articles

img

சூதாடிகளுக்கு சூடு போட்ட சாமானியர்கள்....

உலகம் முழுவதும் நிதி மூலதனம் எவ்விதகட்டுப்பாடும் இன்றி சுதந்திரமாக சென்றுவரும் வகையில் நாடுகளின் சட்டங்கள் வளைக்கப்பட்டுள்ளன. ஊக வாணிபம் பல நாடுகளின் சாதாரண நடுத்தர வருவாய் மக்களின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கியிருக்கிறது. பங்கு மார்க்கெட் என்பது சமத்துவமான போட்டி நிலவும் இடமில்லை. அங்கு வல்லான் வகுத்ததே விதி. பல நாடுகளிலும் உள்ள பங்குச் சந்தையை கட்டுப்படுத்துவது, அந்த நாட்டின் பலம் பொருந்திய உச்சபட்ச பணக்காரர்களும் அவர்களுக்காக சகுனி போன்று தாயக் கட்டைகளை உருட்டும் பங்குச் சந்தை தரகர்களும் தான். 

உதாரணமாக அமெரிக்க பங்குச் சந்தையின் மொத்தமதிப்பில் 95 சதவீதம் வெறும் 5 சதவீத உயர் பணக்காரர் வசம்தான் உள்ளன. இப்பொழுது இப்படிப்பட்ட பில்லியனர்கள் நேரிடையாக பங்கு சந்தையில் ஈடுபடுவதற்கு பதிலாக, தங்களின் ஆதிக்கத்தை பலப்படுத்த மிகவும் உச்சபட்ச பணக்காரர்கள் இணைந்து தனியார் கூட்டு மூலதன நிறுவனங்களை வரி இல்லா சொர்க்க தீவுகளில் (மொரீஷியஸ் போன்ற தீவுகள்) பதிவு செய்துவிடுவர். இதுவே ஹெட்ஜ் பண்ட் நிறுவனம். இவை தங்கள் முதலீட்டாளர்களின் சார்பில் ஊக வாணிபத்தில் ஈடுபடும். (ஹெட்ஜ் பண்ட் என்றால் தனியார் மூலதன கூட்டு நிறுவனம்).

இவற்றில் லேவா தேவி பணம் பல பில்லியன் டாலர்களாகவும் மில்லியன் டாலர்களாகவும் இருப்பதால், இவைசொல்வதே சந்தையின் வேதமாகும். இவையே சந்தைகளை கட்டுப்படுத்தும் சக்திகளாக விளங்கும். சாதாரண மக்களை சந்தைக்குள் வரவைத்து அவர்களது சிறு முதலீடுகளை கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி, சூதாடிப் பறித்துவிடும்சதிகாரர்களின் நவீனப் பெயர்தான் ஹெட்ஜ் பண்ட். 

‘சுதந்திரச் சந்தை’
பங்கு சந்தைகள் உலகம் முழுவதும் வைக்கும் கோஷம் “சுதந்திர வியாபாரம்-பங்கு சந்தையில் எந்த கட்டுப்பாடும் கூடாது- பங்கு சந்தையில் அரசு எந்த விதத்திலும் தலையிடக் கூடாது” என்பதே. ஆனால் அங்கு பல முறைகேடுகள் நடக்கும் போது அது ஏதோ தனிப்பட்ட நபர்களின் தவறுகள் போன்று சித்தரிப்பர். உதாரணம் உலகப் பெருமந்தம் முதல் 2008 பொருளாதார நெருக்கடி வரை.

வரலாறு நெடுகிலும் 1930களில் ஏற்பட்ட உலகப் பெருமந்தம் முதற்கொண்டு அனைத்து பங்கு மார்க்கெட்சரிவுகளும் உள்ளிருக்கும் தரகர்களின் பித்தலாட்டங்களால் உருவானவையே! ஆனால் ஒவ்வொரு முறையும் அதன் மீது நடத்தப்படும் விசாரணையின் முடிவில், பங்குசந்தையில் முறையான வியாபாரத்திற்கான விதிகள் வகுக்கப்பட்டதே இல்லை. அதற்கான எந்த ஒரு முயற்சியும் முளையிலேயே முறியடிக்கப்பட்டுவிடும்.

பரிவர்த்தனை வரி  பறந்தோடிய கதை
2013ஆம் ஆண்டு ஐ.மு.கூ. அரசின் நிதி நிலை அறிக்கையில் (பட்ஜெட்) பங்குகள் பரிவர்த்தனை வரி (செக்யூரிட்டிஸ் டிரான்ஸ்சாக்சன் டாக்ஸ்) என்ற புதிய வரி போடப்பட்டது. அதாவது பங்கு வாங்கி விற்கும் போது அவற்றின் மொத்த மதிப்பில் புள்ளி சைபர் ஒன்று ஏழு(0.017%) சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. உடனேபங்கு மார்க்கெட் படுபாதாளத்திற்கு பாய்ந்து சரிந்தது. நிதி அமைச்சரும் பிரதம அமைச்சரும் பங்குச் சந்தையை இரவு முழுவதும் தாஜா செய்தனர். பின்னர், அந்த வரியை புள்ளி சைபர் சைபர் ஏழு சதவீதம் குறைத்து வெறும் புள்ளிசைபர் ஒன்று (0.01சைபர் ஒன்று (0.01%) என்று குறைத்தனர். அப்படியும் சரிவு நிற்கவில்லை என்பதால் முடிவில் அந்த மொத்த வரி ஆலோசனையும் திரும்பப் பெறப்பட்டது.அந்தளவிற்கு பங்கு சந்தைகள் நாட்டின் பொருளாதாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. 

பங்குச் சந்தைகள் நாட்டின் பொருளாதார அளவுகோலா?
உண்மையில் நாட்டின் பொருளாதார குறியீடுகளுக்கும் பங்குச் சந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மிக சிறப்பாக செயல்படும், ஏராளமான கோடி ரூபாய்கள்கையிருப்பாக(ரிசர்வ்) வைத்திருக்கும் நிறுவனங்களின் பங்குகள் விலை குறைவாகவும் எந்த பெரிய அளவிற்கு விற்று முதல் இல்லா நிறுவனங்களின் பங்குகள் மிக அதிகவிலைக்கும் விற்கும். 

அதே போன்று பொருளாதாரம் மிகவும் மந்த நிலையில்இருக்கும் போது பங்குச் சந்தை மட்டும் புதிய புதிய உச்சத்தைதொட்டுக் கொண்டிருக்கும். உதாரணம் தற்போதைய இந்திய தனியார் நிறுவனங்கள் தங்களின் நிறுவனங்களது பங்குகளின் விலைகளை மிக மிக அதிகமாக உயர்த்தவும், அதே சமயம், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை அவற்றின் மொத்த மதிப்பு இவர்கள் நிறுவனங்களை விட மிக மிக அதிக மதிப்பு கொண்டதாக இருந்தாலும் அவற்றின் பங்கு விலை குறைவாக இருக்கும் வகையிலும் வைத்திருக்கும். 

இவை எல்லாமே “சுதந்திரம் – எவ்வித கட்டுப்பாடும் அற்றசுதந்திரம்” என்று கூவிக்கொண்டே நடைபெறும். இப்படிப்பட்ட சர்வ வல்லமை கொண்ட ஹெட்ஜ் பண்ட் கும்பல்களுக்குத்தான்  கடந்த மாதம் அமெரிக்காவின் சாதாரண மக்கள், தரகர்களின் ‘விளையாட்டை’ பயன்படுத்தியே சூடுபோட்டனர். 

கேம் ஸ்டாப் (Game Stop) கதை
அமெரிக்காவில் கேம் ஸ்டாப் என்றொரு நிறுவனம். இந்த நிறுவனம் கம்ப்யூட்டர் கேம் வீடியோக்களை விற்பனைசெய்யும் ஒரு நிறுவனம். தற்போது கேம்கள் நேரிடையாக பதிவிறக்கம் செய்துவிடக் கூடிய நிலையில், இந்த நிறுவனம்பெரிய அளவில் தேக்க நிலையை சந்தித்தது. இதனைப் பயன்படுத்தி பல ஹெட்ஜ் பண்ட் நிறுவனங்கள் தங்களுக்குள் பேசி இந்த நிறுவனத்தின் பங்குகளை தரைமட்டத்திற்கு இறக்கி விடுவது என்று முடிவெடுத்து நடவடிக்கையில் இறங்க முயன்றனர். 

ரெட்டிட் (Reddit) ஊடகம்
 இந்த விஷயம் எப்படியோ வெளியில் கசிந்து, ரெட்டிட்(Reddit) என்ற சமூக ஊடகத்தின் விவாதத்திற்கு வருகிறது. நீங்கள் எதையாவது பகிர (ஷேர் ) விரும்பினால், முகநூல், வாட்சப், டிவிட்டர், மெயில், கூகுள் டிரைவ் போல ரெட்டிட் என்பதற்கும் ஒரு ஐகான் வரும் (படத்தில் உள்ளது போல). இது ஒரு சமூக விவாத மேடை. பல பிரச்சனைகள் குறித்தும் இந்ததளத்தில் விவாதங்கள் நடைபெறும். அந்த தளத்தில்தான் ஹெட்ச் பண்ட் நிறுவனங்கள் எடுத்த முடிவுகள் விவாதத்திற்கு வருகிறது. 

ரெட்டிட் எதிராட்டம்
பங்குச் சந்தையின் சூதாடிகளை ‘போட்டுப் பார்க்க’ முடிவெடுக்கிறது ரெட்டிட் கூட்டம். பங்குச் சந்தையில் கேம்ஸ்டாப் நிறுவனங்களின் பங்குகளை ரெட்டிட் சமூகதளத்தை பயன்படுத்திய சாமனியர்கள் வாங்கி குவிக்கிறார்கள். விளைவு? விளை சரிவதற்கு பதிலாக விலை எகிறஆரம்பிக்கிறது. ஹெட்ஜ் பண்ட் ஆசாமிகளுக்கு என்ன நடந்தது என்பதை முலில் புரிந்து கொள்ள முடியலில்லை. ஆனால் பத்து நாட்களுக்குள் நிலைமை தலைகீழ் மாற்றம் அடைந்தது. ஜனவரி 4 ஆம் தேதி 18.84 டாலராக இருந்தஒரு பங்கின் விலை ஜனவரி 22ல் 145.68ஆக உயர்ந்தது. 18 நாளில் 773 சதவீதம் கிட்டதட்ட 8 மடங்கு உயர்வு. 

ஹெட்ஜ் பண்ட்களின் ஓலங்கள்
விவிலியத்தில் கோலியாத்தை தாவீது கவன் கொண்டு வீழ்த்தியதைப் போல சாமானியர்கள், தொழிலுக்கு புதியவர்கள், நீண்ட காலம் செழித்து வளர்ந்திருந்த பெருச்சாளிகளான ஹெட்ஜ் பண்ட் நிறுவனங்களை கதறவிட்டனர். கேம்ஸ்டங் நிறுவனம் வீழ்ந்துவிடும் என்று சூதாடிய ஹெட்ஜ் பண்ட் நிறுவனங்களுக்கு 5 பில்லியன் டாலர்களுக்கு மேல் நஷ்டம். பல ஹெட்ஜ் பண்ட் நிறுவனங்கள் திவாலாகின. வலியைப் பொறுக்க முடியாத ஹெட்ஜ் பண்ட் மற்றும்பங்குச் சந்தை புரோக்கர்கள், எந்த சந்தையை யாரும் கட்டுப்படுத்தக் கூடாது என்றனரோ, எந்த சந்தை சுதந்திரமான சுயேட்சையான விருப்பத்தின பேரில் வாங்கலாம் விற்கலாம் என்றார்களோ, லாபம் வருகிறது என்றால் பங்கு விலைகளை தாறுமாறாக ஏற்றி இறக்குவது சட்டப்படி நியாயம் என்று முழங்கினார்களோ அவர்களே தொலைக்காட்சிகளில் தோன்றி முகாரி ராகம் பாடஆரம்பித்தனர். 

ஆக்ரோஷத்துடன், “இப்படி அநியாயம் நடப்பதை கட்டுப்படுத்த வேண்டாமா?, கட்டுப்பாடற்ற சுதந்திரம் எப்படி சரியாகும், வாங்குபவர் விருப்பத்திற்கு எந்த விலைக்கும் வாங்க எப்படி அனுமதிக்கலாம்?” என்று கார்ப்பரேட் ஊடகங்களில்,  வாகனங்களில் அடிபட்ட நாய்களைப் போலஊளையிடத் தொடங்கினர். வர்த்தக பன்னாட்டு தொலைக்காட்சி ஊடகங்களான சின்பிசி, எம்.எஸ்.என்.பி.சி போன்றவைகளில் இந்த ஓலங்கள் மிகவும் உரத்து ஒலித்தன. சாதாரண மக்களின் மகிழ்ச்சிஇந்த விளையாட்டில் சாதாரண முதலீட்டாளர்கள் அதாவது ரெட்டிட் இணைய தள கூட்டத்திற்கு யோகம் அடித்தது. ஆனால், சாதாரண மக்கள் கைக்கு அந்த பணம்சென்றதால்,  அந்த பணம் கம்யூனிஸ்ட்டுகள் சொல்வது போல சந்தைக்கே வந்தது. ஒருவர் தான் கல்விக்கு வாங்கியிருந்த கடனை முழுமையாக அடைத்தார். மற்றொரு சிறுவன் மூவாயிரம் டாலர்கள்சேமித்துள்ளான். ஒருவர் மினோசிட்டோ குழந்தைகள் மருத்துவமனையில் கேம்ஸ் நிறுவவும், சில வசதிகள் செய்து கொடுக்கவும் செய்துள்ளார். ஆக மொத்தத்தில் இந்தபணம் நியாயமான பல சேவைகளை செய்துள்ளது. பெரும் செல்வந்தர்களின் ஹெட்ஜ் பண்ட் களுக்கு போயிருந்தால் அமெரிக்காவின் கோக் குடும்பம், இலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ்  போன்ற ஒரு சில நபர்கள் மேலும் சில பில்லியன் சொத்துக்களை குவித்திருப்பர். அந்தப் பணம் சந்தைக்கு வந்திருக்காது. 

வால்ஸ்ட்ரீட்டின் எரிச்சல்
கோபம் தலைக்கேறிய வால்ஸ்ட்ரீட்(அமெரிக்க பங்கு சந்தை) சிறு முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில் விற்க, வாங்க பயன்படுத்தும் செயலியான ராபின்ஹூட் மூலம் கேம்ஸ்டாப் பங்குகளை வாங்க, விற்க தடை விதித்தனர். இதன் காரணமாக  அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு அடியோடு சரிந்தது. இது மட்டுமல்லாமல், ரெட்டிட் குழுவினர் ஏஎம்சி என்ற நிறுவனத்தின் பங்குகளையும் வாங்கி குவித்தனர். இந்த பங்குகளையும் யாரும் விற்க, வாங்க தடை செய்யப்பட்டது. இதற்கு நியூயார்க் நகரின் காங்கிரஸ் உறுப்பினர் அலெக்சாண்டிரியா ஒகாசியா கோர்ட்டஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வேடிக்கை என்னவென்றால், டிரம்ப்பின் ஆதரவாளர் செனட்டர் டெட் குருசும் ராபின்ஹூட்டின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். வர்க்க செயல்பாடு (கிளாஸ் ஆக்சன் சூட்) வழக்கு ஒன்று நியூயார்க் நகரில் ராபின்ஹூட் நிறுவனத்திற்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சாமானியர்களின் சூளுரை
‘சுதந்திரமான முதலாளித்துவம்’ என்று பேசியவர்கள், பங்குச் சந்தையின் நடவடிக்கை தங்களுக்கு எதிராக போனவுடன் கட்டுப்பாடுகள் பற்றி பேசுகின்றனர். ஆனால் சாமானியர்கள், பங்குச் சந்தை சூதாடிகளுக்கு எதிரான தங்களின் நடவடிக்கையை தொடர சூளுரைத்துள்ளனர். அடுத்து அவர்கள் வெள்ளியின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளனர். இந்த முழு சுவாரசிய கதையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, பங்குச் சந்தை என்பது பெரும் திமிங்கலங்களின் நீச்சல் குளம். அந்த கடலில் விதிகளை நிர்ணயிப்பது அனைத்தும் அவர்கள் நலனை ஒட்டித்தான்.  முடிப்பதற்கு முன் ஒரு சிறு கற்பனை. இந்தியாவில் ரிலையன்ஸ் மற்றும் அதானி பங்குகளை ஒருவேளை சாதாரண இளைஞர்கள் ரெட்டிட் போல இணைந்து படுகுழியில் தள்ளினால், நாடாளுமன்றத்தில் மோடி மற்றும் நிர்மலா கண்ணீர் விட்டு கதறி அழுவதை கண்டு ரசிக்கலாம்!

கட்டுரையாளர் : தூத்துக்குடி க.ஆனந்தன்

;