் சமஸ்தான தலைநகர் ஸ்ரீநகரை நெருங்கினர். மன்னர் ஹரிசிங் விலையுயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பிஓடினார்.

ஸ்ரீநகரை அவர்கள் கைப்பற்றாமல் தடுக்க ஷேக் அப்துல்லாவும், தேசிய மாநாடு கட்சி தலைமையும் இந்திய இராணுவ உதவியை நாடினர்.படையெடுப்பாளர்களுக்கு மறைமுகமாக உதவிய மவுண்ட்பேட்டன் உதவி செய்ய மறுத்தார். காஸ்மீரை இந்தியாவுடன் இணைத்தால் மட்டுமே படை அனுப்ப முடியும் என கூறினார்.

இந்த நெருக்கடிக்குப்பிறகுதான் மன்னர் ஹரிசிங் இந்தியாவுடன் இணைய ஒப்புதல் தெரிவித்து கையொப்பமிட்டார். படைகளை விரட்ட உதவி கோரினார்.இந்திய அரசு அக்டோபர் 27 ராணுவத்தை விமானம் மூலம் ஸ்ரீநகரில் இறக்கியது. பாகிஸ்தானின் பட்டாணிப்பிரிவு படையுடன், பாகிஸ்தானின் ராணுவமும் நுழைந்து, இந்திய ராணுவத்துடன் மோதியது. இதில் கொடுமை என்ன தெரியுமா? இந்திய ராணுவத்திற்கும், பாகிஸ்தான் ராணுவத்திற்கும் தலைமை தாங்கி சண்டையிட்டது ஒரே நபர்தான். அவன்தான் அன்றைய பிரிட்டிஷ் ஜெனரல் ஆக்கின்லேக் என்பவன்.

ஊடுருவல் படைகளை காஸ்மீரின் பெரும் பகுதியிலிருந்து, இந்திய படைகள் விரட்டிவிட்டன. ஆனால் காஸ்மீரின் வடமேற்கு, வடக்கு, வடகிழக்குப் பகுதியிலிருந்து ஊடுருவல்க்காரர்கள் வெளியேறும் முன்பு ஐ.நா.மற்றும் மவுண்ட்பேட்டன் தலையீட்டால் போர் நிறுத்தம் ஏற்பட்டது. பாகிஸ்தான் படைகள் கைப்பற்றிய பகுதி "ஆசாத்காஷ்மீர்" என்ற பெயரில் இன்றுவரை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்திய-பாகிஸ்தான் பிரச்சனையின் மையப்புள்ளி இந்த ஆசாத்காஷ்மீர்தான்.

காஷ்மீர் பிரச்சனை 1947 டிசம்பர் 31 அன்று ஐ.நா பாதுகாப்புக் குழுவின் பரிசீலனைக்கு இந்தியாவால் கொண்டுசெல்லப் பட்டது.  ஐ.நா கமிஷன் ஒன்று அமைத்தது. அமெரிக்காவும் - இங்கிலாந்தும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டன. 1948ல் வசந்த காலத்தில் போர் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. போர்நிறுத்த ஒப்பந்தம் 1949 ஜனவரி 1 அமுலுக்கு வந்தது.

 

காஷ்மீரில் ஐ.நா நிர்வாகத்தால் பொது வாக்கெடுப்பு நடத்தவும் அமெரிக்க முன்னாள் கடற்படை தளபதி செஸ்டர்நிமிட்ஸ் என்பவர் வாக்கெடுப்பு அதிகாரியாகவும் நியமித்து ஐ.நா  தீர்மானம் போட்டது. வருடத்திற்கு 45,000 டாலர் ஊதியமும் அவருக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஐ.நா வின் இந்த முடிவை இந்தியாவும், தேசிய மாநாட்டுக்கட்சியும் நிராகரித்தன.

இந்தியா ஐ.நாவின் அமெரிக்க சதியை நிராகரித்தபின்பு, 1950 மார்ச் 14 ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் மற்றொரு தீர்மானம் போட்டது. அதில் காஷ்மீர் பிரச்சனை குறித்து பரிசீலித்து ஆலோசனை வழங்க சர் ஓவன் டிக்சன் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் ஆஸ்திரேலியா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி, பின்னர் அமெரிக்காவில் ஆஸ்திரேலியத் தூதராக செயல்பட்டுவந்தார். 1950 மே 27 டிக்சன் இந்தியா வந்தார்.

இந்தியா-பாகிஸ்தான்தலைவர்களுடன் விவாதித்துவிட்டு 1950 செப்டம்பர் 15 தனது அறிக்கையை ஐ.நா.விற்கு அளித்தார். டிக்சன் ஐ.நாவிற்கு கொடுத்த அறிக்கை இதுதான்.

  • 1.காஷ்மீர் சமஸ்தானம் முழுதும் வாக்கெடுப்பு நடத்தாமல், காஷ்மீர் பள்ளத்தாக்குப்பகுதியில் மட்டும் வாக்கெடுப்பு நடத்துவது. அதன்படி முடிவெடுப்பது.
  • 2.காஸ்மீரின் வடபகுதியையும், பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியும் பாகிஸ்தானுடன் இணைக்கப்படும்.
  •  

இந்த ஆலோசனையை பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான் ஒரு நிபந்தனையுடன் ஏற்றார். என்னவெனில் ஷேக் அப்துல்லா தலைமையிலான நிர்வாகத்தை நீக்கிவிட்டு வாக்கெடுப்பு நடத்தலாம் என்றார். டிக்சன், லியாகத் அலிகான் ஆகிய இருவரின் ஆலோசனைகளையும் இந்தியா ஒட்டுமொத்தமாக நிராகரித்து, அமெரிக்க சூழ்ச்சியிலிருந்து தப்பியது.

 

காஷ்மீர் மக்கள் பெரும்பான்மையோர் முஸ்லிம்கள்தான். ஆனால் மதசார்பற்ற கொள்கையை உயர்த்திப்பிடித்தவர்கள். மனிதநேயப் பண்பாளர்கள். இதற்கு முதல்காரணம் ஷேக்  அப்துல்லாவும், அவரின் தேசிய மாநாட்டுக்கட்சியும்தான். நிலப்பிரபுக்களையும், வெள்ளையர்களையும் எதிர்த்துப் போராடியவர் ஷேக் அப்துல்லா. இந்தியாவுடன்  காஷ்மீர் இணைய வேண்டுமென உறுதியுடன் நின்றவர். அவருடைய ஒரு பேட்டி இது.

 

"இந்தியாவுடன் நாங்கள் இணைய முடிவு செய்ததற்குக் காரணம் என்னவெனில், எங்கள் லட்சியமும், கொள்கைகளும் இந்தியா கடைபிடிக்கும் கொள்கைகளுடன் இசைந்தது. பாகிஸ்தானும், நாங்களும் ஒரு நேர் கோட்டில் பயணிக்கமுடியாது. ஏனெனில் பாகிஸ்தான் சுரண்டும் கும்பல்"-(ஹிந்துஸ்தான் டைம்ஸ் - 1948 அக்டோபர் - 16). இந்தியாவுடன் மன்னர் ஹரிசிங் இணைய ஒப்பந்தம் போட்டவுடன்,ஷேக்  அப்துல்லா மாநிலத்தின் பிரதமராகவும், ஹரிசிங்கின் மகன் கரன்சிங் மாநிலத்தின் சார்-ஈ-செரிப் ஆக நியமிக்கப்பட்டார்.

 

காஷ்மீர் நிலைமை கருத்து வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கப்பட வேண்டுமென்ற ஐ.நா.வின் முடிவை நிராகரித்த நேரு, காஷ்மீருக்கான அரசியல் நிர்ணயசபை அது பற்றி முடிவு செய்யும் என்று நெத்தியடி கொடுத்தார். ஜம்மு-காஷ்மீருக்கான அரசியல் நிர்ணயசபை தேர்தல் 1951 செப்டம்பரில் நடைபெற்றது. தேசிய மாநாட்டுக்கட்சி 75 இடங்களில் வெற்றிபெற்றது. முதல் அரசியல் நிர்ணயசபைக்கூட்டம் 1951 நவம்பர் 5 ல்  நடைபெற்றது. அதில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

 

  • 1. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கான அரசியல் அமைப்புச்சட்டத்தை உருவாக்குவது.
  • 2. மன்னராட்சி முறையின் எதிர்காலத்தை பற்றி முடிவு செய்வது.
  • 3. நிலச்சீர்திருத்த திட்டங்களின்படி நிலங்களை இழந்த உடைமையாளர்களின் இழப்பீடு பற்றி பரிசீலிப்பது.
  • 4. இந்தியாவுடன் இணைவது பற்றி முடிவு செய்வது.
  • இதன்படி இந்தியாவுடன் இணைய அரசியல் நிர்ணயசபை முடிவு செய்தது. மன்னர் - நிலபிரபுக்களின் பரம்பரை உரிமை ரத்துசெய்யப்பட்டது. 1952ல்   நேரு – ஷேக் அப்துல்லா உடன்பாடு கையெழுத்தானது.

காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தம் குறித்த, நேரு – ஷேக் அப்துல்லா ஒப்பந்தம் பின்வருமாறு கூறுகிறது.

  • 1. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு தவிர, மற்ற அனைத்தும் பிற மாநிலங்களைப்போல் இல்லாமல் காஷ்மீர் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
  • 2. காஷ்மீர் மக்கள் இந்தியக் குடியுரிமை பெறுவர். அங்கு நிலையாக வசிப்பவர்கள் உரிமைகளை காஷ்மீர் சட்டமன்றம்தான் தீர்மானிக்கும்.
  • 3. காஷ்மீர் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் அடிப்படை உரிமைகள் மட்டுமே, உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டவை.
  • 4. இந்தியக் கொடியுடன், காஷ்மீர் மாநிலக் கொடியும் பயன்படுத்தப்படும்.
  • 5. மாநில அரசின் வேண்டுகோளின் பேரிலோ, அல்லது அதன் சம்மதத்துடனோதான் இந்திய அரசு தலையிடும்.
  • 6. காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தவிர, வேறு யாரும் அங்கு சொத்து வாங்கமுடியாது.
  • இதுவே பிரதானமாக இடம்பெற்றது. இதை உறுதிப்படுத்துவதே அரசியல் சட்டத்தின் 370 பிரிவு.

காஷ்மீர் மாநிலத்தின் பூகோள ரீதியான முக்கியத்துவம் காரணமாக அமெரிக்க-பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர்.

காஷ்மீரின் வடகிழக்கிலும், வடக்கிலும் சீனாவும், வடமேற்கில் ஆப்கனும், மேற்கில் பாகிஸ்தானும் உள்ளது. சோவியத் மற்றும் சீனாவின் எதிர்ப்பு தளமாக பயன்படுத்த ஏகாதிபத்தியம் விரும்பியது. இன்று பாகிஸ்தான் பகுதியில் உள்ள கில்ஜிட் பகுதியை பிரிட்டிஷ் 60 வருடத்திற்கு குத்தகைக்கு எடுத்து,விமானதளம் ,வானொலி நிலையம் போன்றவற்றை அமைத்தது.

 

காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க முதலில் முயன்றவர்கள் அது முடியாமல் போனதால்,சுதந்திர காஷ்மீர் என முழங்க வைத்தனர்.

1952 ஸ்ரீநகருக்கு வந்த அமெரிக்கதூதர் சுதந்திர காஸ்மீரை ஆதரித்தார்.

1953 எப்ரல்மாதம் ஸ்ரீநகரில் சேக் அப்துல்லாவை சந்தித்த அமெரிக்க பிரதிநிதி அட்லாய் ஸ்டீவன்சன் சுதந்திரக் காஷ்மீர் ஆசையை சேக் அப்துல்லாவிற்கு தூண்டினார்.

காஷ்மீரை தங்கள் பக்கம் கொண்டுவர அமெரிக்கா விரித்த வலையில் வீழ்ந்தார் சேக் அப்துல்லா. நடந்தது இதுதான். இந்தியாவுடன் இணைந்தது குறித்து 1953 ஏப்ரல் 17 சேக் அப்துல்லா வானொலியில் ஆற்றிய உரை இதுதான். "அரசியல் அமைப்பு சட்டத்தின் 370வது பிரிவு காஷ்மீருக்கு ஒரு மதிப்பும், மரியாதைமிக்க இடத்தை அளிக்கிறது. இது மாற்றி அமைக்க முடியாதது.

இந்தியாவுடனான காஷ்மீரின் எதிர்கால உறவுகள், காஷ்மீர் இணைப்பு ஆவணத்தின் அடிப்படையிலும்,370 வது பிரிவு மற்றும் டெல்லி ஆவணத்தின் அடிப்படையிலும் அமைந்திருக்கும். காந்திஜியின் லட்சியங்கள் காஷ்மீரை இந்தியாவின் பக்கம் ஈர்த்தன. இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டதன் மூலம் புதிய காஷ்மீர் திட்டத்தை செயல் படுத்த முடிந்தது“ இவ்வாறு பேசினார். ஆனால் ஒருமாதம் கழித்து 1953 மே 18 தேசியமாநாட்டுக்கட்சியின் கூட்டத்தில் சுதந்திரக் காஷ்மீர்தான் சரியானது என்றார். ஒரு மாதத்தில் அவர் நிலைபாட்டில் ஏற்பட்ட மாற்றத்தின் பின்னணி என்ன?

1953 ஏப்ரல் இறுதியில் சேக் அப்துல்லாவும், அமெரிக்கப் பிரதிநிதி அட்லாய் ஸ்டீவன்சனும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 8 மணி நேரம் நடைபெற்றது. அவரது மனமாற்றத்திற்கு இதுவே காரணமென தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர்கள் கூறினர்.

இதன் பின்னர் 1953 ஆகஸ்ட் 9 அவர் காஷ்மீர் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். 11ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு 1975 சேக் அப்துல்லா –இந்திராகாந்தி ஒப்பந்தத்திற்குப் பிறகு,சேக்அப்துல்லா காஷ்மீர் முதல்வரானார். காஷ்மீர் பிரச்சனை நடைபெற்றபோது காந்தியை கொலை செய்ய திட்டமிட்டுக்கொண்டிருந்த காவிக்கூட்டம் என்ன சொல்கிறது?

இந்தியாவுடன் இணையவேண்டுமானால் காஷ்மீர்மக்களுக்கு தருவதாக இந்தியாவால் ஒப்புக்கொண்ட விசயங்களே 370 வது சரத்து. ஆனால் அதில் கூறப்பட்டவை அனைத்தும் 1957 லிலேயே அப்பட்டமாக இந்தியாவால் மீறப்பட்டது. அவை இதுதான்.

  • 1. இராணுவம், தகவல்தொடர்பு, வெளியுறவு மட்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்ற நிலை மாற்றப்பட்டு, யூனியன் பட்டியலின்படி சட்டமியற்றும் மத்தியஅரசின் அனைத்து அதிகாரமும் காஷ்மீருக்கும் பொருந்தும் என்று 1957 குடியரசுத்தலைவர் புதிய உத்தரவைப் பிறப்பித்தார்.
  • 2. IAS, IPS போன்ற அதிகாரிகள் காஸ்மீரில் நியமனம் செய்ய முடியாது என்ற நிலைமாற்றப்பட்டு, மத்தியஅரசின் அதிகாரிகள் நேரடியாக அங்கு நியமனம் செய்யும் முறை 1958ல் கொண்டுவரப்பட்டது.
  • 3. மாநில அரசைக்கலைக்கும் 356,357 வது பிரிவுகள் அங்கும் பொருந்தும்என்ற நிலை 1964ல் கொண்டுவரப்பட்டது. நெருக்கடி நிலை பிறப்பிப்பது போன்ற சட்டங்களும் அங்கு விரிவுபடுத்தப்பட்டது.
  • 4. காஷ்மீர் மாநில முதல்வர் வாசிர்-இ-அசாம் என்றும், பிரதமர் என்றும்அழைக்கப்பட்டுவந்தார். மற்ற மாநிலங்களைப்போல் முதல்வர் என 1965ல் மாற்றப்பட்டது.
  • 5. காஷ்மீர் மாநில கவர்னர் மாநில சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படும் நிலையை மாற்றி, ஜனாதிபதியால் நியமிக்கும் முறை 1965ல் கொண்டுவரப்பட்டது. சதாரிரிசாயட் என்று அழைக்கும் முறையை மாற்றி கவர்னர் என்று அழைக்கும்முறையும் வந்தது.
  • 6. 1975 பிப்ரவரி 25 சேக் அப்துல்லா - இந்திரா ஒப்பந்தம் மூலம் காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கமாக மாற்றப்பட்டது.சட்டம்இயற்றும்உரிமை உச்சநீதிமன்றம்,தேர்தல்கமிசன் உள்ளிட்ட மத்தியஅதிகாரங்கள் அனைத்தும் அங்கு விரிவுபடுத்தப்பட்டது.
  • 7. 1983ல் பரூக் அப்துல்லா அமைச்சரவையை, கவர்னர் ஜக்மோகன் பதவிநீக்கம் செய்தார். கவர்னர்ஆட்சியில் பல மாநில அதிகாரங்கள் 249 பிரிவின்கீழ் மத்திய அரசுக்கு மாற்றப்பட்டன.
  • இவ்வளவு அக்கிரமங்களை மத்திய அரசு செய்த பிறகே, 1983 முதல் பிரிவினைவாதம் அங்கு தலைதூக்கியது. 370 ன் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சப்பட்டு, தற்போது இருப்பது வெறும் கூடுதான். கூடில் என்ன இருக்கிறது?

370 வதின் மூலாதாரமே அழிக்கப்பட்ட பிறகு, எஞ்சி இருப்பது மூன்று விசயங்கள்தான்.

  • 1. காஷ்மீருக்கான தனி அரசியல் சட்டம்.
  • 2. காஷ்மீருக்கான தனிக்கொடி
  • 3. வெளிமாநிலத்தவர் சொத்து வாங்கத்தடை.
  • மூன்றாவது விசயத்திற்காகத்தான் முதல் இரண்டையும் கையில் எடுத்துக்கொண்டு கதறுகிறது காவிக்கூட்டம். இந்தியாவுடன் இணையும்போது சொல்லப்பட்ட வாக்குறுதிகள்

மீறப்பட்டன. மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகள் கவனிக்கப்படவில்லை. தொழில்வளம் பெருகவில்லை. வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது.

மத்தியஅரசின் மீதான நம்பிக்கையின்மை பிரிவினைவாதத்திற்கு வழிவகுத்தது.இதனால் ஏற்பட்ட மோதல்களில் இதுவரை பலலட்சம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ராணுவத்தின் அத்துமீறல்கள் நாள்தோறும் பெருகிவருகிறது. இத்தகைய பின்னணியில் காஷ்மீர் சிக்கித்தவிக்கிறது. குரங்கு கையில் பூமாலையாக மதவெறிக்கூட்டம் தற்போது அதிகாரத்தில்!நாய்களும்,நரிகளும்,கழுகுகளும் காஷ்மீர் மக்களை காவுகொடுக்க காத்திருக்கிறது.என்ன செய்யலாம்?

காஷ்மீர் இந்தியாவுடன் இணையும்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பொய்யாய், பழங்கதையாய் போய்விட்டது.  கனவுக்கதையாகப்போன வரலாறே முன்பு பார்த்தோம். காஸ்மீரின் விசேச அந்தஸ்தும்,தனித்தன்மையும் கடந்த 65ஆண்டுகளில் சீர்குலைக்கப்பட்டுள்ளது.

மோசடித்தேர்தல் மூலம் இந்திய அரசுக்கும்,காஷ்மீர் மக்களுக்கும் இடையே பெருத்த இடைவெளி ஏற்பட்டுவிட்டது. இந்திய யூனியனில் தாங்கள் பத்திரமாகப் பாதுகாக்கப்படுவோம் என்ற நம்பிக்கையை அவர்கள் இழந்துவிட்டனர். இதற்கு முழுப்பொறுப்பு மத்தியஅரசுதான்.

காஷ்மீர் பிரச்சனை தீர என்ன வழி?

காஷ்மீர் மக்களின் கனவுகள் நிறைவேற கீழ்க்கண்டவற்றை செய்திடல் வேண்டும்.

  • 1. இந்திய யூனியனில் தங்களின் தனித்தன்மைகளும், நலன்களும் பாதுகாக்கப்படும் என்ற முழுநம்பிக்கையை அமமக்கள் மனதில் ஏற்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
  • 2. 370 வதாவது பிரிவில் சொல்லப்பட்ட அத்துணை உறுதிமொழிகளும் அமுல்படுத்தவேண்டும்.
  • 3. காவிகளின் காட்டுக்கூச்சல் உடனே நிறுத்தப்படவேண்டும், அது அம்மக்களிடையே எதிர்மறை விளைவுகளையே உருவாக்கும்.
  • 4. காஷ்மீர் மாநிலத்திற்கு உயர்ந்தபட்ச சுயாட்சிஅதிகாரம் வழங்கப் படவேண்டும்.
  • 5. ஜம்மு மற்றும் லடாக் பகுதிக்கு பிரதேச சுயாட்சி அதிகாரம் வழங்கப்படவேண்டும்.
  • 6. மதச்சார்பின்மையுடன் கூடிய காஷ்மிரியம் என்ற உயர்ந்த கலாச்சாரம்,மற்றும் மொழி பாதுகாக்கப்படவேண்டும்.
  • 7. தொழில்வளம், வேலைவாய்ப்பு அதிகரிப்பு, சுற்றுலாத்துறை வளர்ச்சி ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து, அமமக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்படவேண்டும்.
  • 8. மூன்றாவது நாட்டின் தலையீடு இல்லாமல் பாகிஸ்தானுடன் பேசி தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
  • 9. மதவெறியர்கள் அதிகாரத்தில் இது நடக்குமா என்பது சந்தேகம்தான்.
  • 10. மதச்சார்பற்ற, மனிதநேயசக்திகள் காஷ்மீர்மக்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கவேண்டும்.
  • நாமும் நமது பங்கை ஆற்றவேண்டும்

- சூர்யா சேவியர்

 

;