articles

img

புதிய இந்தியா நமதாகட்டும்.. (பீப்பிள்ஸ் டெமாக்ரஸி தலையங்கம்)  

இந்தியா, தன்னுடைய 74 ஆவது சுதந்திர தினத்தை முடித்து, 75ஆவது சுதந்திர தினத்தில் அடி எடுத்து வைக்கும் இத்தருணத்தில் உண்மையில் மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறது.நம்முடைய குடியரசு அரசமைப்புச்சட்டத்தை உருவாக்குவதற்காகவும், நம்நாடாளுமன்ற ஜனநாயகத்தை உயர்த்திப்பிடிப்பதற்காகவும் நாம் சுதந்திரப்போராட்டக் காலத்தில் உயர்த்திப்பிடித்த உன்னதமான குறிக்கோள்கள், கடந்த பல பத்தாண்டுகளில் அரிக்கப்பட்டு வந்திருக்கின்றன.குறிப்பாக, ஆர்எஸ்எஸ்/பாஜக கூட்டணி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியபின், ஒரு குணாம்சரீதியான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. 2014க்குப் பின்னர், சுதந்திரப் போராட்டத்தின் உன்னதக் குறிக்கோள்களாக இருந்த, ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் நாட்டின் இறையாண்மை ஆகிய அனைத்துக்கும் மிகவும் சக்திவாய்ந்த அச்சுறுத்தலாக விளங்கக்கூடியவிதத்தில் இந்துத்துவா மதவெறியும், நவீன தாராளமய முதலாளித்துவக் கொள்கையும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மோடியின் மூன்று உரைகள்
ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் இப்போதிருக்கும் அமைப்பில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் கையகப்படுத்தியும், அவற்றின் அதிகாரங்களை அரித்து வீழ்த்தியும், தங்களுடைய ‘இந்து ராஷ்டிரம்’ என்னும் இலக்கை நோக்கி, கொண்டுசெல்வதற்கு ஏற்றவிதத்தில் கையகப்படுத்திடும் நீண்ட பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. கடந்தமூன்று ஆண்டுகளாக, நரேந்திர மோடியின்சுதந்திர தின உரைகளை ஆராய்ந்தோமானால், அவர்கள் கற்பனை செய்துள்ள “புதிய இந்தியா”வின் உருவறைகள் என்னவென்று புரிந்துகொள்ள முடியும்.

2018 ஆகஸ்ட் 15 அன்று நரேந்திர மோடிஆற்றிய சுதந்திர தின உரையில், 2022வாக்கில்75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் சமயத்தில் “புதிய இந்தியா” உருவாக்கப்படுவதைப் பற்றி பேசியிருந்தார். இவர்களின் புதிய இந்தியா என்பதன் பொருளை பின்னர்இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்க்கத் தொடங்கிவிட்டார்கள். 2019இல் பத்து நாட்கள் கழித்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து ஆகஸ்ட் 5 அன்று ரத்து செய்யப்பட்ட பின், மோடிஆற்றிய சுதந்திர தின உரையின்போது, “ஒரே நாடு, ஒரே அரசமைப்புச்சட்டம்” என்பதை நிறைவேற்றிவிட்டோம் என்று பெருமையுடன் அறிவித்தார். சர்தார் பட்டேல் கண்ட கனவு “ஒரே பாரதம்,  ஸ்ரேஸ்தா பாரதம்” அடைந்துவிட்டோம் என்றார். இது கிட்டத்தட்ட ஆர்எஸ்எஸ்-இன் அகண்ட பாரதம் போன்ற கோஷத்தை ஒத்திருக்கிறது.  இதே ஆண்டு டிசம்பரில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி நாட்டில் முதன்முதலாக குடிமக்கள், தங்கள் மதத்தை அளவுகோலாகக் கொண்டு வரையறுக்கப்பட்டார்கள். இது மதச்சார்பற்ற அரசின் குடிமக்கள் என்னும் கருத்தாக்கத்திற்கு எதிரானதாகும்.

அமைதியான முறையில் அடைந்த உச்சம்...
அடுத்த ஆண்டு, 2020இல், கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு மத்தியில், ஆகஸ்ட் 5 அன்று, அயோத்தியில் ராமர் கோவில்கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழாவின்போது, பிரதமர், ஆர்எஸ்எஸ் தலைவரின் முன்னிலையில், இன்றைய தினமே சுதந்திர தினம் என்று அறிவித்தார். அதன்பின்னர் பத்துநாட்கள் கழித்து அவர் ஆற்றிய சுதந்திரதின உரையின்போது, அவர், “வெகுகாலமாக இருந்து வந்த ராம ஜன்ம பூமி பிரச்சனையில் “அமைதியான முறை”யில் உச்சத்தைஅடைந்துவிட்டோம்,” என்று கூறினார்.  இவர்கள் கூறும் “அமைதியான முறை”யிலான உச்சத்திற்குப் பின்னே,  1992 டிசம்பரில்பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். ஆனால், மோடியைப் பொறுத்தவரை, கோவில் என்பது அவர்களுக்கு வேறு ஏதோ ஒன்றைக் குறிப்பாகத் தெரிவிக்கிறது. “ஒவ்வொரு இந்தியனும் வளர்ச்சிக்கான மகத்தான யாகத்தில் ஏதாவது ஒன்றைத் தியாகம் செய்துதான் ஆக வேண்டும்.” இவ்வாறு கோவில் என்பது இவர்களின் தேசிய வளர்ச்சிக்கான ஓர் அடையாளமாகும். ஒவ்வொரு இந்தியனும் அதற்காகத் தியாகம் செய்திட வேண்டும் என்பது இவர்கள் கூற்று.

இவ்வாறாக இவர்களின் புதிய இந்தியாகடந்த இரண்டு ஆண்டுகளில் - அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, நாடாளுமன்றத்திற்கான புதிய சென்ட்ரல் விஸ்டா கட்டுவது மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஒழித்துக்கட்டியது ஆகியவற்றின் மூலமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இவை அனைத்தும் மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றின் மீதான தாக்குதல்களை வக்கிரத்தனமான முறையில் குறிக்கின்றன.

செல்வக் குவிப்பும் வறுமை அதிகரிப்பும்
“புதிய இந்தியா” என்பது இந்துத்துவா எதேச்சதிகாரம் மற்றும் கார்ப்பரேட்டுகளின் நவீன தாராளமயம் ஆகியவை இணைந்த நச்சுக் கலவையாகும். மோடி, “புதிய இந்தியா”வுக்கு இலக்கை நிர்ணயித்து அறிவித்தகடந்த மூன்றாண்டுகளில், கார்ப்பரேட்டுகளின் மீதான வரிகள் கடுமையாக வெட்டப்பட்டிருக்கின்றன, பெரும் கார்ப்பரேட்டுகளின் பல லட்சம் கோடி ரூபாய் கடன்கள் ரத்துசெய்யப்பட்டிருக்கின்றன,  பெரிய அளவில் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாரிடம் தாரை வார்த்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.  வேளாண் வர்த்தகம் மற்றும் சந்தைகளில் கார்ப்பரேட்டுகள் நுழைவதற்கு வழிவகைகள் செய்து தரும் விதத்தில் நாடாளுமன்றத்தை முடக்கி மூன்று வேளாண் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. மிகவும் அசிங்கமான முறையில் சமத்துவமின்மையுடன் புதிய இந்தியா உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.  2021இல் வெளியாகியுள்ள கிரெடிட் சுய்ஸ்ஸே வெல்த் ரிப்போர்ட் (Credit Suisse Wealth Report of 2021)-இன்படி, நாட்டிலுள்ள உயர் ஒரு சதவீதத்தினரின் செல்வத்தின் பங்கு, 2020 இறுதிவாக்கில் 40.5 சதவீதத்தை எட்டியிருக்கிறது. ஃபோர்ப்ஸ் (Forbes) வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையானது, 2020இல் 102பில்லியனர்களாக இருந்தவர்களின் எண்ணிக்கை 2021இல் 140ஆக உயரும் என்றுமதிப்பிட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வறுமை மிகவும் கொடூரமான முறையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கக்கூடிய நிலையில்தான் இது நடந்திருக்கிறது.

2020இல் பிரதமர் சுதந்திரதின உரை நிகழ்த்தியபோது, “சுயசார்பு பாரதம்” என்னும்முழக்கத்தை அளித்தார். அதாவது, “புதிய இந்தியா” என்பது சுயசார்புடன் திகழும் என்றுபொருள்படும்படி இவ்வாறு கூறினார். அவர் மேலும், “நாம் 75ஆவது சுதந்திர தினத்தை நோக்கி இன்னும் ஓர் அடி எடுத்து வைக்க வேண்டிய நிலையில் இருப்பதால், இந்தியா போன்ற ஒரு நாடு, தன் சுய காலில் நிற்கவேண்டியதும், சுயசார்புடன் இருக்க வேண்டியதும் அவசியமாகும்,” என்று கூறினார்.கபடநாடகத்தின் அளவுக்கு எல்லையே இல்லை. மோடி, சுய சார்பு எனப் பிரகடனம் செய்தபின்னர், “சுயசார்பு பாரத் அபியான்” என்னும் திட்டத்தின் ஒரு பகுதியாக, மிகமுக்கியமான கேந்திரமான துறைகளைத் தவிர(except strategic sectors) இதர பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியாரிடம் தாரை வார்க்கப்படும் என்று அரசாங்கம்அறிவித்தது. கேந்திரமான துறைகளிலும்கூட, அதிகபட்சம் நான்கு துறைகள் மட்டுமே பொதுத்துறையில் நீடிக்கும். அரசாங்கம், பாதுகாப்புத்துறையில் ஏற்கனவே 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்துவிட்டது. இந்நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியப் பெரும் கார்ப்பரேட்டுகள் மற்றும் அந்நிய நிறுவனங்கள் நம் மக்களின் வளங்களைப் பயன்படுத்திக் கட்டி எழுப்பப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் கபளீகரம் செய்திட அனுமதிக்கப்படக் கூடியவைகளாகும். இந்நடவடிக்கைகள் அனைத்தும் நம் பொருளாதார இறையாண்மையை அரித்து வீழ்த்திடும். 

புதிய இந்தியாவும்அரை ஜனநாயகமும்
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் தாரை வார்த்திடும் ஒரு பகுதியாக விளங்கும், மூர்க்கத்தனமான முறையில் பின்பற்றப்பட்டுவரும் நவீன தாராளமயக் கொள்கைகள், நம் அரசியலமைப்பு முறையின்மீதும் நாசகர விளைவுகளை ஏற்படுத்திடும், ஜனநாயகத்தினைத் தேய்வுறச் செய்திடும். இதன் காரணமாகத்தான் அரசியல்வாதிகள் மற்றும் பெரும் வர்த்தகப் புள்ளிகளுக்கு இடையேயான கள்ளப் பிணைப்பு மிகவும் வலுவானமுறையில் மாறியிருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் அமைப்புமுறை இந்தக் கள்ளப் பிணைப்பிற்குச் சிறந்ததோர் உதாரணமாகும்.  நாடாளுமன்ற நடைமுறையே மதிப்பிழந்துவிடும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுவரும் பிரதிநிதிகள், அந்த மக்களின் கட்டளைகளையே முறியடித்திடும் விதத்தில், மிகப்பெரிய அளவில் கட்சித் தாவலில் ஈடுபடுவதும், மாநில அரசாங்கங்களையே மாற்றியமைப்பதும் நடக்கும். இவ்வாறு இவர்களுடைய “புதியஇந்தியா”வும் அரை-ஜனநாயகமும் ஒரே பொருள்படக் கூடியவையாக மாறியிருக்கின்றன.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றை மோடி அரசாங்கம்  கையாள வேண்டியிருந்ததால், இவர்களின் திட்டம் நிறைவேறுவதில் சற்றே தாமதம் ஏற்பட்டபோதிலும்கூட, இவர்கள் இந்தியாவை மாற்றியமைப்பதை மிகவும் வெறித்தனமான முறையில் வேகமாகச் செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் கூறும் “புதிய இந்தியா”வுக்கும் அறிவியல் மனப்பான்மையுடன் கூடிய ஒரு நவீன, மதச்சார்பற்ற சமூகத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் கிடையாது. இவர்களின் “புதிய இந்தியா”, “இந்து ராஷ்டிரத்தின்” அடிப்படையில் அமைந்தது. விடுதலைப் போராட்டத்தில் எவ்விதமான பங்கும் அளிக்காத பேர்வழிகளால் இது வடிவமைக்கப்பட்டு வருகிறது. இவர்களின் இந்தப் புதிய இந்தியாவிற்கும் மதச்சார்பற்ற ஏகாதிபத்திய எதிர்ப்புக்கும் எவ்விதத்திலும் ஒட்டுதலோ உறவோ கிடையாது.

இவர்களின் புதிய இந்தியாவுக்கும், முதலாளித்துவ தாராளவாத “இந்தியாவின் சிந்தனை”க்கும் கூட (bourgeois liberal to “Idea of India”) எவ்விதமான சம்பந்தமும் கிடையாது.  இவர்களுடைய இந்துத்துவாவின் “புதிய இந்தியா”விற்கு மாற்று, ஒரு புதியகச்சிதமான வடிவத்தின் மூலமாக வெளிவரும்.அது மக்களின் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களால் உருவாக்கப்படும்.

கார்ப்பரேட் இந்துத்துவா ஆட்சிக்கு சவால்...
இவர்களுடைய “புதிய இந்தியா”வுக்கான சவால், வர்க்க மற்றும் வெகுஜனப் போராட்டங்கள் மூலமாக ஏற்கனவே வடிவம் பெறத் துவங்கிவிட்டன. வரலாறு படைத்துவரும் ஒன்பது மாத விவசாயிகளின் போராட்டம் கார்ப்பரேட் இந்துத்துவா ஆட்சியின் அடிப்படைக்கு சவாலாக மாறி இருக்கிறது. முன்னதாக, குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும்தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நடைபெற்ற வெகுஜன கிளர்ச்சிநடவடிக்கைகள் நாட்டின் பெரும்பான்மைவாதத்தை அனுமதித்திட மாட்டோம் என்று அறிவார்ந்த குடிமக்கள் வெளிப்படுத்தியதைக் காட்டியது. தனியார்மயத்திற்கு எதிரான தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்கள், விசாகப்பட்டினம் உருக்காலைத் தனியார் மயத்திற்குஎதிராக மிகப்பெரிய அளவில் நடைபெற்று வரும் போராட்டம் போன்றவை புதிய முத்திரைகளைப் பதித்துக் கொண்டிருக்கின்றன. அதேபோன்று பாதுகாப்பு உற்பத்தித் தொழிலாளர்கள் போராட்டங்கள், இன்சூரன்ஸ் துறை ஊழியர்கள் போராட்டங்கள் மற்றும் இதர துறைகளில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக ஒரு விரிவான அளவில் போராட்டங்கள்வளர்ந்து வருவதற்கான பங்களிப்புகளைக் காட்டுகின்றன.

இத்தகைய எதிர்ப்பு மற்றும் வெகுஜன இயக்கங்களினூடே ஒரு மாற்று உருவாகும். அது ஓர் இடது மற்றும் ஜனநாயகத் திட்டத்தின்அடிப்படையில் ஒரு மாற்றாக அமைந்திட வேண்டும். இத்தகையதொரு திட்டம் நம் விடுதலைப் போராட்டத்தின் இலக்குகளை, அதாவது மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலையை முன்னெடுத்துச் செல்லும். இப்போது நம் முன் உள்ள கடமை என்னவென்றால், உழைக்கும் மக்களில் விரிவான பகுதியினரை அமைப்புரீதியாக அணி திரட்டிட வேண்டும், அத்தகையதொரு மாற்றைச் சுற்றி அனைத்து ஜனநாயக மற்றும்மதச்சார்பற்ற சக்திகளையும் அணிதிரட்டிட வேண்டும்.

பீப்பிள்ஸ் டெமாக்ரஸி தலையங்கம்  

(ஆகஸ்ட் 11, 2021)

தமிழில் : ச.வீரமணி 

;