articles

img

பாசிச ஆட்சி செய்தால் கங்கையிலும் பிணங்கள் மிதக்கும்....

தேர்தல் பணியில் ஈடுபட்ட 1621 ஆசிரியர்கள் கொரோனா தொற்றிக்கு இரையாகி  இறந்து போயினர். உத்தரப்பிரதேசத்தில்  கொரோனா தொற்று அதிகமாக இருந்த போது பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்பட்டது.  மாநில அரசு இரண்டரை லட்சம் ஆசிரியர்களை தேர்தல் பணிக்கு பயன் படுத்தியது. உ.பி., ஆசிரியர்கள் சங்கம்  கொரோனா பாதிப்பு அதிகம் இருந்ததால் தேர்தலை தள்ளி வைக்க கோரியது. ஆனால் அரசு அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்  தன் பலத்தை அறிந்துகொள்ள விரும்பினார். எனவே தேர்தல் நடத்தப்பட்டது . 

ஆனால், நடந்தது என்ன? அறிந்து கொள்வோம். 
கல்யாணி என்ற 27 வயது பெண் ஆசிரியர் ஜான்பூர்  மாவட்டத்தில் வேலை பார்த்து வந்தார். அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். தேர்தல் பணிக்கு வரவேண்டும் என ஏப்ரல்  9ஆம் தேதி அன்று  அவருக்கு உத்தரவு வழங்கப்பட்டது. அவர் உடல் நிலையை சொல்லி விடுப்பு விண்ணப்பம் கொடுத்தார். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவர் ஏப்ரல் 14 அன்று தேர்தல் பயிற்சி வகுப்பிற்குசென்றார். அங்கு தேர்தல் பணியில் ஈடுபடமறுக்கும் ஊழியர்கள் மீது வழக்கு தொடரப் படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது.   ஆசிரியர் கல்யாணி தன் மோசமான உடல்நிலையுடன்  வேலை பறிபோய் விடும் என்றுபயந்து ஏப்ரல் 15 அன்று தேர்தல் பணியாற்றினார். ஏப்ரல் 17 அன்று அவருக்கு தொற்று தெரிய வந்து, ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்து போனது. மருத்துவமனை  தேடி அலைந்து ஒரு வழியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்கவில்லை. ஏப்ரல் 24 அன்று ஆசிரியர் கல்யாணி இறந்தார்.  இது கொலையின்றி வேறென்ன? 

மற்றொரு சம்பவம் 
லாலன்குமார்  மற்றும் அவர் மனைவி மீனா குமாரி இருவரும் சித்தார்த் நகரில் ஆசிரியர்களாக  பணி புரிந்து வந்தனர்.  இருவரும், மேலே குறிப்பிட்ட கல்யாணி அவர்களை போலவே, ஏப்ரல் 11அன்று தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். ஏப்ரல் 17 அன்று லாலன் குமாரின்   உடல்நிலை மோசமானது. அவரது கொரோனா பரிசோதனை நெகடிவ் என்று வந்தது. ஆனால் உடல் நிலை சரியாக வில்லை. ஏப்ரல் 18 முதல் மருத்துவமனைக்கு அலைந்தார். அவருடைய டெஸ்ட் ரிப்போர்ட் நெகடிவ் என்றுஇருந்ததால் மருத்துவமனையில் இடம்கிடைக்கவில்லை. ஏப்ரல் 23 அன்று மீண்டும்டெஸ்ட் எடுத்தார். தொற்று உறுதியானது. ஏப்ரல் 24 அன்று மருத்துவமனையில் அவருக்கு இடம் கிடைத்தது. ஆனால் பலனில்லை. ஏப்ரல் 25 அன்று அவர் இறந்துபோனார். 

அவர் இறப்புக்கு பின்னால் கூட தேர்தல்பணியில் பங்கேற்க வில்லை என்று மாநிலஅரசு யார் மீதேனும் வழக்கு தொடர்ந்து இருந்தால் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டுமென மாநில கல்வித்துறை உத்தரவு இட்டது.  இது ஒருபுறம் இருக்கலாலன்குமார்   மனைவி மீனா குமாரியும்தொற்று ஏற்பட்டு  சித்தார்த் நகர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  ஆனால் அவர் மே  மாதம் 4ஆம் தேதி அன்றுசிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துபோனார். அவர் இறக்கும் போது அவருக்குதன் கணவர் இறந்தது கூட தெரியாது. இந்த இரண்டு சம்பவங்களை பார்க்கும் போது ஆசிரியர்கள் அங்கு எவ்வாறு நடத்த படுகிறார்கள்  என்பது தெரியும். இந்த இரண்டு சம்பவங்களுக்கு பின்னால், உபி  ஆசிரியர்கள்  சங்கம் மாநில பஞ்சாயத்து தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டும்  தேர்தலில் பணியாற்றி கொரோனா தொற்று ஏற்பட்டும் இறந்து போன 708 ஆசிரியர் பட்டியலை அரசிடம் கொடுத்தது.  பாதிக்கப் பட்டஆசிரியர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. மேலும் இதற்காக சங்கம் உயர்நீதி மன்றத்தையும் நாடியது. தேர்தல்முடிவடைந்து இருந்தாலும் வாக்கு எண்ணிக்கை பணிகளில் தாங்கள் பங்கு கொள்ளமாட்டோம் என்று அறிவித்தது. 

ஆனால், மாநில அரசு  மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, ஆசிரியர்கள் வாக்கு எண்ணிக்கை பணிக்கு வரவழைக்கப்பட்டனர். 829 மையங்களில்வாக்கு எண்ணிக்கை பணி நடைபெற்றது. 829 மையங்களில் கண்காணிப்பு காமிராக்கள்  இருந்தன, 75 பேருக்கு மேல் அனுமதிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆயினும், எதிர்பார்த்தபடி வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் நெறிமுறைகள் வெளிப்படையாக மீறப்பட்டன. ஒவ்வொரு மையத்திலும் 75 பேர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றஉத்தரவு இருந்தாலும்,  நிலைமை எல்லை மீறியது. இவை எல்லாம் முடிந்தவுடன், ஏராளமான ஆசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டது. தகவல்கள் திரட்டப்பட்டு பார்த்த போது  1621 ஆசிரியர்கள்  இறந்து போயிருந்தார்கள். மாநில அரசு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. 

மேலும் அரசு தேர்தல் பணியின்போது  3 ஆசிரியர்கள் மட்டுமே இறந்து போனதாக  அறிவித்தது.  அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இறந்து போன ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு 1 கோடி ரூபாய்நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.  ஆனால்,  உ.பி., அரசு 30 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்குவ தாக அறிவித்தது.இது குறித்து  ஆசிரியர் சங்க தலைவர் தினேஷ் சந்திரா சர்மா கூறும் போது, உ.பி., மாநில நிவாரண நிதிக்கு ஆசிரியர்கள்  சார்பாக 76 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளதாக  கூறினார். நடத்தப்பட்ட பஞ்சாயத்து தேர்தலினால் 1621 ஆசிரியர் குடும்பங்கள் நாசமாகி  விட்டது. மாநிலஅரசு உயர்நீதிமன்றத்தில் கொரோனா பாதிப்பின் உண்மை நிலவரங்களை சொல்லவில்லை. மாநில அரசு யதேச்சதிகாரமாக செயல்பட்டது.  உயர்நீதிமன்றம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. யோகிஆதித்யநாத்  உயர்நீதிமன்ற உத்தரவுக்கு  எதிராக உச்சநீதிமன்றத்தில் தடையை  பெற்றது. யோகி ஆதித்யநாத்  மாநிலத்தில் தனக்குள்ள  பலம் என்ன என்பதை தெரிந்து கொள்வதில்தான் ஆர்வம்காட்டினார்.  ஆனால் தேர்தல் முடிவுகள் அவருக்கு எதிராகத்தான் இருந்தது. மொத்தத்தில் இந்த  சம்பவங்கள் 1621 ஆசிரியர்களின் மரணம் பற்றியது மட்டுமல்ல. 1621 ஆசிரியர் குடும்பங்கள்  அனாதை ஆக்கப்பட்டது பற்றியது. 

கட்டுரையாளர் : மதுகார்க்

நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி (6.6.2021)

தமிழாக்கம் : உடுமலை மணிமேகலை

;