articles

img

ஜனநாயகத்தை காப்பது கார்ப்பரேட்டுகள் அல்ல, உழைப்பாளிகள் தான்....

ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைகளுக்கு தேர்தல்கள் துவங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இத்தேர்தல்களையொட்டி அரசியல் கட்சிகள் மக்களுக்கு பல வாக்குறுதிகளை அள்ளிவீசுகின்றன. தமிழகத்தை கடந்த பத்து ஆண்டுகளாகஆட்சிசெய்துவரும் அஇஅதிமுக முற்றிலும் நம்பகத்தன்மையற்ற வாக்குறுதிகளை முன்வைத்துள்ளது. திமுக அறிக்கை நிதானமாகவே உள்ளது. ஆனால் இவ்வறிக்கைகளை விவாதிப்பது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. இந்த அறிக்கைகளையொட்டி ஊடகங்களில் ஏழை மக்களுக்கென்று அறிவிக்கப்படும் சலுகைகளால் தான் நாடே வீணாகிறது என்றும் இவற்றால் ஜனநாயகம் கேலிக்கூத்தாக ஆகிவிட்டது என்ற தொனியிலும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

 ஏழை எளிய மக்களுக்கு சாதகமான ஒரு சிறிய அறிவிப்பு வந்தால் கூட இவ்வாறு ஊளையிடும் டகங்கள், கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகைகள் வாரிவழங்கப்படுவதையும் விவசாயிகள் மற்றும் தொழிலாளிகள் நலனுக்கு விரோதமான சட்டங்கள்நிறைவேற்றப்படுவதையும் உற்சாகமாக வரவேற்கும் முரண்பாட்டையும் நாம் காண்கிறோம்.  இதேபாணியில்    அண்மையில் ஒரு நிறுவனம் “ ஜனநாயகத்திற்கு ஆபத்து மக்கள் விருப்பங்களுக்கு அரசு பணிவது தான்” என்ற தலைப்பில் இணையதள வழியாக நடத்திய கருத்தரங்கத்தில் பேச்சாளராக பங்கெடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நிகழ்ச்சியின் தலைப்பை மறுத்து நான் பேசினேன்.

அந்த கருத்தரங்கில் நான் முன்வைத்த சில கருத்துக்கள்:

அரசாங்கம் யார் கையில்?
உழைப்பாளி மக்களுக்கு சாதகமாக அரசு அறிவிப்பு வந்தால் இதனால் அரசின் கஜானாவே காலியாகிவிடும் என்ற கூப்பாட்டில் ஏதாவது நியாயம் இருக்கிறதா? அல்லது “ தேர்தல் ஜனநாயகம் என்றாலே வாக்குகள் பெறுவதற்கு வாக்குறுதிகள் அள்ளிவீசப்படுகின்றன. இதனால் ஜனநாயகம் ஆபத்துக்குள்ளாகிறது” என்ற வாதத்தில் உண்மை இருக்கிறதா?  இரண்டு கேள்விகளுக்கும் விடை “இல்லை, இல்லை” என்பது தான். தேர்தல் அறிக்கைகளை வைத்து இப்பிரச்சனையை பார்ப்பது பொருத்தமல்ல. அரசின் பொருளாதாரக் கொள்கைகள், பட்ஜெட் போன்றவை எவ்வாறு, எத்தகைய சக்திகளால் நிர்ணயிக்கப்படுகின்றன என்பதே முக்கிய கேள்வி. 

நாம் வாழும் முதலாளித்துவ அமைப்பில் பெரும் கார்ப்பரேட்டுகளும் செல்வந்தர்களும் தான் அரசின் பொருளாதாரக் கொள்கைகளை நிர்ணயிப்பதில் தீர்மானகரமானபங்கு வகிக்கின்றனர். ஆளும் வர்க்க கட்சிகளைப்பொறுத்தவரையில்  தேர்தல்களுக்கு செலவிடவும்,  அரசியல் நடவடிக்கைகளுக்கான செலவுகளை சந்திப்பதற்கும் (இதில் பிற கட்சி சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்களை பேரம் பேசி விலைக்கு வாங்கும் முயற்சிகளும் அடக்கம்) கார்ப்பரேட்டுகள் மற்றும் பெருந்தனக்காரர்கள் மூலம் தான் பெரும் பணம் திரட்டப்படுகிறது. பாஜககொண்டுவந்துள்ள தேர்தல் பத்திரம் திட்டம் கார்ப்பரேட்டுகள் எந்த கட்சிக்கு பணம் அளிக்கிறார்கள் என்பதை பொதுவெளியில் கொண்டுவராமல் ரகசியமாக பணம் கொடுப்பதற்கு வகை செய்கிறது.
 ஆளும் அரசாங்கம் இத்தகவல்களை பெறமுடியும். அதன்வழியாக ஆளும் கட்சிக்கு இத்தகவல்கள் கிடைத்துவிடும். இதற்குப்பயந்தே பல நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் ஆளும் கட்சிக்கு காசு கொடுத்துவிடும். பிற கட்சிகளுக்கு கொடுக்க பயப்படும். இச்சட்டம் அமலுக்கு வந்த பிறகு தேர்தல் பத்திரங்கள் மூலம் வசூலாகும் தொகையில் 90%க்கும் அதிகமான பங்கு பாஜகவிற்கே சென்றுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  ஆக, உண்மையில் ஜனநாயகத்திற்கு ஆபத்து அரசியலையே ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட் ஏகபோகங்களின் வணிகக்களமாக மாற்றும் முதலாளித்துவ அமைப்பில் இருந்து தான் வருகிறது.

 டாக்டர் அம்பேத்கர் அரசியல் சாசனம் அமலுக்கு வந்த காலத்தில் இதுபற்றி  சரியாகவே எச்சரித்தார். ‘அரசியல் சாசனம் மூலமாக வயதுவந்தோர் வாக்குரிமை உறுதி செய்யப்பட்டு, அரசியல் புலத்தில் ஒருவகை சமத்துவத்தை ஏற்படுத்திவிட்டோம். அதேசமயம் சமூக புலத்தில் சாதி ஒடுக்குமுறையும் பாகுபாடுகளும் தொடர்கின்றன. பொருளாதார புலத்தில் பெரும் ஏற்றத்தாழ்வுகள் தொடர்கின்றன. இது சரி செய்யப்படாவிட்டால் அரசியல் புலத்தில் உள்ள சமன் நிலைக்கும் என்பது நிச்சயமல்ல.’ என்ற பொருள்பட அம்பேத்கர்  எச்சரித்தார்.

இப்பொழுது இந்திய அரசின் பொருளாதார சட்டங்களையும் திட்டங்களையும் கொள்கைகளையும் பன்னாட்டு இந்நாட்டு பெரும் கம்பெனிகள் தான் தீர்மானிக்கின்றன என்பது மட்டுமல்ல, இந்தியாவின் தகவல் தொடர்பு துறை, பெட்ரோலியம் – பெட்ரோகெமிக்கல் துறைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட கேந்திரமான பகுதிகள் இருபெரும் ஏகபோகமுதலாளிக்குழுமங்களிடம் கிட்டத்தட்ட ஒப்படைக்கப்பட்டுவிட்ட நிலையில் கூட்டுக் களவு முதலாளித்துவம் என்ற இடத்திற்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. வங்கி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட நிதித்துறையும் பெருமுதலாளிகளிடம் ஒப்படைக்கப்படும் என்ற அபாயம் நம் முன் உள்ளது.

உழைப்பை புறந்தள்ளும் கொள்கைகள்
நாட்டின் செல்வங்களை தமது கடின உழைப்பால் உருவாக்குபவர்கள் விவசாயிகளும் கருத்தாலும் கரத்தாலும் உழைக்கும் தொழிலாளிகளும் ஊழியர்களும் உழைக்கும் தொழில்முனைவோரும் ஆவர். இயற்கை வளங்கள்,தொழில்நுட்பம், அறிவியல் வளர்ச்சி ஆகியவை மானுடத்தின் பொதுச் சொத்துக்களும் சாதனைகளும் ஆகும். இவற்றை எல்லாம் இணைத்து உற்பத்திக்கு உயிர் ஊட்டுவது மனித உழைப்பு. ஆனால் நமது சமூகத்தில் உழைப்போருக்கு ‘சலுகை’ அளித்தால் அதனை ‘இலவசம்’ என்று இழித்துப்பேசுவது சிலரின் வழக்கமாகியுள்ளது. இங்கு ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். 

இந்தியாவின் மத்திய, மாநில அரசுகள் பெறுகின்ற மொத்த வரி வருமானத்தில் மூன்றில் இரண்டு பங்கு சரக்குகள் மற்றும் சேவைகள் மீதான வரிகள். இவற்றில்பெரும்பகுதி உழைக்கும் மக்களிடமிருந்து தான் பெறப்படுகிறது. கார்ப்பரேட் மற்றும் தனிநபர் வருமானவரிகள் மூலம் அரசுகளின் மொத்த வரி வருமானத்தில்  மூன்றில் ஒரு பங்குதான் கிடைக்கிறது. ஆக, உற்பத்தி செய்வதும் உழைப்பாளி மக்கள். கணிசமான வரி செலுத்துவதும் அவர்களே. எனவே, கல்வி, ஆரோக்கியம், கட்டமைப்பு வசதிகள் போன்றவை விலையின்றி அவர்களுக்கு கிடைப்பது உரிமை என்று பார்க்கப்படவேண்டும், இலவசம் என்று பார்ப்பது உழைப்பாளி மக்களை அவமதிப்பதாகும்.

 ஜனநாயகத்திற்கு ஆபத்து எங்கிருந்து வருகிறது?
தாராளமயக் கொள்கைகளால் செல்வங்கள் ஒரு சிலரிடம் குவிவதும் பெரும் பகுதி உழைப்பாளி மக்கள் வாழ்வாதாரத்தையும் வேலை வாய்ப்பையும் உறுதி செய்ய இயலாத நிலையில் இருப்பதும் நாட்டின் அரசியல்-பொருளாதாரப் புலங்களில் அதிகாரம் ஒருசிலரிடம் குவிவதற்கு வழிவகுக்கின்றன. ஆளும் பெருமுதலாளி-செல்வந்தர்கள் கூட்டங்கள் அரசைக் கைப்பற்றிஅமலாக்கிவரும் கொள்கைகள் மக்களின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் பொழுது மக்களின் போராட்டங்கள் வெடிக்கின்றன. அவற்றை அடக்குவதற்கு ஜனநாயக உரிமைகளை மறுத்து அடக்குமுறைகளை அரசு கட்டவிழ்த்து விடுகிறது. இது தான் கடந்த நான்கு மாதத்திற்கும் மேலாக நடந்துவரும் விவசாயிகளின் பெரும் கிளர்ச்சி நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம். 

இந்திய நாட்டின் ஜனநாயகத்திற்கு ஆபத்து விவசாயிகளிடமிருந்தும் தொழிலாளிகளிடம் இருந்தும் வரவில்லை. விவசாயிகளின் பேரெழுச்சி மிகச்சரியாக இனம் கண்டது போல் ஆபத்து அம்பானி, அதானி வகையறா பெருமுதலாளிகளிடம் இருந்து தான் வருகிறது. இவர்களுக்கு சாதகமான கொள்கைகளை அமலாக்கிக்கொண்டே மதவெறியையும் வகுப்புவாதத்தையும் உழைக்கும் மக்களை பிளவுபடுத்த பயன்படுத்தும் வலதுசாரி அரசியல் சக்திகளிடமிருந்து தான் இந்திய ஜனநாயகத்திற்கு அபாயம் வருகிறது. 

கருத்தாளர்  : பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா

நன்றி : உழவன் உரிமை

;