articles

img

ஜம்மு-காஷ்மீர் : கைநழுவிப்போன பாஜகவின் ஓர் அரசியல் திட்டம்....

காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதுமுள்ள வாக்குச்சாவடிகள் 2020 நவம்பர் 28 அன்று நடைபெற்ற முதலாவது மாவட்ட வளர்ச்சிக்குழுவின் முதல்கட்ட தேர்தலின்போது, வாக்காளர்கள் வந்துகுவியும் ஒரு நல்லசூழலை சந்தித்தன.‘காஷ்மீரின் மைய அரசியல் நீரோட்டத்தில் அப்துல்லாக்களும், முஃப்திகளும் இல்லாத ஒரு மாற்றுத் தலைமையாக உருவாக அவர்களை தேசவிரோதிகள், ஊழல்பேர்வழிகள் என்று தாக்கிப்பேசும் எந்த ஒருவாய்ப்பையும் தவறவிடாமல்பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஒரு திட்டத்தை  அடைகாத்து வருகிறது: அது குறைப்பிரசவமாகிவிடும்’ என்ற ஒருபொதுவான கருத்து அங்கே நிலவிவந்தது. 

தேர்தல் முடிவுகள் இந்தக்கண்ணோட்டத்தை உயர்த்திப்பிடித்தன. டிசம்பர் 22 அன்று வாக்குகள் எண்ணப்பட்டபோது, அப்துல்லா, முஃப்தி தலைமையிலான ‘குப்கார் பிரகடனத்தின் மக்கள் கூட்டணி’ (PAGD) 110 வார்டுகளில் வெற்றிபெற்று மிகப்பெரிய அணியாக உருவானது. பாஜகவின் பிரதிநிதியாக பரவலாக பார்க்கப்பட்ட அல்டாஃப் புகாரியின் ‘அப்னி கட்சி’ அதன் மூத்த தலைவர்களான திலாவை மீர் மற்றும் ஜாவித் பெய்க் ஆகியோர் தோல்வியைச் சுவைக்க வெறும் 12 வார்டுகளையே பெற்றது.
குப்கார் பிரகடனத்தின் மக்கள் கூட்டணி ஜம்மு பகுதியில்ரம்பன், கிஸ்த்வார்,பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் பெற்ற திகைப்பூட்டும் வெற்றிகள் மிகவும் முக்கியமான தனிச்சிறப்பு வாய்ந்தவை ஆகும். ஜம்மு-காஷ்மீரில் உள்ள 20 மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 14 வார்டுகள் என்ற வீதத்தில்  அங்கே மொத்தமாக 280 வார்டுகள் உள்ளன. ஒரு கட்சியோ அல்லது கூட்டணியோ ஒரு மாவட்டக்குழுவைக் கைப்பற்ற வேண்டுமானால், அதுஅங்குள்ள 14 வார்டுகளில் பெரும்பான்மை பெற்றிருக்கவேண்டும். பாஜக 20 மாவட்டங்களில் – ஜம்மு பகுதியில் உள்ள ஜம்மு, கதுவா, உதம்பூர், சம்பா, தோடா மற்றும் ரியாசிஆகிய 6 மாவட்டங்களை மட்டுமே கைப்பற்றியது. மறுபக்கம், குப்கார் கூட்டணி 13 மாவட்டங்களை வென்றது. ஸ்ரீநகர் மாவட்டம் இழுபறியில் அதன் முடிவு சுயேட்சைகளால் தீர்மானிக்கப்படவுள்ளது. 

இருந்தபோதிலும், தேர்தல் முடிவுகளை காஷ்மீரில் உள்ள செல்வாக்குமிக்க இரண்டு குடும்பங்களுக்கு சாதகமான வாக்குகள் என்று தவறாகக் கணித்துவிடக்கூடாது: அந்த இரண்டு குடும்பங்களும் நீண்டகாலமாகவே, அந்நியப்படுத்தப்பட்ட மக்கள் திரளின் வெறுப்புணர்வை ஈர்த்தவை ஆகும். நரேந்திர மோடியின் நடவடிக்கைகளால் அப்துல்லாக்களும் முஃப்திகளும் வீழ்த்தப்பட்டு,– ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்ட நாளான 2019 ஆகஸ்ட் 5 ல் காவலில் வைக்கப்பட்டது முதல், அதுவரை ஒரு மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீரில் இந்தியஆட்சியின் வாகனங்களாக இருந்தவர்கள் என்று பரவலாக பார்க்கப்பட்டவர்கள். அப்துல்லாவின் வார்த்தைகளில் கூறுவதானால், “நாங்கள் காவலில் வைக்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் காண போதுமான காஷ்மீரிகள் அங்கே இருந்தார்கள்”. அந்த உணர்வு இன்னும் இருந்து வருகிறது.

வாக்காளர் மனநிலை     
மக்கள் அவர்களுக்கு வாக்களித்தார்கள். ஏனென்றால், ‘காஷ்மீரின் எல்லா நிறுவனங்களையும் பாஜக தனதுபோலிப்பிரதிநிதிகள் மூலம் கைப்பற்ற முயல்கிறது’ என்றுஅவர்களுக்கு நன்றாகத் தெரியும்.  ‘தேர்தல்கள் மத்திய அரசின் ஆகஸ்ட் 5 முடிவுகள் மீதான ஒரு பொதுஜன வாக்கெடுப்பாக ஆக்கப்பட்டுவிடும்’ என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். எனவே தங்களின் ஏற்பின்மையைத் தெரியப்படுத்தவும் அந்த தேர்தல்கள் அவர்களுக்கு மிகவும் கட்டாயமானதாகும். எனவே தான் மக்கள் அவர்களுக்கு – குப்கார்கூட்டணிக்கு வாக்களித்தார்கள். இந்தப் பின்னணியில், தேசிய மாநாட்டு கட்சிக்கும் (N.C), மக்கள் ஜனநாயக கட்சிக்கும் (PDP)  சாதகமான இந்த தேர்தல் முடிவுகள், காஷ்மீரின் மைய அரசியல் நீரோட்டத்தில் ஏற்படுள்ள சிதைவுகளை மறுகட்டமைக்க அவர்கள் எதிர்கொள்ளவேண்டிய சவால்களின் பரிமாணத்தை அழித்துவிடவில்லை.

பொதுவெளியில், குப்கார் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் பரவசம் அடைந்துள்ளன. ‘அரசியல்போராட்ட வழிமுறைகள் எந்த அளவுக்கு மறுகட்டமைக்கப்பட்டுள்ளன’, என்பதற்கான அளவீடுகளாக தேர்தல் முடிவுகளை அவர்கள் விளக்குகிறார்கள். இந்தக்கூட்டணிக்கு தலைமையேற்றுள்ள ஃபரூக் அப்துல்லா கூறினார்: “ஆளும் பாஜக சுவர்களில் எழுதப்பட்டுள்ளவைகளை படிக்க வேண்டும்: மேலும், 2019 ஆகஸ்ட் 5 ல் எடுக்கப்பட்ட முடிவுகளை திரும்பப்பெற வேண்டும்.”
தனிப்பட்டமுறையில், எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள். காத்திருக்கும் கடுமையான போராட்டத்தைப்பற்றி எச்சரிக்கை உணர்வு கொண்டுள்ளார்கள். தேர்தல்கள் ஜனநாயகப்படுத்தும் வழிமுறைகளை வலிமைப்படுத்துகின்ற ஒரு கடுமையான பயிற்சியாகும்.   பாஜக, குப்கார் பிரகடனத்தின் மக்கள் கூட்டணி அணிகளைப் பிளவுபடுத்த தனது அம்பறாத்துணியில் உள்ள எந்த ஒரு ஆயுதத்தையும் பயன்படுத்தும். கடந்த சில மாதங்கள், ‘பழிவாங்கும் அரசியலின்’ மற்ற பிற அம்சங்களில் ஒன்றாக ’ரோஷ்னி திட்டத்தில்’புதுப்பிக்கப்பட்ட புலனாய்வுகளையும், ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழலை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு புலனாய்வு முகமைகள்  திரும்பத் திரும்ப ஃபரூக்அப்துல்லாவுக்கு நீதிமன்ற அழைப்பாணைகளை அனுப்பிவருவதையும் கண்டுவருகின்றன.

மெஹ்பூபா முஃப்திக்கு நெருக்கமானவர்களோடு நடத்திய விவாதங்கள், ‘முன்னாள் முதலமைச்சர், ஒருபயங்கரவாத வழக்கில் சிக்கவைக்கப்படுவார்’ என்று அந்தக்கட்சிக்குள் ஒரு பரவலான எண்ண ஓட்டம் இருக்கும் உணர்வைத் தந்தது. பிடிவி-யின் இளைஞர் பிரிவு தலைவர் வஹீத்பாரா அண்மையில் தாவீந்தர் சிங் சம்பந்தப்பட்ட ஒரு பயங்கரவாத வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (NIA) யால் கைது செய்யப்பட்டார். உள்துறை அமைச்சகத்தில் உள்ள சில அலுவலர்கள், “ மெஹ்பூபா முஃப்தியின் பேச்சுக்களை எளிதானவைகளாக எடுத்துக்கொள்ளவில்லை: அவரது அசைவுகளை கண்காணித்துக்கொண்டிருக்கிறார்கள்என்பதை இந்தக் கட்டுரையாளர் அறிந்துள்ளார். அக்டோபர் 13 ல் அவர் விடுதலை செய்யப்பட்டதிலிருந்து, இந்த முன்னாள் முதலமைச்சர், தனக்கே உரிய கடுமையான உணர்வில் புதுதில்லியில் அதிகாரபீடத்தில் உள்ளவர்களை, ‘கொள்ளைக்காரர்கள்’ என ஒன்றுக்கும் மேற்பட்டமுறை அழைத்து வருகிறார். ”

அதிர்ச்சியளிக்கும் வெளிப்பாடுகள்   
தேர்தல் முடிவுகள் எவ்வாறோ பாஜகவுக்கு பல்வேறுஅதிர்ச்சியளிக்கும் வெளிப்பாடுகளை அளித்துள்ளது.முதலாவதாக, குப்கார் கூட்டணியில் இணைந்துள்ளவர்களின் கூர்மையான மற்றும் தொடர்ச்சியான பயணம், அவர்களிடையே பகைமை உணர்வையோ அல்லது அலட்சியப்படுத்துதலையோ ஏற்படுத்தாவிட்டால், அவர்களுக்கு அது அரசியல் ஒத்துழைப்புகளை தந்து மக்களிடையேயான மதிப்பை உயர்த்தும். இரண்டாவதாக, தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயகக்கட்சி ஆகியவற்றிலிருந்து கட்சிமாறுபவர்களை காஷ்மீரிகள், அவர்களுக்குகிடைக்கும் ஆதாரங்கள், மூலதனம் மற்றும் அரசியல்வசதிகளைக் கணக்கில் கொள்ளாமல்,  வெறுத்து ஒதுக்கிவிடுவார்கள். மூன்றாவதாக, ஜம்முவில் முன்னோட்டமாக ‘முஸ்லீம்கள் மற்றும் பிறருக்கு’ எதிராக வாக்காளர்களை துன்புறுத்தி பாஜக நடத்திய எதிர்மறைச் செயல்பாடுகள் அவற்றின் பயன்பாடுகளில் காலாவதியாகி விட்டன.

மேலே உள்ள காட்சிகளை ஒருவர் தனது மனதில்இருத்திக்கொள்வாரானால், பாஜக ஜம்மு-காஷ்மீர் பற்றியதனது அணுகுமுறையையும், தேசிய மாநாட்டுக்கட்சிக்கான பிரஸ்தாபத்தையும் அதன் இயல்பான வெளிப்பாடாக மாற்றியமைத்துக் கொள்ளக்கூடும் என்பதையும் கற்பனைசெய்துகொள்வது சிரமமானதல்ல. பிப்ரவரியில் ஃபரூக்கும்அவரது மகன் ஒமர் அப்துல்லாவும் விடுதலை செய்யப்பட்டதிலிருந்து அவர்கள் ‘புதுதில்லியுடன் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்வது’ என்ற கருத்தில் பந்தை அடித்துக் கொண்டிருந்தார்கள். மத்தியஅரசும் அந்தநேரத்தில் இருஅப்துல்லாக்களும் ‘ஒரு நல்ல நடத்தையைக் காட்டுவார்களானால்’ மாநிலஅந்தஸ்தை மீண்டும் திருப்பியளிப்பதாக குறிப்பாகத் தெரிவித்தது என்பதை இந்தக் கட்டுரையாளர் புரிந்து கொள்ள நேர்ந்தது. அரசியல்தளத்தில் இதன்பொருள், ‘தில்லிக்கு எதிரான எந்த ஒரு அரசியலையும் தவிர்ப்பது’ என்பதாகும். அவர்களது அடங்கிப்போகும் துவக்ககால  நடத்தைக்கோலம் இந்தத் திசைவழியை சுட்டிக்காட்டியது. ஆனால் புதுதில்லி யூனியன் பிரதேசத்துக்கு அற்பமான உறைவிட உத்தரவாதத்தை அளித்தபோது, தகவல்தொடர்பு வழிமுறைகள் தெளிவற்றதாகிவிட்டன.

அப்னிகட்சி பரிசோதனைகள் மேலெழுவதில் தோல்வியுற்றதால், இப்பொழுது தேசிய மாநாட்டு கட்சியுடன் ‘புதுதில்லி மேலும் கூடுதலான மோதல்களை தவிர்க்கும்;அவர்களை நடைமுறைக்கேற்றவாறு பயன்படுத்திக்கொள்ளும்’ என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், தேசியமாநாட்டுக்கட்சி குப்கார் பிரகடன மக்கள் கூட்டணியிலிருந்து விலகிச்செல்லுமா? ‘ஃப்ரண்ட் லைன்’ முன்பு ஏற்கெனவே தெரிவித்ததுபோல். முக்கியமாக “சுதந்திரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் சண்டைக்குணம் கொண்ட மெஹ்பூபாமுஃப்தி, தேசிய மாநாட்டுக்கட்சியின் நலன்களுக்கு தீங்கு விளைவிப்பவர் என்று அவர் உணர்ந்துகொண்டிருந்ததால் தான் , அந்தஅமைப்பு ஃபரூக் அப்துல்லாவால் உருவாகப்பட்டது” என்று ஒமர் அப்துல்லாவின் உள்வட்டத்திலிருந்த ஓர் உறுப்பினர் அந்த நேரத்தில் இந்தக்கட்டுரையாளரிடம் கூறியிருந்தார்.

முன்னரே தனதாக்கிக் கொண்ட மெஹ்பூபா
எப்போதெல்லாம் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் விடுவிக்கப்படுகிறாரோ, அப்போதெல்லாம் அவர்அரசின் ஆகஸ்ட் 5 நடவடிக்கைகளுக்கு எதிராக பெருமளவில் மக்களை தெருக்களில் அணிதிரட்டுவதற்கான தேவையை முன்வைப்பார் என்பதை அப்துல்லாக்கள் அறிந்திருந்தார்கள். அத்தகைய எந்த ஒரு இயக்கத்தையும் தங்களுக்கானதாக்கிக் கொள்வதில் கவனமாக இருந்தார்கள். தங்களது சீற்றம்கொண்ட கோபத்தை மக்கள் வெளிப்படுத்துகையில், மக்களோடு நின்றிருந்த மெஹ்பூபாவின் மதிப்பு கூடியபோது, அப்துல்லாக்களின் ‘அடையாளப் பூர்வ எதிர்ப்பு’ காஷ்மீர் மக்களின் இலட்சியத்தைக் கைவிட்டுவிட்டதுபோல காணப்பட்டது. அடிப்படைக் கூறுகளை மாற்றும் அரசியல் மீதான தங்களது தயக்கத்தை மறைக்கும் அப்துல்லாக்களின் கேடயமாக ‘குப்கார் பிரகடன மக்கள் கூட்டணி’  இருந்தது.

தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சிகளுக்கிடையே நடந்துவரும்  முரண்பாடான அரசியல் நடவடிக்கைகளை ஒருவர் ஆய்வுசெய்யும்போது, இந்த அரசியல் சச்சரவுகள் மெல்லிய கோபமூட்டுதலால்கூட  தன்னை மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ளும் என்பதை அவர் உணர்வார்.மெஹ்பூபா முஃப்தி தெருக்களில் தாக்கிக்கொண்டிருக்கிறார். மனோஜ் சின்ஹா நிர்வாகத்தால் வீடற்றவர்களாகிவிட்ட நமோத்களுடன் ஒருமைப்பாட்டைத் தெரிவித்து அடிக்கடி பல்வேறு இடங்களில் காணப்படுகிறார். அவர் இந்தப் பிரச்சனைக்கு அழுத்தம் கொடுத்து சுழன்றவாறே தனது கட்சியைமறுகட்டமைப்பதை தெளிவான நோக்கமாகக் கொண்டிருக்கிறார். இந்த முன்னாள் முதலமைச்சரின் நம்பிக்கைக்குரிய ஒருவர் இவ்வாறு ஒப்புக்கொள்கிறார். ‘அவரது மிகவும்அவசரமான கடமை கட்சியின் பிம்பத்தையும், ஆதரவுத்தளத்தையும் மீட்டெடுப்பதுதான். அடுத்த ஐந்தாண்டுகளில் அரசைக் கைப்பற்றுவது இயலாது என்பதை அவர் அறிந்திருக்கிறார். முக்கியமாக, இத்தகைய குழப்பமான ஒருதருணத்தில் முதலமைச்சர் ஆவதை அவர் விரும்பவில்லை’ 

அப்துல்லாக்களின் சூழ்நிலைகள்  வேறுவகையானவை. 2019 ஆகஸ்ட் 5 க்கு முன்பு, அதுவரை ஒரு மாநிலமாக இருந்த காஷ்மீரில் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியை தேசிய மாநாட்டுக்கட்சி பெறுவதுஉறுதியாகத் தோன்றியது. நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் அது கட்சிக்கு புதிய வரவான ஓய்வுபெற்ற நீதிபதி ஹாஸ்னென் மசூதியைக் கொண்டு, தெற்கு காஷ்மீரில் மெஹ்பூபா முஃப்தியின் வலுவான தொகுதியான அனந்த்நாக்கில் ஓர் அடியைக்கொடுத்து  மிகவும் வசதியாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள எல்லா மூன்று இடங்களையும் வென்றிருந்தது. கடந்த 15 மாதங்களில் பாஜக ஒரு செங்குத்தான பிளவை மக்கள் ஜனநாயகக் கட்சியில் வெற்றிகரமாக உருவாக்கியபோது, தேசிய மாநாட்டுக்கட்சி தனது கட்சியினரை ஒருசேரப் பாதுகாப்பதை சாத்தியப்படுத்தியிருந்தது. 

தேசிய மாநாட்டுக்கட்சியின் தலைவர்களுடனான ஒரு தனிப்பட்ட உரையாடல், ‘கட்சி சிறுகச்சிறுக புதுதில்லியை ஆத்திரமூட்டாமல் எதிர்கொள்வதற்கான தருணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருப்பதை’ வெளிப்படுத்தியது. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை வெல்வது, அதற்கு அதிகாரமளிக்கும் தீர்மானங்களை நிறைவேற்றுவது, தற்போதைய ஆட்சியை மாற்றியமைக்கும் குறைவான பகைமை உள்ள அரசு அமையும்வரை காத்திருப்பது ஆகியவை அவர்களது கணக்கீட்டில் உள்ள முக்கியமான கூறுகள் ஆகும். தகவலறிந்தவர்கள் தெரிவித்த ஆதாரங்களின்படி, தேசிய மாநாட்டுக்கட்சியின் உள்ளரங்கக் கூட்டங்கள் ஒன்றில் ஃபரூக் அப்துல்லா அதிருப்தியாளர்களுக்கு ‘ஒன்று கட்சிக்கு பணிந்து நடந்துகொள்ளுங்கள் அல்லது வெளியேறுங்கள்’ என ஒருதெளிவான எச்சரிக்கையை விடுத்துள்ளார். 

தேசிய மாநாட்டுக்கட்சி தனிப்பட்டமுறையில், ‘காஷ்மீரில் உள்ள எந்த ஒருகட்சியும் புதுதில்லியுடனான தனது உறவை சரிசெய்துகொள்ளாமல், ஒப்புக்கொள்ளப்பட்ட பகுதிகளில் இணைந்து பணியாற்ற முடிவெடுக்காமல் ஓர் அரசை அமைத்துவிட முடியாது’ என்பதை ஒப்புக்கொள்கிறது. பல மூத்த தலைவர்களின் யூகங்களுடன், தேசிய மாநாட்டுக்கட்சி அணியினரிடம் ஓர் ஊக விளையாட்டு தொடங்கிவிட்டது: ‘ஒமர் அப்துல்லா பேசிக்கொண்டிருக்கிறாரா (புதுதில்லியிடம்)?’தேசிய மாநாட்டுக்கட்சிக்குள்ளிருந்து வரும் குரல்களைநம்புவோமானால், ஒமர் அப்துல்லா, மத்திய அரசுடன் தொடர்பில் உள்ள கட்சியின் சீக்கியர் தலைவர் ஒருவர் மூலம்புதுதில்லியுடன் பேசிக்கொண்டிருக்கலாம். தேசிய மாநாட்டுக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் ‘ஃப்ரண்ட்லைனி’டம், ‘ஒமர், குப்கார் பிரகடன மக்கள் கூட்டணியின் கூட்டங்களில் அதிகமாக பேசுவதில்லை’ என்று கூறினார்.

அந்த மூத்ததலைவர் ‘ஒமரின் தனிப்புநிலை அவர் வேறு எங்கோ இணையான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார் என்பதற்கான அறிகுறி’ என்று பார்க்கிறார்.எவ்வாறாயினும், ‘கட்சியின் செல்வாக்கு மிக்க இளம்தலைவர் சல்மான் சாகர், கூட்டணி சிறுசிறு பகுதிகளாக சிதறிவிடாது’ என உறுதிப்படுத்துகிறார். “ஏதாவது தேர்தல் நடக்குமா என்று நாங்கள் விழிப்புடன் இல்லாத நேரத்தில், இந்தக்கூட்டணி, ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு மாறாக,ஜம்மு-காஷ்மீரிடமிருந்து ஒருதலைப்பட்சமாக எவையெல்லாம் பறிக்கப்பட்டனவோ, அவற்றையெல்லாம் மீண்டும் நிலை நிறுத்துவதற்காகவே அமைக்கப்பட்டது”.மிகச்சிறந்த அறிஞரும், அரசியல் விமர்சகருமான சித்திக் வாகித், “குப்கார் பிரகடன மக்கள் கூட்டணியின் நம்பகத்தன்மை, அதன் (மாவட்ட வளர்ச்சிக்குழு) வெற்றியைத்தொடர்ந்து அடுத்துவரும் நாட்களில் பரிசோதிக்கப்படும்” என்று கூறினார். “தனிப்பட்ட புகழைத் தேடும் தூண்டுதல்களை தடுத்து நிறுத்துவது குப்கார் கூட்டாளிகளின் தவிர்க்கமுடியாத கடமை ஆகும். தேசிய மாநாட்டுக்கட்சி  ஒரு மிதமான சக்தியாக செயல்படும்போது, மக்கள் ஜனநாயகக்கட்சிதீவிரமான அரசியலில் வேர் கொண்டுள்ளது என்பதை எவராலும் உணரமுடியும்.

இவை இரண்டும் உருவாகும் பதற்றத்திலிருந்து விடுபடவேண்டிய தேவை உள்ளது.”.மெஹ்பூபா முஃப்தியின் நெருக்கமான உதவியாளர் ஒருவர் எச்சரித்தார்: “எவர் ஒருவர் குப்கார் பிரகடன மக்கள் கூட்டணியிலிருந்து (PAGD) விலகினாலும், அவர் தனது சொந்த அழிவை நோக்கி அவ்வாறு செய்தவராவார்: ஏனெனில், பொதுமக்களுக்கான அவரது  நிலைபாடு பொய்த்துப்போகும்.” அது உண்மையாக இருக்கும்போதே, வேறு பலகடுமையான கருத்துக்களையும் தேசிய மாநாட்டுக் கட்சி எதிர்கொண்டுள்ளது. அவர்கள் புதுதில்லியுடனான பிளவுகளை மட்டுப்படுத்தாவிட்டால், மோடி அரசு ஜம்மு-காஷ்மீரை மீண்டும் பிரித்து தனிப்பட்ட ஜம்மு மாகாணத்துக்கு மாநில அந்தஸ்து கொடுத்துவிட்டு, காஷ்மீரை தனது நேரடிக்கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிடும் என்ற அச்சம் தேசிய மாநாட்டுக் கட்சிக்குள் எழுந்து வருகிறது. அது நடந்துவிடுமானால், காஷ்மீர் ஒரு நீண்டகாலத்துக்கு சபிக்கப்பட்டதாகிவிடும். ஜம்மு-காஷ்மீர் பிரச்சனைகள் தொடர்பான காங்கிரஸின் தள்ளாட்டங்கள், அதுமீண்டும் அதிகாரத்துக்கு திரும்பி வருமானால், முஸ்லீம் பெரும்பான்மை பள்ளத்தாக்குக்கு தயாளகுணத்தைக் காட்டுவதற்கு மாறாக உண்மை அரசியலையே அது விரும்பிஎடுத்துக்கொள்ளும் என்பதை வெளிப்படுத்துகின்றன. 

தேசிய மாநாட்டுக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஒருமித்தகுரலில், படிப்படியான எதிர்ப்பு என்ற அவர்களின் வியூகம் ஒன்று மட்டுமே நடைமுறை சாத்தியமானதும், பொருத்தமானதுமான தேர்வாகும் என்கிறார்கள். ஆனால், பல கேள்விகள் எஞ்சியுள்ளன: நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கான வரையறைகளை ஏற்படுத்துவதற்கு பாஜக என்ன விலையை கட்டாயப்படுத்திப் பெற்றுக்கொள்ளும்? ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கான போராட்டங்களை கைவிடவேண்டும் என்பதை உள்ளடக்கியிருக்குமா? பாஜக நம்பிக்கைக்கு உரியதுதானா? 

===அனந்தோ பக்டோ===

 நன்றி:  ஃப்ரண்ட்லைன் 2021 ஜனவரி 15, 

தமிழில்: செ.நடேசன்

;