articles

img

ஜனநாயகம் உயிர் வாழ உண்மையின் குரல் ஓங்கட்டும்.... (பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்)

நீதிபதி எம்.சி.சாக்லா நினைவு உரையில் நீதிபதி சந்திரசூட் அவர்கள் “அதிகார பீடத்திடம் உண்மையை பேசுதல்- குடிமக்களும் சட்டமும்” என்ற தலைப்பில் சிந்தனை செறிவுள்ள அழுத்தமான கருத்தை முன்வைத்துள்ளார்.உண்மைக்கும் ஜனநாயகத்துக்கும் உள்ள உறவுகுறித்தும் அதிகார பீடத்திடம் உண்மையை பேசுவதில்குடிமக்களுக்கு உள்ள பங்கு குறித்தும் ஒரு ஆழமான கருத்து செறிவுள்ள ஆய்வை நீதிபதி சந்திரசூட் முன்வைக்கிறார். அவர் கூறுகிறார்: “ஜனநாயகம் உயிர் வாழ ‘உண்மை வலிமையாக களமாடுவது’ தேவை! அந்த வகையில் அதிகார பீடத்திடம் உண்மையை பேசுவது என்பது குடிமக்களின்உரிமையாக மட்டுமல்ல; அது குடிமக்களின் கடமையாகவும் இருக்க வேண்டும்.”

மேலும் அவர் கூறுகிறார்:

“மிக முக்கியமாக உள்ள கருத்தாக்க மதிப்பீடுஎன்னவெனில் ‘உண்மையை’ பேசுவது அதிகாரபீடத்துக்கு எதிர்வினையாக செயல்படும்; அந்த வகையில்சர்வாதிகார கொடுங்கோன்மையை நோக்கிய நகர்வைமுன்கூட்டியே தடுக்கும் வாய்ப்பு உருவாகும்.”சில நாட்களுக்கு முன்பு ஒரு இணைய கூட்டத்தில்“அரசு நிர்வாகத்தில் நீதித்துறையின் பங்கு” எனும் தலைப்பில் உரையாற்றும் பொழுது இன்னொரு நீதிபதி எஸ்.ரவீந்திர பட்  இதே கருத்தை கீழ்கண்டவாறு முன்வைக்கிறார்:“மிகப்பெரிய விலை கொடுத்துதான் நாம் சுதந்திரத்தை பெற்றுள்ளோம். எனவே ஒவ்வொரு இந்தியரும்அதிகார பீடத்தில் இருப்பவர்களின் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கேள்வி கேட்க வேண்டும். ஏனெனில் ஜனநாயகம் அனைத்தையும் சுலபமாகவும் இலவசமாகவும் தந்துவிடுவது இல்லை. ஜனநாயக உரிமைகள் ஆக்கிரமிக்கப்படாமல் பாதுகாப்பதும் அவற்றை பயன்படுத்துவதும் நமது கைகளில்தான் உள்ளது. இதில் கவனக்குறைவாக இருப்பது கூடாது.”ஜனநாயகத்தை பாதுகாக்க அதிகாரத்தில் இருப்பவர்களை கேள்வி கேட்க வேண்டும் எனும் கருத்து இங்கேயும் வலியுறுத்தப்படுகிறது.

உண்மை பேசுபவர்களுக்கு என்ன நடக்கிறது?
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் இத்தகைய உன்னதமான கருத்துகளை கொண்டுள்ளனர் என்பது வரவேற்கப்பட வேண்டியது என்பதில் ஐயமில்லை. குறிப்பாக தேசம் எதேச்சதிகாரத்தை நோக்கி வீழ்ந்து கொண்டுள்ள பொழுது இத்தகைய கருத்துகள் மகிழ்வை தருவதாக உள்ளது. எனினும் நாம் நமது அரசியல், சமூக, புறச்சூழலை நோக்கும் பொழுது  இந்தசெறிவான கருத்துகளுக்கு மாறாக நேர் எதிரான நிலைதான் உள்ளது. அதிகாரபீடத்திடம் உண்மையை பேசுபவர்களுக்கு என்ன நிகழ்கிறது? ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களின் கதி என்ன ஆகிறது?எல்கர் பரிஷத்- பீமா கோரேகான் வழக்கில் அவர்கள்மீது ஆள்தூக்கி உபா சட்டங்கள் திணிக்கப்படுகின்றன. அவர்களில் சிலர் இந்த பொய்வழக்குகளில் மூன்றாண்டுகளாக விசாரணையே இல்லாமல் சிறைகளில் உள்ளனர்.

நீதிபதி சந்திரசூட் அவர்கள் குடிமக்கள் உண்மை எது என அறிந்துகொள்வதில் பொது அமைப்புகள் ஆற்றவேண்டிய உதவியின் முக்கியத்துவம் பற்றி பேசினார். அதில் முதன்மையாக உள்ளது சுதந்திர ஊடகங்கள்தான்! உண்மை என்னவெனில் ஊடகங்கள் கடும்நிர்ப்பந்தத்தில் உள்ளன. உண்மையை பேசும் சுயேச்சையாக செயல்படும் ஊடகங்கள் பயமுறுத்தப்படுகின்றன. துன்பங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன. தேசத்துரோக வழக்குகள் அவர்கள் மீது பரவலாக ஏவப்படுகின்றன.அடிப்படை உரிமைகள் மீதும் அரசியல் சட்டம் மீதும்அப்பட்டமான மோசமான தாக்குதல்கள் நடக்கின்றன. குடியுரிமைக்கு மதத்தை அடைப்படையாக கொண்டு குடியுரிமை சட்டம் திருத்தப்படுகிறது. 370ஆவது பிரிவுநீக்கப்படுகிறது. ஜம்மு- காஷ்மீரின் மாநில அந்தஸ்து பறிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் அரசின் நிர்வாகநடவடிக்கைகள் மூலம் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஜனநாயகத்துக்கான ஆபத்து இன்னொரு வகையிலும் உருவாகிறது.தேர்தல் களத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சமவாய்ப்பு மறுக்கப்படுகிறது. தேர்தல் நிதி மற்றும் ஏனைய வாய்ப்புகளை ஆளுங்கட்சி ஏகபோகமாக வளைத்துக் கொள்கிறது. 2018ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வெளிப்படைத் தன்மை இல்லாத தேர்தல் பத்திரங்கள் ஆளுங்கட்சி தேர்தல் நிதியின் பெரும்பகுதியை பறித்துக்கொள்வதற்கு ஒரு திரைமறைவாக பயன்படுகிறது. 

உச்சநீதிமன்றத்தின் பாராமுகம் மாறுமா?
மேற்கூறப்பட்ட அனைத்துப் பிரச்சனைகளும் ஜனநாயகத்தை பாதுகாப்பதிலும் உண்மையை நிலைநாட்டுவதிலும் முக்கியப் பங்கை ஆற்றுகின்றன. இந்தப்பிரச்சனைகள் அனைத்தும் வழக்குகளாக உச்ச நீதிமன்றத்தை அடைந்துள்ளன. 

#    எதேச்சதிகாரமான பீமாகோரேகான் கைதுகள்

#    370ஆவது பிரிவு நீக்கம்

   ஜம்மு- காஷ்மீரின் மாநில அந்தஸ்து பறிப்பு

#    தேர்தல் பத்திரங்கள்

#   தேசத் துரோக வழக்குகள் திணிப்பு

#    பெகாசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தியது.

என அனைத்துப் பிரச்சனைகளின் வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தின் முன் உள்ளன. பீமா கோரேகான் கைது பிரச்சனையில் 2018ஆம் ஆண்டு ரொமிலா தாப்பர் அவர்களும் இன்னும் நான்குமிக முக்கிய செயற்பாட்டாளர்களும் சேர்ந்து உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்தனர். எதேச்சதிகாரமான நியாயமற்ற புலன்விசாரணை நிறுத்தப்பட வேண்டும் எனவும் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் சிறப்பு புலன் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இந்த மனுவில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் அன்றைய முதன்மை நீதிபதிஉள்ளடக்கிய 3 பேர் கொண்ட அமர்வு இந்த மனுவைநிராகரித்தது. (எனினும் நீதிபதி சந்திரசூட் அவர்கள்தனது மாற்றுக் கருத்தை கொண்ட தீர்ப்பை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது/வரவேற்கத்தக்கது)

அன்றிலிருந்து பீமாகோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் பல நீதிமன்றங்களால் பிணை தொடர்ந்து  மறுக்கப்படுகின்றனர். வரவரராவ்அவர்களுக்கு மட்டும்தான் மருத்துவ அடிப்படையில் குறுகிய கால பிணை கிடைத்துள்ளது. மற்ற அனைத்துவழக்குகளும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த அதிமுக்கியமான வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள எந்த அவசரத்தையும் முனைப்பையும் நீதிமன்றம் வெளிப்படுத்தவில்லை. முன்னாள் இரண்டு தலைமை நீதிபதிகள் கீழ் நீதித்துறையின் பாராமுகம் அனைவரும் அறிந்த ஒன்று.

ஜனநாயகத்தையும் குடிமக்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்கும் கடமை உயர்மட்ட நீதிதுறைக்கு மட்டுமே உண்டு என நாம் சொல்ல வரவில்லை. இவற்றை பாதுகாப்பது என்பது அடிப்படையில் மக்களின் அரசியல் அணிதிரட்டல்தான் சாத்தியமாக்கும். ஆனால் இன்றைய சூழல் என்ன? நாடாளுமன்ற அமைப்பு முழுவதுமே அரசாங்க நிர்வாகத்தால்முடக்கப்படுகிறது. அர்த்தமுள்ள விவாதங்கள் மறுக்கப்படுகின்றன. இத்தகைய சூழலில் அரசியல் சட்டத்தின் பாதுகாவலன் என்ற முறையிலும் குடிமக்களின் அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் என்ற முறையிலும் உச்ச நீதிமன்றத்தின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

நீதித்துறையின் சுயேச்சை செயல்பாடு பாதுகாக்கப்படுமா?
குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதில் உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய சில தலையீடுகள் வரவேற்க வேண்டிய சில முன்னெடுப்புகளை வெளிப்படுத்துகின்றன என்பதில் ஐயமில்லை. பெருந்தொற்றின் பொழுது இடம்பெயர் உழைப்பாளிகளின் உரிமைகள்/தேசத் துரோக வழக்குகளை நிராகரித்தது/பத்திரிகையாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் எதிராக போடப்பட்ட பயமுறுத்தல் வழக்குகளை ஏற்கமறுத்தது  இவையெல்லாம் சாதகமான முன்னெடுப்புகள்தான்! அதே சமயத்தில் நீதித்துறையின் சுயேச்சையான செயல்பாடும் அரசு நிர்வாகத்துக்கும் நீதிமன்றத்துக்கும் உள்ள இசைவுகள் குறித்தும் உள்ள கவலைநீடிக்கிறது.

சமீபத்தில் உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் ஒன்பது உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பார்கவுன்சில் உறுப்பினர்களை உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு பரிந்துரைத்தது. இவர்கள் அனைவரும் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த பட்டியலில் திரிபுரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அகில் குரேஷியின் பெயர் இல்லாதது அப்பட்டமாக தெரிகிறது. இதற்கு முன்னாலும் அவரது பெயர் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்குபரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அவர் தேசத்தில் உள்ள மிகச்சிறிய உயர் நீதிமன்றமான திரிபுராவுக்கு நியமிக்கப்பட்டார். ஆனால் இப்பொழுது உச்சநீதிமன்றத்துக்கு பெயர்கள் பரிந்துரையில் அகில்குரேஷி இரண்டாவது மூத்த நீதிபதியாக இருந்தும் கூட கொலிஜியம் அவரது பெயரை பரிந்துரைக்கவே இல்லை.

நீதிபதி சந்திரசூட் அவர்களின் “அதிகார பீடத்தில்இருப்பவர்களிடம்” உண்மை பேசுவது எனும் குடிமக்களின் உரிமை மற்றும் கடமை எனும் கருத்தாக்கத்தில் 

#    கேள்விகள் கேட்கும் பொது அமைப்புகள்

#    அதிகார பீடம் பதில் சொல்ல வேண்டிய ஜனநாயககடமை

#    சுயேச்சையான நீதித்துறை

#    அந்த நீதித்துறையின் மீது அதிகார பீடத்தின் நிர்ப்பந்தம் இல்லாமல் இருப்பது

இவையெல்லாம் இருப்பது அவசியமாகிறது.  “உண்மையின்” அடிப்படையில் செயல்படும் இந்தமகத்தான சிறப்பான கருத்துகள் அதற்கு முரணானஎதேச்சதிகார கருத்துகளுக்கு எதிராக செயல்படும் எனவும் உயர்நீதித்துறை முழுவதுமே இந்த ஆரோக்கியமான கருத்துக்கள் ஊடுருவும் எனவும் நாம் நம்பிக்கையைகொள்ளத்தான் முடியும். நம்பிக்கையுடன் இருப்போம். 

தமிழில் : அ.அன்வர் உசேன்

;