articles

img

மக்கள் ஒன்றுபட்டுவிட்டால் எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது....

கடந்த பல பத்தாண்டுகளில் இந்தியா இப்படிப்பட்ட ஒரு பாசிச அரச ஒடுக்குமுறையைக் கண்டதில்லை. குடியரசு தினத்தன்று விவசாயிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தை சீர்குலைப்பதற்காக பாஜக - ஆர்எஸ்எஸ் அரசு மேற்கொண்ட வன்முறை எனும் சதித்திட்டம் படுதோல்வியடைந்த நிலையில், ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்று, வரலாறு காணாத ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

விரைவில் விவசாயிகளின் மாபெரும் எழுச்சி வெற்றிகரமாக 75 ஆவது நாளை எட்டுகிறது. இந்த நிலையில் தில்லியின் எல்லைகளான சிங்கு, திக்ரி, காஸிப்பூர் ஆகிய மூன்று இடங்களையும் திறந்தவெளி சிறைச்சாலைகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது மோடி அரசு. இப்போது இந்த தேசத்தின் ‘அன்னதாதா’க்கள், மத்திய ஆட்சியாளர்களால், வெளிநாட்டு ஊடுருவல்காரர்கள் போல நடத்தப்படுகிறார்கள். சுதந்திர இந்தியாவில் தேசத்தின் தலைநகரையொட்டி இப்படியொரு கொடுமையை எந்தவொரு அரசும் அரங்கேற்றியதில்லை.

பலமடங்கு பலத்துடன்
உண்மையிலேயே இந்த போராட்டம், இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் கண்டிராத பெருமைக்குரியது என்று குறிப்பிடலாம். ஏனென்றால் எந்தளவிற்கு பல முனைத் தாக்குதலை அரசிடமிருந்து எதிர்கொள்கிறதோ அதைவிட பல மடங்கு பலத்துடன் கடந்த ஒரு வார காலமாக மேலும் மேலும் கூடுதலான விவசாயிகளும், பொதுமக்களும் வந்து குவிந்து, அசைக்க முடியாத சக்தியாக மாறிக் கொண்டிருக்கிறது விவசாயிகளின் போர். ஆயிரம்ஆயிரமாய் புதிய விவசாயிகளும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாய் தில்லியைச் சுற்றியுள்ள சிங்கு, திக்ரி, காஸிப்பூர், ஷாஜஹான்பூர், பல்வால் ஆகிய ஐந்து எல்லைகளிலும் தினந்தோறும் வந்து குவிந்து கொண்டிருக்கிறார்கள். இதுமட்டுமல்ல, உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் எண்ணற்ற இடங்களில் விவசாயிகளின் ‘மகாபஞ்சாயத்துக்கள்’ கூடியிருக்கின்றன. ஒவ்வொன்றிலும் பல்லாயிரக்கணக்கில் அணிதிரண்டு அமர்ந்திருக்கிறார்கள். ஹரியானாவிலும் பிற இடங்களிலும் நெடுஞ்சாலைகளில் அனைத்து சுங்கச் சாவடிகளும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கூடியிருக்கும் பிரம்மாண்டமான பொதுக்கூட்ட மைதானங்களாக மாறியிருக்கின்றன.

சதிகளை முறியடிக்கும் விவசாயிகளின் ஒற்றுமை
ஜனவரி 26 அன்று தில்லி செங்கோட்டையில் மத்திய அரசால் நிர்வகிக்கப்பட்ட வன்முறை அரங்கேறியவுடனே, அதை சாக்காக கொண்டு, விவசாயிகள் மீது அரசின் ஒடுக்குமுறை துவங்கியது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் மீதும் தலைவர்கள் மீதும் மொத்தம் 44 முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்தது தில்லி காவல்துறை. பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த 122 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 16 பேர் 20 வயதிற்குட்பட்டவர்கள்; 10 பேர் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள். கைது செய்யப்பட்டவர்களில் மிகவும் இளையவரான 18 வயது தீபக், கைத்தால் என்ற கிராமத்திலிருந்து வந்தவர்;மிகவும் முதியவரான 80 வயது குர்முக்சிங், பஞ்சாப் மாநிலத்தின் பதேகார் சாகிப் மாவட்டத்தின் சமஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறு விவசாயி. ஒன்றரை ஏக்கர் நிலம் வைத்திருப்பவர். குர்முக்சிங், இந்திய ராணுவத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி 30 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர். போலீசாரால் இழுத்துச் செல்லப்பட்ட இன்னும் 30 பேரை காணவில்லை. அவர்களை ஒப்படையுங்கள் என்று கோரி ஹேபியஸ் கார்பஸ் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஏராளமான டிராக்டர்களை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். பறிமுதல் செய்திருக்கிறார்கள். அந்த டிராக்டர்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். விவசாயிகள் சங்கங்களின் 60க்கு மேற்பட்ட தலைவர்களை, ‘தேடப்படும் குற்றவாளிகள்’ என்று முத்திரை குத்தியுள்ளனர்.

பல்வால் , காஸிப்பூர் எல்லைகளில்... 
ஜனவரி 27 முதல், மோடி அரசு, தில்லியைச் சுற்றியுள்ளபோராட்ட முகாம்கள் மீது தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது. முதலில் பல்வால் எல்லையிலிருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகளை வெளியேற்றியது. ஆனால்  அடக்குமுறையை மீறி பல்வால் எல்லையில் மீண்டும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வந்து குவிந்து விட்டார்கள். இங்கு தோல்வியடைந்த மத்திய பாஜக அரசு, தனது கவனத்தை தில்லி - உத்தரப்பிரதேச எல்லையான காஸிப்பூர் பகுதிக்கு மாற்றியது. ஜனவரி 28 அன்று நூற்றுக்கணக்கான போலீசாருடன் ஆர்எஸ்எஸ் - பாஜக குண்டர்கள் விவசாயிகள் போல அங்கு புகுந்தார்கள். அதே நாளில் அங்குஅகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா, இணைச் செயலாளர்கள் கே.கே.ராகேஷ் எம்.பி., பாதல் சரோஜ், நிதி செயலாளர் பி.கிருஷ்ணபிரசாத் ஆகியோரும் விவசாயிகளை சந்திப்பதற்காக சென்றார்கள். கடந்த இரண்டு மாதங்களாக காஸிப்பூர் எல்லையில் விவசாயிகளை உத்வேகப்படுத்தி பாரதிய கிஷான்யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத்தும் அகில இந்திய விவசாயிகள் சங்க உத்தரப்பிரதேச மாநில மூத்தத் தலைவர் டி.பி.சிங்கும் போராட்டத்தை தலைமையேற்று நடத்தி வந்தார்கள். இந்த நிலையில் அன்றைய தினம் ராகேஷ் திகாயத் உணர்ச்சிகரமான உரையினை ஆற்றினார். அந்த உரை உத்தரப்பிரதேசம், ஹரியானா உட்பட வட மாநிலங்களின் விவசாயிகளை உத்வேகமூட்டியது. இது, காஸிப்பூர் போராட்டக் களத்திற்கு மேலும் ஆயிரமாயிரமாய் விவசாயிகள் பல்வேறு மாநிலங்களிலிருந்து அலை அலையாக வந்து குவிவதற்கு காரணமானது.

சிங்கு, திக்ரியில் புதிய சூழ்ச்சி
இரண்டு எல்லைகளிலும் தோல்வியடைந்த பாஜக- ஆர்எஸ்எஸ் கும்பல், சிங்கு, திக்ரி, ஷாஜஹான்பூர் ஆகிய எல்லைகளில் போராட்டத்தை சீர்குலைக்க புதிய சூழ்ச்சியை முயற்சித்துப் பார்த்தது. ‘உள்ளூர்வாசிகள்’ என்ற பெயரில் நூற்றுக்கணக்கான குண்டர்களை பாஜக - ஆர்எஸ்எஸ் குவித்தது. காவல்துறை உதவியுடன் விவசாயிகள் கூட்டத்திற்குள் புகுந்த அந்த குண்டர்கள், தில்லி செங்கோட்டையை இழிவுபடுத்திவிட்டீர்கள் என்று கூறி விவசாயிகள் மீது கல்லெறிந்து தாக்கத் துவங்கினார்கள். இங்கிருந்து வெளியேறுங்கள் என்று கூச்சலிட்டார்கள். ஆனால் விழிப்புடன் அதை எதிர்கொண்ட விவசாயிகள் அந்த குண்டர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தார்கள். இந்த சம்பவங்கள் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உட்பட அனைத்து மாநிலங்களிலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது. விவசாயிகளுக்கு ஆதரவான குரல் மேலும் வலுத்தது. செங்கோட்டையில் சீக்கியக் கொடியை ஏற்றிவிட்டார்கள் என்று கூறி இந்திய விவசாயிகளை மதரீதியாக பிரித்தாளநினைத்த ஆர்எஸ்எஸ் - பாஜகவின் கேடுகெட்ட சூழ்ச்சிஉடைத்து நொறுக்கப்பட்டது. தீரமிக்க பஞ்சாப் விவசாயிகளை குறிவைத்து அவர்களை மதரீதியாக தனிமைப்படுத்தி, சிறுமைப்படுத்தி விவசாயிகளின் எழுச்சியைதகர்ப்பதற்காக ஆர்எஸ்எஸ் - பாஜக மேற்கொண்டஅனைத்து சதிச் செயல்களும் இப்படி சில நாட்களுக்குள்ளேயே வெற்றிகரமாக தகர்த்தெறியப்பட்டன.

குவாலியரில்...
இந்த நிலையில் ஜனவரி 31 அன்று மத்தியப்பிரதேசத்தில் குவாலியர் நகரில் விவசாயிகளின் தர்ணா போராட்டத்தில் புகுந்து பாஜக - ஆர்எஸ்எஸ் காவிக்கூட்டம் தாக்குதல் நடத்தியது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க குவாலியர் மாவட்டச் செயலாளர் பிரீதி சிங், இந்திய மாணவர் சங்க மத்தியக்குழு உறுப்பினர் அகங்க்சா தாகட்ஆகியோர் காயமடைந்தனர். அங்கிருந்த மாவீரன் பகத்சிங்,அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை ஆர்எஸ்எஸ் . பாஜக வெறிக்கும்பல் கிழித்தெறிந்தது. இப்போது குவாலியரில் அதே இடத்தில் போராட்டம் பிரம்மாண்டமாக மாறிவிட்டது. தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆயிரமாயிரமாய் குவியும் பெண்கள்
நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாபெரும் விவசாயிகளின் எழுச்சி என்பது ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் பரந்துவிரிந்த ஒற்றுமையைப் பாதுகாத்தது மட்டுமல்ல; மதம், சாதி, மொழி, பாலினம் உள்ளிட்ட அனைத்து வேறுபாடுகளையும் உடைத்து மாபெரும் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது என்றால் மிகையல்ல. ஜனவரி 26 போராட்டத்திற்குப் பிறகு நடந்துள்ள வெகுஜன விவசாய எழுச்சியின் முக்கியமான அம்சம் என்னவென்றால், ஆயிரமாயிரமாய் பெண்கள் குவிந்து வருகிறார்கள் என்பதுதான். ஏற்கெனவே போராட்டம் நடந்து கொண்டிருக்கும் தில்லியின் ஐந்து எல்லைகளில் மட்டுமல்ல; உத்தரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்து கொண்டிருக்கும் விவசாயிகளின் மகா பஞ்சாயத்துக்களிலும் எண்ணற்ற பெண்கள் பங்கேற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஹரியானாவின் ஹிஸார் மற்றும் ஜிந்த் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பெரும் எண்ணிக்கையில் குவிந்திருந்த பெண்கள் மத்தியில் நேரடியாக சென்று அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர் அசோக் தாவ்லே, ஹரியானா மாநிலத் தலைவர் பூல்சிங் சியோகந்த், சிஐடியு ஹரியானா மாநில துணைத் தலைவர் சுரேந்திரசிங் ஆகிய தலைவர்கள் உரையாற்றினர்.

மெல்லத்தளரும் சாதியப் பிடிமானம் 
இந்த எழுச்சியின் மற்றொரு மிக முக்கியமான சாதனைஎன்னவென்றால், இந்த மாநிலங்களில் ஆண்டாண்டு காலமாக வலுவாக கெட்டிப்பட்டிருக்கும் சாதிய மற்றும் மதப்பிடிமானங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தளரத் துவங்கியிருக்கின்றன என்பதுதான். சமூக ரீதியாக பிளவுபட்டிருக்கும் மக்கள் சாதிய, மத தடைகளை தாண்டி ஒரேஇடத்தில் ஒன்றாக அமர்ந்திருக்கிறார்கள். இது ஒன்றல்ல,இரண்டல்ல, ஆயிரக்கணக்கான கிராமங்களில் கண்கூடாக நடந்து கொண்டிருக்கும் மகத்தான மாற்றமாகும். ஒரு பாசிச, மதவெறி பிடித்த அரசாங்கத்திற்கு எதிராகவும் அதன் கார்ப்பரேட் முதலாளித்துவக் கும்பல்களுக்கு எதிராகவும், விவசாயிகளும், தொழிலாளர்களும் ஒரு வர்க்கமாக ஒன்றுதிரண்டால் எத்தகைய மாற்றம் ஏற்படும் என்பதை நாம் இந்த மாநிலங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது உற்சாகம் தருவதாக இருக்கிறது. ஜனவரி 26ஆம் தேதியுடன் விவசாயிகளின் எழுச்சிக்கு மரண சாசனம் எழுதிவிடலாம் என்று திட்டமிட்டு துவங்கிய “கோடி மீடியா” (மோடிக்காக கோயபல்ஸ் போல பொய்ப் பிரச்சாரம் செய்யும் கார்ப்பரேட் ஊடகங்கள்), இப்போது மோடி அரசை தற்காத்துக் கொள்வதற்காக பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன.

திறந்தவெளி சிறைக்கூடங்களாக மாற்றும் இழி புத்தி இப்படி அடி மேல் அடி வாங்கிய பாஜக அரசு தற்போது விவசாயிகளை எப்படியேனும் வஞ்சம் தீர்க்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறது. போராட்டக் களங்களை திறந்தவெளி சிறைச்சாலைகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது. அனைத்துப் போராட்டக்களங்களும் இப்போது பல அடுக்கு மின்சாரக் கம்பிவேலி, ராட்சத இரும்பு ஆணிகளை சாலையில் பதிப்பது, தடுப்பு சுவர்களுக்கு இடையே கான்கிரீட் கலவையை நிரப்பி மதில்களைப் போல மாற்றுவது, தொட்டால் அறுத்துவிடும் கம்பிகளை வரிசையாக பரப்பிக் கட்டுவது என கொடிய ஆயுதங்களால் முற்றுகையிடப்பட்டுள்ளன. இத்தகைய தாக்குதல் இதற்கு முன் நாட்டில் எங்கும் நடக்காதது. விவசாயிகளுக்கு குடிநீரும், மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த தற்காலிக கழிப்பறைகள் இரவோடு இரவாக அகற்றப்பட்டுவிட்டன. தில்லி, உ.பி., ஹரியானா காவல்துறைகளின் நூற்றுக்கணக்கான உள்ளூர் மற்றும் கமாண்டோ படை பிரிவுகள், அதிரடி படைப்பிரிவுகள் அனைத்து போராட்டக் களங்களிலும் குவிக்கப்பட்டுள்ளன. அனைத்து எல்லைப்பகுதிகளிலும் மட்டுமின்றி, ஹரியானாவின் பல மாவட்டங்களிலும் இணையதள சேவைதுண்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் கடுமையான துன்பம் தரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல விவசாயிகள் சங்கங்களின் டிவிட்டர் பக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் நிர்ப்பந்தத்தின் பேரில் முடக்கப்பட்டுள்ளன.

மேலும் வீரியமடையும் போராட்டம் 
ஆனால் அரசாங்கமும், காவல்துறையும் ஏவியுள்ள இந்த தாக்குதல்கள், விவசாயிகளின் போராட்டத்தை இன்னும் வீரியமடையச் செய்துள்ளன என்பதே உண்மை.கிராமங்கள் மாற்றி கிராமங்கள் குடிநீர் டேங்கர்களை வரிசையாக போராட்டக் களங்களுக்கு அனுப்பத் துவங்கியுள்ளன. உணவும், அத்தியாவசியப் பொருட்களும் பலதடைகளைத் தாண்டி தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.குருத்வாராக்களும் பொது சமையல் கூடங்களும் (லேங்கர்கள்) ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருக்கின்றன. கடந்த இரண்டரை மாத காலமாக லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு உணவளித்து வரும் குருத்வாராக்களும், லேங்கர்களும் இந்த எழுச்சியில் பிரம்மாண்டமான பங்கினை ஆற்றி வருகின்றன. மக்கள் ஒன்றுபட்டுவிட்டால் அவர்களை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது. அதற்கு உண்மையான அடையாளமாக விவசாயிகள் எழுச்சி நம்முன் நடந்து கொண்டிருக்கிறது.

                                  **********************

பிப்ரவரி 6 நாடு முழுவதும் சாலை மறியல் 

சம்யுக்த கிஷான் மோர்ச்சா (விவசாயிகள் விடுதலை முன்னணி), பிப்ரவரி 6 அன்று மதியம் 12 முதல் 3 மணிவரை நாடு தழுவிய சாலை மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. பாஜக அரசின் அடக்குமுறைநடவடிக்கைகளுக்கு எதிராக அந்த நாளில் நாடு முழுவதும் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளை லட்சோபலட்சம் விவசாயிகள் மறித்து அணி வகுக்க இருக்கிறார்கள். பிப்ரவரி 3 முதல் 10 வரை நாட்டின் அனைத்து கிராமங்களிலும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் பாஜக அரசின் வன்முறை- ஒடுக்குமுறைக்கு எதிராக ஒருவார கால பிரச்சாரத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி 3 அன்று நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மின்சார ஊழியர்கள் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். மின் ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்புக்குழு அழைப்பின் பேரில் மின்சார திருத்த மசோதா 2020ஐ எதிர்த்து இந்த கிளர்ச்சி நடந்து முடிந்துள்ளது. அதற்கு  முன்னதாக சம்யுக்த கிஷான் மோர்ச்சாவின் அழைப்பின் பேரில் ஜனவரி 30 மகாத்மாகாந்தி நினைவு நாளையொட்டி நாடு முழுவதும் எண்ணற்ற இடங்களில் லட்சக்கணக்கான விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.

கட்டுரையாளர் : அசோக் தாவ்லே, தலைவர், அகில இந்திய விவசாயிகள் சங்கம்

தமிழில் : எஸ்.பி.ராஜேந்திரன்

;