articles

img

நாங்கள் இன்றும் கூட்டாக பாடவே செய்வோம்...

அருட்தந்தை ஸ்டான் சுவாமி 2021ஜூலை 5ம் தேதி மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இறந்தபோது, இந்தியாவின் நண்பகலிலும் இருள் கவிந்தது.  அவரின் மரணம், தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டஒரு செயற்பாட்டாளரின் மரணம் என்பதைத் தாண்டியது. சட்டத்தின் ஆட்சியை புறக்கணிக்கிற ஆளும் வர்க்கத்தின் பெரும்பான்மைஅதிகாரத்துவம் தவறாகப் பயன்படுத்தப்படுவதன் விளைவாகும்.

பலருக்கு அருட்தந்தை ஸ்டான் சுவாமிஉத்வேகம் அளிக்கக்கூடிய ஒரு நபர். இயேசுசபையின் அருட்தந்தையான அவர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஓரம்கட்டப்பட்ட சமூகங்களை, சமூக ரீதியாக உயர்த்துவதையே தன் வாழ்நாள் பணியாக தேர்ந்தெடுத்தவர். அவர் ஓர் ஒற்றை அறையில் வாழ்ந்து வந்தார்.தனக்கு சொந்தமாக நிலம் அல்லது வேறு எதுவும் இல்லாத எளிய மக்கள் பற்றி தொடர்ந்துஎழுதிக் கொண்டிருந்தவர். (70 புத்தகங்களுக்குமேலாக எழுதியுள்ளார்). தன் வாழ்வின் பெரும்பகுதியில் அவர் ஒரு செயற்பாட்டாளராகவே இருந்தார். நியாயமற்ற முறையில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட எளிய ஆதிவாசி மக்களின் உரிமைகளுக்காகப் போராட சட்ட அமைப்பை பயன்படுத்தியவர். அவர், இந்திய அரசியல் சாசனம், இந்த மக்களுக்கான நீதியைப் பெறுவதில் உதவி செய்யும் என்று நம்பிக்கை கொண்டிருந்தவர். விசாரணைக் கைதிகள் நிலை குறித்து ஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநலவழக்கு தாக்கல் செய்திருந்தார். இத்தகைய செயல்பாடுகளை செய்துகொண்டிருந்த போது, நிச்சயமாக, எளிய மக்களின் உரிமைகளை காக்கும்என்று நம்பி அவர் பயன்படுத்திய அதே அமைப்பால் அவருடைய தலைவிதி நிர்ணயிக்கப்படும் என்று ஸ்டான் சுவாமி  கற்பனை கூட செய்திருக்கமாட்டார்.

2018 ஆகஸ்ட். அருட்தந்தை ஸ்டான் சுவாமியின் ஒற்றை அறையை புனே காவல்துறை ரெய்டு நடத்தி, அவரின் கணினி, மொபைல் போன், புத்தகங்கள், பாரம்பரியஇசைத் தட்டுகள் ஆகியவற்றை கையகப்படுத்தியது முதல் அந்தப்பயங்கரம் துவங்கியது. 2019 ஜூன் மாதம் இன்னொரு ரெய்டு நடந்தது.

இறுதியாக, 2020 அக்டோபர் 8 அன்று, அருட்தந்தை ஸ்டான்சுவாமி தேசிய குற்றப்புலனாய்வு முகமையால், ‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’ என்கிற உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஏற்கனவேபீமா கோரேகான் வழக்கில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்ட பேராசிரியர்கள், செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் ஆகிய 15 பேர்பட்டியலில் 16வதாக ஸ்டான் சுவாமி இணைந்தார். 80 வயது முதியவரான ஸ்டான் சுவாமி அவர்கள்,  இறக்கும் வரையில் இந்த அரசின்கட்டுப்பாட்டில், குற்றம் சாட்டப்பட்ட ஒருவாராகஇருந்தார். பலரால் உண்மை என்றே நம்ப முடியாத காரணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்; இந்தியாவிலேயே தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டவர்களுள் வயது முதிர்ந்தவர் என்பதோடு, அவர்  மீதான காவல், அரசால், காவல்துறையால், இவை இரண்டையும் விட மோசமாக நீதிமன்றங்களால் எப்படி கையாளப்பட்டது என்பதுமிகக் கொடூரமான, துயரமான கதை.  

அருட்தந்தை ஸ்டான் சுவாமியைப் போன்று ஏறக்குறைய அதே குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளவர் திருமிகு. சுதா பரத்வாஜ். இவர், வரவர ராவ்போன்ற செயற்பாட்டாளர்களோடு தொடர்பு வைத்திருந்தார் என்பதற்கான ஆதாரங்களும், தீவிரவாத அமைப்பு பற்றி பிரச்சாரம் செய்யும்சில பிரசுரங்களும்  அவரது கணினியில் இருந்தன என்ற வலுவில்லாத ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். ஒருமுக்கிய அறிக்கை உட்பட, ஸ்டான் சுவாமியைக்கைது செய்வதற்கான குற்றத்தோடு தொடர்புடையதாக கூறப்படும் சில ஆவணங்களின்நம்பகத்தன்மை சர்வதேச தடயவியல் தரவுநிபுணர்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்தகைய பிரச்சனைகளும் தரவுகளும் வழக்கு விசாரணையின் போதுதான் இணைத்துக்கொள்ளப்படும் என்று தனது கைது நடவடிக்கையை அரசு நியாயப்படுத்தியது. அதுவரை குற்றம் சாட்டப்பட்டுள்ளவர், அதாவது அருட்தந்தை ஸ்டான் சுவாமி, சிறையில் தான் இருக்க வேண்டும் என்று வாதிட்டது.

நீதித்துறையின் வீழ்ச்சி
அருட் தந்தை ஸ்டான் சுவாமியின் மரணம்,பிரச்சனைக்குரிய வாட்டாலி தீர்ப்பின் விளைவும் கூட. அந்த தீர்ப்பு பற்றி இந்தக் கட்டுரையில்வரும் பத்திகளில் நான் விளக்குகிறேன். தனக்கு மருத்துவ உதவி வேண்டும் என்றுஅருட்தந்தை ஸ்டான் சுவாமி மீண்டும் மீண்டும் கேட்டது தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டது அல்லது தள்ளுபடி செய்யப்பட்டது. அவர்பற்றிய மருத்துவக் குறிப்புகள், அவர் பார்க்கின்சன் என்ற கொடிய வியாதியால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார் என்பதை தெளிவாகக் குறிப்பிடுகின்றன. ஸ்பூனை கையில் பிடிப்பது, எழுதுவது, நடப்பது அல்லது தானாகக் குளிப்பது உள்ளிட்ட அடிப்படை செயல்களைக் கூட அவரால் மேற்கொள்ள முடியாது என்பதும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, அவருக்கு காது கேட்கும் திறனில் தீவிரமான குறைபாடு உள்ளது என்பதையும் உடல்ரீதியாக மிகவும் பலவீனமாக இருந்தார் என்பதையும் நீதிமன்றங்கள் பார்த்தன. ஆனால் அவரின் அந்த நிலை கூட அவர்களின் மனதை அசைக்கவில்லை. அவரது வழக்கறிஞர்களால் நிரப்பப்பட்ட பிணை மனுக்கள் சந்தேகத்துக்கிடமின்றி தள்ளுபடி செய்யப்பட்டன. அவர் தனக்கு மருத்துவ ரீதியான பிணை வேண்டும் என்று விண்ணப்பித்தபோது, அந்த விசாரணையை நீதிமன்றங்கள் ஒத்திவைத்துக் கொண்டே இருந்தன. அரசின்மேற்பார்வையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெறலாம் என்ற அனுமதியை மட்டுமே அளித்தது. என்னுடையகருத்துப்படி, இது, நீதிபதிகளுக்கு மற்றவர்களின் துன்பங்களை உணர்ந்து கொள்ளும் திறன் இல்லை என்பதை விளக்குகிறது. இது ஆழமான வருத்தத்தில் ஆழ்த்துகிற ஒன்று.அருட் தந்தை ஸ்டான் சுவாமி அவர்களின் இறுதியான துயர மரணத்துக்கு வழிவகுத்த தொடர் நிகழ்வுகள்,  சமீப ஆண்டுகளில் நாம்கண்ட நீதித்துறையின் வீழ்ச்சிக்கு ஒரு சான்று. இது தற்செயலாகவோ அல்லது நிஜமாகவோ, இந்தியாவின் தற்போதைய ஆட்சியுடன் பொருந்துகிறது.

பலவீனமான ஒரு மையக் கொள்கை
“ஏதோ ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஒருவர் அவர் செய்த குற்றம் நிரூபிக்கப்படும் வரையில் குற்றம்அற்றவர் என்று நம்பப்படுவதற்கான உரிமை உள்ளது” என்பது குற்றவியல் சட்டம் மற்றும் நடைமுறையின் மையக் கொள்கை. நமது நாட்டில் தற்போதைய நாட்களில் இந்தக் கொள்கை மிகவும் மோசமாக பலவீனமடைந்துள்ளது என்பதை பயமின்றி சொல்லலாம். அதை சொல்வதற்கு பெரிய தைரியம்ஒன்றும் தேவையில்லை. இது நம்மையெல்லாம் மிகப் பெரிய அளவில் கவலைப்படவைக்க வேண்டும். இந்த கவலையின் ஆதாரம், இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தான். மத்திய புலனாய்வு முகமை எதிர் ஜாஹூர்அகமது ஷா வட்டாலி வழக்கில் 2019 ஏப்ரல் மாதத்தில் உபா சட்டம் பற்றி விளக்கும் உச்ச நீதிமன்றத்தின் முடிவு. இந்த முடிவு, உபா சட்டம் தொடர்பான அனைத்து சட்டங்கள் அல்லது விதிகள் சார்ந்த அடுத்த நிலையில் உள்ள முடிவுகளைப் பாதித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படத்தக்கவை அல்ல என்பது நிரூபிக்கப்பட்டாலும், விசாரணையின் முடிவில் அவர் விடுவிக்கப்பட்டாலும் கூட உபா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணைக் காலம் முழுவதும் காவலில் இருக்கவேண்டும் என்கிற ஒரு புதிய கோட்பாட்டை உச்ச நீதிமன்றத்தின் மேற்குறிப்பிட்ட முடிவு உருவாக்கியுள்ளது. வழக்கின் போக்கைமாற்றக்கூடிய நியாயமற்ற மற்றும் அபத்தமான விஷயம் என்னவென்றால், குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணையின் முடிவில் விடுவிக்கப்படுவார் என்றால் அவர் விசாரணையின்போது ஏன் சிறையில் இருக்க வேண்டும்? என்பதுதான். 

உச்ச நீதிமன்றத்தின் முடிவின் படி, உபாசட்டத்தின் கீழ் பிணை கோரிய மனுவை கருத்தில் கொள்ள, முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு குற்றச் சாட்டும் சரியானது என்று நீதிமன்றம் கருதவேண்டும். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கு விசாரணைக்கு முரணான ஆதாரங்களை நீதிமன்றத்தில் அளித்தால் மட்டுமே அவருக்கு பிணை கிடைக்கும். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், குற்றம் சாட்டவர் தனக்கு எதிரான குற்றச் சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நிரூபிக்கும் சுமை குற்றம் சாட்டப்பட்டவர் மீது உள்ளது. பல வழக்குகளில் இது கிட்டத்தட்டசாத்தியமே இல்லை. வழக்கு விசாரணையின் போது பிணை அளிக்க வேண்டிய கட்டத்தில், (வழக்கு விசாரணையின் ஆரம்பகட்டத்தில் இல்லாத) சாட்சியத்தை ஒப்புக் கொள்வதை விலக்கிவைத்துள்ளது. இவ்வாறு விலக்கிவைப்பதன் மூலம், திறன்மிக்க முறையில் சாட்சிகள் சட்டத்தையே  விலக்கியுள்ளது. இதனால் அந்த முடிவு அரசியல் சாசன சட்டத்துக்கு முரணானது. தற்போது உபா சட்டத்தின் கீழ் நடைபெறும் பிணைக்கான விசாரணைகள் கேலிக்கூத்து என்பதைத் தவிர ஒன்றும் இல்லை. ஆதாரங்களை அளிப்பதில் இத்தகைய தடைகள் இருப்பதால் குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீன் பெறுவது என்பது சாத்தியமற்றது. ஒரு நபரை காலவரையின்றி சிறையில் அடைப்பதற்கு உச்சநீதிமன்றத்தின் மேலே குறிப்பிட்டுள்ள இந்த முடிவு வசதியான கருவிஎன்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. கைது செய்யப்பட்டவர்களுக்கு வரும் கொடுங்கனவுகளுக்கு இணையானது.

இது அரசாங்கத்தாலும் காவல்துறையாலும் அரசுத் தரப்பாலும் தாராளமாக தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது,அனைத்து எதிர்ப்பாளர்களும், ஒரு வழக்கம்போல, தேசத்துரோகம் அல்லது குற்றவியல்சதி என்ற குற்றச்சாட்டுகளின் கீழ் (காட்டுமிராண்டித்தனமான மற்றும் சாத்தியமற்ற)மற்றும் உபா சட்டத்தின் கீழ் உட்படுத்தப்படுகிறார்கள். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக, உதாரணத்துக்கு, ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி ஒரு வழக்கில் ஆதாரங்களை / சாட்சியங்களை சரி தவறு என்று மதிப்பீடு செய்யமுடியாது; அபாயமானவர்கள் என்று கருதப்படுபவர்கள் வன்முறையாக செயல்படுவதை தடுக்கும் நோக்கில் நீண்ட கைகளை உடைய சட்டை அவர்களுக்கு அணிவிக்கப்படும். அதைப் போல ஜாமீன் மறுப்பு என்கிற இந்த சிக்கலான விதி அனைத்து வழக்குகளிலும் இனிமேல் பின்பற்றப்படும். இது மக்கள் நீதித்துறை வாயிலான தீர்வுகளை பெறுவதற்கு நீதிமன்றங்கள் மறுத்த அவசர நிலை காலகட்டத்தில் நாட்டில் நிலவிய கொடுமையான காவல்சட்டங்களுக்கு நிகரானது. அவசர நிலை காலகட்டத்தின் பேரிடர்களை நாம் தடுக்கவிரும்பினால், உச்ச நீதிமன்றத்தின் மேற்குறிப்பிட்ட முடிவு திரும்பப்பெறப்படவேண்டும் அல்லது நீர்த்துப்போகச் செய்யப்படவேண்டும். இல்லையென்றால், அரசியல் சாசனத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள எந்த ஒரு நபரின்தனிப்பட்ட சுதந்திரங்கள் மிக எளிதாக சமரசம் செய்யப்படும் அபாயத்தில் நாம் இருப்போம்.

அரசாங்கத்தை எதிர்ப்பவர்களின் குரலை அமைதியாக்கும் ஒரு வழியாக, உபா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன்மனுக்களை தொடர்ந்து தள்ளுபடி செய்வதையும் உபா சட்டத்தை மூர்க்கத்தனமாக எதையும்மதிக்காமல் தவறாகப் பயன்படுத்துவதையும் அருட்தந்தை ஸ்டான் சுவாமி வழக்கு உள்ளிட்டபீமா கோரேகான் வழக்குகளிலும் அதே நேரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிரான போராட்டங்கள் தொடர்பான வழக்குகளிலும் நாம் பார்க்கலாம். இந்த வழக்குகளில் சிந்தனை ஒரு குற்றமாக பார்க்கப்படுகிறது. பல வழக்குகளில், சந்தர்ப்பங்களில், சாட்சிகள் / ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாதவை, சில நேரங்களில் விவாதிக்கக்கூடிய அளவில் உருவாக்கப்பட்டவை என்று கருதப்படும். மொத்தத்தில் பொதுவாக பலவீனமானவை. ஆனால் உபா சட்டம் பயன்படுத்தப்பட்டதன் விளைவாக, குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் கூட கிடைக்காது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் நீதிமன்றங்கள் உணர்வு ரீதியாகவோ அல்லது சட்ட ரீதியாகவோ சார்புத்தன்மை இல்லாமல் வழக்கின் உள்ளார்ந்த சரி அல்லது தவறில் கவனம் செலுத்த முடியாது.

நீதித்துறைக்கு உள்ள  பிரச்சனை
தில்லியில் 2020ல் நடைபெற்ற கலவரங்கள் தொடர்பான சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 இளம் செயல்பாட்டாளர்களுக்கு தில்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய சம்பவத்தைப்போல, இத்தகைய வழக்குகளில் நீதிமன்றங்கள் தலையிடும்போது, உச்ச நீதிமன்றம் அதன் தன்மைக்கு / இயற்கைக்குமாறாக எடைபோட முயற்சிக்கிறது. உயர் நீதிமன்றத்தின் முடிவு, “ ஆச்சரியப்படுத்துகிறது” என்றும் திருப்திகரமாக இல்லை என்றும் வெளிப்படுத்தியுள்ளது. இதுபோன்ற நிவாரணங்களையோ ஜாமீனையோ அளிக்க, தில்லி உயர்நீதிமன்றத்தின் முடிவு “எந்த நீதிமன்றத்தாலும் முன்னோடியாகக் கருதப்படக்கூடாது” என்று ஒரு வழிகாட்டுதலையும் வழங்கியுள்ளது. குறிப்பாக, ” ஒரு ஜாமீன் மனுவில், அனைத்து சட்டங்களையும் பற்றி விவாதிக்கும் 100 பக்கம் கொண்ட ஒரு தீர்ப்பு எங்களை ஆச்சரியப்படுத்துகிறது” என்றும் சொன்னதாகக் கூறப்படுகிறது. இத்தகைய விவாதங்களை தொடங்கிவைத்த உச்ச நீதிமன்றத்தின் வாட்டாலி வழக்கின் தீர்ப்பும் கூட  ஜாமீன் கேட்டு போடப்பட்ட வழக்குதானே என்பது மறந்துபோயிருக்கலாம்.  சட்டத்தின் தன்மை பற்றிய விளக்கங்களை உச்ச நீதிமன்றம் மட்டும்தான் செய்யவேண்டும், உயர் நீதிமன்றங்கள் (உயர்நீதிமன்றங்களும் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அதிகாரம் தரப்பட்டுள்ள அமைப்புகள்)  அதைச் செய்யக்கூடாது என்று சுட்டிக்காட்டுவது போல இது தோன்றுகிறது.    

இதன் நீட்சியாக, அனைத்து உயர் நீதிமன்றங்களும் சட்டங்கள் தொடர்பான ஆய்வுகளைச் செய்யக்கூடாது என்றால்  சட்டரீதியாக கைது செய்யப்பட்டிருப்பவர்கள், அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிற சட்டங்களின் அரசியல் சாசனப்படியான செல்லுபடியாகும் தன்மை - தீர்மானிக்கப்படும்வரையில் கட்டாயம் சிறையில் வாடி வதங்க வேண்டும் என்பது அதன் அர்த்தமா? அது நிச்சயமாக பகுத்தறிவு இல்லாத விஷயம்.  அருட் தந்தை ஸ்டான் சுவாமி அவர்களைகைது செய்ததற்காகவும் அவரது துரதிருஷ்டவசமான மரணத்துக்காகவும் அவரைப்போலவே பலரை சிறையிலேயே வைத்திருப்பதற்கும் நீதித்துறைதான் பொறுப்பேற்க வேண்டும் என்று இந்தியாவின் எதிர்காலத் தலைமுறையினர் குற்றம்சாட்டுவார்கள். இதற்கான எதிர்ப்புக்குரல்கள் அதிகரிக்கவே செய்யும். அருட் தந்தை ஸ்டான் சுவாமி சொன்னதுபோல, “நாங்கள் இன்னமும் கூட்டாக பாடவேசெய்வோம். பறவையை சிறையில் அடைத்தாலும் அதற்குப் பிறகும்  அதனால் பாட முடியும்.” 

கட்டுரையாளர் : அஜித் பிரகாஷ் ஷா,தில்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் இந்திய சட்ட ஆணையத்தின் முன்னாள் தலைவர்

நன்றி : தி இந்து (ஆங்கிலம்) 

தமிழாக்கம்: கா.வேணி, மாநிலக்குழு உறுப்பினர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி)

;