articles

img

பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்த முன்வாருங்கள்..

சிறந்த போக்குவரத்து அதிக வர்த்தகத்தையும், மக்கள்  பரவலையும் அனுமதிக்கிறது. பொருளாதார வளர்ச்சியானது எப்போதும் போக்குவரத்துஅதிகரிப்பதையே சார்ந்துள்ளது. போக்குவரத்து துறையில் ஏற்படும் இழப்பும் பெரிய பொருளாதார சிக்கலை உருவாக்குகிறது. உணவுக்கு அடுத்து மக்கள் அதிகம் செலவழிப்பது போக்குவரத்திற்குத்தான். எனவே போக்குவரத்து மக்களின் அத்தியாவசிய தேவை. இதை முறைப்படுத்துவதும், பொதுப் போக்குவரத்தை பலப்படுத்துவதும் அரசுத் துறை பயணிகள் போக்குவரத்தை பாதுகாப்பதும் அரசின் கடமையாக உள்ளது. 

ஆனால், பொதுப் போக்குவரத்து என்பது படிப்படியாக வீழ்ச்சியில் தள்ளப்பட்டு வருகிறது. பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. பேருந்து மற்றும் தொடர்வண்டி பயணிகள் எண்ணிக்கை 42 சதவீதமாக இருந்தது, தற்போது 31 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு இணையாக பொதுப்போக்குவரத்து நிறுவனங்களில் ஆட்குறைப்பும் செய்யப்பட்டுள்ளது. வழித்தடங்கள் பலவற்றை நிறுத்தியுள்ளனர். பெருகிவரும் நகர்மயத் தேவைக்கேற்ப பொதுப் போக்குவரத்து வளரவில்லை. பேருந்து கட்டணம் கணிசமாக உயர்ந்துள்ளது. 

பெரும் நிறுவனங்களுக்கு சலுகை
அரசுப் பேருந்துகளுக்கு ஆண்டிற்கு ரூ. 80 ஆயிரம்வரை வரியாக வசூல் செய்யும் அரசு, கார்களுக்கு ஆயுட்காலத்திற்கே வரியாக ஒரு லட்சம் ரூபாய்தான் வசூலிக்கிறது. உலகில் மிகப்பெரிய மோட்டார் வாகன தொழிற்சாலைகளில் ஏழு சென்னையை சுற்றி அமைந்துள்ளன. 2012-ல் ஜெர்மனியைச் சேர்ந்த டெய்மலர் நிறுவனம் ஒரகடத்தில் தனது ஆலையை துவக்கியது. துவக்கவிழாவில் பேசிய அன்றைய தமிழகமுதல்வர் ஜெயலலிதா அவர்கள் இந்தியாவில் உற்பத்தியாகும் கார்களில் 30 விழுக்காடு சென்னையில்தான் உற்பத்தியாகிறது என பெருமையாக பேசினார். ஆனால் அரசுக்கு கிடைக்கும் வருவாய் கார் கம்பெனிகளுக்கு கொடுத்த வரிச்சலுகையைவிட மிக குறைவுஎன்பதை பல்வேறு புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துகின்றன.
கார் உற்பத்தியில் வேலைவாய்ப்பு, கார் ஏற்றுமதிமூலம் அந்நிய செலாவணி அதிகம் கிடைக்கும் என பசப்பி அமல்படுத்தப்பட்ட தனியார்மய கொள்கைகள் காரணமாக உள்நாட்டில் வாகனங்கள் அதிகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசலுக்காக அந்நிய செலாவணி விரயமாகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு, போக்குவரத்து நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. உடல், மன ரீதியான புதிது புதிதான நோய்கள் என பல பிரச்சனைகளை அதிகரிக்கச் செய்துள்ளன. மாநகரங்களில் வாகன நெரிசலில் சிக்கி மக்கள் அவதிப்படுவது தினந்தோறும் அதிகரித்து வருகிறது. 1996-ல் சதுர கிலோ மீட்டருக்கு 22 ஆக இருந்த வாகனங்களின் எண்ணிக்கை 2004ல் 52ஆக பெருகியது. தற்போது இன்னும் அதிகரித்துள்ளது.

பொதுப்போக்குவரத்தை பலப்படுத்த வேண்டியது ஏன் அவசியம்?
இரண்டு கார்கள் அடைத்துக் கொள்ளும் இடத்தில்ஒரு பேருந்து சுமார் 60 முதல் 100 பேருடன் பயணிக்க முடியும். காற்றை மாசுப்படுத்தும் மற்ற வாகனங்களிலிருந்து 5 முதல் 50 வரை எண்ணிக்கையை ஒரு பேருந்தினால் குறைக்கமுடியும். 1994-ல் இந்தியாவின் முக்கியநகரங்களில் 60 விழுக்காடு முதல் 80 விழுக்காடுவரை இருந்த பொதுப் போக்குவரத்து 2018-ல் 25 முதல் 35 விழுக்காடாக குறைந்துள்ளது. பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் மக்கள் விகிதாச்சார அளவில் குறைந்து வருகிறார்கள். இருசக்கரவாகனம் பயன்படுத்துவோர் அதிகரித்துள்ளனர். பேருந்துகள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. 2018க்கு முந்தைய நான்கு ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 19 லட்சம் பேருந்துகளில் 1.4 லட்சம் பேருந்துகள் மட்டுமே மாநில போக்குவரத்து துறைகளால் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 90 சதவீதமான பேருந்துகளை தனியார் நிறுவனங்கள் பதிவு செய்து இயக்குகின்றன.

பொது பேருந்து போக்குவரத்து மட்டுமல்ல; ரயில்போக்குவரத்தும் சீர்கேடு அடைந்து வருகிறது. ரயில்முன்பதிவு முடிந்து 300 லிருந்து 400 பேர் காத்திருக்கும் பட்டியலில் இடம் பெறுகின்றனர். காரணம், மக்களுக்கு தேவையான அளவில் ரயில்கள் இயக்காததுதானே! தனியார் முதலாளியிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு, ரயில்கள் விடுவதில்லை என்ற நிலை உள்ளது. பொதுப் போக்குவரத்துக்கு மாறாக தனிநபர்வாகனப் போக்குவரத்து தீவிரமாக அதிகரித்ததன் விளைவாக விபத்துகளும் அதிகரித்துள்ளன.

தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து
நாடு முழுவதும் செயல்படும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் 35. இதில் தமிழகம் முதலிடம் பெறுகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சென்னை மாநகரம், விரைவு போக்குவரத்து சென்னை, விழுப்புரம், கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம் ஆகிய 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 20,946 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகள் 7,096-ம், மினிபேருந்துகள் 4,056-ம் இயங்கி வருகின்றன. அரசுபோக்குவரத்துக்கழகங்கள் மக்களின் பயணத் தேவைகளை 60 விழுக்காடுகளுக்கு மேல் பூர்த்தி செய்வதுடன், பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பத்திரிகையாளர்கள், தற்பொழுது பெண்களுக்கான கட்டணமில்லா பயணவசதி என நிறைவேற்றி வருகின்றன. அனைத்து கிராமப்புறங்களுக்கும் வருமானம் குறைவாக உள்ள வழித்தடங்களிலும் பேருந்து இயங்கி வருகிறது. அரசு போக்குவரத்துக் கழகங்களில் மட்டும்தினசரி சுமார் 2 கோடி பேர் பயணம் செய்து வந்தனர். 

கடந்த 10 ஆண்டுகளில் போக்குவரத்துக் கழகங்களை கடந்த அதிமுக அரசு சீரழித்துள்ளது. போக்குவரத்துக் கழகங்களில் 1லட்சத்து 40 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஆண்டுதோறும் 4ஆயிரம் தொழிலாளர்கள் பணிஓய்வு பெற்று வருகின்றனர். புதிய நியமனம் இல்லை. ஓய்வு வயது 60 எனஉயர்த்தியதால் கடந்த ஓர் ஆண்டாக பணி ஓய்வுஇல்லை. அரசு போக்குவரத்துக்கழகங்கள் ஆண்டுக்குசுமார் 3000கோடி ரூபாய் நஷ்டத்தை சந்திக்கின்றன. கடந்த அதிமுக ஆட்சி பேருந்து வாங்குவதில், உதிரிபாகங்கள் வாங்குவதில், வண்டி போஸ்டிங் போடுவதில், தொழிலாளர் பணியிட மாற்றம், தண்டனைகள் குறைப்பு உள்பட அனைத்திலும் லஞ்சம் பெற்றது. தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆளுங்கட்சியினர் மாற்றுப்பணி என்ற பெயரில் வேலை பார்க்காமலே ஊதியம் பெற்றனர். தொழிலாளர்கள் பிரச்சனைகள் எதையும் தீர்க்க முன்வரவில்லை. ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடராமல் தொழிலாளர் உரிமையில் மண் அள்ளிப்போடப்பட்டது. பணி ஓய்வுப்பலன்கள் உடனுக்குடன் வழங்காமல் இன்றளவும் நிலுவையில் உள்ளது. தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதி பெறுவதற்கு கூட வழிசெய்யாமல் தொழிலாளர்களின் பணத்தை சூறையாடினார்கள்.

விபத்தில் பலியான தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களை நசுக்கினார்கள். பணியிட மாற்றம்செய்து தொழிலாளர்களை அலைக்கழித்தது அதிமுக அரசு. போராடிய தொழிலாளிகளை கைது நடவடிக்கை மேற்கொண்டு பழிவாங்கியது. தொழிலாளர்களின் விருப்பமின்றி அ.தொ.மு.ச. உறுப்பினர்களாக கட்டாயப்படுத்தி சேர்த்துக் கொண்டனர். தொழிலாளிகள் விருப்பமில்லாமல் பிடித்தம் செய்த சந்தா தொகையைதிரும்ப கோரினால் அதனை மறுத்து சம்பளத்தை அபகரித்துக் கொண்டனர். அதிமுக ஆட்சி போனஸ் 10 சதவீதம் கொடுத்து தொழிலாளர்களை வஞ்சித்தது. கேண்டீனில் தரமில்லாத உணவு வழங்கியது. தரமில்லாத உதிரிபாகங்களை வாங்கி தொழிலாளர்களை வேலைப்பளுவிற்குள் தள்ளியது. எண்ணற்ற துன்பங்களையும், துயரங்களையும் தொழிலாளர்கள் சந்தித்தனர். மக்களின் பயணத் தேவைகளையும் முறையாக பூர்த்தி செய்யவில்லை.

இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பொறுப்பேற்றுள்ள புதிய அரசு மேற்கூறியபிரச்சனைகளுக்கு தீர்வு காணும் என தொழிலாளர்கள்பெரும் நம்பிக்கையில் உள்ளனர். ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தமிழக முதலவர், போக்குவரத்துக்கழகங்கள் சீரமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசபயணச்சலுகை வழங்கி புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். ஓய்வூதியர்கள் நிலுவைத்தொகை ரூ.497.32 கோடியை உடனே வழங்கியுள்ளார். இதுபோன்று தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம், 2003க்குப்பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் பென்ஷன் வழங்குவது உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்கவும், போக்குவரத்துக் கழகங்களை பொதுத்துறையாக வலிமையாக செயல்படுத்தவும் வேண்டும். பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தி பொதுத்துறை அரசு போக்குவரத்தை பாதுகாக்க தொழிலாளர்கள் ஒன்றுபடுவோம்; மக்கள் ஆதரவை திரட்டுவோம்.

கட்டுரையாளர்: ஆர்.மனோகரன், சிபிஐ(எம்) தஞ்சாவூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்

;