articles

img

பஞ்சாப் விவசாயிகளின் சகோதரத்துவம்....

தில்லியில் போரிட்டுக் கொண்டிருக்கும் தங்களது சக விவசாயிகளுக்கு ஆதரவாக அவர்களின் கிராமங்களில் வாழும்விவசாயிகள் குழுவாகச் சேர்ந்து போராளிகளின் விவசாய நிலங்களில் உழைக்கின்றனர். தில்லியில் போராடும் விவசாயிகளின் விவசாயம் பாதிக்கப்படாமல்   பார்த்துக் கொள்கின்றனர். இந்நிகழ்வு பஞ்சாப் முழுதும் வேகமாக பரவிவருகிறது.வேளாண் விரோதச் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்று தில்லியை முற்றுகையிட்டுப் போராடிக் கொண்டிருக்கும் போராளிகளுக்கு தங்களது ஒருமைப்பாட்டை தெரிவிக்கபஞ்சாப், ஹரியானா, உ.பி.போன்ற பல்வேறுமாநிலங்களில் இருந்து சமூகத்தின் பல பிரிவினரும் பல்வேறு தோழமை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மருத்துவர்களும் , நர்சுகளும் தொடர்ச்சியாக தில்லிக்கு வந்து விவசாயிகளுக்கு மருத்துவ சேவை அளித்து வருகின்றனர்.பெண்கள் சமுதாய அடுப்பறையில் சமையல் பணி செய்து வருகின்றனர். கலைஞர்களும், கலாச்சாரச் செயல்பாட்டாளர்களும்  கலை நிகழ்ச்சிகளை நடத்தி விவசாயிகளை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.போராட்டத்தில் பங்குகொள்ள பஞ்சாப்பின் பல்வேறு கிராமங்களில் இருந்தும் தில்லி வந்துள்ளவர்களின் கிராமங்களில் மனதை உருக்கும் நெகிழ்ச்சிகரமான  காட்சிகளை காண்கிறோம். தில்லி போராளிகளின் விவசாயநிலங்களில் அந்த கிராமங்களில் உள்ள மற்ற விவசாயிகள் தில்லி முற்றுகையில் உள்ள விவசாயிகளின் விவசாயப் பணிகளை   தன்னார்வத்துடன் மேற்கொள்கின்றனர்.

சுழற்சி முறையில்...
லக்வீர்சிங் என்பவர் பஞ்சாப் மோகா மாவட்டம்,பத்னி கலான் என்ற கிராமத்தின் இளம் விவசாயி. அவர் சொல்கிறார்:

“எனது சகோதரர்கள் ஒரு நீண்ட நெடிய போராட்டத்திற்கு தில்லி சென்றுள்ளனர். அவர்கள் பல மாதங்கள் அங்கே தங்க வேண்டியிருக்கலாம். அவர்களின் விவசாயம் எந்த வகையிலும் பாதிப்படையக் கூடாது என்று முடிவு செய்தோம். எனவே அவர்களின் விவசாய நிலங்களில்  அவர்கள் எந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் உழைப்பார்களோ அதே அளவுக்கு கிராமத்திலுள்ள மற்ற விவசாயிகள் ஈடுபாட்டுடன் அவரது விவசாயப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தோம்”.லக்வீர்சிங் மட்டுமே தில்லி சென்றுள்ள மூன்று விவசாயிகளின் விவசாயப் பணிகளை  பார்த்துக் கொள்கிறார். பத்னி கலானில் மட்டும் 6900 ஏக்கர் விளைநிலங்களில் தானியம் மற்றும் காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன.

கிராமத்தின் வயது மூத்த விவசாயிகளான இக்பால் சிங், தேபாசிங்  ஆகியோர் இதுபற்றிகூறும்போது,“தில்லி சென்றுள்ள விவசாயிகளின் விவசாயத்தை எந்தவகையிலும் பாதிப்பில்லாத வகையில் பார்த்துக் கொள்வது தங்களது வாழ்க்கையின் ஒழுங்குபடுத்தப்பட்ட அன்றாடநடைமுறையாகி விட்டதாகக் கூறினர். இக்பால் சிங் மட்டும் தில்லி போராளிகளின் 70 கால்நடைகளை பராமரித்து வருகிறார். மேலும் தில்லி போராட்டத்திற்கு சுழற்சி முறையில் விவசாயிகள் கிராமங்களிலிருந்து தொடர்ச்சியாகச் செல்கின்றனர். பத்து நாட்கள் தில்லி போராட்டத்தில் இருந்துவிட்டு மீண்டும் தங்கள் கிராமங்களுக்கு திரும்பும்போது அந்த கிராமங்களில் இருந்து திரும்பியவிவசாயிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறுமற்ற விவசாயிகள் தில்லிக்கு கிளம்புகின்றனர்.மேலும், கிராமங்களில் இருந்து பெண்கள் உள்ளிட்ட நூறு பேர்களைக் கொண்ட குழுஒன்று 400 கி.மீ. தொலைவிலுள்ள தில்லிபோராட்டக் களத்திற்கு  பயணம் மேற்கொள்வது வாடிக்கையாக உள்ளது.

பத்னி கலான் போன்ற கிராமத்தில் காணப்படும் காட்சிகள் பஞ்சாபின் எல்லா கிராமங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பத்னி கலான் கிராமத்தின் நிர்மல் சிங், கடும் பனியும் எங்கள் விவசாயிகளை ஒன்றும் செய்யமுடியாது என்கிறார். இந்த வேளாண் குடிகளின்சகோதரத்துவம் பஞ்சாபின் அமிர்தசரஸ், ஜலந்தர், லூதியானா போன்ற மாவட்டங்களிலும் பொதுவான நடைமுறையாக ஆகிவிட்டது.பல்ஜித் சிங் என்பவர் ராணுவத்தில் கலோனலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். விவசாயிகள் தாங்கள் செய்வது தார்மீக அறம் என்று கருதுவதே இந்த ஒற்றுமைக்கு காரணம் என்கிறார்.மத்திய அரசின் துரோகம், அகங்காரம், ஆணவம் தங்களை கடுமையாக காயப்படுத்தி விட்டதாகக் கூறுகிறார். எனவே விவசாயிகள் இறுதி மூச்சு வரை போராடுவது என்றுஉறுதி ஏற்றுள்ளனர். இதுவே நீங்கள் பஞ்சாபில்காணும் காட்சி. பஞ்சாப் விவசாயிகளின் சகோதரத்துவம் கடந்த காலப் பாரம்பரியம் தான்என்கிறார் பல்ஜித் சிங்.

எந்த சக்தியாலும் தடுக்க முடியாது
மேற்கு உ.பி., புலந்த்சாகர் மாவட்டம் சிக்கந்தராபாத், சுபாஷ் சந்திர தேஸ்வால்  என்பவரும் ராணுவத்தில் கலோனலாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர்  விவசாயிகளின் சகோதரத்துவம் விடுதலைப் போராட்ட காலத்திலேயே இதுபோன்ற தோழமை உணர்வு நிலவியதாகக் கூறுகிறார். சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்குகொண்ட விவசாயிகளின் வயல்களில் அந்த கிராமத்தின் மற்ற விவசாயிகள் அவரின் விவசாயப் பணிகளை  மேற்கொண்டனர்.இது விடுதலைப் போராட்டத்திற்கு உத்வேகம் அளித்தது.இதுபோன்று விவசாயிகள் உணர்வுப்பூர்வமாக ஒன்றிணைவதை அரசின் எந்த அதிகார சக்தியாலும் தடுத்துவிட முடியாது என்று கூறுகிறார்.

இப்போதைய நிலையில் அற்புதமான விவசாயிகளின் சகோதரத்துவம் பஞ்சாபை மையங் கொண்டதாக உள்ளது.இருப்பினும் நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் குறிப்பாக அரியானா, உ.பி. போன்ற மாநிலங்களுக்கும் வேளாண் சகோதரத்துவ தோழமை உறவு பெருநெருப்பாக பற்றிப் படரும் வாய்ப்புள்ளது.ஜாட் இனத்தைச் சேர்ந்த விவசாயிகளின் கப் பஞ்சாயத்து கப் மகா பஞ்சாயத்து என்ற பெயரில் ஒருங்கிணைந்துள்ளன. அவை ஆயிரம் கிராமங்களில் வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக ஜன் ஜாக்ரன் அபியான் (மக்கள் விழிப்புணர்வு இயக்கம்) நடத்தவுள்ளன.பஞ்சாப் விவசாயிகளின்  சகோதரத்துவ உதவி என்ற நடைமுறை நாட்டின் எல்லா பகுதிகளிலும் பின்பற்றப்பட வேண்டும் என்று முடிவு செய்துள்ளது.இதுபோன்ற சகோதரத்துவச் செயல்பாடுகள் போராடும் விவசாயிகளின் ஒற்றுமை உணர்வையும், மன உறுதியையும் மேலும் வலிமைப்படுத்தும்.

வெங்கிடேஷ் ராமகிருஷ்ணன் - ஃப்ரண்ட்லைன்,ஜன,15,2021, 

தமிழில்:  ம.கதிரேசன்
 

;