articles

img

நாடாளுமன்றம் நோக்கி மாபெரும் பேரணி.... விவசாயிகள் போராட்டக்குழு அறைகூவல்...

சம்யுக்த கிசான் மோர்ச்சா என்னும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி, வரும் மே மாதத்தில் தில்லியின்பல்வேறு எல்லைகளிலிருந்தும், நாடாளுமன்றத்தை நோக்கி மாபெரும் பேரணி அணிவகுப்பை அமைதியான முறையில் நடத்திட வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருக்கிறது. இந்தப் பேரணியில் விவசாயிகளுடன், தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், சாமானியர்கள், வேலையில்லா இளைஞர்கள், மாணவர்களும் பங்கேற்கிறார்கள். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்பட இருக்கிறது.   இதற்கு முன்னதாக,  நாடு தழுவிய அளவில், கீழ்க்கண்ட நடவடிக்கைகளுக்காக, ஓர் அறைகூவல் விடுக்கப்பட்டிருக்கிறது.

ஏப்ரல் 10-11 தேதிகளில் தில்லியின் எல்லைகளில் உள்ள விவசாயிகள் 24 மணி நேரத்திற்கு கே.எம்.பி.எக்ஸ்பிரஸ்வே எனப்படும் (குண்டலி-மானேசர்-பலவால் எக்ஸ்பிரஸ்வே) நெடுஞ்சாலையை முற்றுகையிடுவார்கள். ஏப்ரல் 13 அன்று பைசாகி எனப்படும் புத்தாண்டு தினம், 1919இல் ஆயிரக்கணக்கான மக்கள் அமிர்தசரசில் ஜாலியன்வாலா பாக்கில் பிரிட்டிஷாரால் கொல்லப்பட்ட தினமுமாகும். அன்றைய தினம் நாடு முழுதும் இந்த தினம் மிகவும் பொருத்தமான முறையில் அனுசரிக்கப்படும். (அனுசரிக்கப்பட்டதாகச் செய்திகள் வந்திருக்கின்றன) ஏப்ரல் 14 அன்று, அண்ணல் பி.ஆர். அம்பேத்கர் பிறந்த தினமாகும். அன்றைய தினம் ‘அரசமைப்புச்சட்டப் பாதுகாப்பு தினம்’-ஆக பல்வேறு வடிவங்களிலான நிகழ்ச்சிகள் மூலம் நாடு முழுதும் கொண்டாடப்படும்.

ஒற்றுமைக்கான இயக்கங்கள்
மே 1 அன்று மே தினம். சர்வதேச தொழிலாளர் தினமானஅன்று, தில்லியின் எல்லைகளிலும் மற்றும் நாடு முழுவதும் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் தொழிலாளர்-விவசாயிகள் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் மேற்கொள்ளப்படும்.கடந்த நான்கரை மாத காலமாக நடைபெற்றுவரும் விவசாயப் போராட்டத்தின் ஊடாக  ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ விடுத்த அறைகூவல்கள் அனைத்துமே, சுதந்திரப் போராட்டம், பல்வேறு விவசாயிகள் போராட்டங்கள் மற்றும் சமூக சீர்திருத்த இயக்கங்கள், அல்லது தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையைச் சுற்றி நடைபெற்ற இயக்கங்கள் பலவற்றுடன் ஒத்துப்போயிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கவைகளாகும். இவ்வாறு சம்யுக்த கிசான் மோர்ச்சா முன்வைத்த எந்தப் போராட்டத்துடனும் ஆர்எஸ்எஸ்/பாஜக வகையறாக்கள் எவ்விதத்திலும் சம்பந்தப்படாதவைகளாகும். உண்மையில் அவை நடைபெற்ற காலத்தில் அவற்றுக்கு எதிராக நின்றவைகளாகும். இவ்வாறு சம்யுக்த கிசான் மோர்ச்சா விடுத்த அறைகூவல்கள் அனைத்துமே விவசாயிகளின் சமூக-அரசியல்உணர்வினை உயர்த்துவதற்கு உதவி இருக்கின்றன.

பொது விநியோக முறையின்கீழ் உணவு விநியோகத்தையும், குறைந்தபட்ச ஆதார விலையுடன் கொள்முதல்செய்வதையும் கைவிடும் நோக்கத்துடன் இந்திய உணவுக் கழகத்தையே ஒழித்துக்கட்ட மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை எதிர்த்திடுவதற்காக, இந்திய உணவுக்கழகத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக, சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் அறைகூவலுக்கிணங்க,  சென்ற வாரம் ஏப்ரல் 5 அன்று இந்திய உணவுக் கழகத்தைப் பாதுகாக்கும் தினம் அனுசரிக்கப்பட்டு அன்றைய தினம் நாடு முழுதும் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் அலுவலகங்கள், கிடங்குகள் முன்பாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் ‘கெரோ’ போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.அகில இந்திய விவசாயிகள் சங்கம், விவசாயிகளின் பிரச்சனைகளை விளக்கியும், இது தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை ஏன் எதிர்க்கிறோம் என்பதை வலியுறுத்தியும், ஒரு விவரமான மனு ஒன்று பிரதமருக்கு அனுப்பப்பட்டபின், அது ஊடகங்களுக்கும் வெளியிடப்பட்டது.

தற்காப்பு நிலையில்...
பாஜக-வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தற்காப்பு நிலையில் சென்ற வாரம் நடைபெற்ற நிகழ்வுகள் பாஜகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் தற்காப்பு நிலைக்குத் தள்ளி இருக்கின்றன.ஏப்ரல் 1 அன்று ஆயிரக்கணக்கான ஹரியானா விவசாயிகள் ஹிசார் விமான தளத்தையும், அதற்குச் செல்லும்நெடுஞ்சாலையையும் அமைதியான முறையில் முற்றுகையிட்டார்கள். அவர்கள் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த மாநில துணை முதல்வரும் ஜேஜேபி கட்சியின் தலைவருமான துஷ்யந்த் சௌதாலாவை வெளியே வரவிடாமல் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகத் தடுத்து நிறுத்தினார்கள். அதன் பின்னர் அவர் அங்கிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்திலிருந்த ஹரியானா வேளாண் பல்கலைக்கழகத்திற்கு ஹெலிகாப்டர் மூலமாக பறந்து செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டார்.

பின்னர் இரு நாட்கள் கழித்து, ஏப்ரல் 3 அன்று, பாஜக-வைச் சேர்ந்த முதலமைச்சர் மனோகர் லால் கட்டாரும் இதேபோன்று ரோஹ்டக்கில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்தபோது, விவசாயிகளால் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டார். அவருக்கு எதிராக விவசாயிகள் கிளர்ச்சி முழக்கங்களை எழுப்பினார்கள். இந்த சமயத்தில் விவசாயிகள் மீது ஏவப்பட்ட காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் காரணமாக வயதான விவசாயி ஒருவரும் மற்றும் சிலரும் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு  காயங்களுக்கு உள்ளானார்கள்.

சமூகப்புறக்கணிப்பு
இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன் ஆயிரக்கணக்கான விவசாயிகள்,  உடனடியாக, ஏப்ரல் 3 அன்றும் 4 அன்றும் மாநிலத்தில் ஜிந்த், ஹிசார் மற்றும் ரோஹ்டக் மாவட்டங்களில் உள்ள பல நெடுங்சாலைகளை முற்றுகையிட்டு, காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினார்கள். இவ்வாறாக வேளாண் சட்டங்களை ஆதரித்து வரும் பாஜக/ஜேஜேபி ஆட்சியாளர்கள் செல்லுமிடம் எல்லாம் சமூக புறக்கணிப்பு நடவடிக்கைகளால் வரவேற்கப்படுகின்றனர்.

ஏப்ரல் 2 அன்று ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் அருகில் சென்றுகொண்டிருந்த பிகேயு தலைவர் ராகேஷ்திகாயத்தின் கார், பாஜக குண்டர்களால் தாக்குதலுக்கு உள்ளானது. அப்போது திகாயத் அங்கே நடைபெற்று வந்தகிசான் மகா பஞ்சாயத்துக்கள் பலவற்றில் பங்கெடுத்துக்கொண்டிருந்தார்.  இந்த செய்தியைக் கேள்விப்பட்டவுடனேயே, இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதத்தில், உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பல இடங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற கண்டனப் போராட்டங்கள் நடைபெற்றன.       

மார்ச் 12 அன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டணி (NAPM) சார்பாக மகாத்மா காந்தி 1930இல் உப்பு சத்யாக்கிரகத்திற்காக தண்டி பேரணி தொடங்கிய அந்த நாளன்று சபர்மதி ஆசிரமத்திலிருந்து கூட்டாக மண் சேகரிப்பு சத்தியாக்கிரகப் பேரணி தொடங்கியது. இந்தப் பேரணி நவசாரியில் தண்டியில் ஏப்ரல் 6 அன்று முடிவடைந்தது. அங்கேதான் மகாத்மா காந்தி, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக உப்புச் சத்தியாக்கிரகத்தை நடத்தினார்.

தடைகளை மீறி...
இந்த இயக்கம் நூற்றுக்கணக்கான கிராமங்களைக் கடந்த, வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களிலிருந்து மண் எடுத்துக்கொண்டு, சென்றபோது, ஆங்காங்கே வழிநெடுகிலும் கூடியிருந்த மக்கள், பேரணியில் வந்தோரை எழுச்சியுடன் வரவேற்றனர். எதிர்பார்த்ததைப்போலவே, இவ்வியக்கத்தினர் மீது, குஜராத்தில் ஆளும் ஆர்எஸ்எஸ்/பாஜக-வினரால் பல்வேறுவிதமான தடைகள் ஏற்படுத்தப்பட்டன. அவற்றையெல்லாம் மீறி இவர்கள் ஏப்ரல் 5 அன்று தில்லி அருகில் ஷாஜஹான்பூர் எல்லைக்கு வந்தபோது மக்களால் வரவேற்கப்பட்டார்கள். பின்னர் அவர்கள் திக்ரி, சிங்கூ, காசிபூர் எல்லைகளுக்கு ஏப்ரல் 5மற்றும் 6 தேதிகளில் சென்றடைந்தனர். வரலாறு படைத்திட்ட இடங்களில் எடுக்கப்பட்ட மண் பொட்டலங்கள் அனைத்தும் விவசாயிகள் போராட்டத்தில் தியாகிகளாகியிருக்கின்ற விவசாயிகளுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது. இப்போது இப்போராட்டத்தில் தியாகிகளாகியிருப்போரின் எண்ணிக்கை 350ஐ கடந்துவிட்டது. எல்லைகளில் தியாகிகள் நினைவிடங்கள் கட்டுவது எனத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.    

நாடு முழுதும் உள்ள சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய தொகைகள் 22,900 கோடி ரூபாய்கள் என்று அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது. இவ்வாறு இவர்கள் அளிக்க வேண்டிய தொகை என்பது 2020 அக்டோபரிலேயே தொடங்கிவிட்டது. இந்தத் தொகையில் 60 சதவீதத் தொகை ஒரேயொரு மாநிலத்திலிருந்து மட்டும் விவசாயிகளுக்கு வரவேண்டிய தொகையாகும். அது எந்த மாநிலம் தெரியுமா? ஆர்எஸ்எஸ்/பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலமாகும்.

கட்டுரையாளர் : அசோக் தாவ்லே, விவசாயிகள் சங்க அகில இந்தியத் தலைவர்

தமிழில்: ச.வீரமணி

;