articles

img

கூட்டுக் களவாணிகளுக்கு கொண்டாட்டம்... (பொருளாதார ஆய்வறிக்கை 2020 - 21)

மோடி அரசின் பொருளாதார ஆய்வறிக்கை, V வடிவத்திலான பொருளாதார மீட்சி இருக்கும் என்று படாடோபமாக கூறியுள்ளது. ஆனால் 2021 ஆம் நிதியாண்டில் பொருளாதாரம் மைனஸ் 7.7 சதவீதமாக சுருங்கியிருந்தது என்பதை வசதியாக மறந்துவிட்டார்கள். அதற்கு அடுத்த ஆண்டே - 2022 ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதமாக அதிகரிக்கும் என்று மதிப்பீடு செய்கிறார்கள். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இதுதான் மிக மிக அதிகமான வளர்ச்சி விகிதமாக இருக்கும். வேடிக்கை என்னவென்றால் கடந்த 2 ஆண்டுகளிலும் சேர்த்து மொத்தமே பொருளாதார வளர்ச்சி வெறும் 2.45 சதவீதம் என்பதுதான்.

                                                                         ******************

ஆக்ஸ்பாம் அமைப்பின் சமீபத்திய அறிக்கையின் படி இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு மிகக் கடுமையானதாக மாறி வருகிறது. இந்திய மக்கள் தொகையின் அடிமட்டத்தில் இருக்கிற 70 சதவீதம் மக்களின் - அதாவது 95.3 கோடி மக்களின் ஒட்டுமொத்த செல்வத்தைப் போல 4 மடங்கு செல்வத்தை இந்தியாவின் வெறும் 1 சதவீத பெரும் பணக்காரர்கள் குவித்து வைத்திருக்கிறார்கள் என்று 2021 ஜனவரி மாத விபரங்களை மேற்கோள் காட்டி அந்த அறிக்கை விவரிக்கிறது. ஒரு ஆண்டு இந்திய அரசின் முழு பட்ஜெட் தொகையை விட இந்திய பெரும் பணக்கார்களின் மொத்த செல்வத்தின் மதிப்பு மிக அதிகமாகும்.

                                                                         ******************

பொருளாதார ஆய்வறிக்கையில் இந்தியாவின் மிக மிக அதிகமான வேலையின்மை விகிதம் பற்றி எந்தவிதத்திலும் ஒப்புக் கொள்ளப்படவில்லை. ஆனால் ஆய்வறிக்கையின் விபரங்களை நுட்பமாக ஆய்வு செய்தால், மக்கள் தொகை விகிதத்திற்கும் வேலைவாய்ப்பு தொடர்பான விகிதத்திற்கும் உள்ள விபரங்களை ஆய்வு செய்தால் வேலையின்மை விகிதம் முன்பை விட மிக மோசமான உச்சநிலையை எட்டியிருப்பது தெரியவருகிறது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (சிஎம்ஐஇ) மிக சமீபத்திய அறிக்கையின் படி 2020 நவம்பர் - டிசம்பர் காலத்தில் மட்டும் வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி பேர். கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் பதிவான மாதாந்திர வேலையிழப்பு விகிதத்தில் இதுவே மிக அதிகம். கொரோனா ஊரடங்கு நிலைமை படிப்படியாக மாறியுள்ள போதிலும் தொழிலாளர் சந்தையில் நிலைமை தொடர்ந்து மிக மோசமானதாக தீவிரமடைந்து வருகிறது.

                                                                         ******************

வேலையின்மை குறித்த விபரங்கள் மட்டுமல்ல, தொழில் நிறுவனங்களின் நிலைமை குறித்தும் பொருளாதார ஆய்வறிக்கையில் உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்களே கொடுத்துள்ள புள்ளி விபரங்களை ஆய்வு செய்தால், தொழிலாளர்களை அதிகமாக நம்பியிருக்கும் உற்பத்திசார் தொழில்கள் மிகக் கடுமையான வீழ்ச்சியை சந்தித்திருப்பது தெரிகிறது. இதை சரி செய்வதற்கு தொழில் துறையினர் சார்பில் கிடைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளைப் பற்றி பொருளாதார ஆய்வறிக்கை எந்த கவனமும் கொள்ளவில்லை. மாறாக, தொழில்நுட்ப நிறுவனங்கள், டிஜிட்டல் இந்தியா, நிதி மூலதனம் சார் தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்குத்தான் பொருளாதார ஆய்வறிக்கை கூடுதல் அழுத்தம் தருகிறது. ஆனால் இது வேலைவாய்ப்பற்ற வளர்ச்சிக்கே வழிவகுக்கும்.

                                                                         ******************

3 வேளாண் சட்டங்களை, பொருளாதார ஆய்வறிக்கை தீவிரமாக ஆதரித்து பேசுகிறது. இது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால் அதேவேளையில் உணவு பாதுகாப்பு குறித்து பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிடத்தக்க கவலைகளை முன்வைக்கிறது. அந்தக் கவலையை முன்வைத்துவிட்டு, அதை தீர்ப்பதற்கு பதிலாக உணவு மானியங்களை எப்படி வெட்டுவது என்பதற்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறது. தற்போது நடைமுறையில் உள்ள குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதம், அரசு நேரடி கொள்முதல் போன்றவற்றை கைவிட்டு, திறந்தவெளி சந்தையில் கொள்முதல் செய்யும் விதத்தில் சட்டத் திருத்தம், நாடு முழுவதும் ரேசன் கடைகளுக்கு உணவு தானியங்களை விநியோகிப்பதை குறைப்பது, அவற்றுக்கு விலை நிர்ணயிப்பது என்பதெல்லாம் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவை அநியாயமானவை.

                                                                         ******************

பெட்ரோல் - டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் மீது அதிகரிக்கப்பட்ட வரிகளின் விளைவாக, அரசுக்கு ரூ.3.3 லட்சம் கோடி கூடுதல் வருமானம் கிடைத்திருக்கிறது. 2014 - 15க்குப் பிறகு கிடைத்த வருமானத்துடன் ஒப்பிடும்போது இது 94 சதவீதம் அதிகமாகும். ஆனாலும் இன்னும் தொடர்ந்து பெட்ரோல் - டீசல் விலைகள் உயர்த்தப்பட்டு வருகின்றன. இதன் நேரடி விளைவாக, அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி மிகக் கடுமையாக அதிகரித்து வருகிறது. இதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பொருளாதார ஆய்வறிக்கையில் இல்லை.

                                                                         ******************

இந்தியாவில் தற்சமயம் அரசு உணவு கிடங்குகளில் 5 கோடி டன்னுக்கும் அதிகமான உணவு தானியங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இது உணவு தானிய இருப்பு விதிகளை விட கூடுதலான அளவே ஆகும். உலக பட்டினி குறியீடு தொடர்பான பட்டியலில் மிக மோசமான இடத்தை பெற்றிருக்கும் ஒரு நாட்டில், பொது விநியோக முறையை பாதுகாத்து பலப்படுத்துவதும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 35 கிலோ உணவு தானியத்தை உறுதிப்படுத்துவதும் மிக மிக அவசியமானதாகும். மத்திய அரசின் சார்பில் இப்போது மாநிலங்களுக்கு ஒரு கிலோ அரிசி 3 ரூபாய்க்கும், ஒரு கிலோ கோதுமை 2 ரூபாய்க்கும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விலையை உயர்த்துவதற்கு பொருளாதார ஆய்வறிக்கை கட்டியம் கூறுகிறது. இது மிக மிக ஆபத்தானது.

                                                                         ******************

பொருளாதார ஆய்வறிக்கை, “கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தொழில் நிறுவனங்கள்” தவிர பிற பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க வேண்டும் என கூறுகிறது. இது மிகவும் விந்தையானது. “கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தொழில் நிறுவனங்கள்” என்றால் என்ன என்பதே கேள்விக்குறியாகிறது. இவர்கள் பாதுகாப்புத் துறை முதல் விண்வெளி துறை வரை; தொலைத்தொடர்பு முதல் மின்சாரம், சுரங்கம், வங்கிகள், இன்சூரன்ஸ் என எல்லாவற்றையுமே தனியாருக்கு தாரைவார்க்கிறார்கள். இவையெல்லாம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தொழில் நிறுவனங்கள் இல்லையா?

                                                                         ******************

இன்னும் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்ட அதே நாளில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மீனாட்சி லேகி தலைமையிலான பொதுத்துறை நிறுவனங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறது. இந்தியாவின் பொதுத்துறை மருந்து நிறுவனங்களை “கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தொழில் நிறுவனங்கள்” பட்டியலில் இணைக்க வேண்டும் என்று அந்தக் குழு கூறியிருக்கிறது. அதேபோல, தேசிய விமான போக்குவரத்து தொழிலை தனியார்மயமாக்குவது எப்படி சரியாகும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறது.

                                                                         ******************

பொருளாதார ஆய்வறிக்கை, ரயில்வே தனியார்மயம் தீவிரமாக தொடரும் என்று உறுதி செய்திருக்கிறது. இந்த ஆண்டு ரயில்வேயில் தனியார் துறையிடமிருந்து ரூ.30 ஆயிரம் கோடி அளவிற்கு முதலீடு வரும் என்று எதிர்பார்ப்பதாக கூறியிருக்கிறது. 2023 - 24 இல் தனியார் ரயில்கள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறியிருக்கிறது. 150 ஜோடி தனியார் ரயில்கள் இந்தியா முழுவதும் ஓட இருப்பதாகவும் அந்த தனியார் நிறுவனங்கள் பயணிகளிடம் எப்படிப்பட்ட கட்டணத்தை வசூலிக்கலாம் என்று அந்த நிறுவனங்களே தீர்மானித்துக் கொள்ள சுதந்திரம் அளிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டிருக்கிறது. கோடானுகோடி மக்களின் அடிப்படையான வாழ்வு இந்திய ரயில்வே லைன்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதை அடித்து நொறுக்குகிறது பொருளாதார ஆய்வறிக்கை.

சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தாகாரத் எழுதிய கட்டுரையிலிருந்து...

எஸ்.பி.ஆர்

;