articles

img

இட ஒதுக்கீட்டில் இரண்டகமான நிலைப்பாடு....

வரும் கல்வியாண்டிலிருந்து இளநிலைப் பட்டவகுப்புகள் மற்றும் முதுநிலைப் பட்ட மருத்துவம் மற்றும் பல் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளுக்கான அகில இந்திய கோட்டாவிற்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதமும், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு 10சதவீதமும் இட ஒதுக்கீடு அளிப்பதற்கான அறிவிப்பினைமோடி அரசு வெளியிட்டுள்ளது.இது மோடி அரசு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன்களில் அக்கறை கொண்டிருப்பதற்கு ஓர் உதாரணம் என்று பாஜகவினராலும், அதன் ஆதரவாளர்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது. மோடி, இதனை “ஒரு முத்திரைபதிக்கும் முடிவு”என்று புளகாங்கிதம் அடைந்திருக்கிறார். எனினும்,இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகளை ஆராயும்போது உண்மை வேறு விதமாக வெளிப்படுகிறது.  2020 ஜூலையில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்திட்ட தீர்ப்பை அமல்படுத்தாததற்காக நீதிமன்ற அவமதிப்பு மேற்கொள்ளப்படலாம் எனசென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்தபின்பே மோடி அரசாங்கம் இதன்மீது செயல்பட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது என்பதுதான் உண்மை.

உண்மை விபரம் என்ன?

இதுதொடர்பான உண்மைகள் பின்வருமாறு: 

உச்சநீதிமன்றம், 2016இல் ‘நீட்’ (NEET) எனும்ஒரே நுழைவுத் தேர்வு மூலம் அனைத்து மருத்துவக்கல்லூரிகளின் சேர்க்கைக்கு  உத்தரவு பிறப்பித்திருந்தது. நீட் மூலம் மேற்கொள்ளப்படும் சேர்க்கையினுள், 15 சதவீதம் இளநிலைப் பட்ட இடங்கள் மற்றும்50 சதவீதம் முதுநிலைப்பட்ட இடங்கள் மாநிலங்களால் அகில இந்திய கோட்டாவுக்கு சரண் செய்யப்பட்டன. இந்த இடங்கள் ஒரு மத்தியப் பட்டியல் மூலமாக நிரப்பப்பட்டன. முன்னதாக, 2007இல், உச்சநீதிமன்றம், அகிலஇந்திய கோட்டாவின்கீழ் 15 சதவீதம் தலித்துகளுக்கும், 7.5 சதவீதம் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. எனினும், அகிலஇந்திய கோட்டாவின்கீழ் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்களுக்கு என்று தனி ஷரத்து எதுவும்இல்லை. 2007இல் ஐமுகூ அரசாங்கக் காலத்தில் மத்தியக் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளித்திடவேண்டும் என்று மத்திய சட்டம் நிறைவேற்றப்பட்டபோதிலும்கூட இதுதான் நிலை. எனவே, அகில இந்திய கோட்டாவின்கீழ் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்காதது ஒரு பாகுபாடாக நீடித்தது.

எனினும், ‘நீட்’ அறிமுகப்படுத்தப்பட்டபின்னர், மோடி அரசாங்கம் மருத்துவ மற்றும் பல்மருத்துவக் கல்லூரி இடங்களுக்காக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுத்திடவில்லை.தமிழ்நாட்டிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,திமுக உட்பட பெரிய அரசியல் கட்சிகள் உச்சநீதிமன்றத்திற்குச் சென்று, தமிழ்நாட்டினால் சரண் செய்யப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்களில் 50 சதவீத இட ஒதுக்கீடு, அகில இந்தியகோட்டாவில் அளித்திட வேண்டும் என்று கோரினார்கள். உச்சநீதிமன்றம், இதனை உயர்நீதிமன்றமே விசாரணை செய்திட முடியும் என்று கூறி, இந்த விஷயத்தை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டது. எனவே, இவர்கள் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள். சென்னை உயர்நீதிமன்றம், 2020 ஜூலையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டின் சட்டப்பூர்வமான தன்மையை நிலைநாட்டி, வரும் கல்வியாண்டிலிருந்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு முறைகளைத் தீர்மானிக்கும்படி (to decide the modalities) உத்தரவு பிறப்பித்தது. எனினும், இந்த ஆண்டு திட்டத்தில்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை அளித்திட தேசிய ஆய்வு முகமை (National Testing Agency) எவ்விதமான ஏற்பாட்டையும் செய்திடவில்லை.

திமுக மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக ஒரு நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தது. அதன்மீது உயர்நீதிமன்றம் ஜூலை 19 அன்று,“2021-22 கல்வியாண்டில் மாநிலத்தில் அகில இந்திய கோட்டா சம்பந்தமாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் இருப்பதற்கான ஒன்றிய அரசாங்கத்தின் முயற்சி, இந்த நீதிமன்றத்தின் 2020 ஜூலை 27 தேதிய உத்தரவுக்குக் கீழ்ப்படிய மறுத்திருப்பதாகவே தோன்றுகிறது,” என்று கருதியது. இவ்வாறு நீதிமன்றம் கருதியதன் அடிப்படையில்தான், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்த ஒன்றிய அரசு அகில இந்திய கோட்டாவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.  

மாநில அரசுகளின் அதிகாரம் பறிப்பு
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டுப் பிரச்சனை மீது மோடி அரசாங்கத்தின் முரட்டுத்தனமான மற்றும் ஒருதலைப்பட்சமான அணுகுமுறை எந்த லட்சணத்தில் இருந்தது என்பதுஇதேபோன்று வேறொரு வழக்கிலும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. மோடி அரசாங்கம், 2018 ஆகஸ்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்திற்கு அரசமைப்புச்சட்ட அந்தஸ்து அளிப்பதற்காக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஓர் அரசமைப்புச்சட்டத் திருத்தத்தைப் பெற்றிருந்தது. இது பல உட்பிரிவுகளை அறிமுகப்படுத்தியிருந்தது. அதன்படி ஒரு வகுப்பினை சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு (SEBC-Socially and Educationally Backward Class) என்று அறிவித்திடுவதற்கான அதிகாரத்தைக் குடியரசுத் தலைவருக்கு அளித்திருந்தது. அந்த சமயத்தில், நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இது மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காட்டுவதற்கான உரிமையைப் பாதித்திடும் என்று சுட்டிக்காட்டி இருந்தார்கள். ஆனாலும் இந்த ஆட்சேபணைகளைப் புறந்தள்ளிவிட்டது. இதுவரையிலும், ஒன்றிய அரசாங்கம் தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையத்தின்மூலம், மத்தியப் பட்டியலுக்கு,  இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் கண்டு வருகிறது. மாநில அரசாங்கங்கள் மாநிலப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையங்களின் மூலமாகமாநிலப் பட்டியலுக்கான வேலைகளை மேற்கொண்டுவருகின்றன. இந்தத் திருத்தம் தொடர்பாக ஒரு வழக்கைவிசாரித்த உச்சநீதிமன்றம் இந்த ஆண்டு மே மாதத்தில்102ஆவது திருத்தத்தின்படி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் யார் என்று அறிவிப்பதற்கான, அனைத்து அதிகாரங்களும் குடியரசுத் தலைவருக்கே உண்டுஎன்று, அதாவது ஒன்றிய அரசுக்கே உண்டு என்று, விளக்கம் அளித்திருந்தது. உச்சநீதிமன்றத்தின் இந்தஉத்தரவின்மூலம் மாநில அரசாங்கங்கள் தங்கள் அதிகாரங்களை இழக்கின்றன. அவை குடியரசுத்தலைவருக்கு அல்லது தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையத்திற்குத் தங்கள் ஆலோசனைகளை வழங்கலாம்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் யார் என்று தீர்மானிக்கும் அதிகாரம் இதுவரையிலும் மாநில அரசாங்கங்களிடமே இருந்து வந்தது. அந்த உரிமையின்மீது இது கடும் தாக்குதலை ஏற்படுத்தி இருக்கிறது. மோடி அரசாங்கம், அரசமைப்புச்சட்டத் திருத்தம் மாநிலஅரசாங்கங்களின் உரிமைகளைப் பறிக்கவில்லை என்று கூறியுள்ளபோதிலும், இந்த சேதாரத்தைச் சரிசெய்வதற்கான நடவடிக்கை எதையும் அது எடுத்திடவில்லை. முந்தைய தவறான நடவடிக்கையைச் சரிசெய்திட ஓர் அரசமைப்புச்சட்டத் திருத்தம் தேவையாகும்.  அதனைச் செய்வதற்குப் பதிலாக, மோடி அரசாங்கம் உச்சநீதிமன்றத்திற்கு முன்பு ஒரு மறுஆய்வு மனுைத் தாக்கல் செய்தது. அதனை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. மோடி அரசாங்கம் நாடாளுமன்றத்தின் மழைக்காலக்கூட்டத்தொடரில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களை அடையாளம் காட்டும் விதத்தில் மாநிலங்களின் உரிமைகளை மீண்டும் மாநிலங்களுக்குத் திருப்பிக்கொடுக்கும் விதத்தில் நேரடியாகவே ஓர் அரசமைப்புச்சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும். எனினும், காலத்தை வீணடித்தபின், அமைச்சரவை இப்போது நாடாளுமன்ற அமர்வின் இடையில், ஓர் அரசமைப்புச்சட்டத் திருத்தத்தை அறிமுகப்படுத்தத் தீர்மானித்திருக்கிறது. முன்பு அரசாங்கம் மேற்கொண்ட  சிந்தனையற்ற நடவடிக்கை காரணமாக மாநிலங்களின் உரிமைகள் பறிபோயிருப்பது உடனடியாக சரிசெய்யப்பட வேண்டியது அவசியமாகும்.

பீப்பிள்ஸ் டெமாக்ரஸி தலையங்கம் 

ஆகஸ்ட் 4, 2021,  தமிழில்: ச.வீரமணி

;