articles

img

கொரோனா தடுப்பூசியும் தமிழகத்தின் சூழலும்...

இந்தியா முழுமையும் கொரோனா தொற்று  முதல் அலையை விட இரண்டாவது அலை வீரியமான தன்மையுடன் உள்ளது.  முதல் அலையின் வீச்சின்போதே  தடுப்பூசிகளுக்கான தயாரிப்பில் உள்ள அறநெறிகளின் சில  படிகளில் உலக சுகாதார நிறுவனம் சுகாதாரச் சூழலின் அவசரநிலை கருதி  தளர்வுகளை  அனுமதித்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த வருடம் 2020 இறுதியில் தடுப்பூசிகளுக்கான  தயாரிப்பு பணிகளில் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளும் ஈடுபடத் தொடங்கின. கடந்த ஜனவரி 11-ஆம் தேதி இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின்  தடுப்பு மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்தன.

கொரோனா தடுப்பூசிகள் குறித்து மக்களிடையே  ஆரம்ப நிலையில் இருந்த அச்ச உணர்வு இன்று குறைந்து உள்ளது. நோய் பற்றிய புரிதல்  நாளுக்குநாள் மருத்துவத் துறையினருக்கும் மக்களுக்கும் மேம்படுவதை பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் தடுப்பூசி வெற்றிகரமாக போடப்பட்டுவிட்டால் “மந்தை  எதிர்ப்பாற்றல்” என்று சொல்லப்படும் சமூக நோய் எதிர்ப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அறிவியல் அறிஞர்களால் நம்பப்படுகிறது. இதேபோல் அறிவியல் தொழில்நுட்ப கழக துறையை சேர்ந்த நிபுணர் குழுவினர் ஒரு ஆய்வை சமர்ப்பித்துள்ளனர். அது “பயோஸ்டேடிஸ்டிக்ஸ் “ என்று சொல்லப்படுகின்ற உயிரியக்கவியல் கணித கோட்பாடுகளை  அடிப்படையாக வைத்து நடத்திய  ஆய்வு ஆகும். அதன்படி, தொற்று ஒரு  நபருக்கு கண்டறியப்பட்டால் ஏற்கனவே 90 நபர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகி இருக்கக்கூடும் என்ற கணிப்பை சமர்ப்பித்துள்ளனர். இதன் அடிப்படையில் பார்த்தோமானால், பெருவாரியான மக்கள் இன்று  உடலில் நோய் எதிர்ப்பு திறனில் முன்னேறி உள்ளனர் என்பதும் இத்துடன் அரசு செயல்படுத்தும் தடுப்பூசியின்  செயலாக்கம் நோய் தடுப்பில் நம்மை ஒரு முன்னேற்றப் பாதையை நோக்கி அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை..

தமிழகத்தில் தடுப்பூசி உற்பத்தி சூழல் 

இந்திய சுதந்திரத்திற்குப் பின் பல மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டும் வேறு தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டும் உள்ளன. மருந்து உற்பத்தியில் தனியார் நிறுவனங்கள் ஈடுபட துவங்கிய நிலையில்  தடுப்பூசிகளின் உற்பத்தியை மட்டும் எந்த  தனியார் நிறுவனங்களும்  அன்றைய பொழுதில் துவக்க தயங்கினர். அந்த சூழலில் தான் நாட்டில்  தடுப்பூசிகள்  போடப்பட வேண்டிய பொதுசுகாதார திட்டங்களுக்கு  பொதுத்துறை நிறுவனங்கள் தான் உற்பத்தி செய்து உதவியுள்ளன. அதில்  தமிழ்நாட்டில் இருந்த பொதுத்துறை நிறுவனங்களான குன்னூரில் உள்ள பாஸ்டியர் ஆராய்ச்சி மையமும் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆராய்ச்சி மையமும் முக்கியப் பங்கு வகித்தன. 1990களுக்குப் பின்பான உலகமய சூழல் மற்றும்  புதிய நோய்களுக்கான தடுப்பூசிகளின் வரவு, அதை தொடர்ந்து 2005ல் உருவாக்கப்பட்ட காப்புரிமைச் சட்டங்கள்  மருந்துகள் உற்பத்தி  தொடர்பான அரசின்  கொள்கை மாறுதல் போன்றவை காரணமாக இந்தியாவில் தனியார்  தடுப்பூசி உற்பத்தி துவக்கப்பட்டது. அதன்மூலம் உலக அளவில் தடுப்பூசி  ஏற்றுமதியில் இந்திய நிறுவனங்கள் முன்னணியிலும் உள்ளன.இந்த மாற்றங்கள் காரணமாக தமிழகத்தின் பிரதான பொதுத்துறை தடுப்பூசி உற்பத்தி மையங்களான குன்னூர் பாஸ்டியர் ஆய்வகமும், சென்னை கிங்ஸ்  ஆய்வகமும்  2004 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் உற்பத்தியை நிறுத்திட உத்தரவிடப்பட்டது.

செங்கல்பட்டில் தற்சமயம் செயல்படாமல் இருக்கும் தடுப்பூசி வளாகத்திற்கு தமிழக அரசுதான் நூறு ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தந்தது . அதன்பின்பு துவக்கப்பட்ட இந்த தடுப்பூசி ஒருங்கிணைந்த வளாகத்தில்  திரவ பெண்டாவேலண்ட் தடுப்பூசி,  ஹெபடைடிஸ் - பி தடுப்பூசி, ஹீமோபிலஸ் இன்புளுயன்சா - பி தடுப்பூசி,ரேபிஸ் தடுப்பூசி, மூளைக்காய்ச்சல் தடுப்பூசி, பிசிஜி தடுப்பூசி, தட்டம்மை - தாளம்மை போன்ற தடுப்பூசிகளை தயாரித்தனர். இப்போதும் உலகத்தரத்திற்கு தயாரிப்பதற்கு உண்டான அனைத்து  உட்கட்டமைப்பும் உள்ளது. ‘அதேபோல் அங்கு அறிவியல்  ஆய்வாளர்கள் ஊழியர்கள் எண்ணிக்கை மொத்தம் 408 ஆகும். இதில் 251 பணியிடங்கள் காலியாக உள்ளதாக கடந்த ஆண்டு ஒரு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்  பதில்  மூலம் தெரிய வருகிறது. இந்த தடுப்பூசி உற்பத்தி மையத்தில் கொரோனா தடுப்பூசி  உற்பத்தியை துவக்க வேண்டும் என்ற ஒரு பொதுநல வழக்கின் மீது உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு தனியாருக்கு குத்தகைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக பதில் கூறியது. ஆனால் எந்த தனியார் நிறுவனங்களும் குத்தகை எடுத்து  நடத்துவதற்கு முன்வரவில்லை அந்த கால வரையறையும் இந்த மாதம் மே 21ல்  முடிவடைந்தது.இந்த நிலையில் தமிழக அரசு, அதை குத்தகைக்குத் தாருங்கள் என மத்திய அரசிடம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் கடமை
தமிழகத்தில் இதுவரை 13.85 லட்சம் டோஸ்கள் கோவிஷீல்டு மற்றும்  கோவாக்சின்  தேவைப்பட்ட நிலையில் 9.6 2 லட்சம் டோஸ்கள்  மட்டும் மத்திய அரசின் மூலம் பெறப்பட்டுள்ளதாக கடந்த மே 15 தேதி நிலையில் தெரியவந்தது. தமிழகத்தின் மக்கள்தொகை 7.6 கோடி. ஆனால்  72 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை  மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ராஜஸ்தான் 7.8 கோடி மக்கள்தொகை - அந்த மாநிலத்திற்கு 1.4 கோடி டோஸ்களும்; குஜராத்தின்  மக்கள் தொகை6.9 கோடி - அவர்களுக்கு 1.3 கோடி டோஸ்களும்; கர்நாடகா 6.6 கோடி - மக்கள் தொகை கொண்ட மாநிலம்; அதற்கு 1கோடி  டோஸ்களையும்  ஒதுக்கியுள்ளது. இந்நிலையில்தான் தமிழக முதல்வர் இந்திய பிரதமருக்கு செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசு ஏற்று நடத்த எழுதிய கடிதம் வரவேற்பை பெற்றுள்ளது. இதே நேரத்தில் தமிழக அரசு தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்கும் வகையில் கொள்முதல் செய்வதற்கு  உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

ஆனால் இந்த ஒப்பந்தப்புள்ளி அவசர காலத்திற்கு கை கொடுக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது உலக அளவில்  தடுப்பூசிகள் உற்பத்தி செய்யும் பெரு நிறுவனங்கள் இந்திய அரசுடன் மட்டுமே ஒப்பந்தத்தை வைத்துக் கொள்வோம்; மாநில அரசுகளோடு வைத்துக் கொள்ளமாட்டோம் என்கின்ற ஒரு வியாபார நிலையையும் வைத்துள்ளன. இந்த சூழலில் தான் மகாராஷ்டிரா அரசு ஒரு கோடி தடுப்பூசிகள் கொள்முதலுக்கு உலகளாவிய டெண்டர் கோரியது ஆனால் உலகளாவிய பெரும் தடுப்பூசி நிறுவனங்கள் யாரும் மகாராஷ்டிரா அரசுக்கு தடுப்பூசிகள் தர முன்வரவில்லை. இந்த நிலையில் மும்பை பல்கலைக்கழகத்தின் இணைப்பில் உள்ள ஹாப்கின் இன்ஸ்டியூட் என்கின்ற பொதுத்துறை நிறுவனத்தில் பாரத்  பயோடெக்  தனியார் நிறுவனத்தின் உதவியுடன் கோவாக்சின்  தடுப்பூசி உற்பத்தியை செய்ய மத்திய அரசிடம் இருந்து மகாராஷ்டிரா அரசு அனுமதி பெற்றுள்ளது. தற்சமயம் அங்கு உற்பத்திக்கு உண்டான அனைத்து ஆயத்தப் பணிகளும் நடந்து வருகிறது.  

இப்போது தமிழகத்தின்  சூழலும் இதை ஒட்டியே உள்ளது. தமிழக அரசு  கோரியிருந்த உலகளாவிய கொள்முதல் ஒப்பந்த காலம் முடிவுறும் தருவாயில் உள்ளது. ஆனால் உலகளாவிய கொள்முதல் என்பது தமிழ்நாட்டிற்கு அவசர காலத்திற்கு உதவுமா என்பதும்  கேள்விக்குறியாக   உள்ளது ஆதலால் மகாராஷ்டிரா மாநிலத்தை போன்று செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி மையத்தில் தடுப்பூசிகளை தமிழக அரசு கையகப்படுத்தி தடுப்பூசி  தயாரிப்பதுதான் இன்றைய  காலத்தின் தேவை மத்திய அரசு செங்கல் பட்டு தடுப்பூசி  தயாரிக்கும்  நிறுவனத்தை தனியாருக்குக் தாரைவார்க்கும் செயல்களை   தீவிரப்படுத்தக்கூடாது.அதேபோல் உள்கட்டமைப்பு இருந்தும் தற்சமயம் செயல்படாமல் உள்ள  உதகை குன்னூர் பாஸ்டிர் ஆய்வகம்,  சென்னை கிங்ஸ் ஆய்வகம் ஆகிய பொதுத்துறை மையங்களிலும் தடுப்பூசி உற்பத்தியை துவக்குவதும் காலத்தின் தேவை!

கட்டுரையாளர் : முனைவர் ஜி. சத்தியபாலன், மருந்தியல் உதவிப் பேராசிரியர், மதுரை மருத்துவக் கல்லூரி

;