articles

img

விவசாயிகளே புறப்படுங்கள், இப்போதில்லை என்றால் எப்போது?

வரலாற்று ஏடுகளில் எண்ணிலடங்கா போராட்டங்கள் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நிலவரிக்கொடுமையை எதிர்த்து, வேளாண் உற்பத்தியில் நியாயமான பங்கு கேட்டு, வாழ்வாதாரமாக விளங்கும்நிலப்பறிப்புக்கு எதிராக, உணவுக்காக, உரிமைக்காக,அடிமைத்தனத்தை எதிர்த்து, மனித உரிமைகளைக் காக்க, இராணுவம், காவல்துறை ஆகியவற்றின் மிருகத்தனமான, கொடூரமான தாக்குதல்களை எதிர்த்து வீரம் செறிந்த எழுச்சிமிகு போராட்டங்களை நடத்தியுள்ளனர் நமது முன்னோர்கள்.

புன்னப்புரா வயலார், மாப்ளா கிளர்ச்சி, தேபகா, சந்தால்எழுச்சி, வோர்லி ஆதிவாசிகள் எழுச்சி, சௌரிசௌரா போராட்டம், கீழத்தஞ்சையில் நடைபெற்ற பண்ணை அடிமைத்தனத்தை எதிர்த்த போராட்டம், எல்லாவற்றைவிடவும் ஈடு இணையற்ற தெலுங்கானா ஆயுதந்தாங்கிய புரட்சி என கிராமப்புற உழைக்கும் மக்கள் நடத்திய போராட்டங்கள் வீரகாவியங்கள் ஆகும். ஆனால், இவை அனைத்தும் பகுதி அளவில் நடைபெற்ற வெற்றிகரமான போராட்டங்கள்.ஆனால், இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும்விவசாயிகள் போராட்டம் இவைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆளும் அரசுக்கு எதிராக 8 மாதங்கள் கடந்தும் தொடர்ச்சியாகவும், மிகவும் அமைதியான முறையில் சாதி, மதம், மொழி, மாநிலம் என்ற எல்லாவிதமான வித்தியாசங்களையும் ஒதுக்கி வைத்து “விவசாயிகள்” என்ற ஒற்றைச் சொல்லில் ஒன்றிணைந்து நடைபெறும் போராட்டம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அனைத்து மாநிலங்களிலிருந்தும் பல லட்சம் விவசாயிகள் ஒன்று திரண்டு இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு பிறகு இப்போது தான் இப்படியொரு ஒன்றுபட்ட நீடித்த போராட்டத்தை நம் கண்முன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். விவசாயிகளின் பேரெழுச்சி கண்கொள்ளா காட்சி.
விவசாயிகள் என்ற அடையாளத்தை அழித்தொழிக்க இந்திய ஒன்றிய அரசு கங்கணம் கட்டி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நவீன தாராளமய கொள்கைஎன்ற பெயரில் பெரும் பகுதி மக்களின் வள ஆதாரங்களை கபளீகரம் செய்து கார்ப்பரேட்களின் வசம் ஒப்படைத்துக் கொண்டிருக்கிறது. ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி சட்டம் எனும் ஆயுதத்தை உருவாக்கி அதை மக்களுக்கு எதிராகப் பயன்படுத்துகிறது. இந்தியவிடுதலைப் போராட்டம் என்பதே அன்றைக்கு இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த சட்டங்களை எதிர்த்த போராட்டம் தான். 200 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற அந்தப் போராட்டத்தின் இறுதியில் இந்தியா விடுதலை பெற்றது. அன்றைய ஆட்சியாளர்கள் கொண்டு வந்த சட்டங்களையெல்லாம் ஏற்றுக் கொண்டிருந்தால் இந்திய விடுதலைப் போராட்டமே நடந்திருக்காது.

இப்போது, மக்களால், மக்களுக்காக நடத்தப்படுவதாக சொல்லப்படும் ஆட்சியில் மக்களுக்கு விரோதமான சட்டங்கள் இயற்றப்படும் விநோதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தன் கையைக் கொண்டே தன்கண்ணை குத்திக் கொள்வதைப் போல மக்கள் பிரதிநிதிகளை கொண்டே ஆளுங்கட்சிக்கு மெஜாரிட்டி இருக்கிறது என்றால் எவ்வளவு மோசமான சட்டங்களையும் நிறைவேற்றிக் கொள்ளலாம். அதை ஏற்றுமக்கள் நடந்து கொள்ள வேண்டும். எதிர்த்தால் காவல்துறை, இராணுவம் போன்ற அடக்குமுறை கருவிகளைக் கொண்டு தாக்கி ஒடுக்குவோம் என்பது தான் ஆட்சியாளர்களின் நியாயமாக இருக்கிறது. ஆனால் மக்களுக்கு, விவசாயிகளுக்கு?

நில உரிமையை பாதுகாக்கவும் சுயமரியாதையுடன் வாழ்வதற்கும்
மனித உரிமைகளிலேயே எல்லாவற்றிலும் மேலானது உயிர் வாழ்வது. உயிர்வாழ்வது என்றால் ஏதோ மிருகங்களைப் போல கிடைப்பதை தின்று வாழ்வதல்ல! கௌரவமாகவும், சுயமரியாதையுடனும் வாழ்வது! சுயமரியாதையுடன் வாழ தொழில், வருமானம் அவசியம். விவசாயிகளைப் பொறுத்தவரை அது நிலத்திலிருந்து கிடைக்கிறது. அந்த நிலமே பறிபோய்விட்டால் அவர்கள் எப்படி சுயமரியாதையுடன் வாழ முடியும்.விவசாயி என்ற அடையாளத்தை இழந்து மற்றவர்களை அண்டிப் பிழைக்க வேண்டிய அவல நிலையை நினைத்தாலே உடல் நடுங்குகிறது. 

ஒப்பந்த சாகுபடி சட்டம் என்ற பெயரில் இப்போதுநிறைவேற்றப்பட்டிருக்கிற சட்டம் நடைமுறைக்கு வருமானால் விவசாயிகள் நிலங்கள் அவர்களிடமிருந்து கைமாறிவிடும். ஏற்கனவே, விவசாயிகளிடமிருந்து நிலங்கள் பறிபோய்க் கொண்டுள்ளன. நிலத்தைஇழந்த விவசாயிகள் உயிர்வாழ்வதற்காக கிடைக்கும் வேலையை செய்து பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். உடலுழைப்புத் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. சிறுகச் சிறுக நடைபெறுவதால் நம்கண்களுக்கு அதன் கொடூரமான விளைவுகள் தெரியாமல் இருக்கிறது. எத்தனையோ கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கின்றன. அத்தகைய நிலைமை நாடு முழுவதும் ஏற்பட்டால் எவ்வளவு பயங்கரமாக இருக்கும்? விவசாயிகள் உரிமை படைத்தமனிதனாக வாழ முடியுமா? எனவே, இப்போது விவசாயிகள் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டம் தங்கள்நிலஉரிமையை பாதுகாத்துக் கொள்ளவும்,சுயமரியாதையுடன் வாழ்வதற்குமான போராட்டமாகும்.

இரண்டாவது, உயிர்வாழ உணவு தேவை. பாஜகஆட்சியால் நிறைவேற்றப்பட்டிருக்கிற அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 நடைமுறைப்படுத்தப்பட்டால் அனைவருக்கும் உணவு என்பது இல்லாமல் போகும். பொதுவிநியோகம், நியாயவிலை என்ற வார்த்தையெல்லாம் அகராதியிலேயே இருக்காது. “வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் - இங்குவாழும் மனிதருக்கெல்லாம்” என்ற பாரதியின் வரிகள்எழுத்தில் மட்டுமே இருக்கும். சத்தான உணவின்றி மக்கள் நடைப்பிணமாக வாழ்ந்து பட்டினியால் மாண்டுபோவார்கள். எனவே, இப்போது விவசாயிகள் நடத்திக்கொண்டிருக்கும் போராட்டம் எல்லோருக்கும் உணவு உத்தரவாதம் என்ற நிலையை ஏற்படுத்துவதற்கான போராட்டம்.

மூன்றாவது, எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டுமென்றால் உணவு தானியங்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். குறைந்தபட்ச விலை உத்தரவாதம் இருக்க வேண்டும். இல்லையென்றால், வியாபாரிகள் வைத்தது தான் விலை. அது எவ்வளவுகுறைவாக இருந்தாலும் விற்றுத்தான் தீர வேண்டும். எனவே தான், குறைந்தபட்ச ஆதரவு விலையை தீர்மானிப்பதற்கான ஒரு மத்திய சட்டத்தை இயற்ற வேண்டும்என்ற கோரிக்கையை விவசாயிகள் முன்வைத்திருக்கிறார்கள்.

முன்னோடிகள் நம்மை மன்னிக்க மாட்டார்கள்
விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வேண்டுமென்பதற்கான போராட்டத்தில் விவசாயிகள் தங்கள் உயிரைஇழந்தனர். அவர்களுடைய தியாகத்தால் இன்று இலவச மின்சாரம் பெற்று பயிர்செய்கிறார்கள். உயிரைக் கொடுத்து பெற்ற இந்த பலனை பறிப்பதற்கு மின்சார திருத்த மசோதா 2021ஐ இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற துடித்துக் கொண்டிருக்கிறது இந்திய ஒன்றிய பாஜக அரசு. இதை கட்டாயம் முறிய
டித்தாக வேண்டும். இல்லையென்றால் உயிரைக் கொடுத்து மின்சாரத்தை பெற்றுக் கொடுத்த நமது முன்னோடிகள் நம்மை மன்னிக்க மாட்டார்கள்.

மேலே குறிப்பிட்டுள்ளவற்றில் எதை அநியாயம் என்று ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். நமது கண்ணுக்கு முன்பாக அநியாயம் நடக்கும் போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது நியாயமா? நமக்காக, நமது தலைமுறைகளுக்காக, தில்லியில் கடுங்குளிர், உறைபனி, கொளுத்தும் வெயில், சுழன்றடிக்கும் சூறாவளி என எல்லாவிதமான இயற்கைப் பேரிடர்களையும் எதிர்கொண்டு உயிரை பணயம் வைத்துப் போராடிக் கொண்டிருக்கிறார்களே! அதை அறிந்தும் அதில் பங்கேற்காமல் இருப்பது சரியா? இந்த எட்டு மாத காலத்தில் 600க்கு மேற்பட்ட விவசாயிகள் போராட்டக் களத்தில் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். அப்படியொரு செய்தியே கேள்விப்படவில்லையே என்கிறார் மத்திய வேளாண் துறை அமைச்சர். எத்தனை ஆணவமான பேச்சு இது?

எல்லாவற்றையும் விட முதன்மையானது...
தில்லிக்கு தமிழ்நாட்டிலிருந்து விவசாயிகள் படை புறப்படுகிறது என்று முகநூல் பக்கத்தில் என்னுடைய பதிவிற்கு ஒருவர் இவ்வாறு பின்னூட்டமிட்டிருந்தார் “போராட்டத்தில் நேரடியாக வந்து கலந்து கொள்ள வேண்டுமென்ற விருப்பமிருக்கிறது. ஆனால் இங்கு எனது வேலைகள் காரணமாக வரமுடியவில்லை” என்று! நமக்கு வேலையில்லாத போது மட்டும் தான் பொதுமக்கள் நலனுக்கான பணிகளில் ஈடுபடுவேன் என்பதும், போராட்டத்தை வேடிக்கை மட்டுமே பார்ப்ப
வர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் எல்லாம் எந்த வேலையும்இல்லாததால் தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்களா? வீட்டு வேலைகளில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டுள்ள பெண்கள் ஆயிரம் ஆயிரமாய் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு புதிய சரித்திரத்தை படைத்திருக்கிறார்களே! எனவே இப்போது எல்லாவற்றையும் விட முதன்மையானது இப்போராட்டத்தில் கலந்து கொள்வது தான்.

தேசவிடுதலைப் போராட்டத்தில் ஆண்டுக்கணக்கில் சிறையில் இருந்தார்களே! அவர்கள் சொந்த வேலையை முன்னிலைப்படுத்தி இருந்தால் நாடுவிடுதலை பெற்றிருக்குமா? பெற்ற உரிமைகளை இப்போது பறித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசுக்கு எதிராக பேசினால், எழுதினால் குற்றம் என்று சிறையிலடைக்கும் கொடுங்கோல் ஆட்சி இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உழைக்கும் மக்களின், விவசாயிகளின், தொழிலாளர்களின் உயிரைத்தவிர அனைத்தையும் பறிக்கும் வகையில் ஆட்சியாளர்கள் செயல்படுகிறார்கள்.

பேரெழுச்சியில் நாமும் ஒரு துளியாக
மனிதக்கடல் தில்லியை சூழ்ந்துள்ளது. அந்தக் கடலில் நாமும் சங்கமிக்கவேண்டுமென்ற ஒரே சிந்தனை தான் இப்போது விவசாயிகளுக்கு ஏற்பட வேண்டிய ஒரே எண்ணமாக இருக்க வேண்டும். நாம்வாழும் காலத்தில் இப்படியொரு போராட்டம் இனி நடக்குமா? என்றால் சந்தேகந்தான். எனவே, தமிழகத்திலிருந்து விவசாயிகள் படை தில்லிக்கு செல்லதயாராகி வருகிறது. அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் அங்கமாக இருந்து முக்கிய பங்காற்றி வரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவிவசாயிகள் ஆகஸ்ட் 3 ஆம் தேதி புறப்படுகின்றனர். படையில் ஒருவராக நானும் இருக்கிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகளின் பேரெழுச்சியில் இதோநானும் ஒரு துளியாக கலந்துள்ளேன் என்ற எண்ணமேஎவ்வளவு பெருமிதத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறது. 

நமது பங்கேற்பு தில்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு பெரும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தும். நாட்டின் தென்கோடியிலிருந்து பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம்செய்து விவசாய சகோதரர்கள் வந்து வலுவூட்டியிருக்கிறார்கள் என்பது நீண்ட நாள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு வெற்றியை நோக்கி மேலும்முன்னேற ஊக்கமளிக்கும். “கோரிக்கை நிறைவேறாமல் வீடு திரும்புவதில்லை” என்ற அந்த வைராக்கியம் மேலும் உறுதிப்படும். எனவே, ஒவ்வொருவருடைய பங்கேற்பும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. பதினெட்டு நாட்கள் நடைபெற்ற பாரதப்போர் குறித்து இந்திய சமூகம் இன்றளவும் பேசிக் கொண்டிருக்கிறது. இராமாயணமும் மக்கள் மனங்களில் நீங்காதஇடத்தை பிடித்திருக்கிறது. இந்த இரண்டு இதிகாசங்களும் அடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. தில்லி போராட்டத்தில் நமது பங்கேற்பும் காவியமாகும்.

விவசாயிகளே! புறப்படுங்கள் தில்லிக்கு, இப்போதுஇல்லையென்றால் இத்தகைய வாய்ப்புகள் எப்போது?

கட்டுரையாளர் : பெ.சண்முகம், பொதுச்செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.

;