articles

img

நாம் ஒரு இடதுசாரி என்று சொல்வதில் பெருமை கொள்வோம்!

மனித வாழ்க்கையை மகிழ்ச்சிக்குரியதாக மாற்ற  கம்யூனிஸ்ட்டுகளால் மட்டுமே சாத்தியம். நான் ஒரு இடதுசாரி என்பதில் பெருமை கொள்ள வேண்டும். அதேநேரத்தில் இக் கருத்துக்களை வெகு மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதும், நம்மோடு மக்களை இணைப்பதும்தான் நம்முடைய இலக்கை எட்டுவதற்கான வழியாக இருக்கும் என சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் டாக்டர் கே.கே.ஷைலஜா கூறினார். 

இதனைத்தொடர்ந்து கே.கே.ஷைலஜா பேசுகை யில், கோவையில் நடக்கும் தேசாபிமானி வாசகர் வட்டத்தின் நிகழ்வில் பங்கெடுப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இதற்கான ஏற்பாடுகளை செய்த தோழர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இடதுசாரி ஊழியர்கள், அனுதாபிகள் அனைவருக்கும் ஒரே லட்சியம்தான் உள்ளது. சிலர் கட்சி உறுப்பினர்களாக இருந்து பல்வேறு மட்டங்க ளில் பணியாற்றி வருபவர்களாகவும் சிலர் முழு நேர ஊழியர்களாகவும் உள்ளனர். கட்சி பணிகளுக்கு முழுமையான நேரம் செலவழிக்க முடியாதவர்கள் அனுதாபிகளாக கட்சிக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். இப்படி பணியாற்றுகிறவர்கள் விவசாயிகள் சங்கம், மாணவர், மாதர், வாலிபர் உள்ளிட்ட வர்க்க வெகுஜன சங்கங்களில் பணியாற்றி வருகின்றனர். இதுபோல வர்க்க வெகுஜன சங்கங்கள் மூலமாக இடதுசாரி சிந்தனைகளை பிரச்சாரம் செய்கி றோம்.  ஏன் இடதுசாரி சிந்தனைகளை மக்களிடம் பிரச்சா ரம் செய்ய வேண்டும் என்கிற கேள்வி எழுப்பப்படு மானால் அதற்கு ஒரே பதில் மனித வாழ்க்கையை மகிழ்ச்சியுற்றதாக மாற்றுவதற்கு இடதுசாரி சிந்தனை யால் மட்டும்தான் இயலும் என்பதே.

பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் அதன் சமூக பொருளாதாரக் கொள்கைகள் மக்களை காப்பாற்ற வில்லை என்பதை நாம் அறிவோம். இப்போது நாட்டை பாஜக ஆள்கிறது. வெகுகாலம் காங்கிரஸ் கட்சி ஆண்டது. ஆனால் நம் மக்களுக்கு இந்த ஆட்சியா ளர்களால் எவ்வித நன்மையும் ஏற்படவில்லை. 1947இல் நாடு விடுதலை அடைந்தது. அதற்கு முன்பு ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தனர். 200 ஆண்டு களாக ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் பெருமள விற்கு மக்களுக்கு இன்னல்களை விளைவித்தனர். 1947க்கு முன் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா எல்லாம் இணைந்த மதராஸ் ராஜதானியாக (சென்னை மாகாணமாக) இருந்தது. இந்த நாட்டில் ஏராளமான சின்ன,சின்ன நாடுகள் இருந்தன. இங்கு பண்ணையார்கள்,  ஜமீன்தார்கள் முறைகள் இருந்தது. ஜமீன்தார்களின் நிலத்தில் உழவு வேலை செய்கிற குடியானவர்கள் தங்களது உழைப் பைச் செலுத்தினர். தமிழ்நாட்டில், கேரளாவில் பல்வேறு நிலவுடைமை முறைகள் இருந்தன. வட இந்தியாவில் பல சிற்றரசர்கள் இருந்தனர்.  இங்கெல் லாம் சாதிய முறை வெகு கொடூரமாக கோலோச்சி இருந்தது. 

வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் தொட்டுப் பழக முடியாத நிலை இருந்தது. மேல் சாதி ஆதிக்கம் நிலைத்திருந்தது. வேதங்களின் பெயராலும், இதி காசங்களின் பெயராலும் உழைப்பைச் சுரண்டு வதை அது நியாயப்படுத்தியது.  இதனை எதிர்த்த போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் பல்வேறு போராட் டங்களை நடத்தினோம். இப்போதும் இத்தகைய போராட்டங்களை நடத்தி வருகிறோம்.  கேரளாவில், தமிழ்நாட்டில் நிலச்சுவான்தார்கள் ஆதிக்கத்திற்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகள் நீண்ட போராட்டத்தை நடத்தியுள்ளோம். இத்தகைய போராட் டத்தின் வரலாற்றை படிக்கின்றபோது ஆவேசம் ஏற்படுகிறது. ஆனால் இது வெகுமக்களிடம் போய்ச் சேர்வதில்லை. 

சமீபத்தில் தமிழகத்தில் ஜெய்பீம் என்கிற ஒரு திரைப்படம் வந்துள்ளது. பழங்குடி சமூகத்தை சேர்ந்த ராஜாகண்ணு என்பவர் காவல் நிலைய லக்கப்பிற்குள் அடித்து கொல்லப்பட்ட கதை. இதனை எதிர்த்து கம்யூ னிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்கள் குறித்து அந்த படம் விவரிக்கிறது. நாம் செய்த பணிகளை வெளி உலகம் சினிமா மூலம்தான் அறிந்து கொள்கிறது.  இது போன்ற எண்ணற்ற பல இயக்கங்களை நாம் நடத்தி யுள்ளோம். ஆனால் இது திரைப்படங்களின் மூலமாக வருவதால்தான் வெளி உலகத்திற்கே தெரியவரு கிறது. ஜெய்பீம் கதை நாம் நடத்திய போராட்டங்களில் ஒன்றே ஒன்றுதான். ஆனால் இந்த படம் எந்தந்த மொழிகளில் வெளியானதோ அங்கெல்லாம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நல்லதுதான். நாம் நடத்திய இயக்கங்கள் எல்லாம் திரைப்படமாக வரவில்லை. வாச்சாத்தி உள்ளிட்ட ஏராளமான வழக்கு களை நாம் எதிர்கொண்டு நியாயத்தை பெற்றுக் கொடுத்திருக்கிறோம். 

அன்றிலிருந்து இன்றுவரை நிலச்சுவான்தார்கள் ஆதிக்கத்திற்கு எதிராக, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நமது போராட்டங்களை வலுவாக எடுத்துச் சென்றுள் ளோம். இத்தகைய போராட்டங்கள் இளைஞர்களை ஆவேசப்படுத்தும். கட்சியின் பால் அணிவகுக்கச் செய்யும். இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர்களை வெளியேற்ற காந்தி தலைமையில் காங்கிரஸ் போரா டியது. இதேபோல அனுசீலன் சமீதி போன்று ஒவ் வொரு பகுதியிலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக குழுக்கள் உருவாகி போராட்டம் நடத்தியது. இந்த தருணத்தில்தான் 1848இல் காரல் மார்க்சின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை நமது சிந்தனைக்கு வரு கிறது. உலகில் இன்னல்களை அனுபவிக்கக் கூடிய மக்களுக்கான இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம் என்பதை அந்த அறிக்கை வெளிப்படுத்தியது. 

மார்க்சின், கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை இன்றைக்கும் தேவைப்படுகிறது. இன்றும் மக்கள்  சுரண்டப்படுகிறார்கள், இன்னல்களுக்கு ஆளாக்கப் படுகிறார்கள். இந்த சுரண்டல் முறை ஒழியும் வரையில் கம்யூனிஸ்ட் அறிக்கை தேவைப்படும். இப்படியான தத்துவத்தை கொண்டுள்ள கம்யூனிஸ்ட் கட்சி ஏன் புரட்சி நடத்தி ஆட்சிக்கு வரவில்லை என்கிற கேள்வி தொடர்ந்து எழுப்பப்படுகிறது. ஆனால் இந்த சிந்தனை வெகுமக்களிடம் போய் சேர்ந்துவிடக்கூடாது என்பதற் காக முதலாளித்துவ சக்திகளால் தொடர்ந்து தாக்கு தல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. இதற்கான திட்டங்கள் அவர்களால் தீட்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

பல நூற்றாண்டுகளாக மக்களை சுரண்டி வருகிற  நிலச்சுவான்தார்கள், முதலாளித்துவ,மூலதன சுரண்டல்வாதிகளை அவ்வளவு எளிதாக நாம் தூக்கி எறிந்து விட முடியாது. அவர்கள் நடத்தும் தாக்குதல் கள் அவ்வளவு எளிதானதல்ல. அவர்கள் எப்போதும் இந்த சிந்தனை வளரவிடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள். இப்படியான சூழலை எதிர்கொண்டு போராடித்தான் இடதுசாரிகள் முன்னேறி வருகி றோம். உலகின் ஒவ்வொரு பகுதியிலும் இடதுசாரி சிந்தனைகளை மறைக்க முயன்றாலும் மறைக்க முடியவில்லை என்பதைத்தான் உலகம் பார்த்து வரு கிறது. முதலாளித்துவத்திற்கு எதிராகப் போராடுகிற போதுதான் மார்க்ஸ். ஏங்கல்ஸ், கம்யூனிஸ்ட் அறிக்கை குறித்தும் வாசிக்கிறார்கள்.  கேரளாவில் சுதேசாபிமானி ராமகிருஷ்ண பிள்ளை வாயிலாகத்தான் கார்ல் மார்க்ஸ் குறித்து அறிய முடிந்தது. அவர் எழுதிய கட்டுரைகள் முலமாக இவர்களை பற்றி அறிய நேர்ந்தது. இதன்பிறகே காரல் மார்க்சின் தத்துவத்தால் ஈரக்கப்பட்டு ரஷ்யாவிற்கு சென்று தாஷ்கண்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை துவக்கப்பட்டது. ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைமையில் புரட்சி செய்து ஆட்சியைப் பிடித்தனர். இது உலகிற்கே பெரும் உற்சாகத்தை கொடுத்தது. 

உணவு இல்லாதவர்களுக்கு உணவு, கல்வியற்ற வர்களுக்கு கல்வி, கிராமங்களிலேயே கல்வி  நிலையங் கள், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சுகாதார வசதிகள், மருத்துவமனைகள் ரஷ்யப் புரட்சிக்கு பிறகு உரு வாக்கப்பட்டது. மேலும் சாலைகள் போடப்பட்டது. உணவு  உற்பத்தியை அதிகரிக்கச் செய்து  அதை கிடங்குகளில் சேமிக்கப்பட்டு அனைத்து மக்களுக்கும் சீராக  விநியோகிக்கப்பட்டது. இத்தகைய சோவியத் ரஷ்யா கவிழ்க்கப்பட்டது. அதற்கு பல காரணங்கள் உள்ளது. அதற்குள் நான் செல்லவில்லை. ஆனால் எதிர்ப்புரட்சி வெற்றி என்பதால் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வியடைந்துவிட்டது என சொல்லக்கூடாது. சொல்லமுடியாது. காரணம் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்படுத்திய மாற்றம் அவ்வளவு பெரிதானது. தொழி லாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி, ஓய்வுக்குப்பின் பென்சன். எளிமைப்படுத்தப்பட்ட வேலை முறைகள் இவையெல்லாம் சோவியத் ரஷ்யா ஏற்படுத்திய சாதனைகள். 

தன்மானமுள்ள மனிதவாழ்க்கை

1970களில் நான் மாதர் சங்கத்தில் பணியாற்றுகிற போது வேலைக்கு போகும் பெண்களின் குழந்தை களை கவனிக்க பணியிடத்தில் குழந்தைகள் காப்பகம் வேண்டும் என்கிற கோரிக்கை எழும். இது முதன்முத லாக ரஷ்யாவில் உருவாக்கப்பட்டது. இதனை நமது நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என நாடாளு மன்றத்தில் முதன்முதலாக சுசிலா கோபாலன் முன் வைத்தார். இதனால்தான் இந்தியாவில் அங்கன்வாடி கள் உருவாகியது. அப்படிப்பட்ட மக்களுக்கு உதவி கரமான நிவாரணம் அளிக்கக்கூடிய திட்டங்களே சோவியத் ஆட்சியின் சாதனையாகும். மனித வாழ்க்கை தன்மானமுள்ளதாக மாற்றிய தற்கு ஆகப்பெரிய உதாரணம் சோவியத்தில் கம்யூ னிஸ்ட்டுகளின் ஆட்சி. ஆனால் முதலாளித்துவத்தில் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தில்  இதற்கு இணை யாக வளராமல் போனால் வீழ்ந்து விடுவோம் என்பதை சோவியத் பின்னடைவு நமக்குப் பாடமாக சொல்லி யது. சோவியத் புரட்சி முன்னெடுத்த ஏராளமான இந்த சிந்தனைகளும், உரிமைகளும், சலுகைகளும் இன்றைக்கும் உலகை உற்சாகப்படுத்திக் கொண்டு தான் உள்ளன. 

ஒவ்வொரு நாட்டிலும் இடதுசாரிச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. சீனா பட்டினி, வறுமை நிறைந்த நாடாக இருந்தது. இதனைப் போக்க கடுமையான முயற்சிகள் நடைபெற்று மீண்டு வருகிறது.  சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கடந்த மாநாட்டில் பெரும் முயற்சி எடுத்து 19 கோடி பேர் மீட்கப்பட்டனர். வறு மைக்கோடு என நாம் நிர்ணயித்துள்ளதற்கும் அந்நாடு நிர்ணயித்துள்ளதற்கும் வேறுபாடு உள்ளது. தொழில்நுட்ப வாய்ப்புகள், சேவைகள் கிடைக்கப் பெறும்போதுதான் வறுமை நீக்கப்படுவதாக அவர்கள் நிர்ணயித்துள்ளனர்.  பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை ராணுவ முகாமாக மாற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது. யாருக்கு எதிராகப் போரிட. இது சீன ஆட்சியை கவிழ்ப்பதற் கம், இடதுசாரிச் சிந்தனைக்கு எதிராகவும் முதலா ளித்துவ அமெரிக்கா நடத்தும் போராகும். ஆப்கா னிஸ்தானில்  நஜிபுல்லாவிற்கு எதிராக தலிபான் அமைப்பை உருவாக்கியது அமெரிக்கா. இதற்காக 2500 கோடி டாலர் செலவு செய்து தலிபான்களை உரு வாக்கியது. நஜிபுல்லாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகும் பயங்கரவாதிகளுக்கு தொடர்ந்து அமெரிக்க ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தது.

கம்யூனிஸ்ட் கட்சியினர் நாம் அன்றாடப் பணி களை மட்டும் கவனித்துக் கொண்டிருக்கும்போது, ஏகாதிபத்தியவாதிகள் கம்யூனிஸ்ட்  சிந்தனைகளை முளையிலேயே கிள்ளி எறிய யுக்திகளை, நடவடிக்கை களை மேற்கொண்டு வருகின்றனர்.  அமெரிக்கா நடத்துகிற இத்தகைய அரசியல் நாடகங்களை நாம் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஏகாதிபத்தியத்தின், முதலாளித்துவத்தின் சூழ்ச்சி களை பொதுமக்களிடம் நாம் கொண்டு சென்று அம்ப லப்படுத்த வேண்டும்.

வலிமையான கட்சி 

பொருளாதார தொழில்நுட்பம் பெரிய அளவில் வளரவேண்டும் என சீனா கருதுகிறது. அதன் பலன் மக்களுக்கும் சீராகச் சென்றடைய வேண்டும் என அங்கு கட்சி விரும்புகிறது. கிராமங்களில் வறுமை குறைக்கப்பட்டு முன்னேற்றம் ஏற்படும் அதேவேளை யில் உற்பத்தியைப் பெருக்கி கிரமங்களில் வறு மையை குறைக்க பயன்படுத்த வேண்டும். இதைத் தான் சீன கம்யூனிஸ்ட் கட்சி பின்பற்றுகிறது. இதைத் தான் வங்கத்திலும், திரிபுராவிலும் செய்ய முற் பட்டோம். ஆனால் இதற்கெதிராகத்தான், நமக்கு எதி ரான தாக்குதல் நடக்கிறது. கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக அவதூறுகளை கிளப்பி ஒன்றிணைந்து நம்மைத் தாக்குகிறார்கள். இதில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால் நமது கட்சியை வலிமையாக மாற்ற வேண்டிய தேவை உள்ளது. மிக வலிமையான கட்சி ஸ்தாபனம் தேவைப் படுகிறது. 

ஆட்சியால் மட்டும் எதையும் சாதிக்க முடியாது. ஆட்சி வேண்டும். ஆனால் வலிமையான கட்சியை கட்டாமல் இதனை தக்க வைக்க முடியாது. கேரளா வில் நமது கட்சி வலுவானதாக உள்ளது. மேற்கு  வங்கத்தில் ஆட்சி கவிழ்ந்துவிட்டதால் இனி இந்தியா வில் எங்குமே ஆட்சியைப் பிடிக்க முடியாது என்ப தல்ல. கட்சி மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகள் வலு வடையும் போது ஆட்சியை அமைக்க முடியும், அதற்கான முயற்சி செய்ய வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியை வலுவானதாக கட்ட வேண்டும். 

இவ்வாறு வலிமையாக கட்சி இருந்தால் எளி தாகக் கவிழ்க்க முடியாது. தற்போது கடுமையான தாக்குதலை எதிர்கொண்டுதான் மேற்குவங்கம் மற்றும் திரிபுராவில் நமது தோழர்கள் கட்சியை பலப் படுத்தி வருகின்றனர்.  நாம் செய்கின்ற வேலை சரி யானது என்றால் அதனை தொடர்ந்து செய்யலாம். முன் னோக்கிச் செல்ல முடியும். 1920களில் இடதுசாரிச் சிந்தனை சரி என அறிந்தபோதுதான் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினோம். இன்று கம்யூனிஸ்ட் கட்சி யின் நூற்றாண்டை கொண்டாடிக் கொண்டிருக்கி றோம். இந்தியாவில் கட்சிக் கிளைகள் தொடங்க ஆரம் பித்தபோது, ஆங்கிலேயர்களிடமிருந்து காங்கிரஸ் எதிர்கொண்டதை விட அதிகமான தாக்குதல்களை  கம்யூனிஸ்ட்டுகள் எதிர்கொண்டோம். கான்பூர், மீரட் உள்ளிட்ட பல்வேறு சதி வழக்குகளை சந்தித்தோம். ஏராளமான துன்புறுத்தல்களை நாம் சந்தித்தோம். 

அடிமை முறைக்கு எதிராக

ஆங்கிலேய ராணுவம், நிலவுடைமையார்கள் இணைந்து தாக்குதல்களை தொடுத்தனர். இப்படி பல தியாகங்களை ஏற்றுக் கொண்டுதான் நமது கட்சியை கட்டியமைத்தார்கள் . இது அதிகார வர்க்கத் திற்கு பெரும் சவாலாக இருந்தது. ஒரு புறத்தில் ஜமீன் தார்களின் சுரண்டலுக்கு எதிரான போராட்டம், மறு புறம் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டம். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்துடன் சாதி யத்திற்கு எதிரான போராட்டத்தையும், நிலச்சுவான் தார்களுக்கு எதிரான போராட்டத்தையும் நடத்தி னோம். கேரளாவில் ஒவ்வொரு ஜமீன்தார்களுக்கும் எதிராக நடந்த போராட்டத்தால் ஏராளமான தியாகி கள் உருவானார்கள். புன்னப்புரா, வயலார் போராட் டங்கள். துப்பாக்கியில் குண்டு உள்ளதை அறிந்தே நெஞ்சுரமிக்க போராட்டத்தை அன்று நடத்தினார் கள். அன்று பெண்களுக்கு மார்பகத்தை மறைக்க உரிமையில்லை. திருமண வாழ்க்கை ஏற்கிற பெண் முதலிரவை ஜமீன்தாரிடம்தான் கழிக்க வேண்டும் என்கிற கொடூரமான வழக்கம் இங்கிருந்தது. இதனை எதிர்த்த வீரமிக்க போராட்டம் நடைபெற்றது. கிரேக்க நாட்டில் இருந்த அடிமை முறைக்கு நிகராக இருந்தது என வரலாற்று ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர். 

இதனை எதிர்த்து நடத்திய தொடர் போராட்டங்க ளின் விளைவாகத்தான் இத்தகைய கொடூர வழக் கங்கள் ஒழிக்கப்பட்டன. கட்சியின் சிந்தனைகளை பிரச்சாரம் செய்வதற்கு நமக்கு பத்திரிகைகள் தேவை. அப்படித்தான் தேசாபிமானி போன்ற நமது பத்திரி கைகள் உருவாக்கப்பட்டது. இன்றுபோல் அன்று  நமது பத்திரிகை வாங்குவது அவ்வளவு எளிதான தல்ல. நமது பத்திரிகை வாங்கினால் சிறையில் போடு வார்கள். இன்று எளிதாக நமது கைகளில் கிடைக்கி றது. இதனை நாம் வாங்கிப் படிக்க வேண்டும். மக்கள் திட்டமிடல்  கேரளா மாநிலத்தில் 90களில் மக்கள் திட்டமிடல் தொடங்கப்பட்டது அது பெரிய மாற்றத்தை உருவாக்கி யது. நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது குடிசை வீடுகளில் காங்கிரீட் வீடுகளை அமைப்பது என்கிற திட்டத்தைக் கொண்டு வந்தோம். அது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. குடும்ப ஸ்ரீ அமைப்பு உரு வாக்கப்பட்டது.  பஞ்சாயத்து ராஜ் சட்டம் உருவாவ தற்கு முன்னரே கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகள் வலுவாக இருந்தன. ஒன்றிய அரசு அளிக்கும் வரி வரு வாயை வைத்துக் கொண்டு மட்டுமே திட்டங்களை போடமுடியாது என்பதால் கிப்பி அமைப்பின் மூலம் பல ஆயிரம் நிதி திரட்டி வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

 தொடக்கப் பள்ளிகளும், உயர்தரமான நவீன பள்ளிக்கூடங்களாக ஆனது. ஆங்கிலப் பள்ளிக்கு நாடிச்சென்ற பெற்றோர்கள் அரசுப் பள்ளிக்கு திரும்பி வருகின்றனர். தற்போது லைப் மிசன் திட்டப்படி மூன்று லட்சத்திற்கு அதிகமான மக்களுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது. தற்போதும் வீடில்லாத மக்க ளுக்கு வீடு வழங்குவதற்கான திட்டமிடல் நடைபெற்று வருகிறது. விஷமற்ற காய்கறிகள் உற்பத்தி செய்யப் பட்டு விநியோகிக்கப்படுகின்றன. பகுதி நேரம் செயல்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் முழு நேர மருத்துவமனைகளாக மாற்றப்பட்டுள்ளன. நோய் வாய்ப்பட்டு வீட்டிலே உள்ள நோயாளிகளுக்கு வீடுக ளுக்கே சென்று மருத்துவம் செய்யும் வசதி ஏற் படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் இத்தகைய திட்டங்கள் தற்போது பல்வேறு மாநிலங்களில் பின் பற்றப்படுகிறது. 

கொரோனா தொற்றை எப்படி கட்டுப்படுத்தினீர் கள், எப்படி தாக்குப் பிடித்தீர்கள் என பல நாடுகளில் நான் செல்லும் கூட்டங்களில் என்னிடம் கேட்பது உண்டு. கேரளாவில் நமது இடது ஜனநாயக முன்னணி அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பேக்கேஜ், இலவச உணவு வழங்குதல், மருத்துவம் முழுமையாக வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற் கொண்டோம். இது எப்படி சாத்தியமானது என்றால் அது நமது சோசலிஸ்ட் முறையிலான திட்டமிடல்தான்.  இரண்டு பெரிய வெள்ளங்கள், நிபா, ஒக்கி புயல் என பல இயற்கைச் சீற்றங்கள் மீண்டு வருவதற்கும் இதுதான் உதவியது.  இத்தகைய பேரிடரை எதிர் கொண்ட அதேநேரத்தில் கட்சி மற்றும் வர்க்க வெகு ஜன ஸ்தாபனங்களை வலுப்படுத்துவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தோம். ஏனென்றால் நன்மை களை செய்தோம் என்பதால் மட்டும் மக்கள் நம்மோடு வரமாட்டார்கள். நாம் அவர்களை இணைப்பதற்கு எஃக்கு போன்ற ஸ்தாபனங்கள் தேவைப்படுகிறது.  

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உறுதியான நமது கட்சி அமைப்பை கட்ட வேண்டும். இடதுசாரி தான் சரியான மாற்று என்பதை சொல்லிக்கொடுக்க வேண்டும். நீங்கள் குடி யிருக்கும் பகுதிகளில் இருப்போரை இடதுசாரி அரசிய லுக்கு கொண்டு வாருங்கள். நான் ஒரு இடதுசாரி என சொல்வதில் பெருமை உள்ளது. இப்படிச் சொல்வ தால் பிறரும் நம்முடன் இணைந்து செயல்படுவார்கள். ஒவ்வொரு நபரும் வர்க்க வெகுஜன அமைப்புகளில் இணைந்து இடதுசாரிக் கருத்துகளை கொண்டு செல்ல வேண்டும். இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும். நிலவுடைமை, முதலாளித்துவத்திற்கு மாற்றாக இடதுசாரிச் சித்தாந்தம் மட்டுமே உள்ளது. இத்தகைய சிந்தனைகளை பரப்பும் ஊடகமான நமது தேசாபிமானி உள்ளிட்ட நமது கட்சியின் நாளேடுக ளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். இதனை நாம் வாசிப்பது, நமது பிள்ளைகள் வாசிக்கச் செய்வது ஆகியவற்றின் மூலம் நாம் நமது அமைப்பை வலுவா னதாக மாற்ற முடியும். ஏனென்றால் கட்சியின் நாளிதழ் ஓர் ஆயுதம். இவ்வாறு கே.கே.ஷைலஜா கூறினார்.


 

;