articles

img

ஆலமரத்தின் வேர்களை அசைக்கிறார்கள்....!

 18,40,00,00,00,000 –- இது சாதாரண மனிதர்க்கு வாசிப்பதற்கே சிரமம். இதை வெளிநாட்டினர் 1.84 டிரில்லியன் என்றும், இந்தியர்கள் 1 .84 லட்சம் கோடி என்றும் சொல்வார்கள். நம்மைப் பிரமிக்க வைக்கும் இந்த எண்ணிக்கைதான் கடந்த ஆண்டின் சாதனை பிரீமிய வருமானம். பிரீமியம்என்று சொன்னால் எல்ஐசி பாலிஸி பயனாளர்களிடமிருந்து திரட்டிய பணம் என்று அர்த்தம். இங்கே நாம் புரிந்துகொள்ள வேண்டியது கொரோனா காரணமாக உலகில் உள்ள எல்லா இன்சூரன்ஸ் கம்பெனிகளும் பெரும் பின்னடைவைச் சந்தித்த காலகட்டத்தில்தான் இந்தச் சாதனை பிரீமிய வருமானம். அதனால்தான், எல்ஐசி இன்று உலக அளவில் வலுவானஇன்சூரன்ஸ் பிராண்டுகளின் ரேட்டிங்கிங் வரிசையில் மூன்றாம் இடத்தை வகிக்கிறது.

இந்தக் காலஅளவில் உலகின் லாபம் விஷயத்தில் முன்வரிசையில் இருந்த நூற்றுக்கு மேற்பட்ட இன்சூரன்ஸ் பிராண்டுகளின் ரேட்டிங்கில் 6 சதவீதம் சரிவு பதிவாகியுள்ளது. உலகில் முதலாம் இடத்தில் உள்ள இன்சூரன்ஸ் கம்பெனியாகிய சீனாவின் ‘பிங்ஆன்’கூட 26 சதவீதம் குறைவைப் பதிவு செய்துள்ளது.இத்தனையும் ஒரு முன்னுரையாகச் சொல்வதற்குக் காரணம் இந்தக் கொரோனா காலத்தில்கூட இன்சூரன்ஸ் தொழிலுக்கு ஒரு முன்மாதிரியாக உலகின்முன் இந்தியாவின் மதிப்பை உயர்த்தி நிறுத்துகிற எல்ஐசி-யின் கதையை முடிப்பதற்கான மறைமுக முயற்சி மிக வேகமாக நடக்கிற சூழல் உள்ளது. இந்தக் கொரோனா காலத்தை இதற்கு ஏற்றசந்தர்ப்பமாக ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது.

மதிப்பிட முடியாத ரத்தினமாக...
எல்ஐசி-யின் முதலாவது பங்கை எவ்வளவு வேகமாக விற்றுத் தீர்ப்பது என்பதுதான் ஒன்றியஅரசின் குறிக்கோள். முதலாவது பங்கை எப்படியாவது விற்றுவிட்டால் பின்னர் உள்ள பங்குகளை வெறும்அமைச்சரவைத் தீர்மானத்தின் மூலம் விற்பதற்கான முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. பொதுமக்களிடமிருந்தும் எல்ஐசி-யின் எல்லா ஊழியர்களிடமிருந்தும் பெரும் எதிர்ப்பு கிளம்பாமலிருப்பதற்கான தந்திரங்களெல்லாம் இதில் உண்டு. எல்லா ஓட்டைகளையும் அடைத்து எல்ஐசி-யை நசிப்பதற்கான கொல்லைப்புற வேலைகள் ஆரம்பித்து ஒன்பது மாதங்கள் ஆகின்றன. இதன் விளைவாக 32 லட்சம் கோடிரூபாய் லைஃப் ஃபண்டு உள்ள நாட்டின் பொதுத்துறைநிறுவனங்களின் கூட்டத்தில் மதிப்பிட முடியாத ரத்தினமாகிய லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வெறும் ரூ.25 லட்சம் கோடி ஆஸ்தியுள்ள கம்பெனியாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. பங்குமார்க்கெட்டுக்குச் செல்வதற்கு முன்பு ‘ஸெபி’யின்மூலம் தளர்வான நிலைபாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக வங்கிகளின் பங்கை விற்பதற்கான பொறுப்பை மேற்கொள்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காரணம், எல்ஐசி பங்கின் அளவு அவ்வளவு அதிக ஆற்றல் கொண்டதாகும்.

மின்னல் வேக முயற்சி
இவ்வளவு அதிக முக்கியத்துவம் உள்ள விஷயத்தில் இது சம்பந்தமான மசோதா நாடாளுமன்றத்தில் ஒரு விவாதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மசோதாவை சாதாரணமாகத் தேர்வுக்குழுவுக்கு விடுவதும், தேர்வுக்குழு அனைத்து பிரிவு மக்களின்கருத்தைக் கேட்ட பிறகு மீண்டும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதும், அதன் மீது மயிர்பிளக்கும் விவாதம்நடைபெறுவதும் உண்டு. இது எதுவுமே இல்லாமலேயே மசோதாவை நிறைவேற்றியதற்குப் பின்னால் ரகசிய திட்டம் உள்ளது. இந்தியப் பொருளாதாரத் துறைமிகவும் பரிதாபகரமான கட்டத்தினூடே செல்லும்போதுதான் இந்தப் பொன் முட்டை இடுகிற வாத்தை வெறும் இறைச்சி விலைக்கு அந்நிய தனியார் ஏகபோக முதலாளிகளுக்கு விற்கப்படவுள்ளது. பங்குகளை விற்கிறோம் என்பதைக் கேட்கும்போது எல்ஐசி-யை நேசிக்கும் 40 கோடிக்கும் மேற்பட்ட பாலிஸி பயனாளர்களின் எதிர்ப்பைக் கண்டு ஒன்றியஅரசு அஞ்சுகிறது. இங்கே பொருளாதார சமத்துவமின்மையும், பொருளாதார அராஜகமும் ஒன்றுசேர்ந்துள்ள நிலையில் ஒன்றிய அரசின் இந்த மின்னல்தாகும்.

எல்ஐசி-யை மற்ற பொருளாதார நிறுவனங்களிலிருந்து வித்தியாசப்படுத்துவது முக்கியமாக நீண்டகாலச் சேமிப்பும், அதன் மூலம் அரசுகளுக்குக் கிடைக்கிற நீண்டகாலக் கடனுமாகும். ஒன்றிய-மாநில அரசுகளுக்கு மட்டுமல்ல, சாலை வளர்ச்சி, வாட்டர் அத்தாரிட்டி, மின்சாரம் முதல் பங்கு மார்க்கெட்வரை எல்ஐசி-யின் நிதி உதவி இல்லாமல் இயங்கும்இந்திய நிறுவனங்கள் அபூர்வமாகும்.

எப்போதும் சுமைதாங்கியாக...
பங்கு மார்க்கெட்டில் உள்ள எல்ஐசி-யின் முதலீட்டைப் பரிசோதித்தால் எல்லாமே இந்தியாவின் அந்தந்த துறைகளில் மிகவும் முக்கியமான நிறுவனங்களாகும். நாட்டின் 21 வங்கிகளின் பங்குகளில் எல்ஐசி-யின் முதலீடு உள்ளது. எல்ஐசி-க்கு பங்குகள் இல்லாத பொதுத்துறை, தனியார்துறை நிறுனங்களும் வங்கிகளும் சிலதான் உள்ளன. இதனால்தான் எல்ஐசி-யைத் தனியார்மயம் ஆக்குவது இந்தியாவின் அனைத்து துறைகளையும் சிதைத்துவிடும். இவ்வாறு இந்தியாவின் அனைத்து துறைகளுக்கும், ஒன்றிய-மாநில அரசுகளுக்கும்,  பொதுத்துறை, தனியார் துறைகளுக்கும், வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கும் எப்போதும் சுமைதாங்கியாக உள்ளது எல்ஐசி என்கிற நிறுவனம்.இத்தகைய ஆலமரத்தின் கிளைகள் வெட்டப்படுகிறார்கள்; வேர்களைப் பறிக்கிறார்கள். இத்தகைய அட்சயப் பாத்திரம் துச்சமான விலைக்கு விற்றுத் தொலைக்கிற ஒன்றிய ஆட்சியாளர்களிடம் எல்ஐசி-யைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தைக் குறித்துப்பேசிப் புரியவைப்பது எளிதல்ல. காரணம், உறங்குகிறவரை எழுப்பலாம்; உறங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியாதல்லவா?

கட்டுரையாளர் : டாக்டர் பி.ஜி,திலீப், ‘எல்ஐசி ஏஜென்ட்ஸ் ஆர்கனைஸேஷன் ஆஃப் இந்தியா’ பொதுச்செயலாளர், நன்றி: தேசாபிமானி நாளிதழ்  (2.9.2021), 

தமிழில் : தி.வரதராசன்

;