articles

img

இந்திய வரலாற்றில் ஒப்பிட முடியாத நிகரற்ற இயக்கம்.....

மார்ச் 6 அன்று, வரலாறுபடைத்துள்ள விவசாயிகள் போராட்டம் தன் நூறாவது நாளை நிறைவு செய்கிறது. பல்வேறு வகைகளில் இது குறிப்பிடத்தக்கதாகும். சுதந்திரம் பெற்றபின் நடைபெற்ற விவசாய இயக்கங்களில் இது மிகவும் பெரிய விவசாய இயக்கமாகும். உண்மையில் இது நாட்டின் அனைத்துப் பகுதி விவசாயிகளையும் உள்ளடக்கிய ஓர் இயக்கமாகும். மேலும் நாட்டில் மிகவும் பெரிய அளவில் ஒன்றுபட்ட ஜனநாயக இயக்கமுமாகும். 

பன்முகத்தன்மை வாய்ந்த பல்வேறு விவசாய சங்கங்கள் (சுமார் 500) இதில் அங்கம் பெற்றிருக்கின்றன. இவை அனைத்தும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இதுவரை ஒற்றுமையுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதற்கு முன்பெல்லாம் நீண்டகாலம் நடைபெற்ற இயக்கங்களில் வித்தியாசங்கள் முளைத்ததைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த இயக்கத்தில் அது காணப்படவில்லை. இத்தகையதொரு மாபெரும் அகில இந்திய இயக்கம் முற்றிலும் அமைதியான முறையில் நடந்துகொண்டிருக்கிறது.  

“அமைதி நிலவுமானால் விவசாயிகள் வெற்றி பெறுவார்கள், வன்முறை நிகழுமானால் மோடி வெற்றி பெறுவார்” என்கிற நம்முடைய முழக்கத்திற்கு உட்பட்டு, ஒரு சிறு வன்முறைச் சம்பவம் கூட நடைபெறவில்லை.  விவசாயிகள் இந்தக் கருத்தோட்டத்தை நன்கு உள்வாங்கிக் கொண்டு, உளப்பூர்வமாக அமல்படுத்தினார்கள். ஆகையால்தான் இந்த இயக்கம் மிகவும் அமைதியானதோர் இயக்கமாக, நாட்டில் ஜனநாயக இயக்கத்தில் வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறது.இதன் காரணமாக, அரசாங்கத்தால் இப்போராட்டத்தின்மீது தாக்குதல் தொடுப்பதற்கான காரணம் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில், தங்கள் சொந்தஆட்களின் உதவியுடன் “செங்கோட்டை சம்பவ”த்தை உருவாக்கி, இந்த இயக்கத்தின்மீது பழிபோட சதி செய்தார்கள்.  ஆனாலும், இந்த சம்பவம் மத்திய அரசாங்கத்தாலும், அதன் காவல்துறையினராலும் ஏற்பாடு செய்யப்பட்டது என்பதை அனைவரும் அறிந்து கொண்டார்கள்.

முன்னணியில் பஞ்சாபியர்கள்...
நாடு முழுவதும் இருக்கின்ற பல லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற மாபெரும்முதல் அகில இந்திய விவசாய இயக்கமாகஇது பரிணமித்திருக்கிறது. இதற்கு முன்பெல்லாம் பெரிய அளவில் விவசாய இயக்கங்கள் சில மாநிலங்களில் நடந்திருக்கின்றன, அல்லது,  நாட்டின் சில பகுதிகளில் அதில்பங்கேற்றிருக்கிறார்கள். ஆனால் அவையெதுவும் ஓர் அகில இந்திய அளவிலான இயக்கமாக உருவெடுத்ததில்லை.மத்திய பாஜக அரசாங்கமும், அதற்குவாலாட்டிக்கொண்டிருக்கும் ஊடகங்களும்இதனை ஒரு ‘பஞ்சாபி இயக்கம்’ என்றுமுத்திரை குத்த முயற்சித்தன. இந்தப் போராட்டத்தில் பஞ்சாபியர்கள் முன்னணியில் நின்று, மிகவும் முக்கிய பங்களிப்பினைச் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனாலும், இது பஞ்சாபியர்களின் இயக்கம் மட்டுமல்ல, உண்மையில் இது ஓர் அகில இந்திய இயக்கமாகும். பஞ்சாபியர்கள் இதில் முன்னணிப் பாத்திரம் வகிக்கிறார்கள்.நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறார்கள்.நாட்டில் 600 மாவட்டங்களில் ‘சிறைநிரப்பும் போராட்டம்’ நடைபெற்றது. அகில இந்திய வேலை நிறுத்தத்தின்போது, விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் சுமார் 30-35 கோடி பேர் கலந்துகொண்டார்கள். அனைத்து மாநிலங்களிலும் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. 600 இடங்களுக்கும் மேலாக ரயில்மறியல் போராட்டம் நடந்துள்ளது. இவற்றின்மூலம் அரசின் துஷ்பிரச்சாரத்தைப் பொடிப்பொடியாக்கி, இந்தப் போராட்டங்கள் அனைத்தும் இவ்வியக்கமானது ஓர் அகில இந்திய இயக்கம் என்பதை நிறுவியிருக்கிறது.  இப்போராட்டங்கள் அனைத்தும் கடந்த 100 நாட்களில் நடந்திருக்கின்றன.   

விவசாயிகள் - தொழிலாளிகள் விரிவடைந்த ஒற்றுமை
இந்த இயக்கம், நாட்டிலுள்ள அனைத்துப்பகுதி மக்களின் ஆதரவையும் பெற்றிருக்கிறது. இவ்வியக்கத்திற்கு அனைத்து மத்தியத் தொழிற்சங்கங்களும், சம்மேளனங்களும் தங்கள் முழு ஆதரவினையும் உரித்தாக்கிக்கொண்டிருக்கின்றன. பல லட்சக்கணக்கானதொழிலாளர்கள் நாட்டில் நடைபெற்ற பல்வேறு இயக்கங்களில் தங்களையும் நேரடியாக இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். முதன்முறையாக, மிகவும் விரிவான அளவில் தொழிலாளர்-விவசாயிகள் ஒற்றுமை ஏற்பட்டிருப்பதை நன்கு பார்க்க முடிந்தது. விவசாயத் தொழிலாளர்களும், ஏழை மக்களும் இப்போராட்டத்துடன் தங்களை இணைத்துக்கொண்டதன் மூலம் இவ்வியக்கத்தை வலுப்படுத்தி இருக்கிறார்கள். பெண்களும் மிகவும் ஆர்வத்துடன் இவ்வியக்கத்தில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் நாட்டின்பல பகுதிகளில் இதில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். இதேபோன்று மாணவர்களும், இளைஞர்களும் கூடஇப்போராட்டங்களில் பங்கேற்றுக் கொண்டிருப்பதென்பது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சிறிய மற்றும்சில்லரை வர்த்தகர்களும் இப்போராட்டத்திற்குத் தங்கள் ஆதரவினை உரித்தாக்கி இருக்கிறார்கள்.

வரலாறு படைத்துக்கொண்டிருக்கும் மாபெரும் ஜனநாயக இயக்கத்திற்கு உலக அளவிலும் வேறெந்தப் போராட்டத்திற்கும் இல்லாத அளவிற்கு மகத்தான ஆதரவு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இப்போராட்டம், இந்தியாவில் உள்ள அனைத்துப் பகுதி மக்களை மட்டுமல்ல, பல நாடுகளில்உள்ள மக்களிடமிருந்தும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஆதரவினைப் பெற்றிருக்கிறது. உலகம் முழுவதுமிருந்தும் சர்வதேசத் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அறிவுஜீவிகள், ஐ.நா.மன்றத்தின் பல்வேறு அமைப்புகள், உலகில் நூறு நாடுகளில் உள்ள இந்திய வம்சாவழியினர், பல நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலானவர்களிடமிருந்தும் ஆதரவு வந்த வண்ணம் இருக்கிறது.

சர்வதேச ஒருமைப்பாடு...
சர்வதேச அளவில் ஒருமைப்பாட்டை இந்த இயக்கம் பெற்ற அளவிற்கு  கடந்காலங்களில் எந்தவொரு தேசிய இயக்கமும் பெற்றதில்லை. இத்தகைய விரிவான, நிகரற்ற, ஒன்றுபட்ட போராட்டம் நாட்டில் உள்ள பிளவுவாத, மதவெறி மற்றும் சாதி வெறி சக்திகளுக்கு சவாலாக இருந்து வருகிறது. ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் மக்களை சாதி அடிப்படையிலும் மத அடிப்படையிலும் கூறு போட நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கின்றன. ஆனாலும், தற்போதைய விவசாய இயக்கம் ‘‘விவசாயி’’ என்பதற்கு புதிய விரிவான மற்றும் அனைத்துத்தரப்பினரையும் ஒன்றுபடுத்திய ஓர் அடையாளத்தை உருவாக்கி இருக்கிறது.  தங்கள் சாதி எதுவாக இருந்தாலும், தங்கள் மதம் எதுவாக இருந்தாலும் இவற்றுக்கு அப்பால் நாங்கள் அனைவரும் “விவசாயிகள்” என்று நெஞ்சை நிமிர்த்தி விவசாயிகள் கூறத் தொடங்கி இருக்கிறார்கள்.உத்தரப்பிரதேசம், முசாபர்நகரில் மதவெறி சக்திகள், ஜாட் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே மதக் கலவரங்களை உருவாக்கி அவர்களிடையே வெகு காலமாகவே பிரிவினையை ஏற்படுத்தி இருந்தன. ஆனால், இப்போது இரு தரப்பினரும் அவர்களுடைய தலைவர்களும் முன்வந்து முந்தைய காலங்களில் தாங்கள் தவறு செய்துவிட்டோம் என்றும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சதி வேலைகளுக்கு இரையாகி, இவ்வாறு தவறிழைத்துவிட்டோம் என்றும் வெளிப்படையாகவே கூறத் தொடங்கிவிட்டார்கள். இப்போது அவர்கள் இரு தரப்பினரும் தங்களுக்கிடையே விரிவான அளவில்ஒற்றுமையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்கான புதிய ஒற்றுமை
இதேபோன்றே பஞ்சாப் மற்றும் ஹரியானா மக்களுக்கிடையே தண்ணீர்த் தாவா போன்று பல பிரச்சனைகளில் சண்டைகள் நடைபெற்று வந்தன. ஆனால், இந்த இயக்கம்அவர்களை ஒன்றுபடுத்தி இருக்கிறது. ஹரியானாவில் உள்ள பாஜக அரசாங்கத்தால் பஞ்சாப் விவசாயிகள் தாக்கப்பட்டபோது, ஹரியானா விவசாயிகள் அவர்கள் பக்கம் உருக்கு போன்று நின்றார்கள். இவ்வாறு அவர்களுக்கிடையே ஒரு புதிய ஒற்றுமை உருவாகி இருக்கிறது. ஜனநாயகத்திற்கு, அடையாளத்தின் விரிவான ஒற்றுமை அவசியம். இந்த இயக்கம் அத்தகையதொரு ஒற்றுமையை உருவாக்கி இருக்கிறது. இது, நம் மதச்சார்பற்ற ஜனநாயக ஒற்றுமையை வலுப்படுத்திடும். 

எதேச்சதிகார பாசிச பாஜக அரசாங்கம் இந்த இயக்கத்திற்கு எதிராக எண்ணற்ற தாக்குதல்களைத் தொடுத்தது. விவசாய இயக்கத்திற்கு ஆதரவாக அறிவுஜீவிகள், கலைஞர்கள்,சமூக ஆர்வலர்கள், மனித உரிமைப் போராளிகள், இளைஞர்கள், மாணவர்கள், இதழாளர்கள், எழுத்தாளர்கள் என எவர் குரல் கொடுத்தாலும் அவர்கள் மீது அரசாங்கம் தாக்குதல் தொடுத்தது. அவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்தி, அவர்களுக்கு எதிராக தேசத்துரோக வழக்குப் புனையப்பெற்று, அவர்களைக் கைது செய்து, சிறையில் அடைத்தது. இவை அனைத்தும் ஜனநாயக மனோபாவம் கொண்ட மக்களை அச்சுறுத்திப் பணிய வைத்திடுவதற்காகவேயாகும்.  இந்த விவசாய இயக்கம் குடிமக்களின் ஜனநாயக மற்றம் அரசமைப்புச்சட்ட உரிமைகளுக்கு எதிரான இத்தகைய தாக்குதல்களைக் கண்டிக்கிறது.

அவசர நிலை காலத்தை விட மோசமானது
ஏராளமான விவசாயிகள் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். பல தலைவர்கள் மீது தேசத் துரோகக் குற்றப்பிரிவு பாய்ந்திருக்கிறது. இந்த நிலைமை, அவசரநிலைக் காலத்தைவிட மோசமானதாகும். விவசாய இயக்கம், இந்த அரசாங்கத்திடமிருந்து இத்தகைய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை எதிர்கொண்டிருக்கிறது. ஆனாலும் விவசாயிகளும், இவ்வியக்கத்தின் தலைவர்களும், விவசாய அமைப்புகளும் தளத்தில் உறுதியுடன் நின்று, எவ்விதமான தாக்குதல்களையும் எதிர்கொள்ள உறுதியுடன் தயாராய் இருந்து வருகிறார்கள். இதுவும் நம் ஜனநாயக இயக்கத்தின் வரலாற்றில் நிகரற்ற ஒன்றாகும்.

விவசாய இயக்கம், தன்னுடைய 100ஆவது நாளை நிறைவு செய்கையில், அதுமூன்றாவது கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. முதல் கட்டத்தில், அது கடும் தாக்குதல்களையும், தடைகளையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டது. ஆனாலும், விவசாயிகள்அவற்றை வீரத்துடன் எதிர்த்துநின்று முறியடித்து, முன்னேறி, தில்லியின் எல்லைப் பகுதிகளில் அமைதியான முறையில் அமர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள். இவ்வாறு இயக்கத்தை மேற்கொண்டு ஜனவரி 26 வரை இயக்கத்தைத் தொடர்ச்சியாக வலுப்படுத்தி வந்தார்கள்.

குடியரசு தினத்தன்று அரசாங்கம் மேற்கொண்ட சதித் திட்டத்திற்குப் பின்னர், இவ்வியக்கம் சற்றே பின்தங்கியதுபோன்று தோன்றியது. ஆனால், அரசாங்கம் அதனைத் தொடர்ந்து தன்னுடைய சதித் திட்டத்தை காசிபூரில் அரங்கேற்றியபோது, இயக்கம் புதிய சக்திகளுடன் முன்னிலும் வீரியத்துடன் செயல்படத் தொடங்கியது. தில்லியின் எல்லைப் பகுதிகளில் நடைபெற்ற அனைத்து தர்ணா போராட்டங்களும் மேலும் அதிகமான அளவில் மக்களின் பங்கேற்புடன் வலுப்படுத்தப்பட்டன. இரண்டாவது கட்டம் கட்டி எழுப்பப்பட்டு, அரசாங்கத்தின் தாக்குதல்களை எதிர்கொண்டது. அதன்பின்னர், சற்றே மந்த நிலை ஏற்பட்டபோதிலும், இப்போது மீண்டும் மூன்றாவது கட்டத்தை நோக்கி இயக்கம் சென்றுகொண்டிருக்கிறது. போராட்டம் தன் 100ஆவது நாளை நிறைவுசெய்திடும் சமயத்தில் படிப்படியாக மீண்டும்வலுவடையத் தொடங்கி இருக்கிறது.இந்த தினத்தன்று, கறுப்புச் சட்டங்களுக்கு எதிராகவும், விவசாய விரோத அரசாங்கத்திற்கு எதிராகவும் கறுப்புக் கொடியுடன் நாடு முழுவதும் போராட்டத்தை அனுசரித்திட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கப்பட்டிருக்கிறது.

மூன்றாம் தரப்பு  தலையீடை ஏற்கவில்லை
அரசாங்கத்தின் விவசாய விரோத அணுகுமுறையின் காரணமாக போராட்டம் நீடித்துக்கொண்டிருக்கிறது. சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்), கறுப்பு வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படுதல் என்பதும், குறைந்த
பட்ச ஆதார விலைக்கான சட்டம் கொண்டுவருவது என்பதும் விவசாயிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையேயான பிரச்சனை என்று அறிவித்திருக்கிறது. இதில் மூன்றாம் தரப்பு எதற்கும் சம்பந்தம் கிடையாது. எனவேதான், இதில் நீதிமன்றத்தின் தலையீட்டை எஸ்கேஎம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும், அரசாங்கம் வேண்டுமென்றே இந்த விஷயத்தைத் தாமதித்துக் கொண்டிருக்கிறது. 

அரசாங்கத்திற்கும் விவசாய அமைப்புகளுக்கும் இடையே 11 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தபின்னரும் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. தீர்வு காண்பதைத் தாமதிப்பதன்மூலம் விவசாயிகளைச் சோர்வடையச் செய்துவிடலாம் என அவர்கள் விரும்புகிறார்கள். கடந்த 40 நாட்களாக பேச்சு வார்த்தை எதுவும்இல்லை. அரசாங்கமும் விவசாயிகளும் ஒரு தொலைபேசி அழைப்பு தூரத்திற்குள்தான் இருக்கிறார்கள் என்று பிரதமர் அறிவித்துள்ளபோதிலும்கூட இதுதான் எதார்த்த நிலை. விவாதம் மூலம் மட்டுமே பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்றும் அதற்காக நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம் என்றும் நாம் தெளிவுபடுத்திவிட்டோம். நாம்,அரசாங்கத்தின் பழைய முன்மொழிவுகளை சில மாதங்களுக்கு முன்பேயே நிராகரித்துவிட்டோம். விவாதம் மேற்கொள்வதற்கு சுமூகமான சூழ்நிலையுடன் பிரதமர் சிறந்த முன்மொழிவுகளுடன் வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

பொய்ப் பிரச்சாரங்களும் புதிய சதித் திட்டங்களும்
இயக்கத்தின் மீது தாக்குதல் தீவிரப்படுத்தப்படும்போது, விவாதத்திற்கான சுமூக சூழ்நிலை ஏற்பட முடியாது. ஆனாலும், அரசாங்கத்தின் நிலைப்பாடு அருவருப்பாகிக் கொண்டிருக்கிறது. இதுநாள்வரையிலும் அரசாங்கம், போராட்டத்தை நசுக்கவே முயற்சித்துக் கொண்டிருக்கிறது. விவசாயிகளின் பேரணியைத் தடுத்து நிறுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்தபின்னர், விவசாயிகள் மீது பழிபோடுவதற்காக பொய்ப்பிரச்சாரத்தைத் தொடர்ந்து அவிழ்த்துவிட்டுக்கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தை காலிஸ்தானிகள் தலைமை தாங்குகிறார்கள் என்றது, மாவோயிஸ்டுகள் தலைமை தாங்குகிறார்கள்என்றது, இடதுசாரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றது, அரசியல் கட்சிகள் வழிநடத்துகின்றன என்றது, பாகிஸ்தானிகளால் ஊக்குவிக்கப்படுகிறது என்றது, சீனர்கள் உதவி செய்கிறார்கள் என்றது. இப்பொய்ப் பிரச்சாரங்கள் அனைத்தையும் சம்யுக்தகிசான் மோர்ச்சா கண்டித்து, அம்பலப்படுத்தியபோது, அவர்கள் புதிய சதித் திட்டங்களைப் புனைந்தார்கள். 
தங்கள் ஏஜெண்டுகள் மூலமாக செங்கோட்டையில் தேசியக் கொடியை அவமதித்ததாக அழிம்பு வேலையில் ஈடுபட்டார்கள். விரைவில், மக்கள் இதனை நன்கு புரிந்துகொண்டார்கள். அரசாங்கத்தின் இத்தகைய சதி வேலை மக்களால் கண்டனத்திற்கு ஆளாக்கப்பட்டது.

அதன்பின்னர், அரசாங்கம் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதும் நின்றுவிட்டது. ஆனாலும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்வதில் உறுதியுடன் இருக்கிறார்கள். கடந்த நூறு நாட்களில் அவர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு துன்ப துயரங்களை எதிர்கொண்டார்கள். ஜீரோ டிகிரி அளவிற்குக் கடுங்குளிரையும், கடுமையாகப் பெய்த மழையையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. வீரம் செறிந்த விவசாயிகள் 250 பேர் தம் இன்னுயிரை இழந்துள்ளார்கள். ஆனாலும், மனிதத்தன்மையே இல்லாத இந்த அரசாங்கம் விவசாயிகளின் துன்ப துயரங்கள் குறித்துக் கொஞ்சமும் கவலைப்படவில்லை. அவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கார்ப்பரேட்டுகளுக்கான விவசாயத்தை நிறுவவே
ஜனநாயகத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கம் என்றால் அது மக்களின் குரல்களுக்கு செவிமடுக்க வேண்டும். அவர்களுக்கு உதவ முயற்சிக்க வேண்டும், ஆனால் இந்த பாஜக அரசாங்கமோ, முழுமையாக ஜனநாயக விரோதமான ஒன்றாக,எதேச்சதிகாரமானதாக, பாசிஸ்ட் அரசாங்கமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த 100 நாட்களாக நடத்திவரும்  இத்தகைய நீண்ட நெடிய உறுதியான போராட்டத்தின் மூலமாக விவசாயிகள் ஏராளமான படிப்பினைகளைக் கற்றுக் கொண்டார்கள். 

விவசாயிகள் முன்னெப்போதும் இல்லாதஅளவிற்கு அனுபவித்துள்ள துன்ப துயரங்கள், அவர்களுக்கு இந்த அரசின் ஒடுக்குமுறை குணத்தை நன்கு புரிய வைத்திருக்கிறது. ஆர்எஸ்எஸ் தலைமையிலான பாஜக அரசாங்கத்தின் குணம் என்பது முழுமையாக கார்ப்பரேட்டுகள் ஆதரவு ஒன்றாகும். அவர்கள் விவசாயிகள் அடிப்படையிலான விவசாயத்தை ஒழித்துக்கட்டிவிட்டு, அந்த இடத்தில் அதானி, அம்பானி, தேசிய மற்றும் சர்வதேசிய ஏகபோக கார்ப்பரேட்டுகளின் கட்டளைக்கிணங்க ஒரு கார்ப்பரேட்டுகள் அடிப்படையான விவசாயத்தை நிறுவ விரும்புகிறார்கள்.அவர்கள் அடிப்படையில் விவசாயிகளுக்கு விரோதமானவர்கள், தொழிலாளர்களுக்கு விரோதமானவர்கள், மக்களுக்கு விரோதமானவர்கள். அவர்கள், சாமானிய மக்களைக் கொள்ளையடிப்பதற்காக கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்டக்கூடிய விதத்தில் இந்த அமைப்பை வலுவாக மாற்றியமைத்திட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இந்த அரசாங்கம் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுவந்த அனைத்து அரசமைப்புச்சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகளையும் ஒழித்துக்கட்டத் தயாராகி இருப்பதையும், மக்களையும், தங்களுடைய ஜனநாயக இயக்கத்தையும் நசுக்கிடஅனைத்து ஒடுக்குமுறை நடவடிக்கைகளையும் எடுத்துவருவதையும் கடந்த 100 நாட்களில் விவசாயிகள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் விவசாயிகள் தங்கள் நியாயமான கோரிக்கைகளை வென்றெடுக்க வேண்டுமானால், இந்த அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகமேலும் நீண்ட நெடிய உக்கிரமான உறுதிமிக்க போராட்டத்தை கட்டி எழுப்ப வேண்டியிருக்கிறது என்பதையும்  உணர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

உணவு படைப்பவர்கள் மட்டுமல்ல, வாக்களிப்பவர்களும்...
மேலும் விவசாயிகள் இந்த அரசாங்கத்தைப் பணிய வைப்பதற்கு, அகில இந்தியஅளவிலான போராட்டம் அவசியம் என்பதையும் தற்போது நன்கு புரிந்துகொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாகத்தான் பல மாநிலங்களில் நடைபெற்ற மகா பஞ்சாயத்துக் கூட்டங்களில் இந்த அரசாங்கத்திற்கு எதிராக பல லட்சக்கணக்கான மக்கள் திரண்டார்கள். இவற்றின் மூலம் விவசாயிகள் என்போர் ‘உணவு படைப்பவர்கள்’ மட்டுமல்ல, ‘வாக்களிப்பவர்களு’மாவார்கள் என்பதை அரசுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் விவசாயிகள் தங்கள் நெருக்கடிக்குத் தீர்வு தற்கொலைப் பாதை அல்ல என்பதையும், மாறாக போராட்டத்தில் வீர மரணம் அடைவதன்மூலம் மட்டுமே ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் நம் பகைவர்களை முறியடித்திட முடியும் என்பதையும் நன்கு புரிந்துகொண்டிருக்கிறார்கள்.தங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்கும்வரை போராட்டக் களத்திலிருந்து தாங்கள்திரும்பப் போவதில்லை என்றும், இதற்காக ஆறு மாத காலத் தயாரிப்புடனேயே போராட்டக் களத்திற்கு வந்திருப்பதாகவும் அவர்கள் கூறுவதிலிருந்தே அவர்களின் புரிந்துணர்வு எந்த அளவிற்கு ஆழமானது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.  

100 நாட்கள் போராட்டம் என்பது வரலாற்றில் ஈடிணையற்ற ஒன்றாகும். கடந்தகால இயக்கம் எதனுடனும் இதனை ஒப்பிடமுடியாது. இந்த இயக்கம் நிகரற்ற ஒன்று. வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறது. எதிர்கால போராட்டம் எதனுடனும் ஒப்பிடுவதற்கும், ஓர் ஆழமான படிப்பினையைக் கற்றுக்கொள்வதற்கும் இது ஓர் அளவுகோலாக அமைந்திடும்.

கட்டுரையாளர் : ஹன்னன் முல்லா

தமிழில்: ச.வீரமணி

;