articles

img

விவசாயிகள் மகா எழுச்சி 200....

மோடி அரசின்கொடிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற்று வரும் இந்திய விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டத்தின் 200-வது நாளையொட்டி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் திங்களன்று (ஜூன் 14 ) மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கண்டன கூட்டம் இணைய வழியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தலைவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

தமிழக விவசாயிகளுக்கு ஹன்னன் முல்லா அறைகூவல்...

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளரும், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்களில் ஒருவருமான ஹன்னன் முல்லா கண்டன உரையாற்றுகையில், “கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் மாதம் 6 ஆம் தேதி உத்திரப்பிரதேசயோகி ஆதித்யா அரசு, மன்சூர்மாவட்டத்தில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் விவசாயிகள் 6 பேர் கொல்லப்பட்டதையும் இந்த கொடூரத்திற்கு, அநீதிக்கு எதிராக பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் ஒன்றிணைந்து ஜூன் மாதம் 28ஆம் தேதி தில்லியில் கண்டனக் கூட்டத்தை நடத்தியதையும் சுட்டிக்காட்டினார்.

இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்ட வரலாற்றை நினைவு கூர்ந்ததுடன் 200 ஆவது நாளை கடந்திருக்கும் வீரம் செறிந்த விவசாயிகளின் போராட்டத்தை நடத்திக் கொண்டு வரும்விவசாயிகள்  போராட்ட ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டு இம்மாதம்28ஆம் தேதியுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைவதையும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மக்கள் விரோத, விவசாயிகள் விரோத கொள்கைகளால் தொடர்ந்து சவால்களை எதிர்கொண்டும் பல்வேறுஇன்னல்களை அனுபவித்துக் கொண்டும்; விவசாயிகள் மீது மோடிதொடுத்து வரும் அடக்குமுறைகளுக்கு எதிராக அகில இந்திய அளவில் தொடர் இயக்கங்களை நடத்த விவசாயிகள் ஒருங்கிணைப்பு போராட்டக்குழு முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

மக்கள் விரோத, விவசாயிகள் விரோத கொள்கையே தனது உயிர் மூச்சாக கொண்டுள்ள பிரதமர் மோடி, அதானி அம்பானிகளுக்கும்  கார்ப்பரேட்நிறுவனங்களுக்கும் விசுவாசமாக நடந்து கொள்ள வேளாண் மக்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட மூன்று கருப்புச் சட்டங்களால் ஏற்படும் பாதக அம்சங்களை எடுத்துரைத்த ஹன்னன் முல்லா விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் தனிநபர் மசோதா மக்களவையில் தாக்கல் செய்தபோது அதன்மீது விவாதம் நடத்தகூட அனுமதிக்காமல் மக்களவைத் தலைவரும், ஒன்றியஅரசும் தனது வர்க்க பாசத்தைஎப்படியெல்லாம் வெளிப்படுத்தி னார்கள் என்பதையும் சுட்டிக்காட்டி னார்.விவசாயிகளுக்கு எதிரான மூன்றுகருப்பு சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும்; நிலம் கையகப்படுத்தும்முயற்சிகளைக் கைவிட வேண்டும்; விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்ற சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என போராட்டக்குழு முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள மனமில்லாத ஒன்றிய அரசுக்கு; தேசிய அளவில் தொடர்ந்து போராட்டம் நடத்திய விவசாயிகளை ‘கிள்ளுக் கீரையாக’ பார்த்த மோடி அரசுக்கு தலைநகர் தில்லியின் 5 எல்லைகளையும் முற்றுகையிட்டு பாடம் புகட்டப்பட்டது என்றார்.

பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து அணி அணியாக லட்சோப லட்சம் விவசாயிகள் ஆண்களும் பெண்களுமாக தலைநகரை நோக்கிஅணிவகுப்பு நடத்தினர். விவசாயிகளின் அறவழிப் போராட்டத்தை ‘கலவரமாக’ மாற்றி ஆதாயம் தேட முனையும் ஆர்.எஸ்.எஸ். சதித்திட்டத்தையும், மோடி அரசின் அடாவடித் தனம், அடக்குமுறை, ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டும் எண்ணற்ற உயிர்களை தியாகம் செய்தும் போராட்டம் எழுச்சி கொண்டு வருவதையும் அவர் விரிவாக விளக்கினார். மேலும் ஹன்னன் முல்லா பேசியதாவது:

ஒன்றிய அரசுக்கு எதிரான போராட்டத்தை உறுதியுடன் நடத்திக் கொண்டிருக்கும் விவசாயிகளுடன் 200 விவசாய  அமைப்புகள் ஒன்றிணைந்து மிகப்பெரிய அமைப்பு உருவான அதையும் தற்போது அந்தப் போராட்டக் குழுவில் மேலும் 50 அமைப்புகள் இணைத்துக் கொண்ட எழுச்சியை, போராட்ட உணர்வை, உறுதிமிக்க போர்க் குணத்தை, நாடு முழுவதும் எழுந்த போராட்ட அலையை ஆதரவு இயக்கங்களை பார்த்து மிரட்சி அடைந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, இதனைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல், விவசாயிகளின் போராட்ட செய்திகளை இருட்டடிப்பு செய்ய ஊடகங்களை மிரட்டி தனது கைக்குள் வைத்துக் கொண்டு ‘பொம்மலாட்டம்’ காட்டி வருகிறார்.

நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படாமல் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தாரை வார்த்து கொடுப்பதுடன் அதானி, அம்பானிக்கு பல்லக்குத் தூக்கும் மோடி அரசை தூக்கி எறிவதற்கும் விவசாயிகள் நாடு முழுக்க தயாராகி விட்டார்கள். அதற்குமுன்னோட்டம்தான் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவு. இது, அடுத்த ஆறு மாத காலத்தில் நடைபெறவிருக்கும் பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களிலும் பிரதிபலிக்கும். அந்த மாநிலங்களில் இருந்தும் பாஜக ஒட்டுமொத்தமாக தூக்கி எறியப்படும்.விவசாயிகளுக்கு எதிரான மோடி அரசு, விவசாய தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்ட உரிமைகளை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்சி’ யை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இத்தகைய கொடுங்கோல் ஆட்சியாளர்களிடமிருந்து ஜனநாயகத்தையும் விவசாயிகளையும் பாதுகாக்க இந்தியவிவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் நாடு தழுவிய அளவில் மிகப் பெரிய இயக்கத்தை நடத்த திட்டமிட்டு வருகிறோம்.

அடுத்து ஒரு சில மாதங்களில் அனைத்து மாநிலங்களிலும் தொடங்கும் இந்தப் போராட்டம் ‘நாடு தழுவிய’அளவில் வாய்ந்ததாக அமையும். அத்தகைய போராட்டத்தில் தொழிற்சங்கங்கள், மாணவர், மாதர், வாலிபர், ஆசிரியர், அரசு ஊழியர்கள் என பலதரப்பட்டஅமைப்புகளும் கரம் கோர்க்கும். முக்கியமான காலகட்டத்தில் இந்தகூட்டத்தை நடத்தும் தமிழக விவசாயிகள், தங்களது போராட்டத்தின் ஒரு பகுதியாக தில்லியில் விவசாயிகளுடன் வலுவாகக் கரம் கோர்க்க வேண்டும்.இவ்வாறு ஹன்னன் முல்லா பேசினார்.

                                   *****************

ஓராண்டில் 10 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை

முன்னதாக விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பாலகிருஷ்ணன் தனது தலைமை உரையில்,”ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத ஆட்சியால் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் 5000 க்கும் அதிகமானோர் நிலம் உள்ளவர்கள். 4,230 பேர் நிலமற்ற விவசாயிகள். ஒரு நாளைக்கு சராசரியாக 28 விவசாயிகள் தங்களது இன்னுயிரை மாய்த்து வருகின்றனர்” என்று விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டம் குறித்து தில்லியில் ஆய்வை நடத்திய தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று வெளியிட்ட ஆய்வை சுட்டிக்காட்டி பேசினார்.விவசாயிகள் என்கிற “டைம்பாம்” மீது ஒன்றிய அரசாங்கம் அமர்ந்து கொண்டு இருக்கிறது. டிக். டிக்.. டிக்... என்று ஒலித்துக் கொண்டிருக்கும் அந்த வெடிகுண்டு எந்த நேரத்திலும் வெடித்து சிதறக் கூடும் என்றும் எச்சரித்தார்.வேளாண் விரோத 3 சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி  பாஜகவையும் பிரதமர் மோடியையும் ஆட்சியிலிருந்து  தூக்கி எறியும் வரைக்கும் தொடர்ந்து இந்தப் போராட்டம் நீடிக்கும் என்றும் பாலகிருஷ்ணன் கூறினார்.

வரலாற்று நாயகர்கள்
இந்த கண்டனக் கூட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,”உலக வரலாற்றில் ஒரு போராட்டம் 200 நாட்களாக தொடர்ந்து நடைபெறுகிறது என்றால் அது சாதாரணமானதே அல்ல‌; அந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும்  விவசாயிகள் ‘வரலாற்று நாயகர்கள்’ என்றார். கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலை, இரண்டாவது அலைகளின் கோரத்தாண்டவம், கோடை வெயில், கடும் குளிர், என்று எண்ணற்ற இடர்பாடுகளையும் எதிர் கொண்டு வரும் விவசாயிகள் கொரோனா வைரஸை முடக்கி விட்டார்கள். மறுபுறத்தில், ஒன்றிய அரசும் உத்தரப்பிரதேச மாநில அரசும் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை, அடக்குமுறை, ஆர்எஸ்எஸ் அமைப்பின் சதித்திட்டம், நயவஞ்சக செயல்களையும், கொள்ளைக் கும்பலின் சதி திட்டங்களையும்  முறியடித்து உறுதிமிக்க போராட்டத்தை நடத்திவரும் விவசாயிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்றென்றும் தோள்கொடுத்து துணை நிற்கும் என்றும் அவர் கூறினார்.
நாட்டை கபளீகரம் செய்யத் துடிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் முயற்சிக்கு எவ்வித தடையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக  ஏஜெண்டாக செயல்பட்டு வரும் ஒன்றிய பாஜக அரசு வேளாண் மக்களுக்கு விரோதமான மூன்று சட்டங்களையும் திரும்பப்பெற மறுக்கிறது. மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதால் ஒன்றிய அரசுக்கு எவ்வித பொருளாதார இழப்பும் ஏற்படப்போவதில்லை. இதில் வெற்று கௌரவத்தை கடைபிடித்து வரும் பாஜக அரசின் ஆணவப்போக்கால் தான் விவசாயிகளின் போராட்டத்தை நீட்டித்துக் கொண்டே வருகிறது. எரிமலையாய் வெடித்து கிளம்பிக் கொண்டிருக்கும் இந்தப் போராட்டம் தலைநகரை ஸ்தம்பிக்க செய்யும் என்றும் மோடி அரசுக்கு கே. பாலகிருஷ்ணன் எச்சரிக்கை செய்தார்.

அகம்பாவத்தின் உச்சம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தனது கண்டன உரையில்,”தங்களுக்கு மக்களவையில் மிருக பலம் இருக்கிறது என்கிற ஒரே வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தான்தோன்றித்தனமாக செயல்படுகிறது  மோடி அரசு எனச் சாடினார். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்துள்ள மோடி அரசு, அந்த ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் விவசாயிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்தை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று ஒன்றிய அரசு நினைக்கிறது. அது ஒரு போதும் நடக்காது. விவசாயிகள் மட்டுமன்றி நாட்டு மக்களின் குரல்வளையை நெரித்து வரும் ஒன்றிய அரசை விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து பாஜகவின் குரல் வளையை நெரித்து மகத்தான வெற்றி பெறுவோம் என்றும் அவர் கூறினார்.

ஜூன் 21-ஆம் தேதி கூடுகிற தமிழக சட்டப்பேரவையில் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக அரசு கொண்டு வரும் தீர்மானத்திற்கு, கேரள சட்டப்பேரவையில் கடந்த முறை பாஜக உறுப்பினர் ஆதரவு தெரிவித்தது போன்று தமிழக பாஜக எம்எல்ஏ க்களும் ஒரு மனதாக தீர்மானத்தை நிறைவேற்ற ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் இரா.முத்தரசன் வேண்டுகோள் விடுத்தார்.

வெற்றி விவசாயிகள் பக்கமே!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி.,” தலைநகரில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளை சந்தித்து அவர்களது போர்க் குணத்தை கண்டு பெரும் உத்வேகம் அடைந்ததையும் திருவிழாக் கோலமாக மாறியிருக்கும் போராட்டக்களத்தில் விவசாயிகளின் உறுதியான போராட்ட உணர்வுகளையும் எடுத்துரைத்தார். நாட்டில் விவசாயம் இல்லையென்றால் உணவு இல்லை. அத்தகைய மாபெரும் பணியை செய்து கொண்டிருக்கும் விவசாயிகள் தில்லியின் எல்லைகளில் எவ்வித சலிப்பும் விரக்தியும் இல்லாமல் ஆறரை மாத காலமாக போராடிக் கொண்டிருப்பது அவர்களுக்கான பிரச்சனை மட்டுமல்ல அது தேசப் பிரச்சனை. ஆகவே வெற்றி விவசாயிகள் பக்கமே. அது வெகு விரைவில் கிடைக்கும் என்றும் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்தார்.

தடம் பதித்த விவசாயிகள்
சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான பேரா.எம்.எச் ஜவாஹிருல்லா, ஒன்றிய அரசின் மக்கள் விரோத சட்டங்களை அம்பலப்படுத்தியதோடு, மோடி தலைமையிலான பாசிச அரசுக்கு எதிராக; கார்ப்பரேட் அடிமைகளுக்கு எதிராக தில்லியின் எல்லைகளில் நடந்துவரும் விவசாயிகளின் போராட்டம் வரலாற்றில் தடம் பதித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின்  துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா பேசுகையில், “நாட்டின் பூர்வகுடி மக்களான விவசாயிகளை அழித்து ஒழித்து விட வேண்டும் என்று ஒன்றிய அரசு முடிவு கட்டியுள்ளது. ஆனால் பிரதமர் மோடியின் எண்ணம், கனவு ஒருபோதும் நிறைவேறாது” என்றார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாய அமைப்புகள் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து குமரி முனையிலிருந்து நீண்ட நெடிய  பிரச்சார பயணத்தை துவக்க வேண்டும் என்றும் தனது ஆலோசனையை முன்வைத்தார். 

இந்திய சுயாட்சி கட்சியின் தலைவர்களில் ஒருவரான கிறிஸ்டினா சாமி, தலைநகரில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தில் பெண்களின் மகத்தான பங்களிப்பு குறித்தும் அவர்கள் பங்கேற்று வருவதன் பின்னணி பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.எஸ்யுசிஐ கம்யூனிஸ்ட் கட்சியின் அனவரதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் மாநிலச் செயலாளர் என்.கே. நடராஜன், கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மக்கள் விடுதலையின் தலைவர் சிதம்பரநாதன் உள்ளிட்டோரும் கண்டன உரையாற்றினர். ஜூன் மாதம் 26ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆளுநர் அலுவலகம் முற்றுகைப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது என்றும் அறைகூவல் விடுக்கப்பட்டது.

தொகுப்பு: சி.ஸ்ரீராமுலு

;