articles

img

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது, ஒருதலைப்பட்சமானது... பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்...

மூன்று வேளாண் சட்டங்கள் மீதான உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தவறானதும், ஒருதலைப் பட்சமானதுமாகும்.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வாயம் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும்வரையிலும் மூன்று வேளாண் சட்டங்களின் அமலாக்கத்திற்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.  உச்சநீதிமன்றத்தின் தலையீட்டைப் பாராட்டும் விதத்தில், சில பிரிவினரை இது, தவறாக வழிநடத்தி இருக்கிறது. உண்மையில், போராட்டத்தில் விவசாயிகள் எழுப்பிய பிரச்சனைகள் மீதோ அல்லது அடிப்படைப் பிரச்சனைகள் சம்பந்தமாக எழுப்பிய பிரச்சனைகள் மீதோ தொடர் விசாரணைகளுடன் இந்த இடைக்காலத் தடை இணைக்கப்படவில்லை. இது, ஒரு வல்லுநர் குழுவை அமைப்பதுடனும், அந்தக்குழு இரண்டு மாத காலத்தில் தன் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டளையுடனும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.  மனுதாரர்கள் எவருமே குழு அமைக்க வேண்டும் என்று கேட்கவில்லை. மேலும், அரசாங்கத்துடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை கள் நடத்திக்கொண்டிருக்கும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், குழு அமைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.

நீதிமன்றம், மூன்று வேளாண் சட்டங்களையும் ஆதரிப்பவர்கள் என்று அனைவருக்கும் நன்கு தெரிந்த நான்கு பேர்களை குழுவிற்கு நியமித்திருக்கிறது. அவர்களில் ஒருவர், அசோக் குலாதி. இந்தப் பேர்வழி, வேளாண்மைத்துறையில் நவீன தாராளமயக் கொள்கைகளைப் பிரயோகிக்க வேண்டும் என்று கூறிவரும் நபராவார். இந்தக்குழுவிற்கு யாரை வல்லுநர்களாகத் தெரிவு செய்யலாம் என்பதைப் பொறுத்தவரை, நீதிமன்றம் அரசாங்கம் கூறும் ஆட்களையே அநேகமாக சார்ந்திருந்ததுபோல் தோன்றுகிறது. குழுவில் உள்ள இரு விவசாயிகள் பிரதிநிதிகளும் வேளாண் சட்டங்களின் ஆதரவாளர்களே ஆவார்கள். குழுவில் யாரை நியமிக்க வேண்டும் என்பது தொடர்பாக விவசாய சங்கங்களிடம் கலந்தாலோசனை செய்வது பொருத்தமாக இருக்கும் என்று நீதிமன்றம் கருதவே இல்லை.

இத்தகைய குழுவின் அறிக்கை எப்படி இருக்கும் என்று முன்கூட்டியே ஊகித்திட முடியும். இரண்டு மாதங்களுக்குப்பின் இதன்அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், நீதிமன்றம் தானே அமைத்த இக்குழு
வின் அறிக்கையை ஏற்பது என்பது தவிர்க்கமுடியாததாகிவிடும். பின்னர் வேளாண் சட்டங்கள் அமலாக்குவதற்கான இடைக்காலத் தடை முடிவுக்கு வந்துவிடும்.உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் இறுதியில் கூறப்பட்டிருக்கும் வாசகங்கள் வருமாறு: “அமைதியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் போராட்டத்தைத் திணறடித்திட ங்கள் விரும்பாத அதே சமயத்தில், வேளாண் சட்டங்களின் அமலாக்கத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ள அசாதாரணமான இந்த உத்தரவு,தற்போது நடந்துகொண்டிருக்கும் போராட்டத்தின் நோக்கத்தை அடைந்திருப்பதாகவே உணரப்படும் என்றும், விவசாய சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களை இந்த உத்தரவை ஏற்கச்செய்து,  தங்கள் வாழ்வாதாரங்களைத் தேடிக்கொள்வதற்காக திரும்பச் செல்லுமாறு கோர வைத்திட முடியும் என்றும், இதன்மூலம் அவர்களின் சொந்த வாழ்க்கை மற்றும் சுகாதாரத்தைப் பாதுகாத்துக்கொள்ளவும், மற்றவர்களின் வாழ்க்கை மற்றும் சொத்துக்களைப் பாதுகாத்திடவும் முடியும் என்றும் நாங்கள் நினைக்கிறோம்.”இவ்வாறு, இந்த உத்தரவானது, விவசாயிகளைத் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு, வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வைப்பதற்குப் போதுமானது என்று நீதிமன்றம் கருதியிருப்பது தெளிவாகிறது.

விசாரணை நடைபெற்ற சமயத்தில், அரசின் வழக்குரைஞர், விவசாயிகள் போராட்டத்தில் “காலிஸ்தானிகள் ஊடுருவியிருக்கிறார்கள்” என்று குற்றஞ்சாட்டினார். இதற்கு நீதிமன்றம், அது தொடர்பாக போதுமான விவரங்களுடன் உறுதி வாக்குமூலம் தாக்கல் செய்யுமாறு கூறியிருக் கிறது.நீதிமன்றத்தின் அணுகுமுறையைப் பரிசீலிக்கும்போது, அரசாங்கம், போராட்டத் தில் “காலிஸ்தானிகள் என்னும் தேச விரோத சக்திகள்” சுறுசுறுப்பாக இருக்கின்றன என்றுகூறி போராட்டத்தை நசுக்கிடவும், கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்திட நீதிமன்றத்தையும் பயன்படுத்திக்கொள்ளக்கூடும் என்று தெரிகிறது.விவசாய சங்கங்கள் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள “வல்லுநர் குழுவை” நிராகரிப்பது என்றும், வேளாண் சட்டங்கள் ரத்துசெய்யப்படும் வரை போராட்டத்தைத் தொடர்வது என்றும் மிகச் சரியாகவே தீர்மானித்திருக்கின்றன. வரவிருக்கும் காலங்கள், போராட்டத்தில் மிகவும் முக்கியமான நாட்களாகும். அனைத்து ஜனநாயக சக்திகளும் போராட்டத்திற்கு முழுமையாக ஆதரவு மற்றும் ஒருமைப்பாடு அளித்திடக்கூடிய விதத்தில்அணிதிரட்டப்பட வேண்டும்.

தமிழில்: ச. வீரமணி
 

;