articles

img

இந்திய தேசத்தின் பெருமை வந்தனா... அர்ப்பணிப்பின் அருமையை அவமானப்படுத்தும் இந்துத்துவ சக்திகளின் இழி முயற்சி...

“அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள்என்று கொண்டாடும் தேசத்தில்,ஒரு விளையாட்டு வீராங்கனையை, அதிலும் வெற்றிகரமான ஒரு வீராங்கனையை ‘தலித்’ என்ற ஒரே காரணத்திற்காக உயர் சாதியைச் சேர்ந்த சில வாலிபர்கள் மிக மோசமான அவதூறு வார்த்தைகளை அள்ளி வீசியது ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெரும் தலைகுனிவாகும்”

யார் அந்த வந்தனா?

கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணியின்மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரம். அணியின் ஃபார்வர்ட் வீரரான இவர் இந்தியாவின் அட்டாக்கிங் முகம்.ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு கேப்டனாக அணியை வழி நடத்தியவர். உலக ஜூனியர் கோப்பையில் அதிக கோல்களை (ஐந்து) அடித்த முதல் வீராங்கனை. இந்திய அணி வெண்கலப் பதக்கம் வெல்வதற்கு பக்கபலமாக நின்றவர்.

அது மட்டும்தானா?

வந்தனாவின் ஆட்டத்தால்தான் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா காலிறுதிக்கே முன்னேறியது. தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோற்றிருந்தது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றால் இந்திய அணி மூட்டை முடிச்சை கட்ட வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது.

பெருமைகளின் நட்சத்திரம்

இந்த போட்டியின் சூப்பர் ஸ்டாராக மாறிய வந்தனா, “ஹாட்ரிக்” கோல்களை அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு துணையாக நின்றார். ஒலிம்பிக் வரலாற்றில் 1984ஆம் ஆண்டுக்குப் பிறகு ஹாட்ரிக்கோல் அடித்திருக்கும் ஒரே இந்திய வீராங்கனை எனும் பெருமையையும் பெற்றார்.2014ஆம் ஆண்டில் “சிறந்த வீரர்” விருதைவென்றவர். 2014-15 ஆம் ஆண்டுகளில் ஹாக்கி உலக லீக் தொடரில் 11 கோல்கள் அடித்த வீராங்கனை என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.இந்திய அணிக்காக 220 போட்டிகளில் விளையாடிய மூத்த வீராங்கனை மட்டுமல்ல சுமார் 60 கோல்களை அடித்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம்.2016 ஆம் ஆண்டு பிரேசிலின் ரியோ நகரில்நடந்த ஒலிம்பிக்கில் இந்திய அணியில் விளையாடிய சிறந்த வீராங்கனை.
ஹாக்கி விளையாட்டில் சிறந்து விளங்கிய அவரது சேவையைப் பாராட்டியும் தொடர்ந்துசிறப்பாக விளையாட ஊக்கம் அளித்திடவும் இந்திய ஒன்றிய அரசின் அர்ஜுனா விருதுக்குவந்தனா பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சிம்ம சொப்பனம்!
வந்தனாவின் வேகமான ஆட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் வெளிநாட்டு வீரர்கள் பலரும் பல சமயங்களில் திக்குமுக்காடியுள்ளனர்.‌ எதிரணி வீரர்களின் கால்களில் இருந்து பந்தை கடத்திச்சென்று கோல் அடிப்பதில் கெட்டிக்காரர். அவரது திறமை துடிப்பான வேகம் இந்திய அணிக்கு பக்கபலமாக இருந்து வருகிறது. ‌காமன்வெல்த் ஹாக்கி போட்டியில் கனடாவுக்கு எதிராக தனது 100 ஆவது தொப்பியைவென்று சாதித்துக் காட்டினார். அவரது வேகமான நகர்வுகள் பல முறை இந்திய அணிக்கு
வெற்றிகளை குவித்து கொடுத்துள்ளது.

2018 ஆம் ஆண்டு நடந்த ஆசிய சாம்பியன்ஹாக்கி கோப்பையில் இந்திய அணி இறுதிப்போட்டியில் கொரிய அணியிடம் தோற்றாலும் வெள்ளிப் பதக்கத்தை வென்று நாடு திரும்பியது. இந்த வெற்றிக்கும் வந்தனா கட்டாரியா முழுமுதற் காரணமாவார். உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.அந்தத் தொடரிலும் சிறந்த விளையாட்டு வீரர் விருதை தட்டி வந்தார். 2018ல் ஸ்பெயின்சுற்றுப்பயணத்தின் போது 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டி வந்தனா கட்டாரியாவின்  200 ஆவது போட்டியாகும்.

அர்ப்பணிப்பின் அடையாளம்
வந்தனா கட்டாரியா 1992ஆம் ஆண்டு அன்றைய உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் ஹரித்வார் பகுதியின் ஒரு தலித் வகுப்பில் பிறந்தவர். தற்போது இந்தப் பகுதி உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ளது.அவரது தந்தை நஹர்சிங் ஹரித்வார் பிஎச்எல் நிறுவனத்தில் தொழில்நுட்ப பணியாளராக வேலை செய்து வருகிறார். சிறு வயதிலிருந்தே விளையாட்டின் மீது கொண்ட ஆர்வத்தால் ஹாக்கி விளையாட்டில் கவனம்செலுத்தினார். 2006 ஆம் ஆண்டு இந்திய ஜூனியர் அணிக்காக விளையாடி 2010 ஆம் ஆண்டில் சீனியர் அணியில் தேசிய அளவில்இடம் பிடித்தார்.டோக்கியோ ஒலிம்பிக்கிற்காக வந்தனா அவரது வாழ்வில் மிகப்பெரிய தியாகத்தை செய்திருக்கிறார். சொந்தபந்தம் முழுவதும் ஹாக்கி விளையாட எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவருக்கு முழு ஆதரவாக நின்றவர் அவருடைய அப்பா மட்டுமே. பயிற்சிமுகாமில் இருந்து டோக்கியோ புறப்பட தயாரான நிலையில், தந்தையின் மரணச் செய்தியைக் கேட்டும், அணியின் மொத்தப்பயணமும் பயிற்சியும் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து தன் தந்தையின் இறுதிச்சடங்கில் கூட கலந்து கொள்ளவில்லை. அந்த ஈடுசெய்ய முடியாத இழப்பின் வலியை சுமந்து கொண்டே டோக்கியோவிற்கு பயணப்பட்டார் வந்தனா.

ஆனால், நாடு முழுவதும் பசு பாதுகாவலர்கள், ரண்வீர் சேனா, யுவசேனா, ஸ்ரீராம் சேனா, அனுமன் சேனா, அகில பாரத இந்து மகா சபா, இந்து ஜக்ரன் வைதீக எனபல்வேறு பெயர்களில் செயல்பட்டு கொண்டிருக்கும் இந்து மதவாத கும்பல், மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற நாள் முதல் புது உத்வேகமும், உற்சாகமும் பெற்றுள்ளது.‘காதல் ஜிகாத்’, ‘நில ஜிகாத்’,’மாட்டிறைச்சி ஜிகாத்’ எதிர்ப்பு என்று கூறிக்கொண்டு தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, இஸ்லாமிய, கிருத்துவ சிறுபான்மை பெண்களுக்கு எதிரான வன்மம், உயிரோடு கொளுத்தும் காலித்தனம் போன்ற ஈனத்தனமான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.வேற்றுமை, பிரிவினைவாதங்கள் போன்றவற்றுக்கு அப்பாற்பட்டது விளையாட்டு. ஆனால், அப்படியிருக்கக்கூடாதென ஒரு கூட்டம் எப்போதுமே முயன்று கொண்டிருக்கிறது. அவர்களுக்கு வரலாறு நெடுகிலுமே பல முறை சவுக்கடி கொடுக்கப்பட்டுள்ளது.

சாதிவெறியால் சாய்க்க முயற்சி
முகமது அலியின் ஒவ்வொரு குத்துமேஅதற்கு ஒரு உதாரணம். வெண்கலப் பதக்கத்திற்கான இந்தியாவின் இறுதி ஆட்டத்திலும் அணியின் இறுதிகோலை அடித்தவர் வந்தனா கட்டாரியாதான்.  இந்தியா பதக்கம் இல்லாமல் வெளியேறியிருக்கலாம். ஆனால், வந்தனாக்களால் மட்டுமே ஹாக்கி இந்த உயரம் தொட்டிருக்கிறது.அந்த வரலாற்று வெற்றியை வந்தனாவின் சொந்த ஊர் மக்களும், உறவினர்களும் கொண்டாடினர். இந்த நிகழ்வுக்குப் பிறகு தான் வந்தனா கட்டாரியாவின் குடும்பம் ஆதிக்க சக்திகளின் சாதிவெறியை எதிர்கொள்கிறது.

அந்த கிராமத்துக்குள் புகுந்த உயர் சாதி ஆண்கள் வந்தனாவின் குடும்பத்தை துன்புறுத்தியுள்ளனர். இந்திய அணியில் தலித் வீரர்கள் அதிகம் இருந்ததால் தான் இந்தப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். இந்தசம்பவம் நாடு முழுவதும் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒலிம்பிக் தொடரில் அரை இறுதி வரைக்கும் முன்னேறிய இந்திய வீராங்கனைகள், பதக்கம் பெறும் வாய்ப்பை நூலிழையில் தவற விட்டனர். இது ரசிகர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.இந்தத் தருணத்தில், இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா வின் வீட்டிற்கு முன்பு கூடிய சில இளைஞர்கள் அவரது சாதி பெயரை இழிவாக பேசியது மட்டுமின்றி, கேலி-கிண்டல்களுடன் அந்த வீராங்கனையின் வீட்டின் முன்பு பட்டாசு வெடித்தும், ஆட்டம்,பாட்டம் கொண்டாட்டம் என்று வெறித்தனமாக நடந்து கொண்டுள்ளனர்.

காலால் உதைத்துத்தள்ளி...
சத்தம் கேட்டு வெளியே வந்த வந்தனாவின் குடும்பத்தினரின் சாதியைச் சுட்டிக்காட்டிமிகக் கீழ்த்தரமாக நடந்து கொண்டுள்ளனர். இந்திய ஹாக்கி அணியில் பட்டியல் பிரிவு வீராங்கனைகள் அதிகம் இருப்பதால் தான்தோற்றதாகவும் கத்தி கூச்சலிட்டு உள்ளனர். இதனால் மனமுடைந்து போன வந்தனாவின் குடும்பத்தினர் வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டனர்.அனைத்து சாதி ரீதியான தாக்குதல்களுக்கும் பிரிட்டனுக்கு எதிரான போட்டியில் கோல் அடித்து வந்தனா பதிலடிகொடுத்தார். “சாதி தாக்குதல்களை காலால் உதைத்து தள்ளி.. இப்போ போய் எங்க வீட்டு முன்னாடி வெடி வெடிங்க” என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

இந்திய ஹாக்கி வரலாற்றில் காலம் காலமாக பெண்கள் அணியிலும், ஆண்கள் அணியிலும் பல தலித், பழங்குடியின வீரர், வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா இந்த அளவிற்கு ஆடுவதற்கு கூட இவர்கள்தான் காரணம். 41 வருடங்கள் கழித்து ஆண்கள் அணி அரையிறுதி செல்லவும், பெண்கள் அணி முதல் முறையாக அரையிறுதிக்கு செல்லவும் இவர்களே காரணம்.ஏற்கனவே இந்த வீரர், வீராங்கனைகள் போதிய ஆதரவு இன்றி, ஹாக்கி மீதான காதல் என்ற ஒரே காரணத்திற்காக இந்தியாவிற்காக ஆடி வருகின்றனர். இப்போது சாதி வன்மங்களையும் எதிர்கொள்ள வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வந்தனா கட்டாரியாவுக்கு அனைவரும் ஆதரவுக் கரம் நீட்டுவோம்!

;