articles

img

சுரண்டலை தீவிரப்படுத்தும் அடிமைச் சாசனம்.... அத்தியாவசியப் பாதுகாப்பு சேவை அவசரச் சட்டம்....

மோடி அரசு, அதன் அதிகாரவர்க்க கருத்தியலுக்கு உண்மையாக, கிட்டத்தட்ட எஸ்மா சட்டம் போன்றகடுமையான சரத்துகளைக் கொண்ட அத்தியாவசிய பாதுகாப்பு சேவை அவசரச்சட்டம் 2021- என்ற கடுமையான சட்டத்தை புழக்கடை வழியான அவசரச் சட்டம்மூலம் கொண்டு வந்துள்ளது. இந்திய குடியரசுத்தலைவர், இந்த அவசரச் சட்டத்தை பிறப்பிக்க “அத்தியாவசியமான பாதுகாப்பு சேவைகளை தொடர்ந்துஇயக்குவதற்கு” என சூழல்குறித்த உண்மைக்கு புறம்பான அறிவிப்பு வெளியிட்டாலும், வெளிப்படையான இந்த சட்டம், வேலை நிறுத்தத்தை தடை செய்யவும்,நாடு முழுவதும் உள்ள 41 பாதுகாப்பு தளவாட உற்பத்திநிறுவனங்களை நிர்வகிக்கும் பாதுகாப்பு தொழிற்சாலை போர்டு என்ற அமைப்பை கலைத்துவிட்டு இந்ததொழிற்சாலைகளை கார்ப்பரேட் நிறுவனங்களாக்கி அதன் மூலம் இறுதியில் அவற்றை தனியார்க்கு விற்பதற்கான திட்டத்திற்கு எதிர்ப்பை தடை செய்யவுமே இந்த அவசரச் சட்டம் போடப்பட்டுள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பானதாகவும், சந்தேகத்திற்கிடமானதாகவும் ஒருபுறம் இருந்தாலும், அது வெட்கக் கேடான வகையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களான, தொழிற்தகராறு சட்டம் 1947 மற்றும் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தொழில் உறவுதொகுப்பு சட்டம் 2020 ஆகியவற்றிற்கு புறம்பாக இருப்பதோடு, அநேகமாக தற்போது நடைமுறையில் இருக்கும் அனைத்து சட்ட பாதுகாப்புகளுக்கும் புறம்பாகவும் உள்ளது. அரசின் நாசகர கொள்கைகளுக்கு குறிப்பாக கண்மூடித்தனமான தனியார் மயத்தை எதிராகவுள்ள பொதுவான எதிர்ப்பையும்,  அமைப்பு ரீதியாக திரண்டுள்ள தடைகளையும், நசுக்குவதே இதன்நோக்கம்!

அத்தியாவசிய பாதுகாப்பு சேவை அவசரச்சட்டம் 2021, ஜூன் மாதம் 30 தேதி நள்ளிரவிலிருந்து உடனடியாக அமலுக்கு வருவதாக பிறப்பிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் 19 ஜூலையிலிருந்து தொடங்கயிருந்த நிலையில், மோடி அரசின் அரசிதழ் (கெசட்) அறிவிக்கை முரணாக தெரிவிப்பது என்னவெனில், “குடியரசுத் தலைவர் இந்த அவசரச் சட்டத்திற்கான சூழல் குறித்து திருப்திகொண்டுள்ளார். ஏனெனில் தற்போது நாடாளுமன்ற கூட்டம் நடைபெறவில்லை” என்பதாக குறிப்பிடுகிறது. ஆனால் நாம் நினைவில் கொள்ள வேண்டியது, இந்த அவசரச் சட்டம் ஒன்றிய அரசு தீவிரமாக, பாதுகாப்பு தளவாட தொழிற்சாலைகள் வாரியத்தை கலைத்துவிட்டு கார்ப்பரேட் மயமாவதாக அறிவிப்பு வெளியிட்ட சில வாரங்களில், பாதுகாப்பு தளவாடசிவில் தொழிலாளர்கள் ஜூலை 26 வேலை நிறுத்த நடவடிக்கைக்கு போவதென்ற முடிவை எதிர்ப்பார்த்தே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

ஆனால் இந்த அவசரச் சட்டம், பாதுகாப்பு தொழிலாளர் பெடரேசன்களின் ஐக்கிய மேடை பாதுகாப்பு தளவாட தொழிற்சாலைகளின் வலைப்பின்னலை கார்ப்பரேட் வழியாக தனியார்மயமாக்குவதற்கு எதிரானவேலை நிறுத்தம் என்ற முடிவை சீர்குலைக்கவும், அதனை தடுப்பதற்காகவும் மட்டுமல்ல, அது பாதுகாப்பு தளவாள உற்பத்தி துறைகளோடு நின்றுவிடாமல், அரசு நிர்வாகம் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் தொழிற்சங்கத்தின், வேலைநிறுத்தம் உட்பட அனைத்து கூட்டு செயல்பாட்டையும் தடை செய்திடும் நோக்கத்துடன், வடிவமைக்கப்பட்டுள்ளது; இந்த சட்டம் எந்த ஒரு துறையிலும் பணியாற்றும் தொழிலாளர்களின் உரிமையான நியாயமான காரணங்களுக்கான கூட்டாக செயல்படுவது சட்டவழிமுறைகளுக்குட்பட்டு எந்த வடிவிலாவது, போராடுவது போன்றவற்றிற்கு  எதிராக தடையை நீடித்திட வழி செய்திடும் அதிகாரத்தை வழங்குகிறது. அந்ததொழில் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த வகையிலாவது அது பாதுகாப்பு தளவாட உற்பத்திநிலையங்களோடு தொடர்புடையது என கருதும் பட்சத்தில், இந்த சட்டம் பொருந்தும். ஒரு தொழில் பாதுகாப்பு தொழிலோடு சம்பந்தப்பட்டது என முடிவு செய்யும் அதிகாரம் முழுமையாக ஒன்றிய அரசிடம் மட்டுமே குவிக்கப்பட்டுள்ளது. 

 இந்த அவசரச் சட்டம் ஒன்றிய அரசிற்கு வேலை நிறுத்தங்களை (வேலை நிறுத்தம் என்பதற்கு வழக்கமான பதம் பயன்படுத்தப்படவில்லை, இங்கு இதுபல வித்தியாசமான பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது), லாக்-அவுட், மற்றும் லே ஆஃப் போன்றவைகளை அத்தியாவசிய பாதுகாப்பு தளவாடம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் தடை செய்யும்அதிகாரத்தை அளிக்கிறது. ஆகவே தீங்கு விளைவிக்கும் இந்த சட்டத்தின் விளையாட்டு, வேலைநிறுத்தம் என்பதற்கான புது வியாக்கியானத்திலிருந்துதொடங்குகிறது. 

இந்த அவசரச் சட்டம், கற்பனை வளத்துடன், அதேசமயம் சாத்தானின் நோக்கத்துடன், வேலை நிறுத்தம்அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் என்பதற்கான வரையறையை விரிவாக்கி தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் தொழிற்சங்கங்களின் கிட்டத்தட்ட அனைத்து விதமான எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களையும் இந்த வரையறைக்குள் அடக்கியுள்ளது. இந்த அவசரச் சட்டம் வேலைநிறுத்தம் என்பதற்கு கீழ்கண்டவாறு வரையறுக்கிறது1) வேலையை நிறுத்துவது 2)மெதுவாக வேலைசெய்வது (கோ ஸ்லோ), 3)தர்ணா(சிட் டவுன்), 4) உள்ளிருப்பு(ஸ்டே இன்) 5) அடையாள வேலை நிறுத்தம், 6) ஆதரவு வேலை நிறுத்தம், 7) ஒட்டு மொத்தமாக தற்செயல் விடுப்பு எடுப்பது, அத்தியாவசியப் பணிகள் என்று சொல்லப்படும் பணியில் ஒரு அமைப்பின் தொழிலாளர்கள்(சங்கம்) கூட்டாக செயல்படுவது, அல்லது ஒருங்கிணைந்து மறுதலிப்பது, அல்லது பொதுவான புரிதலின் அடிப்படையில் (ஆணையை)மறுப்பது எத்தனை நபர்களாக இருந்தாலும் எனவிரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இங்கு ஓவர் டைம் பார்க்கமறுப்பதையும் வேலை நிறுத்தம் என கொள்ளப்படும், சம்பந்தப்பட்ட அதிகாரி, அத்தியாவசியப் பணி என்றுசொல்லப்படும் பணியில், அவ்வாறு மறுப்பதன் காரணமாக அந்த வேலை தடைபடும் என நினைத்தாலோ அல்லது உண்மையில் தடைபட்டாலோ அல்லது வேலையின் வேகம் குறைந்தாலோ, அல்லது வேலையில் தடைகள் ஏற்பட்டாலோ வேலை நிறுத்தம்செய்ததாக கருதப்படும். 1947 வருடத்திய தொழிற்தகராறு சட்டம் வேலை நிறுத்தம் என்பதை சுருக்கமாக “வேலையை நிறுத்துவது” என்று மட்டுமே வரையறுத்துள்ளது. வேறு எந்த வரையறையும் கிடையாது. தொழிலுறவு குறியீடு (இன்டஸ்ரியல் ரிலேசன்ஸ்கோட்) 2020, இத்துடன் புதிதாக சேர்த்திருப்பது, “ஒருங்கிணைந்து 51 சதவீத தொழிலாளர்கள் தற்செயல்விடுப்பு எடுப்பது”என்பதை வேலை நிறுத்தம் என்பதோடு இணைத்துள்ளது. ஆனால், இந்த அவசரச்சட்டம், வழக்கமான வேலை நிறுத்தம் என்பதற்கான வரையறையிலிருந்து நீண்ட தூரம் பயணித்து, கிட்டத்தட்ட அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அது “நடவடிக்கைக்கு தூண்டுவது, கிளர்ச்சி பிரச்சாரம் (அனைத்து பிரச்சாரம், போராட்ட நடைமுறைகள், எதிர்ப்பியக்கங்கள்) ஆகிய எல்லாமே வேலைநிறுத்தம் என்ற வரையறையில் கொண்டு வந்துள்ளது.இது தொழிலாளர்களுக்கு என்ன வரப் போகிறது என்பதை கட்டியம் கூறும் வகையில் உள்ளது, அல்லது முதலாளித்துவ சுரண்டலின் நலன்களுக்காக ஒட்டு மொத்த அரசாங்கத்தையும் மோடி அரசு சர்வாதிகார பாதையில்  மாற்றும் திட்டத்தின் ஒரு அங்கமாக தொழிற்சங்க நடவடிக்கையை முடக்குகிறது. 

அவசரச் சட்டத்தில் “அத்தியாவசியப் பாதுகாப்புபணிகள்” என்பதன் அர்த்தம் என்ன? “அத்தியாவசியப் பணிகள்” என்பதற்கான வரையறை, அது பாதுகாப்பு தளவாட உற்பத்தி மற்றும் சேவைகளோடுகொண்டுள்ள தொடர்பு ஆகியவை விரிவுபடுத்தப்பட்டு, கிட்டத்தட்ட அனைத்து தொழில்களையும் இந்தவரையறைக்குள் கொண்டு வந்து, அங்கும் இந்த தடைகளையும், தொழிலாளர் உரிமைகளையும் நசுக்க அரசுக்கு இந்த அவசரச் சட்டம் அதிகாரமளிக்கிறது. அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் என்பது கீழ்கண்ட எந்த சேவையையும் உள்ளடக்கியதாகும்:

பாதுகாப்புத் துறையோடு சம்பந்தப்படட பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் அல்லது அந்த பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள்.

ஆயுதப் படைகளின்  கீழ் இயங்கும் நிறுவனங்கள் அல்லது அவற்றோடோ, பாதுகாப்பு துறையோடோ சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்.

மேலும் இவற்றில் சேவை புரியும் நிறுவனங்கள், அவற்றின் சேவை நிறுத்தப்பட்டால், அவ்வாறு சேவைஅளிக்கும் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பணியாளர்களின் பாதுகாப்பு பாதிக்கப்படும் என்பவையும் அடங்கும்.

இதற்கு மேலும், அரசு எந்த சேவைத் துறையையும் அத்தியாவசிய பாதுகாப்பு பணிகள்  என அறிவிக்க அதிகாரம் அளிக்கிறது. அந்த துறையில் வேலை நிறுத்தம் கீழ்கண்டவைகளை பாதிக்கும் பட்சத்தில்: 

அ)யுத்த தளவாட கருவிகள், பொருட்கள் உற்பத்தி

 ஆ) இத்தகைய உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள், அலகுகள் இயக்கம் மற்றும் பராமரிப்பை பாதிக்கும் எனில், 

இ) பாதுகாப்பு துறையில் பயன்படுத்தப்படும் உபகரணங்களின் பழுது நீக்கம் மற்றும் பராமரிப்பு. இதற்கு மேலும், இந்த அவசரச் சட்டம் தொழிற் தகராறு சட்டத்தில் பொது பயன்பாட்டு சேவைகள் என்பதை “அத்தியாவசிய பாதுகாப்பு சேவையில் இயங்கும் தொழிற்சாலை நிறுவனங்கள் அல்லது அலகுகள்” என திருத்தியுள்ளது. 

வேலை நிறுத்தத்தை தடை செய்ய காரணிகள் 
இந்த அவசரச் சட்டத்தின் பிரிவு 3ன் படி, ஒன்றியஅரசுக்கு வேலை நிறுத்தத்தை தடை செய்து ஆணைபிறப்பிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தேவையேற்பட்டால் இந்த நலன்களை முன்னிறுத்தி,

1) இந்தியாவின் சுயாதிபத்தியத்திற்கும், ஒற்றுமையையும் காக்க,

2)நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய,

3)பொதுஅமைதியை காக்க

4) பொது நன்மையை கருதி,

5)நாகரீகம் கருதி,

6) ஒழுக்கம் காக்க. இந்த ஆணைபிறப்பிக்கப்பட்டால் அது 6 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும். மேலும் 6 மாதங்களுக்கு அதனை நீட்டிக்கலாம். வேறெந்த சட்டத்திலும், தொழிலாளர் வர்க்கம் தனது கடைசி ஆயுதத்தை- வேலை நிறுத்த உரிமையை பறிக்க இப்படிப்பட்ட பலவீனமான காரணங்களை நாம் பார்க்க முடியாது. 

 ஆகவே, ஒன்றிய அரசு எந்த தொழிற்சாலை பிரிவிலும், அதில் அதன் துணை தொழிற்சாலைகளும், பாதுகாப்புத் தளவாட தொழிற்சாலைகளுக்கு இடுபொருள் வழங்கும் நிறுவனங்களிலும் - உதாரணமாக,மின் உற்பத்தி, இரும்பு-எஃகு தொழிற்சாலை, கனிம தொழில் அல்லது வேறெந்த தொழிற்சாலையையும், அத்தியாவசிய பாதுகாப்பு சேவை என்று அறிவித்து அந்த தொழிலகங்களில் வேலை நிறுத்த தடை, தொழிலாளர்களின் உரிமைகளுக்கு தடை, இயல்பான தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆகியவற்றை தடை செய்ய கட்டுபாடற்ற அதிகாரத்தை இந்த அவசரச் சட்டம்வழங்குகிறது. ஆகவே, வேலை நிறுத்தத்தை தடைசெய்யும் அரசின் கரங்கள், மிகவும் ஆபத்தான வகையில், எந்த ஒரு தொழிற்சாலைக்கும் நீட்டிக்க வழி வகைசெய்யப்பட்டுள்ளது. 

சட்ட விரோத வேலை நிறுத்தத்திற்கு தண்டனை
“சட்ட விரோத வேலை நிறுத்தத்தில்” என்று சொல்லப்படுவதில் தொடங்கும் மற்றும் பங்கெடுக்கும் நபர்களுக்கு தண்டனையாக  ஓராண்டு சிறை அல்லது ரூ.10,000அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து. இதனை தூண்டுபவர்கள், கிளறிவிடுபவர்கள், அல்லது இந்த சட்டவிரோத வேலை நிறுத்தத்தை தொடர நடவடிக்கை எடுப்பவர்களுக்கு ( இதனை வழக்கமான வேலை நிறுத்தத்துடன் தொடர்புடைய தொழிற்சங்க நடவடிக்கையான பிரச்சார நடவடிக்கை என புரிந்து கொள்ள வேண்டும்) அல்லது தெரிந்தே அந்த நோக்கங்களுக்காக பணம் கொடுப்பவர்கள் போன்றவர்களுக்கு தண்டனையாக இரண்டு ஆண்டு சிறை அல்லது ரூ.15,000 அபராதம் அல்லது இரண்டும். இதற்கு மேல்சம்பந்தப்பட்ட தொழிலாளி, ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு பணி நீக்கம் செய்யப்படலாம். இந்தஅவசரச் சட்டத்தின் மூலம் குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து செயல்களும், பிணையில் வெளியில் வர முடியாத, பெரும் குற்றமாகும்.  தொழிலாளி வர்க்கத்தின் வேலை நிறுத்த உரிமைநீண்ட காலம் மனிதத் தன்மையற்ற முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக போராடி பெற்ற உரிமையாகும். அதன் பிறகு தொழிற் தகராறு சட்டம் 1947 மற்றும் தொழிற்சங்க சட்டம் 1926 ஆகியன வேலை நிறுத்த உரிமையை அங்கீகரித்தன. தொழிற்தகராறு சட்டம், பொது பயன்பாட்டு துறைகளில் வேலை நிறுத்தம் செய்வதற்கு சில வழி முறைகளை வைத்துள்ளது. அது ஒட்டு மொத்தமாக வேலை நிறுத்தத்தையே இந்த அவசரச் சட்டம் போல் தடை செய்யவில்லை. இந்த அவசரச் சட்டம் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 87, 98 ஆகியவற்றின் முடிவுகளை அப்பட்டமாக மீறுகிறது (சங்கம் அமைக்கும் உரிமைமற்றும் கூட்டு பேர உரிமை).

ஆகவே, அத்தியாவசிய பாதுகாப்பு சேவை அவசரச் சட்டம் என்பது, கார்ப்பரேட் சேவகர் மோடியின் அரசுவிரிவான அளவில், முதலாளித்துவ அமைப்பின் மிருகத்தனமான சுரண்டலிலிருந்து தொழிலாளர்கள் தங்களைசங்கம் அமைத்து காத்துக் கொள்ளும் அடிப்படைஉரிமைகளை தகர்த்து எறியும் மிருகத்தனமான வடிவத்தை கொண்டுள்ளது. இது ஏற்கனவே மோசமான தொழிலாளர் குறியீடு என்ற பெயரில் தொழிலாளர் உரிமைகளை பறித்ததைவிட பல மடங்கு அதிகமாக உரிமை பறிப்பு சட்டமாகும். இந்த சட்டத்தின் நோக்கம்,பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறையுடன் மட்டும் நின்று விடுவதில்லை இந்த சட்டத்தை ஊன்றி படித்தால்,கிட்டத்தட்ட எந்த தொழிற்சாலைக்கும் இதனை அமல்படுத்தவும் எல்லா இடத்திலும் தொழிற்சங்கத்தை கட்டுப்படுத்தவும் தொழிற்சங்க நடவடிக்கைகளை தடை செய்யவும் பயன்படுத்தும் அதிகாரத்தை அரசாங்கத்திற்கு வழங்கியிருப்பதை காணலாம். அரசு ஏற்கனவே அந்த பாதையில் அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்கிறது. பொதுத்துறையிலும், தனியார் துறையிலும் ஏராளமான தொழிற்சாலைகள் பொது பயன்பாட்டு சேவைகள் என அறிவிக்கப்படுகிறது. கடைசியாக எஃகு தொழிற்சாலைகள் பொது பயன்பாட்டு சேவை என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இந்திய தொழிலாளர் வர்க்கத்திற்கு இது புதியநிகழ்வோ அல்லது அனுபவமோ இல்லை. சுதந்திர இந்தியாவில் கடந்த காலங்களில் பல சமயங்களில் அரசாங்கங்கள் இத்தகைய பயங்கர சட்டங்களை கொண்டு வந்துள்ளதை நம்மால் நன்கு நினைவு கூரமுடியும் 61 ஆண்டுகளுக்கு முன், நாடு தழுவிய ஒன்றியஅரசு ஊழியர்கள் ஜூலை 11, 12 தேதிகளில் நடத்திய மகோன்னதமான வேலை நிறுத்தத்தின் போது, ஒரு அவசரச் சட்டம், எஸ்மா பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த சட்டத்தின் ஷரத்துகள் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள சட்டத்தை போன்றது. இதைப் போன்ற இதர அவசர சட்டங்களும், நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டங்களும் உண்டு. உதாரணமாக இந்திய பாதுகாப்பு சட்டம் (டிஐஆர்), மிசா சட்டம் (உள்நாட்டு பாதுகாப்புஅமலாக்க சட்டம்) போன்ற சட்டங்கள், ஜனநாயகஇயக்கங்களையும், தொழிலாளர் வர்க்க இயக்கங்களையும் ஒடுக்கிட கருவிகளாக பயன்படுத்தப்பட்டன. ஆனால் அவை யாவும் இந்திய தொழிலாளி வர்க்க இயக்கம் ஒன்றுபட்டு தடைகளை தகர்த்தெறிந்து போராடுவதை தடுக்க இயலாமல் போனது. கடந்த காலங்களில் தொழிலாளி வர்க்கம் இத்தகைய தாக்குதல்களை எதிர் கொண்டது. இந்த முறையும் வெற்றிகரமாக எதிர் கொள்ளும். ஒன்றுபட்ட இயக்கங்கள் கட்டமைப்பதிலும் முன்னெடுத்து செல்வதிலும் எந்த சுணக்கமும் இருக்கப் போவதில்லை. 

ஆகவே தொழிலாளி வர்க்க இயக்கம் தற்போதைய அரசின் இத்தகைய விஷமத்தனங்களை ஏற்கவும்போவதில்லை, அவர்கள் போராடிப் பெற்ற உரிமைகளின் மீதான தாக்குதலை படுத்துக் கொண்டு வேடிக்கை பார்க்கவும் போவதில்லை. அவர்கள் தங்கள் மீதுஅடிமைச் சாசனம் புகுத்தப்படும் தீங்கான நோக்கங்களை சகித்துக் கொண்டிருக்கவும் போவதில்லை! நமதுஉரிமைகள் மீது தாக்குதல் வரும் போது, அடங்க மறுப்பதும், கடும் எதிர்ப்பு காட்டுவதுமே நமக்கு முன்னுள்ள ஒரே வழி, இந்த தாக்குதல் நமது உரிமைகள் மீது மட்டும் வரவில்லை, நமது நாட்டு உற்பத்திவளங்களை ஏலம் விடுவதற்கும், விற்பதற்குமான தேச விரோத நடவடிக்கைகளுக்கு எதிராவும் போராடவேண்டியுள்ளது. தொழிலாளி வர்க்க இயக்கங்கள் தங்களை அந்த வழிக்கு தயார் செய்து கொள்ள வேண்டும். நாம் போராடுவோம். வெற்றி பெறுவோம். 

கட்டுரையாளர் : ஆர்.கருமலையான் சிஐடியு அகில இந்திய செயலாளர்,

பிப்பிள்ஸ் டெமாக்ரசி

தமிழில்: தூத்துக்குடி க.ஆனந்தன்

;