articles

img

பொதுத்துறையை சீரழிக்கும் கொடிய பட்ஜெட்....

நமது நாட்டின் பொருளாதாரம் இன்றுவரை சுய சார்புடன் தாக்குப் பிடிப்பதற்கு முக்கியமான காரணம் நிதித்துறை பெரும்பாலும் அரசின் கைவசம் இருப்பது தான். இல்லையென்றால் 1997 தெற்காசிய நெருக்கடியின் போதோ அல்லது 2008 அமெரிக்காவில் தொடங்கி உலகளாவிய நெருக்கடியாக மாறிய பொருளாதார நெருக்கடியின் போதோ நமது நாட்டுப் பொருளாதாரம் மிக மோசமான சீரழிவை சந்தித்திருக்கும்.தற்போது அந்த பொதுத் துறைக்கு வேட்டு வைக்கும் வகையில்இந்த அரசாங்கம் இந்த பட்ஜெட்டில் பல அறிவிப்புகளை செய்திருக்கின்றன. “ஐடிபிஐ வங்கியோடு மேலும் 2 பொதுத்துறை வங்கிகளையும் ஒரு பொது காப்பீட்டு நிறுவனத்தையும் இந்த ஆண்டிற்குள் தனியார்மயமாக்க போகிறோம்”  என்று இந்த அரசு இந்த பட்ஜெட்டில் அறிவிக்கிறது.காமதேனுவாக லட்சக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்களை உடைய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகளை விற்கவும் அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது. சுய சார்பு பொருளாதாரம் பேசும் இந்த அரசுஇன்ஷூரன்ஸ் துறையில் 49 சதவீதம் உள்ள அந்நிய நேரடி மூலதனத்தை 74 சதவீதமாக உயர்த்துவதற்கு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இத்துடன் பிபிசிஎல், ஏர்-இந்தியா, ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, பிஇஎம்எல் உள்ளிட்ட பல பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டம்இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வமும் தனியார்மயம்
இந்த பட்ஜெட்டில் எது கேந்திரமான துறை என்பதற்கான விளக்கம்அளிக்கப்பட்டுள்ளது. அணுசக்தி, விண்வெளி, பாதுகாப்பு, போக்குவரத்து,  தொலைத்தொடர்பு, எரிசக்தி, பெட்ரோலியம், நிலக்கரி மற்றும் தாதுக்கள், வங்கி, காப்பீடு மற்றும் நிதி சேவைகள் ஆகியவை மட்டுமே கேந்திரமான துறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் துறைகளில் மட்டும்தான் பெயரளவிற்கு குறைந்த எண்ணிக்கையிலான பொதுத்துறை நிறுவனங்கள் நீடிக்கும். மற்றவை எல்லாம் தனியார் மயமாக்கப்படும் அல்லது ஒன்றோடு ஒன்று இணைக்கப் படும் அல்லதுஒன்றின் துணை நிறுவனமாக மற்றொன்று மாற்றப்படும் அல்லது இழுத்து மூடப்படும் என்று மிகத் தெளிவாக இந்த பட்ஜெட் சுட்டிக்காட்டுகிறது. கேந்திரமான துறை அல்லாத மற்ற அனைத்து துறைகளில் உள்ளபொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் முழுவதுமாக தனியார் மயமாக்கப்படும் என்று அரசு பகிரங்கமாக இந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. 

தனியார் நிதி நிறுவனங்களின் லட்சணம்
தனியார்துறை யெஸ் வங்கியில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மக்களின் சேமிப்பு பணம் உள்ளது. அது சென்ற ஆண்டு திவால்நிலையை அடைந்து பொதுத்துறை நிறுவனங்களான ஸ்டேட் வங்கியும்,ஆயுள் காப்பீட்டு நிறுவனமும் தாம் அதைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இருப்பினும் இவ்வங்கியின் நிதிநிலை தள்ளாட்டமாகவே உள்ளது. திவான் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் என்ற தனியார் துறையைச் சார்ந்த வங்கியல்லாத நிதி நிறுவனத்தின் உயரதிகாரிகள் மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டு உள்ளனர். அந்நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பொய்யான ஒரு கிளையின் மூலமாக 2007 முதல் 2019 வரை 13 ஆண்டுகாலம் 2, 60,000 போலி வீட்டு கடன் கணக்குகள் துவங்கி 17 400 கோடி ரூபாய் நிறுவனத்தின் பணத்தை கொள்ளை அடித்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிறுவனத்தில் நிதி நிறுவனங்கள் மற்றும் மக்களின் பணம் ரூபாய் 84 ஆயிரம் கோடி சிக்கியிருக்கிறது.

இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் லீசிங் அண்ட் பினான்சியல் சர்வீசஸ் என்ற தனியார் துறையைச் சார்ந்த வங்கியல்லாத நிதி நிறுவனத்தின் உயர்மட்டஅதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் ரூபாய் 99400 கோடி பொதுமக்களின் பணம் சிக்கி உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் 38 தனியார் துறை வங்கிகள் திவாலாகி உள்ளன. 1991க்குப் பிறகு துவக்கப்பட்ட 10 புதிய தனியார் வங்கிகளில் நான்கு வங்கிகள் காணாமல் போய்விட்டன.இவ்வளவுக்குப் பிறகும் பொதுத்துறை வங்கிகளையும், பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனத்தையும் தனியாருக்கு தாரை வார்க்க இந்த அரசாங்கம் முயற்சி மேற்கொள்கிறது. 

கட்டுரையாளர் : சி.பி.கிருஷ்ணன்

;