articles

img

அரசியல் சாசனத்தை பாதுகாக்க ஒன்றிணைவோம்....

நமது நாடு தனது 72ஆவது குடியரசு தினத்தை கொண்டாடு கிறது. ஆனால் இது வழக்கமான குடியரசு தினத்தைப் போல அல்ல. கொரோனா தொற்றுக்கு பிறகு உருவாகியுள்ள பொதுவான நெருக்கடி, தொழில்கள் முடக்கம், விவசாயிகளின் எதிர்காலம், பொருளாதாரம் மந்தம், குழந்தைகளின் எதிர்கால கல்வி குறித்த அச்சம், அண்டை நாடுகளுடனான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் ஆகிய அம்சங்களிடையே தான் இந்த குடியரசு நாளை இந்த தேசம் எதிர்கொள்கிறது.

முப்பது ஆண்டுகளாக அமலாக்கப்பட்டு வந்த நவீன தாராளமயக் கொள்கைகள், பொதுவாக ஒரு சிறு முன்னேற்றத்தை அளித்திருக்கிறது என சொல்லப்பட்டாலும் கூட அரசு நிறுவனங்களை நலிவடையச் செய்வதையும், பொது முதலீட்டை சுருக்குவதையும்,  தனியார் மூலதனத்தை வளர்ப்பதன் மூலம் இந்திய பெருமுதலாளிகளை உலக முதலாளிகளாக முன்னேற்றுவதையுமே இக்கொள்கைகள் தனது உள்ளடக்கமாக கொண்டிருக்கின்றன. முதலாளித்துவம் வளர்கிற போது தன்னை சுற்றியுள்ள ஒரு சிறு பகுதியையும் முன்னேற்றிவிடுவதன் மூலமே தானும் வளரும் என்பதே அதன் பொதுவான விதியாகும்.அப்படியாகத்தான் ஒரு சிறுபகுதியினருக்கு உயர்கல்வி, வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு, கணிசமான ஊதியம் ஆகியவை கிடைத்திருக்கிறது. ஆனாலும் பெரும்பகுதி மக்களுக்கு குறிப்பிடத்தகுந்த பலன்கள் எதையும் முதலாளித்துவத்தால் உறுதி செய்யமுடியவில்லை.

ஏற்கனவே உருவான நெருக்கடியிலிருந்து மீண்டதைப் போலவே, தற்போதைய நெருக்கடியிலிருந்தும் நாடு மீண்டுவிடும் என முதலாளித்துவ பொருளாதாரவாதிகள் மதிப்பீடு செய்கிறார்கள். 2021-22 இல் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியென்பது 8.7% அளவில் இருக்கும் என அவர்களால் மதிப்பிடப்படுகிறது. ஆனால் இத்தகைய மீட்சியென்பது இயல்பாக நடைபெறாது. மாறாக ஏழை உழைப்பாளிகள் மீது தொடுக்கப்படும் மூர்க்கமான தாக்குதல் மூலமே முதலாளித்துவம் தனக்கான நெருக்கடியிலிருந்து மீளும் என்பதை கடந்த கால நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. இத்தகைய முயற்சிகளைத்தான் மோடி அரசும் செய்து கொண்டிருக்கிறது. 

ஏற்கனவே அரசு நிறுவனங்கள், தொழிலாளர் நலன் ஆகியவற்றின் மீது கை வைத்த மோடி அரசின் பார்வை தற்போது விவசாயத்தின் மீதும் திரும்பியிருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியோடு ஒப்பிடுகிறபோது விவசாயத்துறையின் அளவு 23% ஆகும். 59% நாட்டு மக்கள் விவசாயத்தை நம்பியிருக்கிறார்கள். விவசாயத்தையும், அதையொட்டிய தொழில்களையும் இணைத்து கணக்கிட்டால் 70% மக்கள் விவசாயத்தை சார்ந்திருக்கிறார்கள். மொத்த விவசாயிகளில் 82% பேர் சிறு – குறு விவசாயிகளே ஆவர்.2017-18 இந்தியாவில் மொத்த தானிய உற்பத்தியென்பது 275 மில்லியன் டன்களாகும்.உலக அளவிலான உணவு தானிய உற்பத்தியில் இந்திய உற்பத்தியின் அளவு 25% ஆகும். உலக நுகர்வோரில் 27% பேரை கொண்ட நாடு நமது இந்தியா. 14% அளவிற்கு உணவுப் பொருட்களை உற்பத்தி செய்கிறது இந்தியா. பால் உற்பத்தியின் அளவு 165 மெட்ரிக் டன் ஆகும். உலக அளவில் கால்நடை வளர்ப்பில் இந்தியா இரண்டாவது இடத்தைபெற்றிருக்கிறது. மொத்த கால்நடைகளின் எண்ணிகை 190 மில்லியன்களாகும். இவ்வளவு பரந்து விரிந்த விவசாயத்தை கார்ப்பரேட்டுகள் கைப்பற்றுவதற்காகத்தான் தற்போதுவிவசாய சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன. 

====டி.கே.ரங்கராஜன்====

தொடர்ச்சி 5ம் பக்கம்

;