articles

img

விவசாயிகளின் தொடரும் வீரப்போர்....

விவசாயிகள் நூறாவது நாளன்று தில்லியில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையான கே.எம்.பி. (குண்ட்லி மானேசர் பல்வால்) சாலையில் ஐந்து மணி நேரம் முற்றுகை போராட்டம் விவசாயிகள் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு டோல் பிளாசாக்களை விவசாயிகள் முற்றுகையிட்டனர். கோஷங்கள் எழுப்பி, கருப்புப் பலகைகளை காண்பித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அதே போல் நாடு முழுவதும் கருப்புக் கொடி வீடுகளில் ஏற்றப்பட்டது. கருப்புப் பேட்ஜ் அணிந்து மாவட்ட தலைநகரங்கள், ஒன்றிய, தாலுகா தலை நகரங்கள், கிராமங்களில் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஹரியானா மாநில விவசாயிகள் ஏராளமானோர் திரண்டு குண்டிலி, சோனிப்பட் சாலைகளில் மறியல் செய்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள். பல விவசாயிகள் டிராக்டர் மூலம் நெடுஞ்சாலைகளில் பேரணி மேற்கொண்டனர். இதே போல் நாடு முழுவதும் நூறாவது நாள் போராட்டத்தின் மூலம் கருப்புக் கொடிகளுடன், கருப்பு பேட்ஜ் அணிந்து, வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும் தங்களது எதிர்ப்பினை விவசாயிகள் தெரிவித்தனர்.

பெண் விவசாயிகள் எழுச்சி
சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8 அன்று தில்லியில்வேளாண் சட்டத்திற்கு எதிராக 40 ஆயிரம் பெண்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், பீகார் , ராஜஸ்தான் உள்ளிட்டமாநிலங்களிலிருந்து பெண் விவசாயிகள் தில்லிக்கு சென்று சிங்கு, திக்ரி, காசிப்பூர் பகுதிகளில் மார்ச் 8 அன்று பெண் விவசாயிகள் தலைமையில் போராட்டம் நடந்தது. இதற்காக பெண் விவசாயிகள் 500 பேருந்துகள், 600 மினி பஸ்கள், 115 டிரக்குகள், 200 சிறிய வாகனங்கள் மூலம் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

 காசியாபாத் போராட்டக் களத்தில் முழுக்க முழுக்க பெண்கள் தலைமையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியானாவை சேர்ந்த பெண்கள் தங்கள் கைகளில் “இன்குலாப் ஜிந்தாபாத்” கிசான் ஏக்தா ஜிந்தாபாத் என்றுமருதாணியால் எழுதியிருந்தனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பப்லி சிங், “ இது இன்குலாப் மெஹந்தி.பெண்கள் மெஹந்தியை அழகுபடுத்தலுக்கு மட்டுமல்லாமல் புரட்சியை கொண்டு வரவும் பயன்படுத்துவோம்” என்றார்.

பகத்சிங் நினைவு தினம்
மார்ச் 23 பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினத்தையொட்டி தில்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்பதற்காக பஞ்சாப் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமாக இளைஞர்கள் சிங்கு, திக்ரி எல்லை வந்தனர். போராடும் விவசாயிகளிடம் பகத்சிங் குறித்தும் விவசாயிகளின் நலன் குறித்து பகத்சிங் பார்வை என்ன என்பது குறித்தும் பேசப்பட்டது.

பாரத் பந்த்
மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்திடவும், பெட்ரோல் விலை உயர்வு மற்றும் சமையல் கேஸ் விலை உயர்வை ரத்து செய்திடவும் வலியுறுத்தி விவசாயிகள் போராட்ட குழு சார்பில் இந்தியா முழுவதும் மார்ச் 26 அன்றுபாரத் பந்த் நடத்த அழைப்பு விடுத்ததில் பஞ்சாப், ஹரியானா, தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டன. பல பகுதிகளில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் தில்லி உட்பட நாடு முழுவதும் 32 பகுதிகளில் ரயில்சேவை ரத்து செய்துள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்தது.

 தில்லியில் காய்கறிகளும், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகமும் நிறுத்தி வைக்கப்பட்டது. காசிப்பூர் எல்லையில் அமைந்துள்ள என்எச்9 போக்குவரத்து முற்றிலும் அடைக்கப்பட்டது. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணம், விஜயவாடா பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடைகள் மூடப்பட்டன. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. திரையரங்குகள், வணிகவளாகங்களும் மூடப்பட்டிருந்தன. சாலை, ரயில் மறியல் போராட்டங்களிலும் விவசாயிகள் ஈடுபட்டனர். 

பஞ்சாப்பில் அமிர்தசரஸ், லூதியானா, பாட்டியாலா, மொஹாலி, பிரோஸ்பூர் ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஹரியானாவில் ரோத்தக்,ஜஜ்ஜார், அம்பாலா, ஜிந்த், பஞ்ச்குலா உள்ளிட்ட மாவட்டங்களிலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சாலை மறியல் பேராட்டம் நடைபெற்றது.

ஹோலிபண்டிகை
காசிப்பூரில் போராடி வரும் விவசாயிகள் பல இன்னல்களுக்கும் மத்தியில் ஹோலி பண்டிகையை கொண்டாடினர். வாத்தியங்கள் இசைத்து உற்சாகமாக பாடல்பாடி நடனமாடினர். எங்கள் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு வேளாண் சட்டங்கள் மூன்றையும் திரும்பப் பெற்றால் தான் போராட்டத்தை கைவிட்டு ஊருக்குச் செல்வோம் என விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

சுங்கச்சாவடி போராட்டம்
மக்களவையில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி  கூறும்போது, தில்லியில் துவங்கிய விவசாயிகள் போராட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடிகள் திறந்துவிடப்பட்டன. இதனால் அரசிற்கு கடந்த மார்ச் 16 வரையிலும் ரூ.814 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் மட்டும் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றில் அதிகபட்சமாக பஞ்சாபில் ரூ.487 கோடி இழப்பாகி உள்ளது. ஹரியானாவில் ரூ.326 கோடியும் ராஜஸ்தானில் ரூ.1.04 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் கட்காரி தெரிவித்துள்ளார்.

சம்யுக்தா கிசான் மோச்சா (எஸ்.கே.எம்) அமைப்பின் சார்பில் ஏப்ரல், மே மாதங்களில் பல கட்ட போராட்டங்களை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.  குறிப்பாக மே மாதம் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்பட உள்ளது தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றம் நோக்கி நடைபெறும் பேரணியில் தமிழகத்திலிருந்து பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க செய்திட வேண்டும் இந்த  போராட்டங்களை தமிழகத்தில் பட்டிதொட்டி எங்கும் கொண்டு செல்ல வேண்டிய தேவை உள்ளது.  மக்கள் அனைவரும் தேர்தல் முடிவுக்காக காத்திருக்கும் இந்த சூழ்நிலையில் அவர்களை தட்டி எழுப்பி போராட்டக் களத்திற்கு கொண்டு வரவேண்டிய தலையாய கடமை நம்முன் உள்ளது. எனவே மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை நமது போராட்டம் ஓயாது.

கட்டுரையாளர் : கே.பி.பெருமாள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர்

;