articles

img

உத்தரகண்ட் பேரழிவும், மூளையில்லாத சில மனிதர்களும்... (பீப்பிள்ஸ் டெமாக்ரஸி தலையங்கம்)

உத்தரகண்ட் மாநிலத்தில் சாமோலி மாவட்டத்தில் பிப்ரவரி 2 அன்று ஏற்பட்டுள்ள மிகவும் பயங்கரமான பேரிடர் காரணமாக ஏற்கனவே 20 பேர் பலியாகிவிட்டனர். 150-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் அல்லது சுரங்கத்திற்குள்ளிருந்து வெளிவர முடியாமல் சிக்கிக் கொண்டிருக்கின்றனர். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ரைனி ஆற்றின் அருகே ரிஷிகங்கா ஆற்றில் நிறுவப்பட்டுள்ள 13.2 மெகா வாட் நீர்மின் நிலையம் மற்றும் தவுலிங்கா மீது கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய 520 மெகா வாட் தபோவன் நீர்மின் நிலையம் போன்று பல்வேறு கட்டமைப்புகளின் கீழ் பணியாற்றி வந்த தொழிலாளர்களாவர். ரிஷி கங்கா நீர் மின்நிலையம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. தவுலிங்கா நீர் மின்நிலையத்திற்குள் இன்னமும் பல தொழிலாளர்கள் வெளிவர முடியாமல் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிராந்தியத்திற்குப் பயன் அளிப்பதற்காக இந்நீர்மின் நிலையங்களில் வேலை செய்து வந்தவர்கள் இப்போது இப்பேரிடர் காரணமாக பலியாகி இருக்கிறார்கள். இது முரண்நகையாகும். ஏனெனில், ‘வளர்ச்சி நடவடிக்கைகள்’ என்ற பெயரில் இத்தகைய அஜாக்கிரதையான, பொறுப்பற்ற பங்களிப்புகள் இத்தகைய பேரிடர் நிகழ்வுகளுக்கு இட்டுச் செல்கின்றன. இவையே இத்தகு அழிவுகளுக்குப் பிரதான காரணங்கள் இல்லையென்ற போதிலும், இப்பேரழிவுக்கு இவற்றின் பங்களிப்புகளும் உண்டு.

தற்போது ஏற்பட்டுள்ள பேரழிவுக்கான சரியான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து கண்டறியப்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம். பனிப்பாறை வெடித்ததே இதற்குக் காரணம் என்று சமீபத்தில் வந்த 
ஊகம் அநேகமாகத் தவறாக இருக்கலாம். இப்போது, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இந்திய சிறப்புக் குழுக்களால் செயற்கைக்கோள்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து, மலையுச்சியில் ஏற்பட்ட சரிவின் காரணமாக, மலையில் திரண்டிருந்த பனிப்பாறைகளிலும் சரிவு ஏற்பட்டு இந்தப் பேரழிவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.மேலும், உறுதியற்ற பாறை ஒன்றில் ஏற்பட்டிருந்த பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்ததனால் ஏற்பட்ட தொடர் நிகழ்வுகள் காரணமாகவும் இந்தப் பேரழிவு ஏற்பட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பேரழிவுக்கான காரணங்கள் எதுவாக இருந்தபோதிலும், இந்தப் பேரழிவானது “வளர்ச்சி” என்ற பெயரில் அறிவியல் வல்லுநர்கள் கூறிய எச்சரிக்கைகள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, மூளையில்லாத மனிதர்களால் உருவாக்கப்பட்ட திட்டங்களே காரணம் என்பதைக் கடுமையான முறையில் நினைவூட்டுகிறது. அதன் விளைவுகளே இப்போது ஏற்பட்டிருக்கும் நிகழ்வுகள்.இதில் மிக முக்கியமான இரு அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. மேற்கு இமயமலைப் பகுதியில் உள்ள மலைப் பகுதிகளில் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தியுள்ள பாதிப்பான அம்சங்களைக் கணக்கில் கொள்ளாமலும், இப்பகுதி ஒரு பனிமலைப் பகுதி என்பதையே மறந்துவிட்டு இங்கே அதிகமான அளவில் கட்டப்பட்டு வரும் கட்டுமானத் திட்டங்களும் இத்தகைய பேரிடர்களுக்குக் காரணங்களாக அமைந்துள்ளன.

                                                          ************************** 

உலகம் முழுவதுமே மனிதர்களால் உருவாக்கப்படும் புவி வெப்பமயமாதல் காரணமாக பனிப்பாறைகள் மிகவும் வேகமாக உருகி சுருங்கிக் கொண்டிருக்கின்றன. இத்துடன் துருவ பனி முகடுகளும் உருகிக் கொண்டிருக்கின்றன. சர்வதேச அளவிலும், இந்தியாவிலும் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வுகள், கடந்த காலங்களில் ஏற்பட்டதைவிட இப்போது பனிப்பாறைகள் உருகுவது மிகவும் அதிகமாக இருப்பதாகக் காட்டுகின்றன. இந்தியாவில், இமயமலையின் கிழக்குப் பக்கத்தைவிட மேற்குப் பக்கம் மிக வேகமாக உருகிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு பனிப்பாறைகள் உருகுவது ஆங்காங்கே பெரிய அளவிலான குளங்களையும், குட்டைகளையும் அல்லது  பனிப்பாறை ஏரிகளையும் ஏற்படுத்துவதற்கு இட்டுச் சென்றிருக்கிறது. சில சமயங்களில் இதன் கரையோரங்கள் உடைந்து, அதிகமான அளவில் வெள்ளம் கீழ்நோக்கிப் பாய்ந்து, திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கும் காரணமாக அமைந்திருக்கிறது. இப்போது பேரிடர் ஏற்பட்டதுபோல் இத்தகைய வெள்ளப்பெருக்குகள் இதற்கு முன்பும் பலமுறை நடந்திருக்கின்றன. இமயமலையின் மேற்குப் பக்கத்தில்தான் மிகவும் வேகமான முறையில் இத்தகைய ஸ்திரமற்ற தன்மை அதிகரித்து, வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. மிகவும் பொறுப்பற்ற முறையில் ஏராளமான சாலைகள், மின் நிலையங்கள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் கட்டப்படுவதுதான் இப்பிரச்சனைக்கு மிக முக்கிய காரணம்.

                                                          ************************** 

கு றிப்பாக, உத்தரகண்டில் இருக்கிற நான்கு யாத்திரைத் தளங்களை இணைப்பதற்காக 2016-ல் 14 ஆயிரம் கோடி ரூபாய்களிலான ‘சார் தாம்’ (Char Dham) என்னும் திட்டம் தீட்டப்பட்டது. சுமார் 800 கிலோ மீட்டர் சாலையுடன், சார் தாம் மகாமார்க் நெடுஞ்சாலை, ஓட்டல்கள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன. இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை எளிதாகப் பெறுவதற்காக என்ன செய்தார்கள் தெரியுமா? மிகவும் தந்திரமான முறையில் இதனை 53 திட்டங்களாகப் பிரித்து, ஒவ்வொரு திட்டமும் 100 கிலோ மீட்டருக்குள் வரும்விதத்தில் திட்டமிட்டு, அனுமதியை மிக எளிதாகப் பெற்றார்கள். இதற்காக நியமிக்கப்பட்ட குழு, பல இடங்களில் மலைகளை 24 மீட்டர் வரை வெட்டி, பத்து மீட்டர் உயரத்திற்குப் பாதையை உயர்த்தியது. சாலைகள் அமைக்கப்படுவதும், மலையோரங்கள் குடையப்படுவதும் மிகவும் முரட்டுத்தனமாகவும், அபாயகரமான முறையில் மேற்கொள்ளப்பட்டன. பல இடங்களில் வெடிகுண்டுகள் வைத்துத் தகர்க்கப்பட்டன. இதனால் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இவ்வாறு வெட்டப்படுவதை ஈடுசெய்து மண்வளத்தைக் கெட்டிப்படுத்துவதற்கு புதிதாக மரம் நடுவது போன்ற தோட்டப்பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் ஈடுபட்ட நிறுவனங்கள் அதிவேகமாக கொள்ளை லாபம் ஈட்டுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுசெயல்பட்டன. இவை, மக்களின் பாதுகாப்பு குறித்து முன்னுரிமை அளிக்கவில்லை என்பது தெளிவாகவே தெரிந்தது.  ஏற்கனவே மிகவும் பலவீனமாக இருந்த இந்தப் பிராந்தியம் இவற்றின் காரணமாக மேலும் மோசமான நிலைக்கு மாறியது. இதன் விளைவு, எதிர்காலத்தில் வெள்ளப் பெருக்குகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகி இருக்கின்றன. ஆற்றுப் படுகைகளில் வீசப்பட்டுள்ள சேதாரங்கள், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தி இருக்கின்றன. 2013 பேரிடரின்போது ஏற்பட்டதுபோல் ஆற்றோரம் உள்ள கிராமங்களும், நகரங்களும் ஆற்றுநீரில் மூழ்குவதற்கான அபாய நிலையும் ஏற்பட்டிருக்கின்றன.

                                                          ************************** 

தற்போது அங்கே மிகவும் அவசரகதியில், குறிப்பாக இப்போதைய அரசாங்கத்தின் கீழ், கட்டப்பட்டு வரும் திட்டங்கள் மிகவும் ஆபத்தான அளவிற்கு இத்தகைய நாசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இப்போது இந்தப் பிராந்தியத்தில் ஏராளமான அளவில் நீர்மின் திட்டங்கள் கட்டப்பட்டு வருகின்றன. தற்போது இம்மாநிலத்தில் சுமார் 100 அணைகள் இருக்கின்றன. மேலும் பல கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றில் பல, ஆற்றில் தண்ணீர் ஓடும் நிலையிலேயே கட்டப்படுகின்றன. சில இடங்களில் மட்டும் தண்ணீரைத் தேக்கி வைத்துவிட்டு, கட்டப்படுகிறது. சில மதிப்பீடுகளின்படி 450-க்கும் மேற்பட்ட நீர் மின்நிலையங்கள் திட்டமிடப்பட்டிருக்கின்றன. இதன் பொருள், ஒவ்வொரு சில டஜன் கிலோ மீட்டர்களிலும் ஒரு நீர் மின் நிலையம் இருக்க முடியும். இவ்வாறு அணைகளும், நீர் மின் திட்டங்களும் கட்டப்படுவதன் காரணமாக ஏராளமான மரங்கள் வெட்டப்படும் நிலை ஏற்படும். இதன் விளைவாக காடுகள் அழிக்கப்படும் நிலை ஏற்படும். பல இடங்களில் கட்டுமானப் பணிகளுக்காக வெடிகுண்டுகள் (டைனமைட்) பயன்படுத்தப்படுவதால் பலவீனமாக இருக்கும் மலைப் பிரதேசங்கள் மேலும் பலவீனமடையக் கூடிய அளவிற்கு மாறும். இத்தகைய கட்டுமானத் திட்டங்கள் தங்கள் வாழ்வாதாரங்களைக் கடுமையாகப் பாதிப்பதால் அங்கேயுள்ள கிராம மக்கள் இவற்றுக்கு எதிராகப் பெரிய அளவில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். கட்டுமானத்தின் விளைவாக ஏற்படும் சேதாரங்கள் பல இடங்களில் விதிகளுக்குப் புறம்பாக அங்குள்ள ஆறுகளில் கொட்டப்படுகின்றன. அல்லது சாலையோரங்களில் கொட்டப்படுகின்றன. இத்துடன் மிகப் பெரிய அளவில் சாலை கட்டுமானமும் நடந்து கொண்டிருக்கின்றன.

                                                          ************************** 

கேதார்நாத் நகரம், 2013-இல் மிகவும் கடுமையான சேதத்திற்கு ஆளானது. எனினும் இதுபோன்று மீண்டும் ஒருமுறை ஏற்படாத விதத்தில் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமலேயேதான் இந்நகரம் மீண்டும் கட்டப்பட்டது. மிகவும் வடுப்படக்கூடிய பகுதிகளாக உள்ள இப்பகுதிகளின் நகரங்களில் அதிகபட்சம் எவ்வளவு பேரைத் தங்க அனுமதிக்கலாம் என்கிற அறிவியல் சிந்தனை எதுவுமின்றியே இந்நகரங்களில் மக்கள் திரட்டப்படுகின்றனர். இதுபோன்ற வழிபாட்டுத் தலங்கள் உள்ள இடங்களில் மக்கள் திரள் அதிகமாக வந்து குவியாமல் இருப்பதற்காக, இவ்விடங்களுக்குக் கீழேயுள்ள இடங்களில் மக்கள் குடியிருப்புகள் கட்டலாம் என்று வந்த பரிந்துரைகளை ஆட்சியாளர்கள் ஒதுக்கித் தள்ளிவிட்டனர். இதுபோன்ற இடங்களில் ஏற்படும் கடும் தட்பவெப்ப நிலைகள், நிலச்சரிவுகள் மற்றும் ஸ்திரமற்ற சாய்வு, பனிப் பாறைகள் உருகுதல் போன்றவற்றை கண்காணிப்பதற்கான ஏற்பாடுகள் பெரும்பாலும் கிடையாது. உத்தரகண்டின் மலைப் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் கட்டுமானத் திட்டங்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் குறித்து மறு ஆய்வு முழுமையாக மேற்கொள்ளப்பட வேண்டும். இத்தகைய பேரிடர் நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டியது அவசியம். இல்லையேல், எதிர்காலத்திலும் இதுபோன்று பேரழிவுகள் ஏற்படத்தான் செய்யும்.

                                                          ************************** 

இமயமலையில் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படும். சாதாரணமான காலங்களிலேயேகூட எண்ணற்ற வெள்ளப் பெருக்குகள் ஏற்பட்டிருக்கின்றன. இடி முழக்கங்கள் ஏற்பட்டு மலைக்குன்றுகள் தகர்க்கப்பட்டிருக்கின்றன. மலைப் பிரதேசங்களில் மக்களின் வசிப்பிடங்களை விரிவுபடுத்துவது, ஏற்கனவே அங்கிருக்கும் சுற்றுச்சூழலில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. சாலைகள் கட்டுதல், நீர்வள ஆதாரங்கள் குறைதல், மரங்கள் வெட்டப்படுதல் காரணமாக மலைகள் மற்றும் மண் பிடிப்பு தகர்தல் முதலானவை அடிக்கடி ஏற்படுகின்றன. இவற்றால் நிலச்சரிவுகளும் ஏற்படுகின்றன. மழை நீர் அங்குள்ள நீரோடைகளிலும் ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கும் காரணமாக அமைகின்றன.

பீப்பிள்ஸ் டெமாக்ரஸி தலையங்கம்

தமிழில்: ச.வீரமணி, (பிப்ரவரி 10, 2021)

;