articles

img

சமூக நீதியை பறிக்கும் ஐஐடி கல்வி நிறுவனங்கள்....

வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து நடைபெற்ற நீண்ட போராட்டங்களின் விளைவாகவே கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு முறை அமலாக்கப்பட்டு வருகிறது. பிற்படுத்தப்பட்ட மக்கள், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் சமூகம் என ஒவ்வொருவருக்கும், ஒரு குறிப்பிட்ட சதவீத எண்ணிக்கையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டுமென முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இடஒதுக்கீடு என்பது முறையாக அமலாகிறதா என்றால் இல்லை எனும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. உயர்கல்வி நிறுவனமான ஐஐடி களில் இடஒதுக்கீடு முறை என்பது காற்றில் பறக்க விடப்படுவதோடு, பின் தங்கிய மாணவர்களின் உயர் கல்வியும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது என்பதை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட பின்வரும் விபரங்களிலிருந்து எளிதாக அறிந்து கொள்ளலாம்.

தில்லி, மும்பை, சென்னை, கான்பூர், கரக்பூர்ஆகிய ஐந்து ஐஐடி நிறுவனங்களில் 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான நான்காண்டு காலத்தில், சிவில், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் ஆகிய
நான்கு பாடப்பிரிவுகளில் மொத்தம் விண்ணப் பித்த 95,445 மாணவர்களில் 3279 பேருக்கு இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில்,

பொது பிரிவு - 2363

பிற்படுத்தப்பட்ட பிரிவு - 638

பட்டியல் சாதிகள் - 238

பழங்குடியினர் - 40 

என்ற அடிப்படையில் மாணவர்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இட ஒதுக்கீடு முறையின் படி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27%, பட்டியல்சாதிகளுக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% எனும்அடிப்படையில் மாணவர்களுக்கு இடங்கள் அளிக்கப்படவில்லை. மேற்கண்ட அடிப்படையில் இடஒதுக்கீடு முறை அமலாக்கப்பட்டிருந்தால் 

பிற்படுத்தப்பட்ட பிரிவில் - 885

பட்டியல் சாதிகள் பிரிவில் - 492

பழங்குடியினருக்கு - 246

எனும் எண்ணிக்கையில் மாணவர்களுக்கு இடம்கிடைத்திருக்கும். இடஒதுக்கீடு முறை அமலாகாததால் மொத்தம் 1623 மாணவர்களுக்கு கிடைக்கவேண்டிய இடங்கள் வெறும் 916 ஆக குறைக்கப் பட்டதோடு, இடஒதுக்கீட்டின்படி பயனடைய வேண்டிய 707 மாணவர்கள் தங்களுக்கான வாய்ப்பையும் இழந்திருக்கிறார்கள். இது மிகப் பெரும் சமூக அநீதியாகும். இடஒதுக்கீட்டு அடிப்படையில் மொத்தம் விண்ணப்பித்திருந்த 23,629 மாணவர்களில் இடம் கிடைத்தவர்களின் எண் ணிக்கை 849 என்பதை ஒப்பிடும் போது 3.5 % மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்திருக்கிறது. அதுவும் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு கிடைத்த இடங்கள் வெறும் 2.8 % மட்டுமே.

சென்னை ஐஐடி இல் ஆராய்ச்சி பாடத்தில் உள்ள 15 பாடப்பிரிவுகளில், 11 பிரிவுகளில் பட்டியல்சாதிகள் மாணவர்களுக்கான இடங்களும் 14 பாடப்பிரிவுகளில் பழங்குடியின மாணவர் களுக்கான இடங்களும், 4 பாடப்பிரிவுகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடங்களும் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை. அந்த இடங்களெல்லாம் பொது பிரிவு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி பாடங்களில் பின் தங்கிய மாணவர்களுக்கான வாய்ப்பு எவ்வாறு தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகிறது என்பதை இந்த விபரங்கள்மூலம் உணர முடியும். சென்னை ஐஐடி இல்கடந்த 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் முனைவர் பட்டத்திற்கான 15 பாடப்பிரிவுகளில் சேர்க்கப்பட்ட 2195 மாணவர்களில், பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு 849 இடங்கள் மட்டுமே அளிக்கப்பட்டிருக்கிறது இடஒதுக்கீடு முறையாக அமலாகியிருந்தால் கூடுதலான இடங்கள் பின் தங்கிய பிரிவிலுள்ள மாணவர்களுக்கு கிடைத்திருக்கும்.

மும்பை ஐஐடி இல் மொத்தமுள்ள 26 ஆராய்ச்சிப் பாடங்களுக்கான பிரிவுகளில் 26-லும் பழங்குடி மாணவர்களுக்கான இடங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமலும், 25 பிரிவுகளில் பட்டியலின சாதிகளுக்கான இடங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமலும் இருக்கிறது. 26 பாடப்பிரிவுகளில் 16 பிரிவுகளில் முழுமையாகபொதுப்பிரிவினருக்கும், மீதமுள்ள 10 பாடபிரிவுகளிலும் 75% இடங்கள் அதாவது நான்கில் மூன்றுஇடங்கள் பொதுபிரிவினருக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு முறையை அமலாக்காமல் இருப்பது, பிறகு காலியாக உள்ள அந்த இடங்களை பொதுப்பிரிவினருக்காக எடுத்துக் கொள்வதுமான நடைமுறை அங்கு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இத்தோடு, விண்ணப்பிக்கும் மாணவர்களை நேர்காணல் செய்யும் போதே,சேர்த்துக் கொள்ளாமல் நிராகரிக்கும் நடைமுறையையும் மும்பை ஐஐடி பின்பற்றுகிறது. நேர்காணலுக்காக அழைக்கப்பட்ட 25,300 பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியின மாணவர்களில் வெறும் 815 மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள் என்கிற விபரத்தின் மூலம் அவர்களின் அணுகுமுறை எத்தகையது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. கிடைத்துள்ள இத்தகைய விபரங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது அநேகமாக நாட்டில் உள்ள மிகப்பெரும்பாலான உயர் கல்வி நிறுவனங்களில் இத்தகைய நடைமுறைதான் அமலில் இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. சமூக அடுக்குகளில் மிகவும் கீழ்நிலையில் உள்ள, ஒடுக்கப்பட்டுள்ள மாணவர்களுக் கான உயர்கல்வி வாய்ப்பென்பது இத்தகைய அலட்சியத்தோடும், ஆதிக்க மனோபாவத்தோடும் தொடர்ந்து மறுக்கப்படுமெனில் அதை எதிர்த்துஉரத்தும், உறுதியாகவும் குரலெழுப்ப வேண்டியதும், போராட வேண்டியதும் அவசியமானதாகும். இடஒதுக்கீட்டை அமலாக்குவதற்காக நடைபெற்ற காத்திரமான போராட்டங்களை போலவே, இடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாக்கவும், நவீன தாராளமயக் கொள்கைகளால் பறிபோகும் சமூக நீதியை நிலைநிறுத்தவுமான கோரிக்கைகளை முன்வைத்த போராட்டங்களையும் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து வலுப்படுத்துவதும் மிகவும் அவசியமானதாகும்.

கட்டுரையாளர் : ஆர்.பத்ரி

;