articles

img

விவசாயிகளைப் பாதுகாத்த ஜோதிபாசு அரசு....

மனிதநேய சிந்தனை கொண்ட ஆன்மிகத் தலைவர்களும், முற்போக்கான சமூகச் சீர்திருத்த சிந்தனையாளர்களும், தேசிய உணர்வும் சுதந்திர வேட்கையும் கொண்ட தலைவர்களும், நவீன இலக்கிய படைப்பாளர்களும் தோன்றிய18-19ஆம் நூற்றாண்டை வங்கத்தின் மறுமலர்ச்சிக் காலமாக வங்க வரலாற்றாசிரியர்கள் மதிப்பிடுகிறார்கள். அது வங்கத்தின் முதலாவது மறுமலர்ச்சிக் காலமென்றால், இந்தியப் பெருந்தேசத்திற்கே ஒரு முன்மாதிரியாக நல்லாட்சி புரிந்த - அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து அரசியல் தலைவர்களாலும், மக்களாலும் பாராட்டுதலுடன் நேசிக்கப்பட்ட ஜோதிபாசுவின் ஆட்சிக் காலத்தை (1977 - 2000) வங்கத்தின் இரண்டாவது மறுமலர்ச்சிக் காலம் எனலாம்.

 நாடு முழுவதும் நிலச்சீர்திருத்தக் குரல் ஓங்கி ஒலித்த காலம். விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றும் மெய்யான நிலச்சீர்திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி அதை நடைமுறைப்படுத்தியவை கேரள, மேற்கு வங்க அரசுகள்தான். கேரளத்தில் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையிலான அரசு என்றால், வங்கத்தில் ஜோதிபாசுதலைமையிலான அரசு. தேசத்திற்கே ஒரு முன்னுதாரணமாக விளங்கிய சீர்திருத்தம் அது. பெரும் நிலப்பிரபுக்களிடம் குவிந்துள்ள நிலங்களுக்கு வரம்புகட்டி, உபரி நிலத்தைப் பிரித்தெடுத்து நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு வழங்கிய வளர்ச்சித் திட்டம் அது.

முதல் இலக்கு
நிலப்பிரபுக்களிடமிருந்து, நிலஉச்சவரம்புச் சட்டத்திற்கு மேல் உள்ள 13 இலட்சம் ஏக்கர் உபரி நிலங்களை எடுத்து நிலமற்ற 20 இலட்சம் ஏழை விவசாயிகளுக்குவழங்கியது ஜோதிபாசுவின் இடதுமுன்னணி அரசு. இது, இந்தியாவில் கேரளத்தைத் தவிர வேறெந்த மாநிலமும் செய்திராத சாதனை. நிலம் பெற்றவர்களில் 37 சதவீதம்பேர் தலித்மக்கள். 10 சதவீதம் பேர் மலைவாழ் மக்கள்.

1969-ல் ஜோதிபாசு துணைமுதலமைச்சராக இருந்த ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்திலேயே மேற்குவங்கத்தில் நிலச்சீர்திருத்தம் அமலுக்கு வந்துவிட்டது. துணைமுதலமைச்சர் ஜோதிபாசுவசம் பொதுநிர்வாகம் மற்றும் காவல்துறை இருந்தது. அன்று சட்டமன்றத்தில் அதிக இடங்களைப் பெற்றிருந்தது மார்க்சிஸ்ட் கட்சிதான். “எங்களின் முதல் இலக்காக இருந்தது நிலச்சீர்திருத்தம்தான். நிலங்களைக் கண்டறியவும், நிலத்திலிருந்து விவசாயிகளை வெளியேற்றுவதைத் தடுக்கவும் மக்களின் விரிவான ஒத்துழைப்பு கோரப்பட்டது”  என்றார் ஜோதிபாசு. 

நிலத்தில் உழுது சாகுபடி செய்துவரும் குத்தகை விவசாயிகள் நிலத்திலிருந்து வெளியேற்றப்படுவது சட்டப்பூர்வமாகத் தடுக்கப்பட்டது. போராடுவோர் மீது அடக்குமுறைச் சட்டம் பாயவில்லை. அந்தச் சட்டத்தை ஏவமாட்டோம் என்று ஜோதிபாசு அரசு அறிவித்தது. நியாயமான காரணங்களுக்காகத் தொழிலாளர்கள் நடத்தும்போராட்டங்களை அடக்கி ஒடுக்க போலீஸ் அனுப்பப்படவில்லை. போலீஸார் தங்களுக்கென சங்கம் அமைத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டனர். விவசாயத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்சக் கூலியும் நிர்ணயிக்கப்பட்டது.  கொத்தடிமை முறை ஒழிக்கப்பட்டது. தொழில்துறை வளர்ச்சியில் நல்ல உத்வேகம். ஹால்தியா பெட்ரோகெமிக்கல் நிறுவனமும், பக்ரேஷ்வர் அனல் மின்நிலையமும் துவக்கப்பட்டன. 

உள்ளாட்சிகளுக்கு அதிகாரமும் மாநில சுயாட்சியும்
அன்று, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் 20 ஆண்டுகளாக நடத்தப்படாமல் முடங்கிக் கிடந்தபோது, ஜோதிபாசுவின் இடதுமுன்னணி அரசு ஆட்சிக்கு வந்தவுடனே வங்கத்தில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல்கள் நடத்தி அவற்றின் ஜனநாயகத்திற்கு ஜீவனூட்டிச் செயல்பட வைத்தது. பிற மாநில அரசுகள் தங்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்குப் போதிய அதிகாரமும், போதிய நிதியும் பகிர்ந்தளிக்காத நிலையில் ஜோதிபாசுவின் இடதுமுன்னணி அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்கியதுடன், மாநிலப் பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் 50 சதவீதத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கியது. நியாயவிலைக் கடைகளில் அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்பட 14 வகை அன்றாட உபயோகப் பொருள்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன. பிற மாநிலங்களில் மதக் கலவரங்களும் அமைதிச் சீர்குலைவும் நிகழ்ந்தபோது வங்கத்தில் மக்களிடையே மதநல்லிணக்கமும் அமைதியான வாழ்க்கையும் பாதுகாப்பாக இருந்தது.
மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் பெறவும், மாநில சுயாட்சிக்காகவும் போராடியவர் ஜோதிபாசு. மாநில அதிகாரங்களில் மத்திய அரசு அத்துமீறித் தலையிடும்போதெல்லாம் மாநில உரிமைகளைப் பாதுகாக்க உரத்துக் குரல் கொடுத்தார். தமது மாநில அரசுக்கு எதிராகவோ, பிற மாநில அரசுக்கு எதிராகவோ மத்திய அரசு 356-வது சட்டப் பிரிவைக் காட்டி மிரட்டும்போது அதை அவர் கடுமையாக எதிர்த்தார். ஒருசமயம், ‘சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்கிறதா?’ என்றுஅறிவதென்கிற பேரில் மேற்கு வங்கத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் குழுவொன்றை அனுப்பிவைத்தது அன்றைய பிஜேபி மத்திய அரசு. மாநில உரிமைகளில் தலையிட வந்த மத்தியக் குழுவை வரவேற்காமல் - ஒத்துழைப்பு வழங்காமல் - திருப்பி அனுப்பியது ஜோதிபாசுவின் மேற்கு வங்க அரசு. 

உலக உழைப்பாளர்களின் புரட்சிகர தினமாகிய மேதினத்தைச் சம்பளத்துடன்கூடிய விடுமுறை தினமாக இந்தியாவிலேயே முதன்முறையாக அறிவித்தது 1957-ல் கேரளத்தில் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தமையிலான அரசு என்றால், இரண்டாவதாக அறிவித்தது 1967-ல் வங்கத்தில் ஜோதிபாசு துணைமுதலமைச்சராகப் பதவி வகித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி அரசு.அடுத்து தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு மே தினத்தை விடுமுறை தினமாக அறிவித்தது.

செல்வாக்குச் செலுத்தியவர்
“எனது கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடிந்தது என்பதே நான் நீண்ட காலம் முதலமைச்சராக இருந்ததன் மிகப் பெரிய வெற்றி. மேற்கு வங்கத்தில் அரசியல் உறுதி, ஜனநாயகக் கலாச்சாரம், நிலச்சீர்திருத்தம், கிராமப் பொருளாதார வளர்ச்சி, மக்களிடையே மதவெறிக்கு எதிரான மனோபாவத்தை வளர்த்தது, தொழில்துறையிலும் இதர துறைகளிலும் பெற்ற வளர்ச்சிகள்...”- என 2000 ஆவது ஆண்டில் 87வது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக முதலமைச்சர் பொறுப்பிலிருந்து விடைபெறுகிறபோது தமது ஆட்சியின்வெற்றிகளை ஒவ்வொன்றாகச் சொல்லிப்  பெருமிதப்பட்டார் ஜோதிபாசு.அன்று பிரபல வங்கமொழிப் பத்திரிகையாளர் அருண் கங்குலி கூறுகையில் -“ஒரு கால்நூற்றாண்டுக் காலம் வங்க மக்களிடையே செல்வாக்குச் செலுத்திய மனிதர் யாரென்று கேட்டால் நான் ரவீந்திரநாத் தாகூரின் பெயரையோ, சுபாஷ்சந்திர போஸின் பெயரையோ கூறமாட்டேன். மாறாக, ஐந்து அடி உயரமும் வெள்ளை வேட்டியும் குர்தாவும் அணிகிற - கோடிக்கணக்கான வங்க மக்களின் விதியை நிர்ணயிக்கிற ஜோதிபாசுவையே கூறுவேன்” - என்றார்.

காந்திஜியின் அறிவுறுத்தலின்படி... 
ஜோதிபாசு, 16 வயதினிலேயே தேச சுதந்திர வேட்கைகொண்டவராக இருந்தார். 1930-ல் காந்திஜி உண்ணாவிரதம் இருந்ததை அறிந்து மனம் கலங்கினார். பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லை. இது பற்றித் தந்தைநிஷிகாந்த பாசுவிடம் தெரிவித்தபோது அதற்கு அவர் மறுப்பேதும் கூறவில்லை. அதே 1930-ல் கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் வீர உரையைக் கேட்பதற்கு ஷகீத் மினார் மைதானம் நோக்கி ஓடினார்.போலீஸின் தடியடிபட்டார். “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எனது முதலாவது எதிர்ப்பு இதுதான்” என்றுதமது சுயசரிதையில் பெருமையுடன் பதிவுசெய்துள்ளார் ஜோதிபாசு. அந்தச் சிறார் பருவத்திலேயே காந்திஜி, நேதாஜியின் தாக்கத்தினால் தேசபக்தியும் பிரிட்டிஷ்ஏகாதிபத்திய எதிர்ப்பும் அவர் உள்ளத்தில் முளைவிட்டிருந்தது. 1947-ல் கொல்கத்தாவில் இந்து - முஸ்லிம் மதக்கலவரம் பற்றியெரிந்தபோது பெலியகட்டாவில் தங்கியிருந்த காந்திஜியை, மதக் கலவரங்களைத் தணிப்பதற்காக பல்வேறு கட்சிகளையும் அமைப்புகளையும் சேர்ந்த பிரதிநிதிகள் அவரது அறிவுரையைக் கேட்டனர். அப்போது ஜோதிபாசுவும் காந்திஜியைச் சந்தித்தார். அனைத்துக் கட்சிகளும் கொண்ட குழுவொன்று அமைத்து, அனைத்துக் கட்சிகளின்  ஒற்றுமைப்பேரணி நடத்துவதுதான் அமைதியை நிலைநாட்டுவதற்கான மிகச்சிறந்த மார்க்கம் என்றும், நம் முன்னால் உள்ள மிக முக்கியமான கடமை அதுதான் என்றும் காந்திஜி அறிவுறுத்தினார். உடனடியாக அந்த வேலை ஜோதிபாசுவின் பங்கேற்போடும் துவக்கப்பட்டது. இது, ஜோதிபாசுவின் இளம்பருவத்திய முக்கிய நிகழ்வாகும்.

1969-இல் 280 தொகுதிகளுக்கு  நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான  ஐக்கிய முன்னணி  214 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 4 ஆதரவு சுயேச்சைகள் உள்பட 101  இடங்களில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சி 83 இடங்களில் வெற்றிபெற்றது. அந்தத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்றது மார்க்சிஸ்ட் கட்சிதான். 33 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருந்த  பங்க்ளா காங்கிரசின் தலைவர் அஜய்முகர்ஜிக்கு அவரின் பிடிவாதம் காரணமாக முதலமைச்சர் பதவி தந்துவிட்டு, தான் துணைமுதலமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்டு அன்றைய “ஐக்கிய முன்னணி”யை 13 மாதங்களேனும் காப்பாற்றிய நிலையிலும் சரி, அதற்குப் பிறகு வலுவான இடதுமுன்னணியை உருவாக்கிய நிலையிலும் சரி, கட்சியின் வழிகாட்டுதலிலான தமது தலைமைப் பொறுப்பைமிக நேர்த்தியாக நிறைவேற்றினார் ஜோதிபாசு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனிப் பெரும்பான்மை பெற்ற கட்சியாக உருவெடுத்தது அந்த 1969 தேர்தலில்தான்.

1972 முதல் 1977 வரை வங்கத்தில் பல கொடும் சோதனைகளைச் சந்தித்தது  கட்சி. 1972 மார்ச் 11 அன்று வங்கத்தில் நடந்தது காங்கிரஸ் கட்சியின் கொடூர வன்முறையுடனான ஒரு மோசடித் தேர்தல். தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு முதலமைச்சராக அதிகாரத்திற்கு வந்தார் சித்தார்த்த சங்கர்ரே. அரக்கத்தன ஆட்சி நடத்தினார். தொடர்ந்து 1975 ஜூனில்நாடு முழுவதும் அமல்நடத்தப்பட்ட எமர்ஜென்சி என்கிற அரைப்பாசிச ஆட்சி. இந்த இரண்டு கட்டக் காலம் முழுவதும் ஜோதிபாசு சந்தித்த சோதனைகளும் சவால்களும் ஏராளம். கட்சியை வழிநடத்தும் தலைவராக இருந்து

வற்றையெல்லாம்வென்றுதான் 1977 வங்க சட்டமன்றத் தேர்தலில் ஜோதிபாசு இடதுமுன்னணியின் முதலமைச்சராகத் தேர்வுசெய்யப்பட்டார். விவசாயிகளுக்கும் இளைஞர்களுக்கும் மக்களுக்கும் நலதிட்டங்கள் பல அமல் நடத்திக் காலம் முழுவதும் ஒரு மிகச்சிறந்த அரசியல் அடையாளமாக விளங்கினார்.வங்க மக்களால் “ஜோதிபாபு”என்று பிரியமுடன் அழைக்கப்படும் ஜோதிபாசுவின் 24 ஆண்டுகள் ஆட்சிக்காலம் வங்கத்தின் இரண்டாவது மறுமலர்ச்சிக் காலமாகத் திகழ்ந்தது. 2010 ஜனவரி 17 அன்று காலமான அவரதுபெயரும் புகழும் வங்கத்தின் - இந்தியாவின் வரலாற்றில் என்றும் அழியாப் பொன்முத்திரையாக ஒளிரும்!
 

;