articles

img

தொற்று பரவல் தடுப்பு - தடுப்பூசி விநியோகம் - நிவாரணம் எதிலும் முன்னேற்றம் இல்லை.... மரணத்தின் வாசலுக்குத் தேசத்தைத் தள்ளுகிறது மோடி அரசு...

கடந்த வாரம் திங்கள்கிழமையன்று இந்தியாவின் தினசரி கோவிட்-19 நோயாளிகளின் ஒரே நாள் எண்ணிக்கை 103,558 ஆக உயர்ந்தது. இந்த எண்ணிக்கை மிகப் பெரிய அதிகரிப்பாக இருப்பதாக அதிர்ச்சி ஏற்பட்டது. இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து இதுவரையிலும் பாதிக்கப்பட்டுள்ள மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை இந்த அதிகரிப்பின் மூலம் 1.2 கோடி என்பதாக உயர்ந்துள்ளதன் விளைவாக கோவிட்-19 நோயாளிகள் 1.3 கோடி என்ற எண்ணிக்கையில் உள்ள பிரேசிலுக்கு சற்றே அடுத்த நாடாக இந்தியா மாறியுள்ளது.

இந்த எண்ணிக்கையை அடைந்ததன் மூலம் இருபத்தி நான்கு மணி நேர கால அளவில் லட்சம் என்ற ஆறு இலக்க எண்ணிக்கையில் புதிய கோவிட்-19 நோயாளிகளைக் கொண்ட அமெரிக்காவைத் தவிர்த்த ஒரே நாடாக இந்தியாஇருக்கிறது (பிரேசிலில் கடந்த மாத இறுதியில் இருபத்தி நான்கு மணி நேர கால அளவில் 80000 என்ற எண்ணிக்கையில் புதிய கோவிட்-19 நோயாளிகள் உருவாகியிருந்தனர்). நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாவதற்கான கால அவகாசம் இப்போதிருப்பதை விட (17 நாட்கள்) தொற்றுநோயின் முதல் உச்சத்தை சென்ற ஆண்டு செப்டம்பரில் இந்தியா நெருங்கிய போது இருந்த (32 நாட்கள்) நாட்கள் கூடுதலாக இருந்ததாக அறியப்படுகிறது.       

‘தடுப்பூசி’ செலுத்தும் வேகம் குறைவு
மெதுவாக ஆரம்பித்திருக்கும் தடுப்பூசி இயக்கத்திற்கு இணையாக இந்தியாவில் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்று அதிகரிப்பு நிகழ்ந்திருக்கிறது. ஏப்ரல் 5 காலை 9:50 மணி நிலவரப்படி அதுவரையிலும் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகியதடுப்பூசிகள் 7.9 கோடி எண்ணிக்கை என்ற அளவிலே இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாது இந்த உலகம் முழுவதையும் பரந்தஅளவில் கருத்தில் கொள்ளும் போது, கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒரே நாளில் 99,000 புதிய நோயாளிகள் என்ற அளவிலே ஏற்பட்டிருந்த உச்சத்தை சிறிதாக்கி காட்டுகின்ற வகையிலே நோய் பரவலின் ‘இரண்டாவது அலை’யின் போது ஏற்படப் போகின்ற தினசரி நோய்த்தொற்றுகள் அச்சுறுத்துகின்ற நிலை இருப்பதால் தடுப்பூசி செலுத்தப்படுகின்ற இந்த வேகம் போதுமானதாக இருக்காது என்றே வல்லுநர்கள் கருதுகின்றனர்   

எடுத்துக்காட்டாக பொருளாதார வல்லுநர் ஸ்ருதி ராஜகோபாலன் ‘தடுப்பூசிகளின் தேவை உள்நாட்டு உற்பத்தித் திறனைக் காட்டிலும் கூடுதலாக இருக்கக் கூடியதொரு நிலைமையை இந்தியா விரைவிலேயே எட்டக்கூடும், அதன் விளைவாக அனைத்து இடங்களிலும் உள்ள மக்கள் நீண்டகாலத்திற்கு தொற்றுநோய்க்கு ஆளாக நேரிடும்’ என்று ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்காக எழுதியுள்ளார்.    ‘பிற நாடுகளில் பயன்பாட்டில் இருந்து வருகிற ஃபைசர்,மாடர்னா போன்ற நிறுவனங்களின் தடுப்பூசிகள் மற்றும் எளிதான, ஒரே தடவையில் போடப்படுகின்ற ஜான்சன்&ஜான்சன் தடுப்பூசி போன்ற சில தடுப்பூசிகளுக்கான ஒப்புதலை விரைந்து வழங்குவதே அரசாங்கம் செய்ய வேண்டிய முதல் காரியமாக உள்ளது. ஒருவேளை தடுப்பூசி உற்பத்தியை அந்த நிறுவனங்களால் விரைவில் விரிவுபடுத்த முடியாவிட்டால், அந்த நிறுவனங்களின் தடுப்பூசிகளை இந்தியாவில் தயாரிப்பதற்கான உரிம ஒப்பந்தங்களுக்கான பணிகளைஅரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்’ என்று ஸ்ருதி ராஜகோபாலன் குறிப்பிடுகிறார். மேலும் ‘கோவிஷீல்ட் தயாரிப்பாளர்களான அஸ்ட்ராஜெனிகா / சீரம் நிறுவனம், கோவாக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்கள் தனியார் சந்தையில் தங்களுடைய தடுப்பூசிகளை விற்பதற்கும் இந்திய அரசு அனுமதிக்க வேண்டும்’ என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.  

கவலைக்குரிய போக்குகள்
நாட்டின் தொற்றுநோய் நிலைமை குறித்து அறிவதற்காக ஏப்ரல் 4 அன்று பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்டக் கூட்டம் ஒன்றை நடத்தினார். ‘அந்தக் கூட்டத்தில் பிரதமர் அலுவலகம், சுகாதார அமைச்சகம், உயிரி தொழில்நுட்பத் துறை, நிதிஆயோக் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்? இந்த நெருக்கடியைக் கையாள்வதற்கு நமது சுகாதாரஉள்கட்டமைப்பு தற்போது எந்த அளவிற்குத் தயாராக இருக்கிறது, நமது அமைப்பால் சமாளிக்க முடியாத அளவிற்கு நோய்பரவல் அதிகமாகி விடாமல் இருப்பதை உறுதி செய்ய இன்னும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று அவர்கள்விவாதித்தனர்’ என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. வார இறுதியில் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் ‘நோயாளிகள், இறப்புகள் அதிக எண்ணிக்கையிலே இருப்பதைக் கருத்திலே கொண்டு பொதுசுகாதார நிபுணர்கள், மருத்துவர்களைக் கொண்ட மத்திய குழுக்களை மகாராஷ்டிராவிற்கு அனுப்ப வேண்டும், அதேபோன்ற குழுக்கள் பஞ்சாப், சத்தீஸ்கருக்கும் அனுப்பப்பட வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டுள்ளார்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.    

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி கடந்த இரண்டு வாரங்களில் புதிதாக உருவான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் 57%, இறப்புகளில் 47% பங்களிப்பு செய்துள்ள மகாராஷ்டிரா மாநிலம் ஏப்ரல் 5 முதல் பொது முடக்கத்தை விதிக்கத் தீர்மானித்துள்ளது. அடுத்து மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலமாக கேரளா இருந்தாலும் இதுவரையிலும் 11 லட்சம் நோயாளிகள் என்ற அளவிலே மகாராஷ்டிராவுக்கு மிகவும் பின்னால் அந்த மாநிலம் இருந்து வருகிறது. இதுபோன்ற கவலைக்குரிய போக்குகள் நிலவி வருவதை நாட்டின் பிற பகுதிகளும் காட்டுகின்றன. ராய்ட்டர்ஸ் செய்திக் குறிப்பு ‘தேசிய அளவிலான இறப்புகள் 478 ஆகஉயர்ந்துள்ள போதிலும், அது இன்னும் உலகின் மிகக் குறைந்த இறப்பு விகிதங்களில் ஒன்றாகவே இருக்கிறது’ என்று கூறுகிறது என்றாலும் கடந்த வாரத்தில் மட்டும் சத்தீஸ்கரில் உள்ள துர்க் பகுதியில் 6,000 புதிய நோயாளிகள், 38 இறப்புகள் பதிவாகியுள்ளன. உள்ளூர் மருத்துவமனையில் 500 படுக்கைகள், சவக்கிடங்கு, எட்டு ஃப்ரீசர்கள் மட்டுமே இருப்பதாக என்டிடிவி தெரிவித்துள்ளது. நிலைமையைச் சமாளிப்பதற்காக உள்ளூர் மருத்துவர்கள் கோவிட்-19 அல்லாத நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ சேவைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வது குறித்து ஏற்கனவே ஆலோசித்து வருகின்றனர். 

பாதிப்பு விகிதம் அதிகரிப்பு    
சிறப்பு பராமரிப்பு தேவைப்படுபவர்களுக்கான மருத்துவமனை படுக்கைகள்  பற்றாக்குறையுடன் இருப்பது குறித்து தில்லி, சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் உள்ள சுகாதார அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள். தேசிய அளவிலே தொற்றுநோய்க்கான பரிசோதனையில் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டவர்கள் விகிதம் மார்ச் 20 அன்று 3.9% ஆக இருந்தது. அந்த விகிதம் ஏப்ரல் 3 அன்று 8% என்று அதிகரித்திருப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்ள்ளது.      

புதிய கொரோனா வைரஸின் பிறழ் வடிவங்கள் மக்களிடையே பரவி வருவதாலும், அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி, பாரத் பயோடெக்கின் கோவாக்சின் குறித்து சமீபத்தில் எழுந்திருக்கும் சந்தேகங்களாலும் தொற்றுநோய் குறித்த கவலைகள் மேலும் அதிகரித்திருக்கின்றன.  ஜூலை மாதத்திற்குள் முப்பது கோடி மக்களுக்கு தடுப்பூசிபோட வேண்டும் என்ற இலக்கை ஜனவரி 16 அன்று இந்தியாவில் தடுப்பூசி இயக்கம் தொடங்கிய போது அரசாங்கம் நிர்ணயித்தது. தற்போது அதற்கான சாத்தியம் இருக்கவில்லை. தளவாடச் சிக்கல்கள், அதிகரித்து வருகின்ற பிற கடமைகள் போன்றவற்றைத் தவிர்த்து, கோவாக்சினுக்கான ஒப்புதல், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதகமான நிகழ்வுகளை (AEFI) அரசு கையாண்ட விதம் குறித்து தடுப்பூசி பெறுபவர்களிடையே கணிசமான அளவிலே தயக்கம் இருப்பதாக அரசாங்கம் ஒப்புக் கொண்டிருக்கிறது.

 வெளிப்படைத் தன்மை அவசியம்
குறிப்பிட்ட கோவிட்-19 தடுப்பூசிகளால் ஏற்படக் கூடிய அரிய ஆபத்துகளுடன் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ளஅதிகாரிகள் சமமான செயல்திறன், உறுதியுடன் தொடர்பு கொள்வது எளிதானதல்ல என்று கோக்ரேன் கூட்டுறவு அமைப்பின் ஸ்தாபக உறுப்பினரான ஹில்டா பாஸ்டியன் மார்ச் 30 அன்று தி அட்லாண்டிக் பத்திரிகையில் எழுதியுள்ளார். தடுப்பூசி போடுவதால் சாத்தியமான, அரிதான பக்கவிளைவுகள் குறித்த நுணுக்கமான விவரங்களை அதிகாரிகள் மிகவும் ரகசியமாகவே வைத்திருந்தாலும் தடுப்பூசி குறித்த தயக்கம் பொதுமக்களிடம் ஏற்படவே செய்யும் என்ற அவரது கருத்து குறிப்பிடத்தக்கதாக உள்ளது. அவர் அதனாலேயே வெளிப்படைத்தன்மை முக்கியமானதாகிறது என்கிறார். 

‘விரைவிலேயே ஒரு கட்டத்தில் பாதிப்புகளுக்கு தடுப்பூசிகாரணம் இல்லை என்று நிறுவப்படும் அல்லது உரிய சிகிச்சைகளைக் கொண்டு நிலைமை சமாளிக்கப்படக் கூடும். ஒழுங்குமுறைப்படுத்துபவர்கள் அவ்வாறு நிகழும் வரையிலும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வதற்கு அமைதி, முன்னோக்கு, வெளிப்படைத்தன்மையைப் பராமரித்திட வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே அவர்கள் மிகவும் நிதானமாக நடந்து கொண்டு இந்த நிலைமையுடன் உள்ளவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கை எட்டும் வரை எதையும் சொல்லவோ அல்லது செய்யவோ காத்திருந்தார்கள் என்பதாகக் கற்பனை செய்து பாருங்கள்... தடுப்பூசி சார்ந்த அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் தங்களுடைய சமூக விழுமியங்களுடன் ஒத்துப் போயிருக்கவில்லை என்றால்,  இந்த வெளிப்படைத்தன்மையே அவர்களுக்கு குறைகளைக் கண்டறிவதற்கு உதவக் கூடும்’.

நோய்த் தடுப்புக்கு பிந்தைய பாதிப்பு         
பிப்ரவரி 26க்குப் பிறகு இந்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் அன்றாட AEFI அறிக்கைகளைப் பகிர்ந்து கொண்டிருக்கவில்லை. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஏற்பட்ட எட்டு பாதகமான நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டதொரு குறிப்பை (Z.16025/02/2018-IMM) சுகாதாரஅமைச்சகத்தின் நோய்த்தடுப்பு பிரிவு அதற்குப் பின்னர் மார்ச் 17 அன்று வெளியிட்டது. அந்த எட்டில் நான்கு ‘தற்செயலானது’ என்றும்,  ஒன்று ‘வகைப்படுத்த முடியாதது’ என்றும் மற்றமூன்றும் பி1 வகை சார்ந்தது என்றும் துணைக்குழு தீர்மானித்திருந்தது. ‘காரணிகளை மறுஆய்வு செய்வது நோய்த்தடுப்புக்கு காரணமானவற்றுடன் பொருத்தமான, பொருத்தமற்ற என்று முரண்பாடான போக்குகளை அடைவதாக இருக்கிறது’. 

மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்கள், குழுவின் உறுப்பினர்கள் மற்றும் இந்த எட்டு பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் கருத்தில் கொள்ளப்பட்டு மற்றவர்கள் ஏன் கருத்தில் கொள்ளப்படவில்லை, என்ன விவரங்கள் பரிசீலிக்கப்பட்டன என்பது உள்ளிட்ட எந்த விவரங்களும் கிடைக்கவில்லை. தடுப்பூசிக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட 8 பேரும் கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றவர்களாக இருந்த நிலையில், அந்த எட்டு பேருக்கிடையே பொதுவான தொடர்பு எதுவும் இருந்ததாகக் கண்டறியப்படவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. (தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவர்களின் வயது 36 முதல் 61 வயது வரை இருந்தது; அவர்கள் அவுரங்காபாத், பெல்லாரி, பெலகாவி, ஹர்தா, மான்சேரியல், பிலிபித், சரண், தானே ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள்) கோவிஷீல்ட் தடுப்பூசி செயல்பாட்டை இடைநிறுத்தி வைப்பதற்கான எந்தவொரு திட்டமும் இந்தியாவிடம் இல்லை என்று குவார்ட்ஸ் மார்ச் 18 அன்று அறிக்கை அளித்திருந்தது.  
ஆனால் மறுபுறத்தில் குருதியியலுக்கான பிரிட்டிஷ் கழகத்துடன் (பிரிட்டிஷ் சொசைட்டி ஃபார் ஹீமாட்டாலஜி) இணைந்த ஆய்வுக்குழுவைச் சார்ந்த ஆய்வாளர்கள் சிறந்த வரையறைகளை வழங்குகின்ற ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளர். ஐரோப்பாவில் கவலைகளை ஏற்படுத்திய அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியைப் பெற்றவர்கள் தங்களுக்கு இருப்பதாகத் தெரிவித்த அசாதாரண ரத்த உறைதல் தொடர்பான பக்க விளைவுகளை எவ்வாறு கையாளுவது என்பதை அந்தக் குழுவினர் பரிந்துரைத்திருந்தனர். இதுபோன்று ஐரோப்பா, கனடாவின் மதிப்பீடுகளும் விரிவாக, வெளிப்படையாகவே இருக்கின்றன. 

பிரேசிலின் நிராகரிப்பு
கோவாக்சினும் சிக்கலில் இருக்கிறது. பிரேசிலின் மருந்து கட்டுப்பாட்டாளர் பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய ஆய்வகங்களில் தடுப்பூசிகளுக்கான சிறந்த உற்பத்தி முறைகளைப் பின்பற்றவில்லை என்று தீர்மானித்தார். கடந்தவாரம் விநியோகிப்பதற்காக கோவாக்சினை இறக்குமதி செய்வதற்கான பாரத் பயோடெக் நிறுவனத்தின் விண்ணப் பத்தை அவர் நிராகரித்தார்.   

தடுப்பூசி திரவத்தில் ஏற்றுவதற்கு முன்பாக வைரஸை செயலிழக்கச் செய்வதற்காக பாரத் பயோடெக் நிறுவனம் பயன்படுத்திய செயல்முறை, அந்த நோக்கத்தை நிறைவேற்றுகின்ற வகையில் இருக்கிறதா என்பதைச் சரிபார்க்கத் தேவையானவற்றை பாரத் பயோடெக் நிறுவனம் செய்யவில்லை என்பது முக்கிய புகார்களில் ஒன்றாக இருந்தது. பிற தடுப்பூசிகளைக் காட்டிலும் - குறிப்பாக செயலிழக்கச் செய்யும் செயல்பாட்டிலிருந்து கிடைக்கின்ற நன்மைகளைக் கொண்டிருப்பதால் - கோவாக்சின் போன்ற செயலற்ற வைரஸ் தடுப்பூசிகள் முக்கியமானவையாக உள்ளன. 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதொரு ஆய்வறிக்கையில் ஆய்வாளர்கள் இவ்வாறு எழுதியுள்ளனர்; (பிரியங்கா புல்லாவுக்கு எழுதிய குறிப்பு): “உயிருடன் வலுகுன்றச் செய்யப்பட்ட வைரஸ் தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது இன்றுவெற்றிகரமாக உருவாக்கப்பட்டு சந்தையில் இருக்கின்ற செயலிழக்கச் செய்யப்பட்ட வைரஸ் தடுப்பூசிகள் அதிக பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன. அவை முற்றிலும் செயலிழந்துவிட்ட நோய்க்கிருமிகளாக இருப்பதால் தடுப்பூசி பெறுபவருக்குள் மீண்டும் வீரிய குணம் கொண்டதாக மாறுவதற்கான மாற்றம் அந்த வைரஸிற்கு நேரடியாகவே மறுக்கப்படுகிறது. செயலிழக்கச் செய்யப்பட்ட இந்த தடுப்பூசிவைரஸ்கள் உயிருடன் வலுகுன்றச் செய்யப்பட்ட வைரஸ் களைப் போன்று மீண்டும் பரவுவதாக இருப்பதில்லை… அதிகப் பாதுகாப்பு கொண்ட இந்த செயலிழக்கச் செய்யப்பட்ட தடுப்பூசிகள் விரைவாக அதிகரித்து வருகின்ற நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்களுக்கும் பொருத்தமானவையாகவே உள்ளன.   

இவ்வளவு அதிகமான பாதுகாப்பைப் பெறுவதற்கு - செயலிழப்பு செய்யப்பட்ட தடுப்பூசி தயாரிப்பதற்கு - வைரஸைச் செயலிழக்கச் செய்வதற்கான பகுப்பாய்வுகள் மிக முக்கியமானவை. செயலற்ற தன்மையின் இயக்கவியல் முழுமையாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். செயலற்ற தன்மையின் முழுமையை அறிந்து கொள்ள திறன்கொண்ட செயலிழக்கத்திற்கான சோதனைகள் சரிபார்க்கப்பட வேண்டும், அவற்றின் உணர்திறன், வலுவான தன்மையைப் பொறுத்து நன்கு வகைப்படுத்தப்பட வேண்டும்”. 

மறு ஆய்வு செய்ய கோரிக்கை
பிரேசிலின் குற்றச்சாட்டிற்குப் பதிலளித்த தனித்து இயங்கி வருகின்ற அறிவியலாளர்களும், பிற நிபுணர்களும் இந்திய அரசாங்கமே பாரத் பயோடெக்கில் இருக்கின்ற தடுப்பூசிஉற்பத்தி வசதிகளை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றுகோரிக்கை விடுத்துள்ளனர். அந்த நிறுவனம் இந்தியாவுக்குள் 2021 ஆகஸ்ட் மாதத்திற்குள் 12 கோடி தடுப்பூசிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்கம் ஏற்கனவே கூறியுள்ளது. (ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த நிறுவனங்களின் வசதிகளை பிரதமர்மோடி பார்வையிட்ட பிறகு இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் கோவாக்சின், கோவிஷீல்ட் என்று இரண்டு தடுப்பூசிகளையும் இந்திய தடுப்பூசி இயக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் அளித்தார்).  

மக்கள் தொகையில் புழக்கத்தில் இருந்து வருகின்ற புதிய கொரோனா வைரஸ் வகைகள் இறுதி முள்ளாகத் தைக்கின்றன. கடந்த வாரம் தி வயர் இணைய இதழிடம் ‘மகாராஷ்டிராவில் நோயாளிகளின் எண்ணிக்கை  அதிகரிப்பதற்கான காரணமாக ‘இரட்டைப் பிறழ்வு’ உயிரி இருக்கக் கூடும் என்று கூறிய வைரஸ் நிபுணரான ஷாஹித் ஜமீல், ‘ஏற்படுகின்ற ஒரு பிறழ்வு அதை அதிகம் தொற்றுவதாகவும், மற்றொரு பிறழ்வு அஸ்ட்ராஜெனிகா, ஜான்சன்&ஜான்சன் மற்றும் நோவாவாக்ஸ் தடுப்பூசிகள் வழங்கிய பாதுகாப்புகளைத் தவிர்க்கவும் உதவுகின்றன’ என்று குறிப்பிட்டிருந்தார். 

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளில் இருந்து வைரஸ் மரபணுக்களை வரிசைப்படுத்துவதற்கான இந்திய முயற்சி எதிர்பார்த்ததை விட மெதுவாக முன்னேறி வருகின்ற நிலையில், எதிர்பார்த்த தரமின்றிஇருக்கின்ற தடுப்பூசிகள் குறித்த கேள்விகளை எதிர்கொள் ளும் அரசியல் தலைவர்கள் வைரஸ் திரிபுகளை நோக்கி தங்கள் விரலைக் காட்ட முனைகிறார்கள்.

கட்டுரையாளர் : வாசுதேவன் முகுந்த்

நன்றி: வயர் இணைய இதழ், தமிழில்: தா.சந்திரகுரு

                                ########################

இரண்டாவது அலையும் மத்திய அரசின் பாராமுகமும்!

வைரசின் புதிய பரிணாமம்!
எந்த ஒரு உயிரினத்தின் பரிணாமத்தில் நடப்பது போலவே கோவிட் வைரஸ் கிருமியும் சில மரபணு மாற்றங்களுக்கு உட்படுகிறது. இந்த மாற்றங்கள் சில சமயங்களில் வைரசின் புதிய வடிவத்தை உருவாக்குகிறது. இந்த புதிய வடிவம் பழைய வடிவத்தைவிட வீரியம் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கலாம். வீரியம் அதிகம் உள்ள கீழ்கண்ட சில வடிவங்கள் உருவாகியுள்ளன:

பிரிட்டன்- B.1.1.7.

தென் ஆப்பிரிக்கா- B.1.351

பிரேசில்- P1.

இவற்றில் எந்த வடிவங்கள் இந்தியாவில் நுழைந்துள்ளன என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக பஞ்சாபில் B.1.1.7. வடிவம் பரவிக்கொண்டுள்ளது என மாநில அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் மிக அதிக பரவலுக்கு முழுமையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. எனினும் இந்த மாநிலத்தில் இரண்டு வைரஸ் வடிவங்கள் ஒன்றிணைந்து புதிய வடிவம் பெற்றுள்ளது எனவும் இதற்கு B.1.617. என பெயரிடப்பட்டுள்ளதாகவும் பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன. இந்த புதிய வடிவங்கள் உடலில் உள்ள இயற்கையான அல்லது தொற்று காரணமாக உருவான எதிர்ப்பு சக்தியை ஏமாற்றிவிடுகின்றன எனும் கவலை தரும் செய்திகளும் உள்ளன. மேலும் இந்தியாவில் அமலாக்கப்படும் தடுப்பூசிகள் முழுமையாக இந்த புதிய வடிவங்களை எதிர்கொள்ளும் சக்தி படைத்தவைதானா என்பதும் கண்டறிய முயற்சிகள் நடந்து வருகின்றன.

மாநிலங்களுக்கு நிதி எங்கே?
தனது உரையில் எந்த இடத்திலும் பிரதமர் மாநில அரசாங்கங்களுக்கு உதவி செய்வது குறித்தோ அல்லது நிதி உதவி அளிப்பது பற்றியோ ஒரு வார்த்தை கூட கூறவில்லை. தடுப்பூசி உற்பத்தி அதிகரிப்பது பற்றியும் எதுவும் சொல்லவில்லை. இரகசிய விவரங்களை கொண்ட தணிக்கைக்கு அப்பாற்பட்ட தனது பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து கூட உதவிட முன்வரவில்லை. தொற்றை எதிர்கொள்வதில் முன்னே நிற்பது மாநில அரசாங்கங்கள்தான்! அவர்கள் சந்திக்கும் மருத்துவ அல்லது நிதியாதார தேவைகள் குறித்து பிரதமர் வாய்திறக்கவில்லை. மாநில அரசாங்கங்களும் மத்திய அரசாங்கமும் இணைந்து நின்று வைரசை வெல்ல வேண்டும் எனும் முனைப்பு பிரதமருக்கு இருப்பதாக அவரது உரை வெளிப்படுத்தவில்லை.

தடுப்பூசி அரசியல்!
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 100 கோடி பேருக்கு தடுப்பூசி போட 200 கோடி குப்பிகள் தேவை! இதுவரை சுமார் 8 கோடி பேருக்கு முதல் சுற்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அடுத்த 10 மாதங்களில் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்றாலும் ஒரு நாளைக்கு சுமார் 32 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும். ஆனால் இதுவரை சராசரியாக 10 லட்சம் பேருக்குதான் போடப்பட்டுள்ளது.  இந்த சராசரி வேகத்தில் நகர்ந்தால் இந்தியாவின் 100 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த 3 ஆண்டுகள் ஆகும். கேரளம்/சட்டீஸ்கர்/குஜராத் ஆகிய மாநிலங்களில் 10% பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். ராஜஸ்தான்/இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் 9% பேருக்கு போட்டுள்ளன. தமிழகத்தில் 4% பேருக்குதான் செலுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை உ.பி./  பீகார் ஆகிய மாநிலங்களில் 3% என குறைந்த அளவாக உள்ளது. 
இதனிடையே தடுப்பூசி வழங்குவதில் மாநிலங்களுக்கிடையே பாரபட்சம் காட்டப்படுகிறது எனும் குற்றச்சாட்டு வலுவாக முன்வந்துள்ளது. மகாராஷ்டிராவின் மக்கள் தொகை 12.3 கோடி. சிகிச்சையில் உள்ள கோவிட் நோயாளிகள் 4.32 இலட்சம். தடுப்பூசிகள் 85 இலட்சம் தரப்பட்டுள்ளது. குஜராத்தின் மக்கள் தொகை 6.5 கோடி. நோயாளிகள் 20,000க்கும் குறைவு. ஆனால் தரப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 80 இலட்சம். அமெரிக்கா 6 கோடி பேருக்கு இரு சுற்று தடுப்பூசி போட்டுள்ளது. ஆனால் அது ஏற்றுமதி செய்தது பூஜ்யம். இந்தியா ஒரு கோடி பேருக்குதான் இரு சுற்று தடுப்பூசி போட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் தடுப்பூசி ஏற்றுமதி எண்ணிக்கை 6 கோடி! தடுப்பூசி பிரச்சனையில் மோடி அரசாங்கம் சரியாக திட்டமிடவில்லை என்பது தெளிவாகிறது. 

தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக ஒடிசாவில் 700 தடுப்பூசி மையங்களும் மும்பையில் 26 மையங்களும் மூடப்பட்டுவிட்டன. பல மாநிலங்களிலும் இதே நிலைதான் உள்ளது. தமிழகத்திலும் கோவை போன்ற பல நகரங்களில் தடுப்பூசி கிடைக்கவில்லை என பலரும் சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

கட்டுரையாளர் :  அ.அன்வர் உசேன் 

;