articles

img

தீர்ப்பை மாற்றி எழுதுங்கள் ‘யுவர் ஹானர்’

2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம்ஊழியர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டிலிருந்து தெகல்கா.காம் செய்தி இதழின் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பாலை விடுவித்து கூடுதல் அமர்வு நீதிபதி சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளார்.  இத்தீர்ப்பை எதிர்த்துகோவாவில் உள்ள பாஜக தலைமையிலான அரசு உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.  நிர்பயா வழக்கிற்குப் பிறகு சட்டத்தில் இணைக்கப்பட்ட - இளம்பெண்ணின் மீது செல்வாக்கும், அதிகாரமும் கொண்டவர் என்பதைக் குறிக்கும் பிரிவு - உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தருண் தேஜ்பால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.  

பாஜகவைக் கடுமையாக விமர்சிப்பவர் என்றறியப்பட்டவர் தேஜ்பால் என்பதால் அல்லது பாலியல் வல்லுறவுதொடர்பான வழக்குகளை கையாள்வதில் இரட்டை நிலைபாட்டை கடைப்பிடிக்கும் பாஜகவின் நயவஞ்சகமான வெளிப்பாடுகளால் “அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு” தொடுக்கப்பட்ட வழக்கு இது என்பன போன்ற வாதங்கள் இருக்கின்றன என்றும், நாம் நமது கவனத்தை இப்பிரச்சனையிலிருந்து திசை திருப்பிவிடக் கூடாது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் போராட்டம்
பாதிக்கப்பட்ட இளம்பெண், அரசியல் நோக்கங்களைக் கொண்டு செயல்படுபவர்களின்  கைப்பாவை அல்ல.  கடந்த 8 ஆண்டு காலமாக அப்பெண் கடுமையான போராட்டத்தை நடத்தியுள்ளார்.  பாதிக்கப்பட்ட பெண்ணின் குரலை அடக்க மேற்கொள்ளப்பட்ட எல்லா முயற்சிகளையும் மீறி, நீதிமன்றத்தின் 527 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பில் அப்பெண்ணின் குரலை நாம் கேட்க முடிகிறது.  நேர்மையோடும், தைரியத்தோடும் பேசும் குரல் அது.  தந்தையின் இடத்தில் வைத்துப் பார்த்த நபரான – சொல்லப் போனால் நெருங்கிய தோழியின் தந்தையான – தனது எஜமானரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை எதிர்த்துப் போராடி, சித்ரவதைப்பட்ட இளம்பெண்ணின் குரல் அது.பல உறவுகள் ஆபத்தில் இருந்ததால் எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதில் குழப்பம்; கோபமும், வருத்தமும் இருந்தபோதும், பணியிடத்தில் தன்னுடைய கடமைகளை நிறைவேற்றிட எதுவும் நடக்காதது போன்று “சாதாரணமாக” நடந்து கொள்ள அவள் முயற்சிக்கிறாள்.  குற்றம் சாட்டப்பட்ட எஜமானரால் மட்டுமின்றி, நிர்வாகத்தின் அதிகார படிநிலைகளில் உள்ள பெண்களாலும் கூட பணியிடத்தில் பெண்களை பாலியல்மயமாக்குவது சாத்தியமாக இருப்பதன் கொடூர தன்மையையும், இத்தகைய நடைமுறையை இயல்பான ஒன்றாக ஆக்குவதையும் தன்னையும் அறியாது அக்குரல் வெளிப்படுத்துகிறது.  

குற்றம் சாட்டப்பட்டவரை பாதிக்கப்பட்டவராக மாற்றுகிற நீதிமன்றத்தின் தீர்ப்பால், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணே குற்றவாளி ஆகிறாள்.  “பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் வாதி ஒருவர் நம்பத்தகுந்த முறையில் உறுதிப்படுத்துவதைப் போல (வாதி) தனது தரப்பில் எந்தவிதமான நெறிமுறை நடத்தையையும் நிரூபிக்கவில்லை” என அத்தீர்ப்பு கூறுகிறது (பக்கம் 457).  

1979 ல் இருந்த நிலை
இத்தீர்ப்பு நம்மை பின்னுக்கு இழுத்து 1979ம் ஆண்டுக்குள் தள்ளுகிறது.  அப்போதெல்லாம் பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண், உடலுறவுக்கு தான் சம்மதிக்கவில்லை என்பதை தனது உடலில் உள்ள காயங்களின் மூலம் நிரூபிக்க வேண்டியிருந்தது.  2021ம் ஆண்டில் அளிக்கப்பட்ட இத்தீர்ப்பில், இத்தகையதொரு அணுகுமுறையோடு, பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் நடத்தை குறித்து நீதிமன்றம் முன்கூட்டியே கொண்டுள்ள கருத்துக்களோடு பாதிக்கப்பட்டவர் பொருந்தவில்லை என்பதால் அப்பெண் பொய் பேசுபவளாகக் கருதப்படுகிறாள்.  சட்டத்தில், சட்ட வழக்குகளில், பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான அணுகுமுறைகளில் மாற்றங்களை 40 ஆண்டுகாலமாக பெண்கள் நடத்திய போராட்டங்கள் கட்டாயமாக்கின.  ஆனால், இத்தகைய மாற்றங்களுக்கும் இந்த தீர்ப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றே தோன்றுகிறது. 

“நம்பகமானதாகவும், உண்மையானதாகவும்” இருக்கிறது என்ற நிபந்தனையின் அடிப்படையில் பாலியல் வல்லுறவுக்கு ஆளானவர் அளிக்கும் வாக்குமூலத்திற்கு சட்ட வழக்கு மதிப்பளிக்கிறது. ஆனால், இத்தீர்ப்போ இதற்கு புதிய, ஆபத்தானதொரு விளக்கத்தை அளிக்கிறது. “உண்மையான சாட்சி யார்?” என்ற கேள்வியை அது எழுப்புகிறது. அதன் பின்னர், (வாதி) முன்வைத்த சாட்சி “உண்மையானது” அல்ல என்பதை நிரூபிக்க பிரதிவாதி தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபகரமான ஒவ்வொரு குற்றச்சாட்டையும் ஏற்றுக் கொள்கிறது.  

மீறப்பட்ட சட்டங்களும், தனியுரிமையும்
பல்வேறு சட்டங்களை அப்பட்டமாக மீறி, தனியுரிமைக்கான அவரது உரிமையை மிகக் கடுமையாகத் தாக்கி, பாதிக்கப்பட்ட பெண் பற்றிய முழுமையான தனிப்பட்ட விவரங்கள், அவரது பெயர், குடும்பத்தினரின் பெயர்கள், அவரது வாட்ஸ் அப் செய்திகள், அவரது தனிப்பட்ட அஞ்சல்கள், புகைப்படங்கள், அவரது உறவுகள் என அனைத்தும்தீர்ப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.  இவற்றிற்கும் பாலியல் வல்லுறவு குறித்து வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை.  இதற்கு நேர்மாறாக, குற்றம் சாட்டப்பட்டவருக்கு முழுமையான பாதுகாப்பு நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டுள்ளது.  அவரது பின்புலம் பற்றி எதுவும் இத்தீர்ப்பில்குறிப்பிடப்படவில்லை.  பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அவர்எவ்வாறு நடந்து கொண்டார் என்பதை தெளிவாக சுட்டிக்காட்டும், “விரல் நுனிகள்” பற்றி குறிப்பிட்டு அவர் அனுப்பியவாட்ஸ் அப் செய்தி கூட நீதிமன்றத்தால் ஒதுக்கித் தள்ளப்பட்டது.            

மாறாக, தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் நட்பு வட்டம் ஆகிய அந்தரங்க விஷயங்களின் விவரங்கள் பற்றிய காட்டுமிராண்டித்தனமான, ஈவிரக்கமற்ற முறையிலான குறுக்கு விசாரணைக்கு அப்பெண் உட்படுத்தப்பட்டு, அதன்விவரங்கள் தீர்ப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன.பாலியல் உறவு பற்றிய கடந்த கால வரலாற்றை குறிப்பிடுவதை இந்திய சாட்சிகள் சட்டத்தின் பிரிவு 53ஏ மறுதலிக்கிறது.  சில பிரச்சனைகளில் இப்பிரிவின் கீழ்வழக்கு விசாரணையின்போது எழுப்பப்பட்ட ஆட்சேபணைகளை நீதிமன்றம் நிலைநிறுத்தியது.  இருந்தபோதும், “சில செய்திகள் காட்டப்பட்டது, வாதியின் ஒழுக்கக்கேடான நடத்தையை அல்லது சம்மதத்தை நிரூபிப்பதற்காக அல்ல,மாறாக இவ்வழக்கு தொடர்பான உண்மைகள் வாதியால் மூடி மறைக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கவே அவைகாட்டப்பட்டன எனக் கூறி தீர்ப்பு இதை நியாயப்படுத்துகிறது.  இது ஒருவரின் நடத்தை மீது தாக்குதலைத் தொடுக்க அனுமதியளிக்கும் ஆயுதத்தைத் தவிர வேறில்லை.    

குற்றம் சாட்டப்பட்டவர் தானாக முன்வந்து “தனிப்பட்ட முறையில் கோரிய மன்னிப்பு”, “அலுவலக ரீதியாக கோரிய மன்னிப்பின்” வரைவு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவரின் சார்பில் மூத்த பெண் அதிகாரி பாதிக்கப்பட்ட பெண்ணோடு நடத்திய பேச்சுவார்த்தைகளின் பதிவு ஆகியவை எல்லாம் குற்றவாளிக்கு எதிரான வலுவான ஆதாரங்களாக உள்ளன. மேலும், புகாரை அளித்ததில் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை என்பதை தெளிவாகக் காட்டுகின்றன. “ஆம், நீங்கள் எனது எஜமானர் என்று ஒரு கட்டத்தில் நீ குறிப்பிட்டபோது, ‘அதுவே இதை சுலபமாக்குகிறது’ என நான் பதிலளித்தேன் … மீண்டும் ‘சம்மதமில்லாத உறவில் இருப்பதாக எந்த கட்டத்திலும் நான் எண்ணவில்லை’ என்பதோடு ‘எனது மகளின் மிகச் சிறந்த தோழியோடு கள்ளத்தனமான உறவை கொண்டிருப்பதாக எண்ணவில்லை’ என குற்றம் சாட்டப்பட்டவர் தனது மன்னிப்புக் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாக தீர்ப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.     இவையெல்லாம் பாதிக்கப்பட்ட பெண் தனது குற்றச்சாட்டில் குறிப்பிட்டவற்றோடு – அதாவது அவள் நிறுத்திக் கொள்ளச்சொன்னபோதும் அவன் தொடர்ந்தான் என்பதோடு  பொருந்துகின்றன.  

குற்றம்சாட்டப்பட்டவர் மீது காட்டப்படும் அனுதாபம்
ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர் மன்னிப்பு கோரியதும்,அறிக்கை அளித்ததும் “தானாக முன்வந்து செய்தவையல்ல; மாறாக விரைந்து செயல்பட வாதி அளித்த நெருக்கடியாலும் அச்சுறுத்தலாலுமே என்பதோடு, இவ்வாறு செய்வதால் பிரச்சனை அத்தோடு முடிவுக்கு வரும் எனத் தூண்டப்பட்டதாலுமே” என மிகவும் அசாதாரணமான, முன்னெப்போதும் இருந்திராத வகையிலான விளக்கவுரையை நீதிமன்ற தீர்ப்பு முன்வைக்கிறது.  இவ்வாறாக,பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட எஜமானனை, வாதியின் “கையாளும் திறனாலும், திட்டமிட்டு செயல்படும் தன்மையாலும்” பாதிக்கப்பட்டவராக சித்தரிக்கிறது.  மேலும், அவர் அளித்த வாக்குமூலம் “தானாக முன்வந்து அளிக்கப்பட்டதல்ல, அவரது விருப்பத்திற்கு மாறாகப் பெறப்பட்டது” என்று குறிப்பிடுகிறது.  தீர்ப்பின் ஒவ்வொரு பத்தியிலும் குற்றம் சாட்டப்பட்டவர் மீதான பரிதாப உணர்ச்சி பெருக்கெடுத்து வெளிப்படுகிறது.  “வாதி முன்வைத்த குற்றச்சாட்டுகளால் குற்றம் சாட்டப்பட்டவர் முழுமையாக விரட்டப்பட்டார்”, “குடிபோதையில் பேசிய கேலிப்பேச்சே அவை என குற்றம் சாட்டப்பட்டவர் உறுதிப்படுத்தினார்”, “இவையெல்லாம் முழுமையான பொய்கள் என குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்ச்சியாகக் கூறி வருகிறார்” என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள அதே நேரத்தில், புகாரை அளித்த பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றி குறிப்பிடுகையில் அவருக்கு எதிராக “அவள் திரித்துப் பேசுகிறாள், உண்மையை மாற்றிப் பேசுகிறாள்” என்று சொல்லியிருப்பது இதற்கான உதாரணங்களாகும்.  

அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்த ஒரு சில மணி நேரங்களுக்குள்ளாகவே அது பற்றி பாதிக்கப்பட்ட பெண் தங்களிடம் பகிர்ந்து கொண்டதாக சாட்சியம் கூறிய ஒவ்வொருவரும் கூறியதிலிருந்து சம்பவம் நடந்து பல நாட்களுக்குப் பின்னர் யோசித்து சொல்லப்பட்டதல்ல என்பது நிரூபணமாகிறது.  ஆனாலும், சாட்சி கூறியவர்கள் பாதிக்கப்பட்டபெண்ணின் நண்பர்கள் என்பதால் அவர்களது கூற்றுக்கள் ஒருதலைப்பட்சமானவை என்று கூறி புறந்தள்ளப்பட்டன.  அதே நேரத்தில், குற்றம் சாட்டப்பட்டவரின் சொந்த சகோதரியும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மிக நெருக்கமானவர் என அறியப்பட்ட மற்றொரு பெண் ஊழியரும் அளித்த சாட்சியங்கள் உண்மையானவை என ஏற்றுக் கொள்ளப்பட்டன. 

பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட பெண் தனது உதவிக்கு இதுபோன்ற சம்பவங்களில் தலையீடு செய்து வரும் செயல்பாட்டாளர்களையும், வழக்கறிஞர்களையும் நாடுவது என்பது மிக இயல்பான செயலேயாகும்.  ஆனால்,இப்படிப்பட்ட நபர்களை நாடுவதற்கான பாதிக்கப்பட்ட பெண்ணின் உரிமை கூட இத்தீர்ப்பில் கிரிமினல் செயலாக ஆக்கப்பட்டிருக்கிறது.  வழக்கு தொடர்பான நிகழ்வுகளை “ஜோடிப்பதில்”, “கூடுதலான சம்பவங்களை இணைப்பதில்” ஆலோசனைகளை அளித்திருக்கலாம் என மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் போன்றோர் கூட குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளனர்.  

சமூக யதார்த்தம் குறித்த ஒருவரது கண்ணோட்டம் அவர் ஆணா அல்லது பெண்ணா என்பதைப் பொறுத்து இருப்பதில்லை.  மாறாக, சமூகம் குறித்து அவருக்குள்ள கருத்துக்களே என்பது இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஒரு பெண் என்பதிலிருந்து மீண்டும் நிரூபணமாகியுள்ளது.  பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையின் வயதையொத்த, அவளது எஜமானராக அதிகாரம் படைத்த, குற்றம் சுமத்தப்பட்ட ஆணுக்கு சாதகமாக இருந்திட பாதிக்கப்பட்ட பெண்ணை பழி கூறி, அவமானப்படுத்திய மோசமான தீர்ப்புக்கு முன்னுதாரணமாக வரலாற்றில் இத்தீர்ப்பு இடம்பெற்றிடும்.  எவ்வளவு விரைவில் இத்தீர்ப்பு மாற்றி எழுதப்படுகிறதோ அவ்வளவு நல்லதாகும்.  அவ்வாறின்றி, இத்தீர்ப்பு முன்னுதாரணமாக ஆகிவிட்டால், பணியிடத்தில் நிகழும் பாலியல் துன்புறுத்தல், வன்முறைக்கு எதிராக எந்தவொரு உழைக்கும் பெண்ணும் பேசத் துணியமாட்டார்.  

கட்டுரையாளர் : பிருந்தா காரத்

(நன்றி : ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ்), 

தமிழில் : எம்.கிரிஜா

;